மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

       குழந்தை பெறுவதும் பிறப்பதும் உன்னதமாக மதிக்கப்படுவது மனித குலத்தில்தான். ஏனெனில் இங்குதான் மனித்துவத்தை போற்றும் அரிய தகவல் பொக்கிஷம் அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுகிறது. ஒரு வேளை இந்த பொறுப்பு சரிவர நிறைவேற்றப்படாமல் போய்விட்டதென்று வைத்துக் கொள்வோம், புதிதாக பிறக்கும் குழந்தைகள் பசி, தாகம், உறக்கம் மட்டுமே அறிந்தவையாக விலங்குகள்போல் இருக்கும். ஆதி காலத்திலிருந்து மனித குலம் எத்தனையோ முயற்சி செய்து விலங்குகளைவிட மேம்பட்டவர்களாய் உருவாகிய சேதிகள், தொன்று தொட்டு கடத்தி வந்த காலப் பதிவுகள் அழிந்து போய்விடும்.  நம் பெற்றோரிடமிருந்து நமக்கு வந்த செய்திகள் கட்டாயம் நம் பாட்டன் வழிவந்தவையாகவும் இருக்கும். அடுத்த தலைமுறையின் உடல் நலம், மன நலம் பேணும்  இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பெறுவது தாயின் பங்களிப்புதான்.  அப்படிப்பட்ட தாய்க்கு நம்முடைய கவனிப்பு பேறுகாலத்திற்கு முன்பும் பின்பும் மிக முக்கியம்.
   

   ஒரு பெண் தாய்மை பேற்றை எய்திய நிலையின் ஆரம்பத்திலிருந்தே மிக அருமையான கவனிப்பு தொடங்கிவிடும். இப்படி நடக்கக் கூடாது... அப்படி உட்காரக்கூடாது... புரண்டு படுக்கக்கூடாது... கையூன்றி எழாதே.... இந்த கனிவான கட்டளைகளுடன், ஆகும் ஆகாது பார்த்து உணவு பழக்கம், உடல் நலத்துடன் மன நலம் பேணும் பராமரிப்பு. வீட்டினுள்தான் என்றில்லை, வெளி உலகமும் ஈருயிர் பார்த்து கனிவாக தாங்கும். "அக்கா வரப்போ திடீர்னு கத்தக்கூடாது, புளியாங்கொட்டை அளவில் உள்ள பொருளைக் கூட தூக்கிப் போடாதே..." என்று சிறுவர்கள் கவனப்படுவதும், "முதல் பந்தியில உட்கார வை..., காற்றோட்டமா உட்காரம்மா" என்ற  வெளியிடத்து கவனிப்புகளும் தொடரும். ஒரு வீட்டில் தாய்மை பேறு எய்தியிருக்கும் 'மாசமான பிள்ளை' இருந்தால், சிறு சிறு தூக்குச்சட்டிகளில் குழம்பு வகைகள், புளிப்பு மிட்டாய்கள், சத்தான உணவுகள், கோவில் பிரசாதங்கள் என படையெடுப்பு அக்கம் பக்கத்திலிருந்து நடைபெறும். பேற்றுக்கு பின்பும் 'பச்சை உடம்புக்காரிக்கு' பத்திய  உணவு. பதினைந்து நாட்களுக்குள் இதெல்லாம் சேர்க்க வேண்டும், தாய்ப்பாலிற்கு இவற்றை உண்ண வேண்டும், சூப், லேகியம் கஷாயம் என்று கை மருத்துவம். குழந்தைக்கு உரை மருந்து எனப்படும் தினப்படி உடல் பேணும் மருந்துகள். இது அல்லாமல், தாயையும் சேயையும் உற்சாகப்படுத்தும் விதமான அனுசரனையான பேச்சுக்கள், செயல்கள். இது அத்தனையும் பேறு முடித்து மறுபிழைப்பு பிழைத்து வரும் பெண்ணின் மனம் மற்றும் உடல் நிலையை பேணும் யுக்திகள். இதெல்லாம் ஒரு காலம்! இப்போது....?

