மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இந்த வார்த்தை அனேகமாக வாழ்நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். "ம்.... கொஞ்ச நாட்களாகவே எதுவும் சரியில்லை. செய்வது எல்லாம் தவறாகப் போகிறது"   யாருமில்லாத உலகம் வேண்டி அமைதியாக இருக்க விரும்புவோம். ஏனென்றால் நம்முடைய அனுபவங்கள் அப்படியிருக்கும். சாதாரண பேச்சு வார்த்தை கடுமையான வாக்குவாதம் ஆகும். நல்லது என்று நினைத்து செய்வது கெடுதியாக போய்முடியும். சுற்றியிருப்போரிடம் வெறுப்பை சந்திக்கும் நிலை என்று ஒரு அசாதாரண சூழல் நிலவும். யோசித்துப் பார்த்தால் உண்மையில் அங்கு தவறுகள் அடுத்தடுத்து நடந்திருப்பது புரியும். அனேகமாக ஆரம்பம் நம்மிடம்தான் இருக்கும் - பிரச்சினை என்னவென்றால் அதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். சிக்கல் முடிச்சு ஒன்றொன்றாக விழும்போது ஆரம்பம் நமக்குப் புரியாது. ஒவ்வொரு முடிச்சும் இறுகும்போதுதான் சிக்கல் உருவாகியிருப்பது புரியும். திடீரென்று சந்தேகம்கூட வரும் "என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை, இனி நான் ஏன் இவர்களுக்காக வாழ்நாளை வீணாக்கிக் கொள்ள வேண்டும்"  விளைவு , குடும்பத்தை பிரிந்து செல்லும் முடிவுகளுக்கு தூண்டப்படுவார்கள். ஒரு நெருக்கமான உறவுகளையுடைய கூட்டுக் குடும்பத்தில் இது போன்ற முடிவுகள் தவிர்க்கப்படும் அல்லது தள்ளிப்போடப்படும். ஆனால் அம்மா, அப்பா இரண்டு குழந்தைகள் என்று இருக்கும் சிறிய குடும்பம் எளிதில் உடைந்துவிடும்.  பிறகு சில நாட்கள் கழித்துதான் புரியும் நாம் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பதும், நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் வருத்தப்படுத்தியிருக்கிறோம் என்பதும்.     ஏன் இவ்வாறு நிகழ்கிறது? அடிப்படையில்  உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கெடும்போது சிறு தவறுகள் நிகழும். சிறிய விசயத்திற்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். நம்முடைய சிந்திக்கும் திறன் மாறுபடும். குழப்பமான மன நிலையில் இது சரியாக வேலை செய்யாது.   மறதி ஏற்படும். பொதுவாக மனித யந்திரம் அறிவுள்ளதாக செயல்பட விசயங்கள் சரிவர உள்வாங்கப்பட வேண்டும்,  ஏற்கனவே பதிய வைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டு ஒரு முடிவிற்கு வர வேண்டும் பிறகு அதற்கேற்ப செயல்படவேண்டும்.  சிந்திக்கும் திறன் குறையும் போது  மனதின் ஆழத்தில் பதியவைக்கப்பட்ட செய்திகளை நினைவிற்கு கொண்டு வருவது சிரமமாகிவிடும். அவசரமாக நம்முடைய மேல் மனம் சமீபத்தில் பதிய வைத்த விசயங்களை நினைவுபடுத்தும். 

     உதாரணமாக, ஒரு சம்பவம் பார்க்கலாம். வாசுதேவனுக்கு மகள் மது மீது கோபம். மது மிகவும் பிரியமான பெண். அம்மா அப்பாவிற்கு அடங்கியவள்தான். சிறப்பானவள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதிருப்தியை தருபவள், சிந்தித்து முடிவெடுப்பாள். நிறைய சமயங்களில் அவரே , அவளிடம் ஆலோசனை கேட்டு நடப்பதும் உண்டு. அவள் திருமணமாகி சென்றுவிட்டாள். ஒரு ஆள் நடமாட்டம் வீட்டில் குறைவது சிறிய குடும்பத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வெளியே சொல்லிக் கொள்ள முடியாத மனவருத்தம் கணவன் மனைவி இருவருக்கும். அவள் நம்மை மறந்துவிட்டாள் என்று புலம்புவார். இந்த சமயத்தில் சம்பந்திகளுக்குள் சிறு பிரச்சினை , மகள் கணவன் பக்கம் நின்று பேசிவிட்டாள். அவமானபடுத்திவிட்டாள் என்று கோபம். "தாய்தகப்பன் முக்கியமில்லை என்று நினைத்துவிட்டாள் போல, எல்லாம் நீ வளர்த்தவிதம்...." என்று மனைவியின் அன்றாட செயல்களில் குற்றம் கண்டுபிடித்து சண்டைபிடித்தார். ஒரு கட்டத்தில் மனைவியும் பதிலுக்கு குறைகளை பட்டியலிட ஆரம்பித்தார். அடிக்கடி வெளி நடப்பு ஆரம்பித்தது.  ஒரு நாள் தனி விடுதியில் போய் தங்கிக்கொள்கிறேன் என்று முடித்துவிட்டார்.. இந்த சம்பவத்தைதான் தொடர்ந்து அலசப்போகிறோம்.

