மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

         கலிங்கத்து பரணி

அது... இறந்தே விட்டது........!
    படி திரும்புமுன்தான் கவனித்தான்.
கண்ணாடி  வேலைப்பாட்டினருகே
    சிவப்பும் கறுப்புமாய் பட்டாம்பூச்சி
முட்டி மோதி இறந்தே விட்டது!
   நேற்று உயிரோடு அழகாய் படபடத்தது
கண்ணாடிக்கு அந்தபுறம் பூந்தோட்டம்
    அதற்கோ தேன் குடிக்கும் ஆசை
பறந்து பறந்து கண்ணாடியில் மோதியது  
     தோல்வி...தோல்வி...தோல்விதான்....
சற்று பொறுத்து  மீண்டும் படையெடுப்பு
     பட்டாம்பூச்சியின் புறமுதுகிடாத்தனம்..
திருவிற்கு  எதையோ சொல்லியது.
     இரவு முழுவதும் இதே சிந்தனைதான்


எப்போதும் தலையாட்டுவது அவன்தான்
     இந்தமுறை அவனின் முடிவுதான் இறுதி.
காலையில் தன்மான சிங்கமானான்
    மகளின் காதல் கலவரத்தில்
வீட்டின் நிலைமை களேபரம்.
     அம்மாவின் பேத்தி பற்றிய கோட்பாடு
அவரையும் எதிர் முகாமில் தள்ளியது
     கலிங்கபோரில் வெற்றிதான் (தற்காலிகமோ!)

கடமையாய் அலுவலகம் வந்தால்...
     அவனுக்கு கீதோபதேசம் தந்த
முட்டாள் பூச்சி செத்தே விட்டது.
     கண்ணாடியை நம்பாமல் அப்படியே
பார்வையை பின்னாடி திரும்பியிருந்தால்...
      திரு-(திருமாலவன்)-வும்  அப்படித்தானோ
திரும்பி பார்த்தால்.. மெலிந்த தேகம்..
      தளர்ந்த செயல்பாடுகள்.. ஆனால்,
கண்களில் மட்டும் பிரகாசம்
      ஒளி வெள்ளமாய் அவன் அம்மா!
உலகம், வாழ்க்கை... ஏன் மூச்சுகூட
      அத்தனையும் அவனுக்காக மாற்றியவள்.
எப்படி இப்படி மறந்தான்....
      பழங்காலத்தில் போரில் தோற்குமுன் 
பச்சிளம் பாலகனைகூட அனுப்புதல் போல
      அம்மாவை பகடையாக்கி விட்டானோ...


அமைதியை உள்ளேயும் அமலாக்க
       யாராவது விட்டுத்தர வேண்டும்
காதல் விட்டுதராது. அவன்தான்...
       அதற்கும் முன் பொது மன்னிப்பு!
ஆனால் அவனுக்கு தெரியாதது,
      வயதான காரணமோ, உடல் தளர்வோ
தலை சுற்றி விழுந்து மயக்கமாய்
      மருத்துவமனையில் அவன் அம்மா!
- இல்லை,  இல்லை
      அப்படி நினைக்க வேண்டாம்...! நம்புவோம்
திருவும் மன்னிப்பு பெறுவான் என்று.

எந்த போரானாலும் முடிவினில்
      தன்னவர்களை பலியிடாதவன்
தோற்றாலும் ஜெயித்தவனாகிறான்.
      இதுதான் வெற்றி பரணி!




1 comments:

அன்பின் சாகம்பரி

//எந்த போரானாலும் முடிவினில்
தன்னவர்களை பலியிடாதவன்
தோற்றாலும் ஜெயித்தவனாகிறான்.
இதுதான் வெற்றி பரணி // - உண்மை உண்மை

நல்ல கவிதை - கரு கதை எழுதத் தகுந்த கரு. கவிதை அருமை. பட்டாம்பூச்சி கதாநாய்கனாய் மிளிர்கிறது. எளிய சொற்களைக் கொண்டி இயல்பாய எழுதும் கவிதைகள் மனதைக் கவர்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா