மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


       இன்றைக்கு பெண்கள் தினம். செய் தொழில் அனைத்திலும் ஆண், பெண் வேற்றுமை இல்லாமல் எல்லா தொழிலும் எமக்கிசைவுதான் என்று பெண்களின் பங்களிப்பை பெற்று வரும் இன்றைய உலகம். இதை பற்றிய நினவு வரும்போதெல்லாம் முதலில் நிற்பது மீசைக்கார பாரதி. பெண்ணை உயிருள்ள உணர்வுள்ள ஜீவனாக மதித்தவர். பாரதியின் பல கவிதைகளும் பெண் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றன. பெண்மையை போற்றுதல் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. பழந்தமிழகத்தில் இருந்து எங்கோ மறைந்து போன ஒன்றை மீட்டெடுத்தன பாரதியின் கவிதைகள். ஆதியில் என்ன நடந்தது?

       
உலகின் மகா சக்தி பெண் என்ற உண்மை இருந்தது. ஒன்றை ஆக்குதல் அழித்தல் அவளால்தான் முடியும் என்பதையும் ஒப்புக்கொண்டனர். அதனால்தான் உலகை உய்விக்கும் மழைக்கு மாரி என்றும் கொடுமைகளை களையும் சக்திக்கு காளி என்றும் பெயரிட்டனர். சங்க காலத்தில் பெண் புலவர்கள் இருந்ததும் அவர்களின் வரவிற்காகவும் வாழ்த்திற்காகவும் மன்னர்கள்கூட காத்திருந்ததும் புற நானுற்றுப் பாடல்களில் தெரிய வருகிறது - ஔவையார், காக்கைப்பாடினியார் போன்றோர். அரசியல், கல்வி கலை போன்றவற்றில் புகழும் சான்றோர் சபையில் சம இடமும் பெற்று விளங்கிய பெண்கள் பின்னர் ஏன் அடுப்படிக்குத் தள்ளப்பட்டனர்.

     பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் - இங்கு சமூக மாற்றங்களையும் கொண்டு வந்தன. பெண் என்பவள் ஒரு போகப் பொருள் என்று பார்வை கொண்ட கிழக்கு மற்றும் மேற்காசியாவிலிருந்து வந்த அந்நியரின் வரவு தமிழர்களின் பார்வையையும் மாற்றின ( பழங்கால சீனாவில் ஒரு கணவன் தன் மனைவியை கொன்றால், மேஜை நாற்காலி போன்ற பொருட்களை உடைத்ததற்கு சமம். ஒரு தண்டனையும் கிடையாது). சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டு நம் பெண்களும் கூட்டு கிளியாக இசைந்தனர். ஆனால் இவை எதுவுமே பெண்ணின் அறிவு நுட்பத்தையோ, வீரதீரத்தையோ சிறிதும் குறைத்ததில்லை. ஒரு கட்டத்தில் அத்தனையும் மறந்துபோய் , மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்ற கொள்கைப்படி - அடிமைகள் என்ற வார்த்தையே இல்லாத தமிழ் பண்பாட்டில்- பெண் அடிமைகளை உருவாக்கினர். பெண்ணை போகப்பொருளாய் ஆக்கினர். அடுத்தவன் அபகரிப்பான் என்ற பயத்தில் மனைவியையே அடிமையாக்கிக் கொண்டனர். அங்கேயும் சில ஆண்மகன்கள் தமிழ் பண்பை உணர்ந்து பெண்மையை மதித்தனர். இந்த விசயம் எல்லாம் வெளிவரவிடாமல் , பல்வேறு காரணம் சொல்லியும், அச்சுறுத்தல் செய்தும் அடிமையை தக்க வைத்தனர். பெரும்பாலான சடங்குகளோ சம்பிரதாயங்களோ இல்லாத நம் மண்ணில் இவை புதிதாக நுழைக்கப்பட்டன.


      அதன் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் சமூகப் பிரவேசம் மீண்டும் தொடங்கியது. வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்களை தமிழ் மண் கண்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்திய விதமும் ஒரு காரணமாக அமைந்தது. பாரதி, பாரதிதாசன் .... போன்றோரின் எழுத்துக்கள் பெண்ணை வணங்கியது மீண்டும் உயிர் கொடுத்தது. நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் .... பெண்ணிற்கு அணியாய் அமைந்தன. புதிதாக எத்தனை அணிந்தாலும் தன்னிலை பிறழாத தன்மானம் மட்டும் எப்போதும் பெண்களின் விருப்பமாக இருந்தது.

     சரி இப்போது.....? கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுகளாக பலர் முயற்சி செய்து தமிழ் மண்ணில் மீண்டும் நிலை நாட்டிய பெண்ணின் மரியாதை இப்போது உண்மையில் உள்ளதா? கேள்விக்குறிதான். சமுதாயத்தின் மேல் தட்டு எப்போதும் பரிசோதனைக்கு உரியதும் அல்ல சாதாரண வாழ்வியலுக்கு உகந்ததும் அல்ல. அதற்கு கீழ் உள்ள பெண்களின் நிலையைதான் கேள்வியாக்குகிறேன்.
                                                                                                                              - தொடர்ச்சி நாளை.

4 comments:

மகளிர் தின வாழ்த்துக்கள் கூறுவோம்..
பெண்மையை போற்றுவோம்...

வாழ்த்திற்கு நன்றி திரு.கருன்

மகளிர் தின வாழ்த்துக்கள்

http://sivamgss.blogspot.com/2011/03/blog-post_08.html

http://sivamgss.blogspot.com/2011/03/blog-post_07.html

http://sivamgss.blogspot.com/2011/03/blog-post_04.html

இவற்றை பார்க்கவும்

படித்துவிட்டேன் திரு. எல்.கே. கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் சுமையோடுகூட ஓட வேண்டிய மனதின் எதிர்பார்ப்புக்களை சம்பந்தப்பட்டவரால்கூட சொல்ல முடியாது. இரண்டாம் மட்ட மூன்றாம் மட்ட வேலைகளை பார்க்கும் பெண்கள் சுதந்திரத்தை கேட்பது இல்லை உணர்வதும் இல்லை. அவர்கள் தேவையெல்லாம் human values எனப்படும் தனிமனித மரியாதையைதான். கருத்துரையிட்டதற்கு நன்றி