மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


     இந்தக் கதை நான் ஒரு புத்தகத்தில் படித்தது. மகாபாரதப்போர் முடிந்து , பாண்டவர்களை அரியணையில் அமர்த்திய பின் கண்ணன் துவாரகைக்கு கிளம்பும்போது வழியனுப்புகின்றனர் பாண்டு மக்கள். ஒவ்வொருவரிடமும் விடை பெற்றபின் குந்தியிடம் வருகிறான் கண்ணன். " அத்தை, எல்லாம் இனிதே முடிந்தது. நான் விடைபெறுகிறேன். உனக்கு என்ன வேண்டும் " என்றான். குந்திதேவியோ " எனக்கு இன்னும் இன்னல்கள் வரவேண்டும் " என்கிறாள். கண்ணன் அதிசயப்பட்டு " ஏன் நீ பட்டதெல்லாம் போறாதா. இன்னும் எதற்கு இவ்வாறு கேட்கிறாய்?" என , குந்தி தந்த பதில்தான் குடும்பத்தின் ஒற்றுமைக்கான வேதவாக்கு. " நான் இக்கட்டில் இருந்த போதெல்லாம் நீயும் என்னுடன் இருந்தாயே கண்ணா. நீ என்னுடன் இருப்பதற்காக எனக்கு இன்னும் இன்னல்கள் வேண்டும்."


     உன்மையான அன்பின் உறுதி இக்கட்டான தருணத்தில்தான் அதிகரிக்கிறது. ஒரு சிக்கல் வரும்போது - பொருளாதார சிக்கலோ, உறவுகளுக்கிடையேயான பிரச்சினையோ, உடல் நலக் கோளாறோ குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் தெரியும். யா
ருக்காவது உடல் நலமில்லாமல் போகும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள், பொருளாதார சிக்கலை சீர் செய்வதில் ஒவ்வொருவரின் பங்கும் - எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் வீடு கட்டினார்கள். சிறிய வீடுதான் -பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையும் இல்லை - அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு எல்லாவிதத்திலும் சிக்கனத்தை கடைபிடித்து சரி செய்தார்கள். அந்த வீட்டின் மதிப்பை பணத்தால் அளவிடுவதைவிட அன்பான மனத்தால் அளவிட்டால் விலை மதிப்பில்லாதது. அந்த மூன்று வருட விட்டுக்கொடுத்தல்கள் ஒருவர் மற்றவரின்மேல் வைத்திருந்த பிரியத்தை அதிகரித்தது. இனி வரும் காலங்களுக்கு அது ஒரு இனிய நினைவுப்பெட்டகமாக இருக்கும்.


      ஒரு இனிய குடும்பத்தில் பிள்ளைக்கு, அவன் வேண்டிய படிப்பு கிட்டாததால் மனவருத்தம் . பணம் தந்து வாங்கியிருக்கலாமே என்றெல்லாம் வருத்தமில்லை. இனி எப்படி முன்னேற முடியும் என்ற கவலைதான். வீட்டில் இருப்பவர்களின் ஆறுதல் தவிர்த்து, தொலைதூர உறவுகள்கூட அலைப்பேசியில் ஆலோசனைகள் தெரிவித்து... சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஆலோசனைகள் கேட்டு... பிறகென்ன, அந்தப் பிள்ளையின் உயர்வான தற்போதைய நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா? இது போன்ற உறுதியான பங்களிப்புகள் எத்தனை இனிமையானவை.

      எனவே குந்தி தேவியின் வேண்டுதல் போல இன்னல்களையும் இனிய உறவுகளையும் எதிர்பார்க்கலாமே. - இதெல்லாம் மற்றவர் துன்பத்தில் பங்கேற்கும் மனமுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். " கனகு பெரியப்பாவின் பையன் வீட்டை விட்டு தனிக்குடித்தனம் போய்ட்டானாமே" என்று மகிழ்பவர்களுக்கு இது பொருந்தாது. நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் ஆனந்தமான பின் விளைவைத்தரும் என்பது உறுதி. பாரதி தன் பார்வையில் ஒவ்வொரு உறவும் கண்ணன் வடிவாகவே கண்டார். எனக்கும் அதுவே. அன்பே சிவம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, என்று நீளும் குடும்ப பட்டியலில் எத்தனை கண்ணன்கள்.!  இன்னும் இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளை கண்டுகொள்ள.


           கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
                  எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
           செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
                  கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்
           தெளிவே வடிவாம், சிவஞானம், என்றும்
                   ஒளிசேர் நலமனைத்து ஓங்கி வருகின்றன காண்!

                                                                           --மகாகவி 

9 comments:

குந்திதேவியின் பிரார்த்தனை மிக அர்த்தமுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

இந்தக் கதை கேள்விப் பட்டது இல்லை. நன்றி

கருத்துரைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

பொதுவாக ஆன்மீக சொற்பொழிவில், பாண்டவர்களை அரியணையில் அமர்த்துவதுடன் மகாபாரத்தை முடித்திருப்பார்கள். அதற்கு பிறகானது இலக்கியங்களில் மட்டுமே கிட்டும். ஆனால் அர்த்தமுள்ள கதை. நன்றி எல்.கே.

நானும் இந்த கதை படித்திருக்கிறேன்.
ஆனால் கதையை விட பதிவின் அடுத்த மூன்று
பத்திகளுமே தங்கள் கை வண்ணத்தில் அருமை.
பொருத்தமான வரகவியின் பாடல்.
பகிர்விற்கு நன்றி.

நானும் இதை தொடர்ந்து "உயிர் காத்த உறவும் நட்பும்"
என்ற பதிவு இன்னும் இரண்டு நாளைக்குள் போடலாம் என்றிருக்கிறேன்.
முடிந்தால் பதிவிற்கு வருகை தரவும்

கருத்துரைக்கு நன்றி ராஜி. நான் உங்கள் பதிவிற்கு தினமும் வருகிறேன். உறவுகளின் புகழ் சொல்லும் பதிவை எழுதுங்கள். ஒத்த கருத்துக்கள் ஒற்றை கருத்தாக நில்லாமல் பலவாக வரும்போது, கருத்தும் வலிமைபடும்.

"உயிர் காத்த உறவும் நட்பும்" பதிவு போட்டிருக்கிறேன்.
தங்களது பெயரை எனது பதிவில் குறிப்பிட்டு லிங்க் கொடுத்துள்ளேன்.
வருகை தந்து கருத்து தெரிவிக்கவும்.நன்றி

உண்மைதான் சாகம்பரி. நெறயக் கதைகள் உள்ளன படிக்க. நன்றி