மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

புரியாத மழலை பேச்சில்
பிஞ்சுகால்கள் தளிரடியில்
சிறு விரல்கோலமிடலில்
பட்டாம்பூச்சி பார்வையில்
    - அன்னையின் பிராயம் கழிய

தோளில் தெரிந்த உலகத்தில்
பள்ளி பாட தெளிதலில்
அறிவின் கோவில் வாசலில்
விண்ணேறி சாடும் வயதில்
        - தந்தையின் பிராயம் கழிய

வானின் அதீத சிந்தனையில்
பன்னீர் தெளித்த மழையில்
காற்றின் கை வருடலில்
எண்ணற்ற உள்வாங்குதலில்
கண்சிமிட்டும் பூவின் காதலில்
         - இளம் பிராயம் கழிய

மீண்டுமொரு தந்தையாய்
தாதியாய் நண்பனாய் குருவாய்
குடும்பத் தலைவனாய்
உலகின் அடையாளமாய்
மொத்த வாழ்க்கையும் முடிய
        - இன்னும் கொஞ்சம் கழிய

ஒதுக்கப்பட்ட தாழ்வாரத்தில்
மழலை பேசி காற்றை வருடி
தளிர் நடை நடந்து விண் நோக்கி
தொலைந்த அடையாளம் தேடி
மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.





14 comments:

அருமை அருமை
ஜீபூம்பா அரக்கனை
ஒரு குடுவைக்குள் அடைத்ததுபோல்
ஒட்டுமொத்த வாழ்வையும்
ஐந்து பத்திகளில் மிக நேர்த்தியாக
அடக்கியது அருமை அருமை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

//மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.//

உருக்கம் உருக்கம்....

அருமை அருமை....

மிக அருமையான கவிதை....

கவிதைக்குள் ஏக்கம்..
யாதார்த்தம் வலி தெரிகிறது...
வாழ்த்துக்கள்..

முதியோர் இல்லத்துப் பெரியவரின் ஏக்கம் இது. இன்னும் முழு வலியையும் என்னால் விளக்க முடியவில்லை. கருத்துரைக்கு நன்றி திரு.ரமணி.

//உருக்கம் உருக்கம்....// உண்மைதான்
கருத்துரைக்கு நன்றி திரு. மனோ.

அந்த பெயிண்டிங் சரியாக தெரியவில்லை. கோல் தாமஸின் வரைவு. விண்ணில் சேர்க்கும் தேவதைக்காக காத்திருக்கும் பெரியவரின் படம். கருத்துரைக்கு நன்றி திரு. சௌந்தர்

உங்க கவிதைகள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றன

அருமையான கருத்துரைகள் என் எழுத்தை பட்டை தீட்டுகின்றன போலும். இந்த கருத்துரைக்கும் நன்றி திரு.எல்.கே.

பொருத்தமான படத்துடன் உருக்கமான கவிதை. வாழ்க்கைச் சித்திரத்திற்குப் பாராட்டுக்கள்.

//வாழ்க்கைச் சித்திரத்திற்குப் பாராட்டுக்கள்.
//கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.

தள்ளாத பிராயம் வரைக்கும் போயிட்டீங்களே!நல்லாருக்கு!

வட்டப்பாதையென வாழ்க்கை. ஆதியிலிருந்த தள்ளாட்ட நடையும் பொக்கைவாய்ச் சிரிப்பும், அடுத்தவரின் உதவி நாடும் செய்கைகளும் ஒத்துப்போனாலும், ஒரு பெருத்த வித்தியாசம். மழலையானது முற்றத்திலும் மனங்களிலும் கொண்டாடப்பட.... முதுமையோ உறவுகளிலிருந்து பிடுங்கப்பட்டு தாழ்வாரத்துக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.

கவிதை சொன்னதும் சொல்லாமல் சொன்னதும் உணர்த்துவது அநேகம். வாழ்த்துகள் சாகம்பரி.

//தள்ளாத பிராயம் வரைக்கும் போயிட்டீங்களே!நல்லாருக்கு!// பாரட்டிற்கு நன்றி திரு.சண்முகவேல்

நீண்ட தெளிவான கருத்துரைக்கு நன்றி கீதா.