மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

   இப்போது இன்னும் சில சந்தேகங்களை தெளிந்து கொள்ளலாமா?  இதுபோன்ற வருமானத் துரத்தல்களினால் மன அழுத்தம் கூடுகிறது என்றால், சிலர் எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு முன்னே ஓடி, பொருளாதார வசதியுடன் நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறார்களே? எப்படி? ( மனைவியோ , பிள்ளைகளோ என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாது). என்று தோன்றும். ஒரு மலையுச்சிக்கு வந்து திரும்பி பார்க்கும்போது அருகில் யாரும் இல்லாத தனிமை எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இது போல என் நண்பனுக்குத் தோன்றவில்லையே என்று சந்தேகம்கூட வரும். கடைசிக்கு தனிக்காட்டு ராஜாவாக நிம்மதி குறையாமல் இருக்கிறார்களே என்ரு கேள்வி எழும்.  விடு விடு அவனுக்கெல்லாம் மனசாட்சி இருந்தால்தானே மன அழுத்தம் வருவதற்கு என்று சமாதானம் சொல்லிக் கொள்வோம். அப்படியெல்லாம் இல்லை. இது வேறு விசயம்.  நிம்மதியின் அளவுகோல் வேறுபடும் காரணத்தை விளக்க , நான் ஹோமியோபதியின் தத்துவங்களைத்தான் உதவிக்கு அழைக்க வேண்டும்.

  மருத்துவ ரீதியாகவும் , மனோவியல் ரீதியாகவும் மனிதர்களை அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கலாம். தாவரவகை, மிருக வகை மற்றும் கனிம வகை மனிதர்கள் (Plant, animal, mineral). ஒருவரின் குணாதிசயம்தான் நோய்க்கு காரணமாகிறது. அதை புரிந்து கொண்டால்தான் சரியான மருந்து கொடுக்கமுடியும். அவரவர் வகைக்கு ஏற்ற மருந்தை பயன்படுத்துவதே வியாதியை குணப்படுத்தும். ( நம்முடைய பழங்கால முறைப்படிகூட அகஸ்தியர் மூலிகை மருந்துகளையும், புலிப்பாணி மிருகங்களிலிருந்து மருந்துகளையும் - இரத்தம் குடிக்கும் அட்டைகூட மருந்துதான், போகர் கனிம வகையில் மருந்துகளையும் தயாரிக்கும் ரகசியங்களை கொண்டிருந்ததாக படித்திருக்கிறேன்.)

நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் பழிசுமத்துகிறார் என்று கொள்வோம். இதற்கு பதிலாக - ஒன்று .நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தி நமக்குள்ளேயே குமைந்து போவோம். இரண்டு, கோபமாக மறுதலித்து அவர்களை மீது மேலும் சில பழிகளை நம் பங்கிற்கு திருப்பிவிடுவோம். என்னை அவமதித்தற்கு பதிலடி என்பதன் விளைவு இது. மூன்றாவதாக பொறுமையாக அதனை விளக்க முற்படுவோம். நம்மை யாரும் தவறாக நினைக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பின் விளைவு இது மூன்றில் ஏதாவது ஒன்று நம்முடைய எதிர் செயலாக இருக்கும். பொதுவான ஒரு சூழ்நிலையை மூன்று விதமாக எதிர் நோக்குவது புரிகிறது அல்லவா?. இதுதான் முறையே தாவரவகை, மிருகவகை, கனிம வகை மனிதர்களின் செயல்பாடாக இருக்கும்.

    இப்போது நம்முடைய பதிவிற்கு வருவோம். மனிதர்களை விட்டு விலக்க முடியாமலும், முன்னேற்றம் கை விட்டு நழுவுவதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஒரு மன உளைச்சலில் சிக்கினால் நாம் தாவர வகை. உறவுகளையும் , முன்னேற்றத்தையும் விட்டுகொடுக்கும் முறைகளை பின்பற்றி தக்க வைத்துக் கொண்டால், கட்டுக்கோப்பாக வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் கனிம வகை மனிதர்களாவோம். எதையும் கண்டுகொள்ளாமல், தன் முன்னேற்றமே குறியாக சுய நலமாக செயல் பட்டால் அவர் மிருக வகை. பணம் இருந்தால் போதும் அத்தனையும் அடைந்து விடலாம் என்பார்கள். ( அம்மா, அப்பாவைத் தவிர அனைத்தையும் வாங்கி விடலாம் என்றுகூட சொல்லுவார்கள்.)

இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் எந்த வகை என்று புரிந்து அது போல முடிவெடுங்கள். உதாரணமாக தாவர வகையாக இருந்தால், கண்டிப்பாக உறவுகளை விட்டுப் பிரிந்து ஒரு வாழ்க்கையை விரும்பமாட்டீர்கள், தனிப்பட்ட அடையாளத்தை அடைய முடியாது. கனிம வகையாக இருந்தால் சமன் செய்ய முயற்சிப்பீர்கள்(negotiations), குடும்பத்தையும், தனி மனித முன்னேற்றத்தையும் பாலன்ஸ் செய்ய முயற்சிக்கலாம். இரண்டில் ஒன்று என்பது மன உளைச்சலைத் தரும். . மிருக வகை என்றால் சாதனை மனிதர்களாவீர்கள், சாதிக்கவிட்டால்தான் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

  இப்போது மற்றவர்களுடன் நம்மை ஒப்பு நோக்கி ஒரு முடிவெடுப்பது தவறு என்று புரிகிறதல்லவா? நமக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன அழுத்தத்தை தவிர்த்து நிம்மதி என்னும் தென்றல் மனதிற்குள்ளேயும் வீசி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.

நிம்மதிக்கு எதிரியான மன அழுத்ததின் காரணங்கள்:

1..அந்தஸ்த்தின் அடையாளமாகுதல்:
முதலில் முந்தைய பதிவில் குறிப்பிட்டதை எடுத்துக் கொள்வோம். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் வருமானம் குறைந்து இருக்கும். ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். குடும்பத்திற்கான நம் பங்களிப்புகள் - குழந்தைகளுக்கு படிப்பில் உதவுவது, தேடித்தேடி அருமையான உணவு வகைகளை சமைப்பது, மாலை நேரத்தில் குடும்பத்துடன் வெளியே செல்வது, வீட்டை விடுமுறை நாட்களில் அழகுபடுத்துவது போன்றவை-  அதிகமாக இருக்கும். இந்த பங்களிப்புகளை நாம் எப்போதும் குறையில்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வீட்டில் நிம்மதியை கொண்டுவர முடியும். நம்முடைய முன்னேற்றம் குடும்பத்தினரை அவமதித்தோ அலட்சியப்படுத்தியோ இருக்கக்கூடாது.

என்னுடன் பணியாற்றுபவர் திறமையான பெண்மணி இன்றைய நிலைக்கு மேற்படிப்பு படித்தால் கல்லூரிக்கு முதல்வராகும் வாய்ப்புடையவர் .  ஆனால் இந்த வருடம் மேற்படிப்பில் சேரப்போவதில்லை என்று சொன்னபோது எனக்கு வருத்தம்தான். அவருக்கு பத்தாவது படிக்கும்  ஒரே மகன். வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் இருக்கும் மகனை (நன்றாகவே படிக்கக்கூடியவன்)  கவனிப்பதில் இருந்து தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று காரணம் சொன்னபோது புரிந்து கொள்ளமுடிந்தது. சிறு வயது முதலே மகனுடைய படிப்பில் பங்கெடுத்தவர் - வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுப்பது போன்றவை  - , தற்சமயம் வாழ்க்கையின் திருப்பு முனையான முக்கியமான தேர்விற்கு அவருடைய பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்து இருக்கிறார். . இப்போது அவருடைய முன்னேற்றம் சற்று தள்ளிப்போகும், ஆனால் மகன் இன்னும் சிறப்பாக பரிட்சைக்கு தயாராக முடியும்.  இது போன்ற விட்டுக்கொடுத்தல்கள், அவருடைய மகனை கண்டிப்பாக சிறப்பான நிலைக்கு கொண்டுபோகும் என்பதில் சந்தேகமே இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால், எந்த காலகட்டத்திலும் நம்முடைய பங்களிப்புகளை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு சற்றும் குறையாமல் செய்யும்போது நமக்கு உறவுகளினால் ஏற்படும் மன அழுத்தம் வருவதில்லை. இதனை முடிவு செய்வது பணத்திற்கும் மனத்திற்குமான விட்டுக் கொடுத்தல்கள்தான். ஆரம்பத்தில்  நேரம் இருக்கிறதென்று விழுந்து விழுந்து கவனித்துவிட்டு பிறகு பிஸியாகிவிட்டேன் என்று விலகுவது நம்முடன் இருப்பவர்களை மனதளவில் விலக்கி வைத்து விடும். தேவையென்றால், பொருளாதார முன்னேற்றத்தின் இன்றியமையாமையை எடுத்துச் சொல்லி குடும்பத்தின் ஒத்துழைப்புடன் அடுத்தபடியை அடைய முயற்சிக்கலாம்.


2. வேறுபட்ட மனோபாவங்கள்:
இப்போது அடுத்து கர்மயோகிகளினால் ஏற்படும் குழப்பங்களை பார்க்கலாம். சிலர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள் "என் வேலைதான் எனக்கு முதல் மனைவி" என்று.  நேசித்து வேலையை செய்வதே கர்ம யோகம்தான். அதுவும் முழு மனதோடு ஒரு சிறப்பான பூஜையை செய்த பலனைத்தரும்.  ஒரு உண்மையென்னவென்றால், நம்முடைய வேலையின் சாயல் நம்முடைய நடத்தையிலேயே தெரிந்து விடும். ( இதை ஆன்மீகத்தில் சாயாரூபம் என்பார்கள். பிள்ளையார் மீது பக்தி கொண்டவர்கள் அவரைப் போலவே அதிக சதை பிடிப்புடன் இருப்பதும், பெருமாள் பக்தர்கள் ஆகர்ஷிக்கும் தன்மையுடன் இருப்பதையும் கவனித்துப் பார்த்தால் தெரியும்) இது போன்ற தோற்ற நடத்தைகள் தன் வேலையை விரும்பி செய்பவர்களுக்கு வந்துவிடும். இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால், இவர்களால் அலுவலக பாதிப்பினை வீட்டில் தவிர்க்க முடியாது. சிலர் அலுவலகத்தில் தரப்படும் பயிற்சிகளை வீட்டிலும் அமல்படுத்துவர். டைம் மேனேஜ்மெண்ட், பர்சனல் மேனேஜ்மெண்ட், டாகுமெண்ட் மேனேஜ்மெண்ட் போன்றவை இல்லத்திலும் அமல்படுத்தப்படும். நல்ல விசயம்தானே என்கிறீர்கள்...!  வேறு சிலர்,  வெளியுலகத்திற்கு கட்டுபாடாக தோற்றமளிப்பவர்கள், வீட்டில் விதிமுறைகள் மீறுவதை செய்வார்கள் - மின் விசிறியை வேகமாக சுழல விட்டு வெறும் தரையில் கன்னத்தில் கை வைத்து சயனிப்பது, பரிட்சை முடியும் வரை புத்தகங்கள் வீடு முழுவதும் சிதறி கிடப்பது, காலையில் நேரம் கழித்து எழுந்தாலும் சரியான நேரத்திற்குள் கிளம்ப அதிகளம் செய்வது, இன்னும் எத்தனையோ ...  இவர்களுக்கு சின்ன சின்ன விதிமீறல்கள் சமயத்தில் பதட்டத்தை குறைக்கும்.  ஆனால் அது மேற்குறிப்பிட்ட வேலை விரும்பிகளை மேலும் பதட்டப்படுத்தும். இரு வேறுபட்ட மனோபாவங்கள் ஒரு வீட்டில் இருந்தால், அப்புறம் நிம்மதி  வீட்டு வாசலில்கூட நிற்காது. இங்கே விட்டுகொடுத்தல் என்பது நமக்கும் மற்றவர்களுக்குமான விருப்பு வெறுப்புகள்தான். level of relaxation. ரொம்பவும் கெடுபிடியாக இல்லாமல் ரொம்பவும் விட்டுக்கொடுக்காமலும்,  எழுத்தில் இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும்.


3. இறுக்கமான நிலைப்பாடுகள்:
இல்லம் என்பது அதில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தையும் பொருளாதார வசதியையும் குறிக்காது, எத்தனை பாதுகாப்பாக நிம்மதியாக உணர்கிறார்கள் என்பதை பொறுத்தது. அங்கு இருப்பவரின் உணர்வுகள் மதிக்கப்படும்போதுதான் அவர்களின் நிம்மதியை உறுதி செய்யப்படுகிறது.  மற்றவருக்காக சிந்திப்பதும் மற்றவர்களின் இருப்பை உணர்வதும்தான் இல்லறத்தின் அழகு. முன்பெல்லாம் ஒரு தனி மனிதனின் தினப்படி அட்டவணையில் குடும்ப உறுப்பினர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அப்படியில்லை. விடுமுறை நாட்களில்கூட அடுத்து வரும் வேலை நாளுக்கான திட்டமிடல்கள், விசேச நாட்களிலும் - ஒன்று கூடினாலும் - மனம் விட்டு பேச முடியாத நிலை. மனம் விட்டு பேசும்போது கசப்புகள் வெளிவரும், கருத்து பரிமாறல்கள் வன்மையாக மாறலாம். அதிக பட்ச எல்லைக்கு சென்று பிறகு சமாதானத்திற்கு வந்து சரியாவதற்கு ஒரு நீ...ண்ட நேரம் வேண்டும். அதற்கு அட்டவணை இடம் தராது. ஆனால் அப்படி ஒரு ரகளைக்குப்பின்  துவைத்து உலர்த்தியதுபோல் அழுக்கெல்லாம் தொலைந்துபோய் மனம் தெளிவாகி சுகமான நிம்மதி கிட்டும். அது போன்ற ஒரு சோதனைக்கு தயாராக முடிவதில்லை. நாட்கள் செல்லச்செல்ல அழுக்கின் சுமை கூடி சுமைதாங்கியாகிவிடுகிறோம். சண்டை போடவோ , சத்தம் போடவோ, சமாதானம் செய்யவோ , மன்னிப்பு கேட்கவோ ( மன்னிப்பு கேட்பது கூட ஒரு கலைதான். இது பற்றி தனியாக ஒரு பதிவிடுகிறேன்) நம்முடைய அட்டவணையில் இடம் இல்லையெனில் மனதிற்குள் அழுத்தம் கூடிவிடும். இந்த இடத்தில் விட்டுகொடுத்தல் என்பது நம்முடைய ஒரு நாளைய பொழுதில் நமக்காகவும் மற்றவருக்காகவும் ஒதுக்கும் நேரத்திற்கான சதவிகிதம்தான். 

- இன்னும் கொஞ்சம் அடுத்துவரும் கடைசி பகுதியில்

நிம்மதியை மனதிற்குள்ளே தேடு என்ற சொற்றொடரிலிருந்து நான் மாறுபடுகிறேன். நம்மை சுற்றிலும் மகிழ்ச்சியையும் இனிமையையும் விதைப்போம், அந்த தோட்டத்திலிருந்துதான் நிம்மதி என்ற தென்றல் வரும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம். ஆக, நிம்மதி மனதிற்கு வெளியேதான் என்பதும் உள்ளே வரவைப்பது நம் கையில்தான் உள்ளது.

ஒரு ஆங்கில நாளிதழில் வந்த செய்தி இது. முப்பது வருடங்களுக்கு முன்பு 25 சதவிகிதமாக இருந்த மன அழுத்தம் இப்போது 75 சதவிகிதமாக மாறிவிட்டது. குறிப்பாக தமிழ் நாட்டில் இதுபோன்ற மாற்றம் இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது.   கடவுள், குடும்பம், சத்தியம் போன்றவற்றின் மீது  வைத்திருந்த பற்று இப்போது சுயநலம், தனி மனித முன்னேற்றம் என்று மாறிவிட்டதுதான் காரணமாம்.

கவனிக்க வேண்டியது தனி மனித முன்னேற்றம் என்ற வார்த்தையைதான். இந்த வார்த்தை உச்சரிக்கப்பட ஆரம்பித்ததுதான், நிறைய பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்தது. "ஓடு ஓடு முதலிடத்தை அடையும் வரை ஓடு, அருகில் வருபவர்களை பார்க்கத் தேவையில்லை. யார் உடன் வருகிறார்கள் என்றுகூட நிதானிக்க வேண்டாம். வெற்றி பெறுவதற்குரிய அத்தனை வழிமுறைகளையும் தொடர்ந்து ஓடு". இதுதான் தாரக மந்திரமாக மாறியது.

அந்த ஓட்டத்தில் தேசத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் குவிந்தன. அன்னிய செலாவணி அதிகரித்தது. இரவில் கூட வேலை பார்த்து, டாலரில் பணம் சம்பாதிக்கின்றனர். மக்களுக்கு - செலவு செய்யும்  சக்தி அதிகரித்தது.  இருபது வருடங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் கடன் தரவே வங்கியில் வீட்டை அடமானம் வைக்க வேண்டியதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பணம் புரள்கிறது. அரசாங்க வேலைக்காக காத்து இருந்து வாழ்க்கையை தொலைத்த கதையெல்லாம் முடிவுற்று, தனியார் நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் கிட்டுகிறது. திறமை இருக்கும் எவரும் முதல்படியை அடைய முடியும். நல்ல விசயம்தானே!

நல்லது, அப்படியானால் மன அழுத்தம் ஏன் அதிகரித்துள்ளது? பொதுவாக நகர்புறத்தில் நல்ல வசதியுடன் இருப்பவர்களுக்குதான் இது அதிகரித்துள்ளது. தனி மனித முன்னேற்றம் என்ற தாரக மந்திரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதோ? " நான் நன்றாக சம்பாதித்து என் குடும்பத்தை முன்னேற்றுவேன், என்னுடைய முன்னேற்றம்தான் குடும்ப முன்னேற்றம்" என்பது தவறிப்போய் , " நான் நன்றாக சம்பாதிக்கிறேன் " என்ற வாக்கியத்துடன் முடிந்துவிட்டது.

அளவிற்கு அதிகமான வருமானமே ஆயுதமாகிவிட்டது. அது அத்தனைபேரையும் மனதளவில் அழித்து தொலைத்து விட்டது. என்ன இப்படி ஒரு காட்டமான விமர்சனம் என்கிறீர்களா? இன்னும் கொஞ்சம் பேசலாமா?

சாலையில் ஒரு விபத்து. அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனங்களில் பறப்பவர்கள், மறுக்கவே முடியாமல் மனிதாபிமானத்தையும் தொலைத்துதான் போகிறார்கள். முடிந்தவர்கள் உதவினாலும், அன்று முழுவதும் வேலையில் மனம் ஈடுபட்டாலும் உள்ளே ஒரு அழுத்தமான குரல் கோபமாக பேசிக் கொண்டேயிருக்கிறது. அப்போது மட்டுமல்ல வீட்டில் உடல் நலம் சரியில்லாத அம்மாவை தனியாக விட்டு வந்தது பற்றி, பரிட்சைக்கு படிக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுக்கும் வகையில் மனம் விட்டு பேச நேரமின்மை ( இது போல பரிட்சை நேரங்களில் பேப்பர், பென்சில், ரப்பருக்கான பணத்திற்கு தடுமாறினாலும் பரிட்சை நேரத்து கெடுபிடியை குறைக்கும் வகையில் அப்பா, அம்மா பெரியவர்களின் கனிவான கவனிப்பும் நமக்கு இருந்ததே, இரவில் தேநீர், தேர்வு சமயத்தில் தெம்பான உணவு வகைகள்) இந்த இடத்தில் நாம்தான் தொலைந்து போயிருக்கிறோம். நம் உதவியின்றி அவர்கள் சமாளித்துக் கொண்டாலும் அந்த இடத்தில் அவர்களை தொலைத்துவிடுகிறோம். இப்போது பத்தாவது வகுப்பு தேர்வு எழுதிய மகனின் மதிப்பெண் எது வந்தாலும் நாம் ஒன்றும் பேச முடிவதில்லை. ஏனென்றால், நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்கிற ரீதியில் கேள்விகள் எழும்.  ட்யூசன் வகுப்பு ஏற்பாடு செய்வதுடன் நம் கடமை முடிந்து இருக்கும். புத்திசாலிக் குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிறு வயதிலிருந்தே அருகில் அமர்ந்து வீட்டுப்பாடம் சொல்லித் தந்து பழக்கப்பட்ட பிள்ளைகள்தா தனித்துவிடப்படும். ( அப்போது நாமும் நம் மொத்த நேரத்தையும் விலை பேசும் வேலையில் இருந்திருக்க மாட்டோம். அனுபவம் கூடக்கூட வருமானம் அதிகரித்து நம்முடைய பர்சனல் டைம்கூட பணமாகிவிடும்)

வாழ்க்கையின் ஓட்டத்தில் வருமானத்தை துரத்துவதில் எதிலேயே கவனம் இல்லாமல் முக்கியமான சிலவற்றை தொலைத்துவிட்டு மன அழுத்ததில் வாழ்க்கையின் பாதியிலேயே களைத்து விடுகிறோம். அந்த அழுத்தத்தை திருத்தக்கூடிய சில விசயங்கள் பற்றி பேசலாமா?

    இது பிரச்சினைகளை கையாளுவதன் தொடர். உறவுகளுக்கும், நட்புகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிக்கலாம். நாமும் நிறைய சமயம் முயற்சி செய்திருப்போம், சில சமயம் வெள்ளை கொடி பறக்கவிடப்பட்டு இருக்கும். சில சமயம் ஒட்டாமல் உடைந்துவிடும். ஏதோ ஒரு நோக்கத்தில் ஆரம்பிக்க அது வேறு மாதிரி முடிவது சங்கடத்தில் ஆழ்த்திவிடும். எல்லாவற்றிற்கும் ஒரு வெற்றி குறிப்புகள் இருக்கும். அதனை கையாண்டால் வெற்றி அடையலாம். சிலருக்கு இது பிறவிக்கலை.  பேச்சு வார்த்தையில் கடைசி வார்த்தை அவர்களுடையதாகவே இருக்கும். பேச்சு நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

    பிரச்சினை ஆரம்பித்த உடனேயே சம்பந்தப்பட்டவரிடம் நேரிடையாகவே பேசி விளக்கம் கேட்பது நல்லது. பிரச்சினையின் ஆரம்பம் நம்மிடம் இருந்து - அவர்கள் மேல் சந்தேகமோ, கோபமோ இருந்தால் உடனேயே பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். கொஞ்சம் இடைவெளி தந்து சுமுகமான முறையில் ஆரம்பிக்க வேண்டும். 
   அப்படி உணர்ச்சிவசப்படாமல் பேச முடியாது என்றால், வேறு வழியில் முயற்சிக்கலாம். கடிதம் எழுதுதல்.. ஒரு கடிதமாக உங்களுடைய நியாயமான எண்ணங்களை பதிவு செய்வது நல்லது. வீட்டிற்குள்ளேயே கடிதமா என்று கேட்க வேண்டாம். சம்பந்தப்பட்ட இருவரும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி முறித்துக் கொள்வதைவிட எழுதும்போது ஒருவித கட்டுப்பாடு வரும். நம் பங்களிப்பை சரிவர செய்துவிட்டால் அடுத்தவரை சரி செய்யும் தெளிவு கிட்டும். ஒரு முறை எழுதி மட்டும் பாருங்கள், அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை கை வசம் வந்துவிடும். உங்களுடைய வருத்தம், கோபம், எதிர்பார்ப்பு, விட்டு கொடுக்க விரும்பும் விசயம் அனைத்தையும் எழுதுங்கள். படித்து புரிந்து கொள்ளும்போது "ரிப்பீட்டு" போட முடிவதால் பிடித்தமான வரிகளுக்கு விரிவான விளக்கங்கள் கிட்டும். பேசுவதில் இல்லாத கூடுதல் ப்ளஸ் ...ப்ளஸ் இது. எழுதி முடித்தபின் கோபம்  குறைந்த உணர்வு வரும். அடுத்தவர் பக்க நியாயம்கூட தெளிவாகும். சரி, நாம் பேசுவதற்கு வரலாம். பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் ,
 
மற்றவர் பேசும்போது செய்ய வேண்டியவை:  மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் சொற்களை சரியாக மொழிபெயர்ப்பு செய்து இதயத்திற்கு தர மூளையின் ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு ஒரு பதட்டமில்லாத மன நிலை அவசியம்.  சரியான இடம், நேரம் ஆகியவற்றையும் கவனியுங்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் பேச ஆரம்பிக்கும் முன் அலைபேசி அழைப்பு வந்துவிடும்.  இது போன்ற தடங்கல்களை தவிர்த்திடுங்கள். மற்றவர் பேசுவதை அமைதியாக கவனியுங்கள். பாதியில் குறுக்கிட்டாலோ, தவறான முகபாவனைகளோ பேச்சு வார்த்தையை திசை மாற்றிவிடும்.

செய்யக்கூடாதவை:  குறுக்கிட்டு குழப்ப வேண்டாம். உங்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடனேயே மறுத்து பேச வேண்டாம். ஏன் அவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும். பிறகு கொஞ்ச நாள் கழித்து இதுவே திரும்ப நடைபெறும். ஒருவரின் வார்த்தைகளின் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். "நீ எந்த விசயத்தையுமே பெரிதுபடுத்திதான் பேசுகிறாய்" என்று வாயை அடைக்காதீர்கள். இதுவும் மன வருத்ததிற்கு 'தொடரும்' போட்டுவிடும். நீங்கள் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்று முடிவு செய்ய வேண்டாம். சிலரிடம் நம்முடைய மனவருத்தத்தை சொல்லும்போதே "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில் பழி வந்து சேரும்.  அதன் பிறகு பேசி தீ......ர்க்கத்தான் முடியும். சிலரிடம் பேசும்போதே ஒருவித சோர்வு வந்துவிடும், நம்மை பேச விடாமல் "நீ அதை பற்றித்தானே வருத்தப்படுகிறாய். எனக்கு புரிந்துவிட்டது நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்கள். மருத்துவரிடம் சென்றால்கூட  நம்முடைய பிரச்சினைகளை  காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் கூறியபின் கொடுக்கப்படும் மருந்திற்குதான் வியாதி கட்டுப்படும். சரிதானே, அதேதான் இங்கேயும் கடைபிடிக்கப்பட விரும்புவோம். நாமும் மற்றவரிடம் பேசும்போது இது போன்று 'மனதை படிக்கும் வித்தையை' கைவிட்டு நேர்மையாக அணுக வேண்டும். "என்னவோ சொல், கேட்டுத் தொலைக்கிறேன்' என்பது போன்ற இறுக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நாம் பேசும்போது செய்ய வேண்டியவை:
     பிரச்சினையின் பாதிப்புகள், மாற்றிக் கொள்ளவேண்டிய கருத்துக்கள், ஏன் அவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக அமைதியாக சொல்ல வேண்டும். அவர்கள் குறுக்கிட்டால் , மிகவும் நிதானமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் உங்களுடைய விளக்கத்தை தொடருங்கள். ஏனெனில் சமாதனப் பேச்சிற்கு அழைத்தது நீங்கள்தான். " குறுக்கிட்டு பேசாதே" என்று அதட்டுவது, கோபம் கொள்வது போன்றவை ' தடங்கலுக்கு வருத்துகிறோம்' போட வைத்துவிடும். பேச்சு வார்த்தையின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  ஒரு சமாதானமான முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்ற உறுதி மிக முக்கியம். 

செய்யக்கூடாதவை: அவர்களுடைய குண நலன்களை விமர்சிக்க வேண்டாம். "அப்பவே அவன் சொன்னான் நீ சரியான முசுடு என்று. இப்ப புரிஞ்சுகிட்டேன்" இது போன்ற வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்தும். சில நேரங்களில், தனிமையில் நம்மையும் காயப்படுத்தும். அப்புறம் , மத்தியஸ்த்தம் பேச வேறு யாராவது வர வேண்டும். எப்போதுமே நாம்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தல்கள் வாழ்க்கையை விலை மதிப்பற்றதாக்கும். கணவன் மனைவி சண்டையில் தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்பார்கள்.   ஆகவே வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி கடைசி வார்த்தையை நூல் பிடித்து திருப்பி என வளர்த்துக் கொண்டே போக வேண்டாம்.

பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து  சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல. 


பிரச்சினை என்பது
      1. நமக்குள்ளேயே இருக்கும் உள் மனப்போராட்டமாக இருக்கலாம். - படிப்பு, திருமணம், வேலை போன்ற முக்கியமான பிரச்சினைகள்.
      2. நமக்கும் மற்றவருக்கும் இடையே நடைபெறலாம் - உறவுகள் தொடர்பானவை
      3. நமக்கும் சூழ்நிலைக்கும் இடையே ஏற்படலாம்.- பொருளாதார சிக்கல், தவறாகிப் போன செயல்களின் விளைவுகள், தடங்கல்கள்.
      4. சமுதாய கோட்பாடுகள் தொடர்பான சிக்கலாக இருக்கலாம் - கோவில் திருவிழா போன்றவை.
      5. சந்தர்ப்பவசத்தால் ஏற்படலாம் - (விதிவசம் என்று சொல்லலாமோ?) - அப்போதே தோன்றியது இது சிக்கல்தான் என்று சொல்லப்படும் அனைத்தும்.
                                                                        தவிர்க்க நினைத்தும் மாட்டிக் கொள்வது

ஒரளவிற்கு அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். இவற்றை உதாரணமாக கொண்டால் விளக்குவது எளிது என்று கொள்கிறேன்.

முதல் பிரிவு நல்ல நண்பர்கள், பெற்றோர், நம் நலனில் கவனம் கொள்ளும் உறவுகள் இவர்களிடம் மனம் விட்டு பேசி தீர்வு தேடலாம். ஆலோசனை தருபவர்கள், முக்கியமாக பிரச்சினைக்கு சம்பந்தமில்லாதவர்களாக இருக்கு வேண்டும்.  அவ்வாறு இல்லையெனில் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இரண்டாவது பிரிவு ரிலேசன்ஷிப் மேனேஜ்மெண்ட் - பேசித் தீர்த்துக்கொள்வது, இது ஒரு கலை. இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


மூன்றாவது பிரிவில் சாணக்கிய தந்திரத்தை பயன்படுத்தலாம். .  நாம்தான் ஏற்கனவே 360 டிகிரி அலசல் செய்துள்ளோமே. பலவீனமான பக்கம் எது என்று தெரியுமல்லவா? அதனை பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒரு சிக்கலை தீர்க்க முடியவில்லை என்றால் அங்கு 360 டிகிரி அலசல் நடைபெறவில்லை என்று அர்த்தம். இந்த வகையில் கண்டிப்பாக மற்றவர்களின் உதவியும் தேவை. சில சமயம் இதிலேயே ஆழ்ந்து போய் சரியானபடி யோசிக்ககூட முடியாமல் போய்விடும்.

பிரச்சினை:   ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டும். பலவீனம் - நமக்குத் தெரிந்தவர் இல்லை. அவர் நேர்மையானவராம். வெளியாட்களிடம் பிடி கொடுத்துப் பேச மாட்டாராம். இதெல்லாம் அந்த விசயம் வெற்றி பெறாது என்பதாற்கான காரணங்கள். இவைதான் பலமான தடுப்புச்சுவர்களும்கூட. நிறைய சமயம் சுவரை உடைக்க முயற்சி செய்வோம். அது தவறு. சுவர் என்று இருந்தால் வாயில் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதைத் தேடுவோம். நமக்குத் தெரிந்தவர் இல்லை என்றால் அவருக்குத் தெரிந்தவர்களை கண்டுபிடிப்போம், நேர்மையானவர் என்றால் நேர்மையாகவே அணுகுவோம், ஒரு வித ஒளிவு மறைவில்லாத அணுகு முறை தேவை. இதுதான் என் பிரச்சினை தீர்க்க முடியுமா என்று பேசலாம். நாம் வேறு ஒருவர் மூலமாக அணுகும்போது, அந்த ஒருவரின் குண நலங்களும் கவனிக்கப்பட வேண்டும். சரியான நபர் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
    
பிரச்சினை :  ஒரு பரிட்சையில் வெற்றிபெற - நம்முடைய பலவீனமான பக்கங்கள் என்று சொல்லப்படுவது. படிக்கவே பிடிக்கவில்லை. மறந்து போய்விடுகிறது. என்னத்தை எழுதறாங்க படித்தாலே தூக்கம் வருகிறது. ஒரு விசயமும் பதியவில்லை. அடுத்த முறை பார்த்துக்கலாமா? இதெல்லாம் பிரச்சினையின் பலமான பக்கங்கள். நம்முடைய புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற புத்தங்களை தேடி வேண்டும் - கணிதம் தொடர்பான பாடங்களுக்கு ராஜாராம் எழுதியவை நன்று என்போம். அடிப்படை புரிந்து கொண்டால், ஆர்வம் வந்துவிடும், மறதி வராது. சாதாரண நாட்களில் பதட்டம் இல்லாமல் வாசித்து  புத்தகத்துடன் நட்பு கொள்ளவேண்டும், உறக்கம் வராது. பரிட்சைக்காக படிக்கும்போது தடங்கல்  இன்றி பதியப்படும்.

நான்காவது பிரிவு: ஊர்கூடி தேர் இழுப்பது. இதனால் அந்த அளவிற்கு மன உளைச்சல் சாதாரணமானவர்களுக்குத் தோன்றாது. முயற்சி செய்வோம் எது வந்தாலும்  ஏற்றுக் கொள்வோம் என்ற மனப்பான்மைதான் இருக்கும்.ஐந்தாவது பிரிவில் தீர்த்தே ஆக வேண்டுமா என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு பிரச்சினையின் மையம் கண்டு மேலே குறிப்பட்ட வழிகளில் எதையாவது முயற்சி செய்யுங்கள்.

 பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே முன்னோடியாக செயல்பட்டு வெற்றியை அடைய வைக்கும்.  எண்ணத்தின் வலிமை மிக முக்கியம். கடவுள் போல கூடவே வரும்.  எதிர்பாராத வழியிலிருந்தெல்லாம் நமக்கு தீர்வு கிடைக்கும். அடுத்த பகுதியில் பேசி தீர்க்கும் கலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபவத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அப்படியென்றால்...?

அதற்கு முன் சிக்கலை தீர்க்க முடியும் என்ற 'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்'  இருக்க வேண்டும் . இதுவும் மகாகவியின் வார்த்தைகள்தான். பிரச்சினையிலேயே ஆழ்ந்து கொண்டு பலவீனமடைந்து நிற்பவர் மாக்களுக்கு சமம் என்கிறார். உள் வலி என்பது மனதில் ஏற்படும் தாக்கம் அதுதான் தாண்டி குதிக்க தூண்டும். உண்மையில் பற்று என்பது எப்போது வரும்? நம் செயல்களில் நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிட்டும்.

  பிரச்சினையை மனதளவில் பகுத்தாய்வு செய்ய வேண்டும். 360 டிகிரி மதிப்பிடல்தான். பல கோணங்களில் பார்க்கும்போது அதன் முழு பரிமாணம் பலம், பலவீனம் ஆகியன தெரியும்.இது போன்ற திறனாய்வு செய்யும் போது என் நண்பர் முற்றிலும் தனக்கு எதிராக சிந்திக்கும் எதிர்போக்கு நபரை உடன்  வைத்துக் கொள்வார். அடுத்த கட்டம் செல்லும் போது அந்த  நபரை கழட்டி விட்டு விடுவார். வேறுபட்ட கோணங்களை பார்க்க இது உதவும். உண்மையில் ஏன் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்பதற்கான பலமான காரணங்கள் கிட்டும்.  முடியாது என்பதற்கான காரணங்கள்தான் முடியும் என்பதற்கான பதிலை தேடும். வெற்றிக்கான வரைபடம் கிட்டிவிடும்.

அதென்ன சாணக்கிய தந்திரம்?  பிரசித்தி பெற்ற நந்தப் பேரரசை அழித்து சந்திரகுப்த மௌரியரின் தலைமையில் குப்தப் பேரரசை நிறுவியதில் சாணக்கியரின் பங்கையும் அரசியல் தந்திரங்களையும் வரலாறு பெருமையாக பேசும். சந்திரகுப்தரை பேரரசராக உருவாக்கிய பெருமையும் அவரையே சார்ந்த்து. ஆனால், ஆரம்பகாலத்தில் இளைஞனாக இருந்தபோது சந்திர குப்தர் நாடிழந்து அகதியாய் காட்டில் திரிந்தார். தட்சசீலத்திலிருந்து வெளியேறிய சாணக்கியரும் காட்டில்தான் சந்த்தித்தார். சந்திர குப்தரின் நம்பிக்கை மிக்க போராளிகளைக் கொண்டு மகதத்தின்மீது படையெடுப்பதும் தோற்பதும் மீண்டும் காடு திரும்புவதும் நடைபெற்றகாலம் அது. தோல்வியின் காரணம் புரியாமல் காட்டில் திரிந்தனர். எப்போதாவது ஏற்படும் பசி அப்போதும் தோன்றியது. காட்டில் சிறு குடிசையை கண்டனர். அதில் ஒரு கிழவியும் சிறு வயது பேரனும் வசித்து வந்தனர். அவளிடம் உணவு கேட்டபோது, யாரென்று தெரியாமலே , சற்று பொறுத்திருக்கும்படியும் தானிய அடை செய்து தருவதாகவும் கூறினாள். சற்று பொறுத்து சுடசுட அடையும் வந்தது. பாட்டியின் பேரனும் உடனமர்ந்து உண்ண முற்பட்டான். மிகவும் சூடாக இருந்த அடையில் கை வைத்து விட்டு ' ஆ' என்று அலறினான். "உண்ணும் தந்திரம் தெரியாமல், நீயும் அந்த சாணக்கியன் போலவே முட்டாள்தனம் செய்கிறாயே." அந்த கிழவியின் அதட்டல் சாணக்கியரை திடுக்கிட வைத்தது.  முட்டாளா சாணக்கியரா? கோபம் கொள்ளாமல் விளக்கம் கேட்டார். அந்த கிழவி சொன்ன பதில்தான் பின்னாளின் புகழ்பெற்ற குப்தப்பேரரசை நிறுவியது.

"ஐயா, அடையின் நடுப்பகுதி சற்று தடிமனானது, ஓரத்தில் மெலிந்து இருக்கும். எனவே அடையின் நடுப்பகுதியைவிட ஓரத்தில் சூடு விரைவில் தணிந்துவிடும். எனவே ஓரத்தில் இருந்து அடையை பிய்த்து உண்ண ஆரம்பிக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் தலை நகர் அரசர் இருக்கும் இடமாகையால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் எல்லை பகுதியில் காவல் குறைவாக இருக்கும். அங்கே போர் தொடுத்து சிறிது சிறிதாக முன்னேறாமல் நேரிடையாக தலை நகரை தாக்கி தோற்றுவிடுகிறார். இது முட்டாள்தனம்தானே". உண்மையே. இதனை பின்பற்றி சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.


இதே முறையை  பிரச்சினையை சரி செய்யவும் கையாளலாமா? நாளைய பதிவில் தொடரலாம்.

    பிரச்சினைகளை கையாள்வது எப்படி? உண்மையில் மேலாண்மை தொடர்புடைய ஒரு தலைப்பு. நமக்கு பயன்படுமா என்று பார்க்கலாம். கையாள்வது என்றால் பிரச்சினை வராமல் தடுப்பது, , பிரச்சினையை வரும்போது சரிவர எதிர்கொள்வது, வந்து விட்டால் தீர்த்துக்கொள்வது ஆகியனவாகும்.

   முதலில் பிரச்சினை என்றால் என்ன? நம்முடைய சிந்தனையை சிக்கலாக்கி செயலை,  நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முன்னேற்றத்தை  தடுக்கும் விசயங்கள்  இதனால் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் ஒரே இடத்திலேயே தேங்கி கிடக்கும் அபாயம் நேரிடலாம். அது விளைவுகளை சந்திக்க பயப்படும் நம்முடைய உள்மனதின் தடைகளாகவோ, முக்கியமானவர்களுடன் ஏற்படும் மனஸ்தாபமாகவோ, மற்றவர்களின் தேவையில்லாத குறுக்கிடல்களாகவோ,  முட்டுச்சந்தில் சிக்க வைக்கும் சூழ்நிலைகளாகவோ இருக்கலாம். சிலர் இவற்றை எதிர்கொள்ள பயந்து தானாகவே சரியாகிவிடும் என்று அமைதி காப்பார்கள். அது நல்லதல்ல. கண்டிப்பாக சரி செய்தே தீருவேன் என்கிற மனபான்மைதான் வெற்றியின் ரகசியம்.

பிரச்சினையை வரவிடாமல் தடுப்பது :  இதற்கு நம் உள் மனம் ஒரு பெரிய பட்டியலையே -data base - தயார் செய்து வைத்திருக்கும். எல்லாம் கடந்தகால தோல்விகளின் பதிவுகள்தான். நம்முடைய அனுபவம் என்றில்லாமல் மற்றவர்களின் அனுபவங்களும் பதியப்படும். ஒரு விபத்து நடைபெறுவதை பார்க்கும்போதே ஏன்? எப்படி? தவிர்த்திருக்கலாமோ? என்று பல விசயங்கள் கேள்விகளாக நம்மில் பதிக்கப்படுகின்றன. அதுபோலவே சிக்கலை உருவாக்கும் சிலரைக் கண்டாலே ஒதுங்கிவிடுவோம். பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும் உணர்ந்துவிடுவோம். பொதுவாக  பிரச்சினைகள் உருவாவது எல்லை மீறிய சந்தர்ப்பங்களால்தான். எல்லைகளை சரிவர பராமரித்தால், மீறாமல் இருந்தால் இவற்றை தவிர்த்துவிடலாம்.  வரவு மீறிய செலவு - பொருளாதார சிக்கல், கட்டுப்பாடற்ற செயல்கள், வார்த்தைகள் - உறவு முறை சிக்கல்கள், வரைமுறையற்ற சிந்தனைகள் - சிக்கலுக்கு தூதுவிடுகின்றன. சில சமயம் 'அவரு பெரிய அப்பா டக்கரா?' என்று கேட்டுக் கொண்டே சமாளிக்கிறேன் பேர்வழி என்று தானாகவே போய் சிக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம்கூட ஒரு தலைவலி உருவாக காரணமாகிவிடும்.    

பிரச்சினையை எதிர் கொள்வது : இதுவும் டேட்டாபேஸ் சார்ந்த செயல்தான். தவிர்க்கமுடியாமல் 'வஞ்சனை பேய்'களிடம் மாட்டிக்கொண்டாலும் ரொம்பவும் சாமர்த்தியமாக தப்பித்துவிட வேண்டும் -  அப்போதைக்கு தலையை ஆட்டி வைப்பது, வாயை இறுக மூடிக்கொண்டு சிரிப்பை வரைந்து கொண்டு , முழுகட்டுப்பாட்டையும் கையாண்டு  அந்த நிமிடங்களை கடந்துவிட வேண்டும். , .' 'லாகவம் பயிற்சி செய்' என்று மகாகவி சொன்னதும் இதைத்தான் போலும்.  அலுவலகத்தில் இது போன்ற வழிமுறைகள் நம்மை எதிர்பாராத சிக்கலில் இருந்து காப்பாற்றும். சில சமயம் வேண்டுமென்றே சீண்டி பிரச்சினைக்குள்ளாக்குவார்கள். நாமும் உணர்வுகளின் பிடியில்  சிக்கிக் கொண்டு தவறாக வெளிப்படுத்தி பொதுவில் ஒரு கெட்ட பெயரை பதிவு செய்து கொள்வோம் - சரியான முரட்டுப் பேர்வழி, வாயாடி, கோபக்காரன், யார் கூடவும் ஒத்துபோக முடியாதவன்..... 360 டிகிரி மதிப்பிடல்  நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் இது போன்ற பெயர்கள் நம்மை வழி மாற வைக்கும். வீட்டிலேயும்தான், யாரிடமோ கோபப்பட, குழந்தைகள் நம்மீது கோபக்கார முத்திரை குத்தி ஒதுங்கிவிடுவார்கள், வளர்ந்தபின் ஒதுக்கி விடுவார்கள். இது மனிதர்களால் வரும் பிரச்சினையை சமாளிப்பது. 

    சில சமயம் சூழ்நிலையே  பிரச்சினையாக உருவாக்கும். 'அந்த நிமிடத்தை கடப்பதுதான்' காப்பாற்றும் மந்திரம். இதற்கும் அந்த டேட்டாபேஸ்தான் உதவும். பேருந்தை தவறவிட்டாச்சு, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல என்ன செய்யலாம், ஆட்டோவில் செல்லலாம், நண்பனிடம் உதவிகேட்கலாம் - உதவக்கூடிய நண்பனின் பட்டியல் இருக்க வேண்டும்.தாமதமாக வர மேலதிகாரியிடம் அனுமதி கேட்கலாம் அல்லது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் - தாமதமாக சென்று காரணம் சொல்வதைவிட இது பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் திகைத்து நிற்பது பதட்டத்தை அதிகரிக்கும். கூடவே இருக்கும் சிலர் 'அப்பவே சொன்னேன் ' என்று கோபத்தை வேறு கிளறுவார்கள். அது வேறு பிரச்சினயை கிளப்பும்.

சரி மூன்றாவதான பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஊதா நிறப்பூனையின்
சாப்பாட்டிற்கான
கொஞ்சம் துரத்தல்.....
சாப்பாடோ தப்பி பிழைத்து
பயந்து ஓடுதல்.....
நேரம் கிடைத்தால்
சமையல் பாத்திரத்தால்
தலையில் விடும் அடி!
இருந்தாலும்....
சமயத்தில் .....
பசி இல்லை என்றாலும்
குணம் மாறமுடியாமல்
பூனையின் எலி வேட்டை!
சிறிய வயது சித்திரக்கதை
சிரிப்பாய்தான் இருந்தது
எலியிடம் சினேகம்கூட
எனக்குள் வளர்ந்தது.


எலிப்பொறி வடையை
கடித்த எலிக்கு மீட்புகூட
என்னால் கிட்டியது.
தப்பித்தவற்றின் வாழ்த்தும்
பெரியப்பாவின் கையில்
உயிர் விட்டவற்றின்
வெள்ளையுடை பாடல்களும்
உறங்கும்போது வந்தன.
எப்போதாவது பரிட்சையில்
தோற்றுபோனபோது .....
சின்ன சின்ன அடிபட்டு
இரத்தம் வந்தபோது....
குண்டுமணிக் கண்களின்
பழிவாங்கிய பார்வை
நினைவிற்குள் வந்தது.
சின்ன சந்தேகம்கூட வந்தது.
இறந்த பிறகு எலியெல்லாம்
பிள்ளையாரின் வாகனமானதா?


இப்போதுகூட...
------ ------ பூனைகளின்
பசி இல்லை என்றாலும்....
குணம் மாறமுடியாமல்
எலி வேட்டை தொடர்கிறது.
சிரிப்புதான் வரவில்லை
ஆனால்,
இன்றைக்கும் எலியிடம்
பிரியம் மாறாமல் .....
தப்பிக்கும் வழி தெரியவும்,
உயிர் தப்பி வாழவும்,
அப்பாவி எலிகளுக்காக
இறைவனிடம் வேண்டுகிறேன

ஆமாம்,
எலியிடம் பிள்ளையாருக்கு
இன்றும் கருணை உள்ளதா?


போராட்டந்தாங்க......
பூமிய பார்க்கவே
ஆரம்பிச்ச போராட்டம்
அங்க தொடங்கி
அடுத்த முயற்சியாக...
புவியீர்ப்பு சக்தியை
எதிர்த்து நிக்கணும்,

மத்தவங்கள முந்திகிட்டு
விழுந்திடாம ஓடணும்,
பாதை மறக்காம மாறாம
நெனப்பு மாறாம போகணும்,
கடைசி வரைக்கும் போக
கல்லுமுள்ளு பார்க்கணும்,
நேரத்துல போகாட்டியும்
நேர்மையா முடிக்கணும்,

சில சமயம்,
மனசு ஒத்துக்கிட்ட
தோல்விகூட அம்மாதாங்க,
பாத்துப்போடா மகனேங்கும்!
அநியாய வெற்றியோ
தலைமேல ஏறி நின்னு
ஆட்டம் போட வைக்கும்.
 
சாலையில ஓடற தண்ணியா 
பயனில்லாம போயிடும்.
 

ஆனா ஒண்ணு
வெற்றியோ தோல்வியோ
மனசாட்சியோட தராசுமுள்
அங்கீகாரம் இல்லாட்டி
அடி மனசில நிண்ணு
ஆண்டவன் போல
பேசிகிட்டே இருக்கும்ங்க