மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        

                  அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் நட்பு  வட்டாரத்தின்  மீதுதான்   உங்கள் பிள்ளையின் சினேகிதர்களை நன்கு புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தவறான நட்பு எனில் அவர்களை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பட்டவர்த்தனமாக கூறவேண்டாம் . விடுமுறை நாட்களில் தேநீர் அருந்தும் போது அமைதியான உரையாடலில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கேயோ எப்போதோ நடந்த செய்தியாகக் கூட இதனை தெரிவிக்கலாம் - நண்பனை உதாரணம் காட்டக்கூடாது. நல்ல நண்பனாக இருந்தாலும்கூட அவர்களை பற்றி உதாரணம் காட்டி உயர்வாக பேசாதீர்கள். சில சமயம் நல்ல நண்பர்களிடமிருந்து அவர்கள் விலக முற்படுவார்கள்.

      நண்பர்களை தேர்வு செய்யும் முறை பற்றி ஒவ்வொரு வயதிலும் சொல்லிக்கொடுங்கள். புதிய பள்ளி , இடமாற்றம் ஏற்படும்போது உண்டாகும் புதிய நட்புகளை கவனியுங்கள் . சிறிய வயதில்கூட நண்பர்களை சரியாக தேர்வு செய்யும் குழந்தைகள் பெரியவனானதும் சரிவர செய்வதில்லை. அதற்கு அவர்களிடமிருந்து நாம் விலகிப்போவதுதான் காரணம்.

         பள்ளிப்பருவ வயதில் அவர்களிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள் போன்றவை நம்மை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிடுகிறது. இங்கேதான் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முறை மாறிவிடுகிறது. இது போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது தர வேண்டிய விளக்கங்களை உங்களுடைய நலன் விருப்பும் உறவினர் - சகோதரர் , மைத்துனன் போன்றவர் மூலம் தெரிவிக்க செய்யலாம். சொல்லவேண்டிய விசயமும் சரிவர போய் சேர்ந்து விடும். " ஏன் நானே சொல்லக்கூடாதா?" என்று நீங்கள் கேட்கலாம் . வேறு வழியில்லை எனில் இதனை செய்யலாம். ஆனால் உங்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி மிகவும் குறைந்து விடும். அதுவும்கூட விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் உங்கள் விருப்பம் என்ன என்று தெரியாமலே போய்விடும். பிறகு அனுமதி கேட்காமல் அத்தனையும் அறிவிப்பாக மாறிவிடும். 

            உதாரணமாக, உங்கள் பிள்ளையின் விருப்பம் வேறுபடும் நிலையில் உங்கள் சார்பாக பேசுபவர் , பிரச்சினையை சரி கட்டுவது போல பேசலாம் "அப்பாவிற்கு இது பிடிக்காது. இருந்தாலும் உனக்காக உன் மகிழ்ச்சிக்காக இதற்கு சம்மதிப்பார். நீ அதற்கேற்ற பிள்ளையாக இரு" எனலாம். நாமே நேரிடையாக இதனை சந்திக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு உளறிக் கொட்டி விடுவோம். "பிள்ளைகளின் மகிழ்ச்சியைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை" போன்றவை உங்களை எளிதாக சமாளித்து விடலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடும். பின்னர், அவர்கள் உங்களிடம் பழகும் முறை எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிவிட வாய்ப்புகள் உண்டு.

  பெண் பிள்ளைகளுக்கு தாயார் சொல்லித்தரலாம். இதில் தந்தை குறுக்கே புகுந்து மதிப்பு பெற முயற்சிக்க கூடாது. அது பெண்கள் சம்பந்தப் பட்ட உரையாடலாக அது அமையட்டுமே. உங்களுக்கும் உங்கள் துணைக்குமான உறவு மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை குறைத்துப் பேசக்கூடாது. பெற்றவர்கள் வாழும் முறைதான் குடும்ப உறவின் மற்றொரு பரிமானத்தை காட்டும்.

 இந்த விசயம் சரியாக நடந்துள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது. உங்கள் பிள்ளை அவன் நண்பர்களிடம் நடந்து கொள்ளும் முறையை கவனித்தால் புரிந்து விடும். அவனுடைய நல்ல நண்பர் கூட்டத்தில் தலைமை பண்புடன் நடந்து கொண்டால் கடிவாளம் உங்கள் கையில்தான் உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் நண்பர்களுக்கும் கௌரவ ஆலோசகர் நீங்கள்தான்.

அடுத்த பதிவில் இன்னும் சில சந்தர்ப்பங்களை பற்றி விரிவாக காணலாம்.
 
                   உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
                              ஓங்கியடித்திடுவான் நெஞ்சில்
                  கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
                             காறியுமிழ்ந்திடுவான் ......
                                              - கண்ணன் என் தோழனில் மகாகவி பாரதியார்


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 4

0 comments: