மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்

      அமுதா எதிர்பார்க்கவேயில்லை இப்படி ஒரு புகழாரம் கிட்டுமென்று. எதற்காக அதை செய்தாள் என்றால், அவளுடைய கணவன் தியாகுவிற்கு அலுவலகப் பணி வெளியூர் சென்றிருந்தான் . தொலைதூரம் என்பதால் சிறு விசேசத்திற்காக பயணித்து வர முடியாது. அதனை இளைய சகோதரியிடமும் தெரிவித்திருந்தான். அவன் சார்பாக அமுதாதான் சீர் செய்ய வேண்டியிருந்தது. அந்த தலையாய பொறுப்பை அவளிடம் தந்திருந்தான். அவளுக்குத் தெரியும் உறவுகளுக்கு அவன் தரும் மரியாதை. அது சற்றும் குறையக்கூடாது என்று எண்ணி கணவனின் பார்வையாகவே அவள் சீர் பொருட்களை வாங்கினாள். அழகான விலை உயர்ந்த பட்டுச் சேலையும் அதில் இடம் பெற்றது. அதன் விலை தியாகுவின் விருப்பம் அல்ல, அவளாகவே செய்தது.

       மாமன் சீராக வைத்த தட்டு வளைகாப்பு விழாவில் பாராட்டை பெற்றது. அவளுடைய நாத்தனார்கூட இவ்வளவு சிறப்பாக இதனை எதிர்பார்க்கவில்லை. காதல் திருமணம் செய்திருந்த அண்ணன் மனைவியிடம் அவள் அதிகமாக எதிர்பார்க்கவில்லை போலும். ஆனாலும் அவளுடைய மாமியார் இதனை மெச்சுதலாக சொன்னபோது " ஆகா" என்றிருந்தது. அண்ணியிடம் மறுநாளே வந்து புகழ்ந்து தள்ளிவிட்டாள், அவளுடைய புகுந்த வீட்டினர் முன் அவளை உயர்த்திவிட்டாளாம்.

     இந்த கதையை நாம் சற்று விளக்கமாக பார்த்தால், சில லாபங்கள் ஏற்பட்டுள்ளதை உணரலாம்.
1. அமுதாவிற்கு புகுந்த வீட்டினரின் நம்பிக்கை கிட்டியது, தியாகுவை பிரித்துச் செல்ல வந்தவள் அல்ல என்று உணர்ந்தனர்.
2. தியாகுவின் தங்கைக்கும் புகுந்த வீட்டில் மரியாதை கூடியது. அவளுக்கு எது ஒன்று என்றாலும் அண்ணன் , அண்ணி இருவரும் வருவார்கள் என்று புரிந்தது.
3. தியாகுவிற்கும் இனிய காதலி மனைவியாக மாறிக் கொண்டு வருவதை கண்டு மகிழ்ச்சிதான்.
4. அமுதாவின் வாக்கு வங்கியில் மதிப்பு மிக்க ஓட்டுகள் கூடின. இது அவளுடைய பிறந்த வீட்டில் அவளுக்குரிய மரியாதையை கூட்டிவிடும்

இத்தனைக்கும் காரணம் எவையென்றால்
1. தியாகு தன் வீட்டு விழா என்பதால் மனைவியை புறக்கணிக்காமல், அவளை நம்பி பொறுப்பை தந்தது. அதைவிட முக்கியமாக தன் குடும்பத்தாரிடம் அவன் வைத்திருந்த பிரியத்தை மனைவிக்கு புரிய வைத்திருந்ததுதான்
2. அமுதா கணவனிடம் பிரியம் வைத்திருந்த காரணத்தால் அவன் மனதறிந்து நடந்து கொண்டவிதம் பாராட்டுக்குரியது.
 3. தியாகுவின் சகோதரி, அமுதாவை வேற்றுப் பெண்ணாக எண்ணாமல் முழு மனதுடன் பாராட்டியது இருவருக்குள்ளாக நட்பை உருவாக்கியது.
ஒரு இனிய குடும்பம் உருவாகிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டிருப்பீர்களே.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

0 comments: