மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இந்தச் சண்டைகள் மட்டும்
    சங்ககாலத்தில் இருந்திருக்கலாம்
அரிசி புடைக்கும் ஓசையில்
   இனிய தமிழ் சொற்களில்
புலவர்களை வைத்து
    அறம் பாடியிருக்கலாம்
எதிரியின் பலத்தை ஔவை போல்
   வஞ்சப்புகழ்ச்சியாக வைதிருக்கலாம்
போர்களத்தில்  நிறுத்தி யானையை
   வைத்து இடற வைத்திருக்கலாம்
அல்லது வீரவாள் கொண்டு
    தலை சீவி பகை முடிக்கலாம்.

 
இது எதுவுமே இல்லாமல்
    வெறுப்பின் விளிம்புகளைத்
      தொடக்கூட முடியாமல்...
அடுத்த நிமிடம் ஏதாவது ஒரு
    தெரு முனையில் சந்திப்போமோ..
மறுபடியும் முகத்தில் எப்படி
    விழிப்பது என்ற தயக்கத்தில்.
சற்று நேர யோசனையில்
    மன்னித்து விட்டு விடலாமா...
இன்னும் கொஞ்சம் மீறும்வரை
    எல்லைகளை கவனமாக பார்த்து,
சண்டையா? சமாதானமா? என்று
    முடிவறியாத காத்திருப்பு......

முற்று பெறாத சண்டைகள்
     சிவப்பு ஒற்றைக்கண் அரக்கனாக,
அடிமனதில் அணையாமல்
    எரியக் காத்திருக்கும் கங்குகளாய்
கொழுந்துவிட்டு எரியவைக்கும்
    சுட்டெரிக்கும் கோடைக்காகவோ...
குளிர் நீர் தெளித்து தணிந்துவிடும்
    வாடைகாலத்து மழைக்காகவோ...
அல்லது மிச்சமும் எரிந்து
    சாம்பலாகி தானாக மறைந்துவிடும்
மந்திர நொடிகளுக்காகவோ
    எப்போதும் காத்துக் கிடக்கின்றன. 

வெளியில் கைகுலுக்கி கதைவிடும்
   
முற்று பெறாத சண்டைகள்.


குறிப்பு: இது போன்ற சண்டைகள் இக்காலத்தில் வீடு, வீதி, ஊர், மாநிலம், நாடு, உலகம் எங்கேயும் சகஜமாகிவிட்டதால் யாரையும் தனிப்பட குறிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

23 comments:

// வெளியில் கைகுலுக்கி கதைவிடும்
முற்று பெறாத சண்டைகள். //

தண்ணீர் தெளித்தாலும் தணியாத நெருப்புச்சூடு போன்ற செயல்களை அருமையாக ஒரு கவிதையாகப் படைத்து விட்டீர்கள்.

பாராட்டுக்கள்.

இவையெல்லாம் நிகழ்கால சகிப்புத்தன்மையின் உச்சம்
இன்றைய சகிப்புத்தன்மையும்,மன்னிக்கும் மனோபாவமும்
பெருந்தன்மையின் வழி வந்தவை அல்ல
இயலாமையின் வழி விழுந்தவை

நல்லதொரு கவிதை
நன்றி

சுயநலதின் பொருட்டு வந்த நடிப்புதான். இல்லையெனில் இயலாமையாகவும் இருக்கலாம். ஆனாலும் நீறுபுத்த நெருப்பாய் மனதில் மாறாத தன்மையுடனும் சண்டைகள் அமைந்துவிடுவதுண்டு.

இது ஒரு நிலாக் காலம் எனச் சொல்வதைப் போல
இது ஒரு சண்டைக் காலம்
நீங்கள் சொல்வது போல வீட்டில் துவங்கி
உலகம் முழுவதும் தன் எல்லைகளை
விரித்துவைத்திருக்கிறது அது
நீங்கள் அழகாக குறிப்பிட்டிருப்பதைப்போல
வெளியில் கைகுலுக்கி கதைவிட்டுக் கொண்டிருக்கிறது
முற்றுப் பெறாத முற்றுப் பெறமுடியாத சண்டைகள்
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

மனிதர்கள் இருக்கிறவரை சண்டைகளும் இருக்குமே.

//தண்ணீர் தெளித்தாலும் தணியாத நெருப்புச்சூடு போன்ற செயல்களை அருமையாக ஒரு கவிதையாகப் படைத்து விட்டீர்கள்.//
பாராட்டிற்கு நன்றி VGK சார்.

இயலாமை என்று ஒப்புக் கொள்ளாமல், நாகரிகத்தின் வரைமுறை என்று சொல்கிறார்கள். கருத்துரைக்கு நன்றி ராஜகோபாலன் சார்.

//இல்லையெனில் இயலாமையாகவும் இருக்கலாம்// வீட்டிற்குள் இயலாமை நாட்டிற்கு.....? நன்றி கடம்பவன குயில்

உண்மைதாண் சார். கதை விடுவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வேறு போட்டிருப்போம். நன்றி ரமணி சார்.

மனிதராவதற்கு முன்பே இருந்தது சார், நகமோ, பல்லோ பயன்படுத்தி முடிந்துவிட்டன. . ஆனால் மனிதனான பின் முற்று பெறாத வடிவம் எடுத்துவிட்டது. நன்ரி திரு. தமிழ் உதயம்.

சண்டைகள் ஓயுமா?

அலை இல்லாத கடல் உண்டா?

அவை ஏன் முற்றுப்பெறாமல் இருக்கின்றன? நல்ல கவிதை.

சில சண்டைகளை இரண்டில் ஒன்று பார்த்துவிட முடியாது. வென்றாலும் தோற்றாலும் நம் பக்கம் பிரச்சினை வருமோ என்ற பயம்தான்.வாய்தா வாங்குகின்ற மாதிரிதான்.

நல்ல கவிதை. அதீதத்தில் உங்கள் அறிமுகமும் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

இந்த வாரம் வியாபாரத்தை முடிச்சிட்டு கடையை மூடிடுவேன் :)

மனிதன் மாறவில்லை என்று ஒரு வரியில் சொல்லிவிடலாமா? மனதை அறியும் ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டியது அவசியத்திலும் அவசியம்..

அநாயாசமாய் ஆழ்மனம் புகுந்து ஒளிந்து கிடக்கும் குரூரங்களை அள்ளி எடுத்துவந்து அப்படியே முகத்தின் முன் கொட்டிவிடுகிறீர்கள். சொல்லாழம் நிறைந்த வைர வரிகள். பாராட்டுகள் சாகம்பரி.

நன்றி எல்.கே சார். அதீத்தின் அறிமுகம் பெருமையான விசயம்தான். மகிழம்பூச்சரத்தின் கட்டுரைகளுக்கு பாராட்டி ஊக்குவித்த முதல் பதிவர் - அதற்கு முன் கவிதைகளுக்குத்தான் ரீடர்ஸ் இருந்தனர் - என்ற வகையிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம் சந்திரகௌரி, இங்கு இதுதான் முதல் வருகை. அன்னைபூமிக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர். வருகைக்கு நன்றி. மனதை அறியும் கருவி இருந்தால் பயமாக இருக்காதா?

மனதில் இருப்பதெல்லாம் வெளியில் தெரியாது என்று நினைத்துக் கொண்டு ------ ஆக திரிபவர்களை என்ன செய்வது? Thank you very much Geetha.

மன்னித்தலும் மறத்தலும் ஒரு வகையில் முற்றுப் பெறச் செய்யலாம்.
கை குலுக்கி கதை விடும் நடிப்பால்தான் முற்றுப் பெற வழியற்றுப் போகிறது

முடிந்துவிட்டால், எதையெல்லாம் செய்யக் கூடாது பற்றி ஞானம் கிட்டிவிடும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, ராஜி.

:) I DONT KNEW WHAT TO SAY..

GREAT GREAT....