மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்பு குட்டிம்மாவிற்கு,

        நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? உன்னுடைய மன நலம் , உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுகிறேன். மன நலம் பற்றி ஏன் சொல்கிறேன் ? எல்லாம் ராதுவின் திருமணத்தில் வைத்து நடந்த விசயம் குறித்துதான் பேசுகிறேன். 

     அங்கு நீ நடந்து கொண்ட முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் எதிர்த்து நின்று குரல் உயர்த்தி பேசுவார்கள். தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வலியுறுத்தப் பார்ப்பார்கள். அத்தனை பேருக்கும் காட்சிப்பொருளாவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து , நான் கூட பயந்து போனேன். ஆனால் நீ முகம் மாறாமல் மெல்லிய குரலில் பேசி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாய். எத்தனை அருமையான பக்குவப்பட்ட செயல். மேற்கொண்டு பிரச்சினை செய்ய வழியில்லாமல் அமைதியை தந்தாய். வாழ்க்கையிலேயே நான் பெருமையாக நினைக்கும் நிமிடங்கள் அவை. அடி நெஞ்சின் ஆழத்தில் இது என்றென்றும் பனித்துளியென நின்று என்னை குளிர்வித்துக் கொண்டிருக்கும். எதனால் நீ மௌனபுரட்சி செய்தாய் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. ஒருவேளை மனித மனதின் விந்தைகளுள் ஒன்றாக, நான் உன் செயலை ஏதோ ஒரு சுயலாபத்திற்காக செய்திருப்பாய் என்று முடிவெழுதிவிடுவேனோ என்று ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் அந்த நிமிடத்து பலனாக குடும்ப மரியாதை காக்கப்பட்டது. அதன் பிறகும் நீ நிதானமாக நடந்து இன்னும் உயர்ந்துவிட்டாய். அண்ணன் , அப்பாவிற்கு கூட தெரியாமல் அணைக்கப்பட்டது.

        இது போல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நம் குடும்ப கௌரவத்தை காப்பது நம் நடத்தையில்தான் உள்ளது. ஒன்றுமில்லாத விசயத்தை பெரிதுபடுத்தி பூகம்பம் உண்டாக்குவது உறவுகளுக்கிடையே விரிசலை தரும். அதை தவிர்ப்பது நம் பொறுப்புதான். ஏன் வசு அப்படி பேசினாள் என்று புரியவில்லை. திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் நல்ல பெண்ணாகதான் நடந்து கொண்டாள். உன்னிடம் ஏன் அப்படி பேசினாள்?
ஒரு நிகழ்வு நடக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள், குணாதிசயங்கள் ஒரு காரணியாக செயல்பட்டு நிகழ்வினை கடத்துகிறது, அது சந்தோச அலைகளையோ , கோப அலைகளையோ உண்டாக்கி மாறாத நினைவுகளை பதிவிட்டுவிடுகிறது. சில சமயம் எதுவுமே நிகழாமல் கடந்து சென்றாலும் நல்லதுதான்.

   வசு இன்னும் புதுப்பெண்தான், கண்ணம்மா. ஒரு குழந்தை வளர்ந்துவரும்போது தாயை நம்பிக்கையாக உணரும். பத்துமாத பந்தம் அல்லவா?. பிறகு தகப்பன் குரலை அடையாளம் கண்டு பாதுகாப்பாக உணரும். நல்ல அதிர்வலைகளை உணர்ந்தபின் மற்றவர்களிடம் அன்பு பாராட்டும். உணர்தல் என்றால் பழக்கம் வேண்டுமல்லாவா? திருமணம் முடிந்து வந்தபின் உன்னுடைய உடல் நிலை காரணமாக நீ வரவில்லை. வசுவும் புதுப்பெண்ணின் திரையகற்றி முதல் சந்திப்பு இதுதான். நான் ரொம்பவும் பெருமையாக அவளிடம் உன்னை பற்றி சொல்லியதில்லை. அது வீண் பெருமை பேசுவதாக ஆகிவிடும் என்று நினைத்தேன்.
பெருமை பேசுவது விற்பனை தந்திரமாக மட்டுமே நான் நினைத்ததால், உன்னை அவள் தானாகவே உணர்வதுதான் எனக்குப் பிறகான காலத்தின் தொடர்புகளுக்கு அடிப்படையாகும். அதனால்தான் உன்னிடமும் அவளுடைய குணாதிசயத்தை சொல்லவில்லை. எனவே அந்த சந்திப்பிற்காக எந்தவித ஒத்திகையும் நடத்தப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. நான் கவனிக்காத ஒன்று , நாத்தனார் என்ற முகமூடி ( ஏற்கனவே தயாரிக்கப்பட்டு) உனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்- கொஞ்சம் தொல்லைபிடித்த சாயல்கூட அதில் இருந்திருக்கலாம். எனக்குகூட அதுபோல ஒரு கொடூரமான முகமூடி இருந்திருக்கலாம், ஆனால் அவள் புதுப்பெண்ணாக இருந்ததால், அந்த முகமூடி பழகும் முறையினால் எளிதில் உடைக்கப்பட்டது. ஒரு வேளை தற்சமயம் அவளுடைய நிம்மதியான வாழ்க்கை உன்னால் பாதிக்கப்படலாம் என்ற பாட்டன் வழிக்கதைகளின் வழிகாட்டல் அவளை செயல்பட வைத்திருக்கலாம். கண்டிப்பாக ஒன்று சொல்வேன் அது விஷத்தை கக்கும் நாகத்தின் சீற்றம் அல்ல. புரியாமல் துள்ளி குதிக்கும் புள்ளிமானின் பாதுகாப்பு நடவடிக்கைதான்.

      எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திறந்த மனதுடன் நீ இருந்தாய் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் தவறாக பேசிய பின்னும் நீ " சென்றுவருகிறேன், அண்ணி " என்று விடைபெற்றதும், அமைதியாக சென்றதும் அவளை குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டது. இப்போதும்
நான் உனக்காக அவளிடம் அதுவும் பேசவில்லை. அது உன் பக்கமாக பேசுவதாக தவறாக வழிகாட்டப்படும். அது பற்றி எதுவுமே பேசாத என் மௌனம் சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன். இரண்டு நாள் கழித்து அவளாகவே உன்னை பற்றி என்னிடம் விசாரித்தாள். என் கண்மணியை பற்றி சொல்ல எனக்குத் தெரியாதா என்ன? திரும்பவும் ஒரு நாள் கழித்து அந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவிக்க விரும்புவதாக கூறினாள்.. கவனிக்க வேண்டியது என்னிடம் வருத்தம் தெரிவிக்க இல்லை, உன்னிடம் கேட்க வேண்டுகிறாள். அதாவது உனக்கும் அவளுக்குமான உறவை சீர்படுத்திக்கொள்ள விரும்புகிறாள், எனக்காக என்று இல்லாமல். இதுதான் நான் விரும்பியது. இளையவர்களுக்கிடையே எந்தவித கட்டாயமும் இல்லாமல் உறவு மேம்படவது நல்லது. அது புரிந்து கொள்ளுதலினால் மட்டுமே வரும். கை நீட்டும் குழந்தையின் கரம் பற்ற நீயும் விரும்புவாய் என்று எனக்குத் தெரியும். நாளை உன்னிடம் அலைபேசியில் பேசுவாள். புதிதாக ஆரம்பிக்கலாமா குட்டிம்மா?

உனக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொண்டு அடுத்த வாரம், நேரில் வருகிறேன்.
அன்புடன்,
ஒரு மகளின் மகளான அன்னை.

19 comments:

உங்களின் கடிதங்கள் ஒவ்வொன்றும் திருமணம் ஆகவேண்டிய பெண்களிலிருந்து புதிதாய் திருமணமான பெண்கள் வரை அனைவரும் படித்து தன்னை சீர்படுத்திக்கொள்ள வேண்டிய உபயோகமான கடிதங்கள்.

நிறைய யோசிக்கிற வைக்கிற விஷயங்கள்,சிறப்பு

//ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து , நான் கூட பயந்து போனேன். ஆனால் நீ முகம் மாறாமல் மெல்லிய குரலில் பேசி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாய். எத்தனை அருமையான பக்குவப்பட்ட செயல். மேற்கொண்டு பிரச்சினை செய்ய வழியில்லாமல் அமைதியை தந்தாய். வாழ்க்கையிலேயே நான் பெருமையாக நினைக்கும் நிமிடங்கள் அவை. அடி நெஞ்சின் ஆழத்தில் இது என்றென்றும் பனித்துளியென நின்று என்னை குளிர்வித்துக் கொண்டிருக்கும்.//

பனித்துளியென குளிர்விக்கும் அருமையான வரிகள்.
பாராட்டுக்கள்.

அருமையான கருத்துக்கள் நிறைந்த கடிதம்

நேற்று இரவு படித்துவிட்டு கமென்ட் போட நினைத்து என்ன எழுதுவது என்றுப் புரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

உங்கள் கடித தொகுதி முடிந்தவுடன் சொல்லுங்கள். இது அனைவரயும் சென்றடைய ஏதாவது செய்வோம்

உண்மைதான். குடும்பத்தின் அடிப்படை அதுதானே. நல்லது கெட்டதுமாக காற்றுவழியாக நமக்கு கடத்தப்படும் சில விசயங்கள் வாழ்க்கை பாதையை நிர்ணயிக்கின்றன. தற்சமயம், சுய நலம் பெருகிவிட்டதால் கெட்டது மட்டுமே தரப்படுகிறது. மறந்துபோன அவற்றை நினைவுபடுத்த விழைகிறேன். நன்றி கடம்பவன குயில்.

நன்றி திரு.சண்முகவேல்

//பனித்துளியென குளிர்விக்கும் அருமையான வரிகள்.
பாராட்டுக்கள்.// பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

வருகைக்கு நன்றி பிரகாஷ்.

"அறவோர்களித்தல் அந்தணர் ஓம்பல்
துறவோர் கெதிர்தல் தொல்லோர்
திறப்பின் விருந்தெதிர் கோடல்.."
மனையற தர்மம் காக்கப்பட நல்ல குடும்பங்கள் வேண்டும். ஆற்றில் போட்ட முளைப்பாரி ஆங்காங்கே சென்று கரையெல்லாம் வாழவைப்பதுபோல் இந்த பதிவுகள் நல்லது செய்தால் மகிழ்ச்சி . அதற்காக கண்டிப்பாக ஏதாவது செய்யலாம், நன்றி திரு. எல்.கே.

பக்குவப்பட்ட தாய்மையின் உச்சம் இவை. திருமணமாகிப் போன ஒரு பெண்ணுக்கு தாய் வீட்டுடனான தொடர்பு தொடர்வதும் அறுவதும் அவ்வீட்டு மருமகளிடம் அப்பெண்ணும் தாயும் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்ததே. அற்புதமான பதிவு. உளப்பூர்வமான பாராட்டுகள், சாகம்பரி.

உளப்பூர்வமான பாராட்டிற்கு நன்றி கீதா.

என்ன சொல்ல தெரியா வில்லை டீச்சர்
நேரில் பார்க்கும் பாத்திரங்கள்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா .

உனக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொண்டு அடுத்த வாரம்,-
எனக்கு முறுக்கு அதிரசம் வேணும் teacher

நன்றி திரு.சிவா. என்னுடைய மாணவர்களை நினைவுபடுத்துகிறீர்கள். உங்களைப்போலவே கடைசி வார்த்தையை தொடர்ந்து கருத்து சொல்வார்கள்.

அருமையான பதிவு.

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

முதல் வருகைக்கும் பாரட்டிற்கும் நன்றி சார்.

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்த்தி விட்டு கருத்திடுங்கள் சகோ

http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
படித்திட வேண்டுகிறேன்.)