     நான் முதலில் சொன்ன ஆழ்மனச்செய்திகள் இங்கு வாசுதேவனால் நினைவுகூறப்படவில்லை. மகளோ மனைவியோ அவருக்கு செய்திருந்த பல நன்மைகள், அவர்களால் உருவாக்கப்பட்ட இனிய சம்பவங்கள் , முன்னேற்றங்கள் எதுவுமே நினைவிற்கு வரவில்லை. தற்போது மேலோட்டமாக பதியப்பட்ட செய்திகள் மட்டுமே எடைகல்லிற்கு வந்தன. ஒரு வருத்தத்தில் அவர் மனைவி சொன்ன " என்ன சுகப்பட்டேன்" என்ற வார்த்தைதான் ஆகாயத்தின் அடிவானம்வரை அவருக்கு தெரிந்தது. இது போன்ற சிலருக்கு நெஞ்சுவலிகூட வரும்.

    பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடிய இந்த சூழ் நிலை (நினைவு மறதி(?)) இப்போது கடுமையான பணிச்சுமையினால் இளையவர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு குடும்பம் பிரிதல், விவாகரத்து என்று நிலை மாறுகிறது. நம் மனதில் கொலுப்படிகள் போல அமைத்து முதல் படியில் இவர்கள், இரண்டாவதில் சிலர், விருப்பமான சிலர் மேல்படியில் என்று அமைத்திருப்போம். அதற்கேற்ப அவர்களிடம் நம்முடைய பழகும் தன்மையும் மாறும். மெலே குறிப்பிட்ட சிக்கலான சூழ் நிலையில் படிகட்டு மரபுகள் கலைக்கப்பட்டு தரையிறக்கி வைத்து நாமும் துன்பப்பட்டு அடுத்தவ
ரையும் துன்புறுத்துவோம். இது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சூழ் நிலைதான். ஏன்? எவ்வாறு? எப்படி? என்று இது குறித்த சில விசயங்களை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாமா?

11 comments:

///சிக்கல் முடிச்சு ஒன்றொன்றாக விழும்போது ஆரம்பம் நமக்குப் புரியாது. ஒவ்வொரு முடிச்சும் இறுகும்போதுதான் சிக்கல் உருவாகியிருப்பது புரியும்./////

உண்மை மிக உண்மையான வார்த்தை

///பொதுவாக மனித யந்திரம் அறிவுள்ளதாக செயல்பட விசயங்கள் சரிவர உள்வாங்கப்பட வேண்டும், ஏற்கனவே பதிய வைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டு ஒரு முடிவிற்கு வர வேண்டும் ////
வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்த்தும் வரிகள்

///ஏன்? எவ்வாறு? எப்படி? என்று இது குறித்த சில விசயங்களை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாமா?/////

காத்திருக்கிறேன் , அருமையான விளக்கங்களை உள்ளடக்கிய அருமையான பதிவு

//பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடிய இந்த சூழ் நிலை (நினைவு மறதி(?)) இப்போது கடுமையான பணிச்சுமையினால் இளையவர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு குடும்பம் பிரிதல், விவாகரத்து என்று நிலை மாறுகிறது.//
நிஜம்.பதிவு நன்று.

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

//மகளோ மனைவியோ அவருக்கு செய்திருந்த பல நன்மைகள், அவர்களால் உருவாக்கப்பட்ட இனிய சம்பவங்கள், முன்னேற்றங்கள் எதுவுமே நினைவிற்கு வரவில்லை. தற்போது மேலோட்டமாக பதியப்பட்ட செய்திகள் மட்டுமே எடைகல்லிற்கு வந்தன. ஒரு வருத்தத்தில் அவர் மனைவி சொன்ன " என்ன சுகப்பட்டேன்" என்ற வார்த்தைதான் ஆகாயத்தின் அடிவானம்வரை அவருக்கு தெரிந்தது. //

வாழ்வில் மிகவும் யதார்த்தமாக, அடிக்கடி இதுபோல மனைவியும் சொல்லலாம். அதுவே கணவருக்கு மிகப்பெரிய மனக்காயமாகியும் விடலாம். எல்லா வீடுகளிலும் சாதாரணமாக நடப்பதே.

தொடர் தகுந்ததொரு உதாரணக் கதையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அனேகமாக ஆரம்பம் நம்மிடம்தான் இருக்கும் - //

முதல் கோணல் முற்றிலும் கோணல்.

வணக்கம் ராஜகோபாலன் சார். தொடர்ந்து படியுங்கள். தங்களின் கருத்துக்களையும் தெரிவியுங்கள். நன்றி

நன்றி திரு. சண்முகவேல்.

வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

குட்டிக்கதை சொல்ல முயற்சிக்கிறேன். நான் சந்தித்த யாரையும் குறிப்பிட்டுவிடக்கூடாது என்று கவனமாக எழுதுகிறேன். நன்றி சார்.

அதேதான் ராஜேஸ்வரி. முதலிலேயே கவனித்தாள் நல்லது. நன்றி.

இந்த பகுதி வாசித்தேன்
ஆனால் கொஞ்சம் நெட் pbm
அதனால் கமெண்ட் போடமுடியவில்லை..

A Valuable time spend on your blog.thank you.