 
     குழந்தை பிறக்கும் முந்தைய வாரம் வரை பேருந்து ஏறி இறங்கி (நிறைய இளவயது பயணிகள் எழுந்து இடம் தருவதுகூட இல்லை) காலை முதல் மாலைவரை ஓயாத வேலை. இதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறப்பு.  இயற்கையான உணவுகள் மற்றும் தேவையான உணவுப் பழக்கம் இன்றி பேற்றுக்குப் பின் உடல் தேறி சாதாரணமாக வெகு நாட்களாகின்றன. கூட்டு குடும்ப முறையில்லாததாலும் வெளியூரில் தனித்து இருப்பதாலும் பிரஸவ கவனிப்பு என்பது முன்னும் பின்னுமாக முப்பது  நாட்கள் மட்டுமே கிட்டுகிறது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பிரசவகால ஊதியம் தருவதில்லை - சில ஒரு மாதம் தருகின்றன அதுவும் முதல் குழந்தைக்கு மட்டும் (இரண்டாவது பிள்ளை மட்டும் மந்திரத்தில்
ருகிறதா?) எனவே போதிய சத்தின்றி மறுபடியும் அலுவலகப்பணி தொடர்கிறது. கூடுதலாக குழந்தைக்கு புட்டிப்பால் பழக்கமும், தாய்க்கு பாலை நிறுத்தும் முயற்சிகளும் ஆரம்பிக்கின்றன. தாயின் கனிவான கவனிப்பின்றி தன் கால்களினாலேயே புட்டியை பிடித்துக் கொண்டு பாலை அருந்தும் குழந்தையின் சாமார்த்தியத்தை மெச்சிக் கொள்கிறோம். இத்துடன் உடல் அளவில் மட்டுமன்றி மன அளவிலும் சவலையான அடுத்த தலைமுறைதான் தாயின் பங்களிப்பாகிறது.  இதற்கெல்லாம் என்ன காரணம்? இது போன்ற மாற்றங்களின் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? முக்கியமாக மிக சமீபகாலமாக இந்தியாவிலும் பரவி வரும், பெற்ற தாயே குழந்தையை வெறுக்கும் உளவியல் பிரச்சினையான Postpartum depression பற்றி தெரிந்து கொள்வோமா? அடுத்த தலைமுறைக்கான நம் பங்களிப்பு தாய்மையடைந்த பெண்ணை (அது அடுத்த வீட்டு பெண்ணாக இருந்தாலும்) கவனிப்பதிலிருந்தும் ஆரம்பிக்கும் முக்கியத்துவத்தை மீன்டும் நினைவுறுத்திக் கொள்வோமா? 

20 comments:

//வீட்டினுள்தான் என்றில்லை, வெளி உலகமும் ஈருயிர் பார்த்து கனிவாக தாங்கும். "//

ஆமாம்.இதற்குமேல் உங்களிடம் பேச மாட்டேன் என்று சக ஊழியர் ஓருவரிடம் சொல்லிவிட்டேன்.கொஞ்சம் கோபம்.அப்புறம் கர்ப்பிணி என்றுதெரிந்த பிறகு மனசு கேட்கவில்லை.நானாக போய் சாரி கேட்டு பேச ஆரம்பித்தேன்.

அருமையான பகிர்வு..... நன்றி.

கல்லுக்குள் ஈரம் போல
எத்தனை மோசமான குணம் கொண்டவன் கூட
கர்ப்பவதி எனும்போது பரிவு காட்டும் உயர்ந்த உள்ளம்
நமது பண்பாடாக உள்ளது
இந்த சிறப்பு வாய்ந்த தாய்மை குறித்த
பதிவு அருமையிலும் அருமையாகத் துவங்கியுள்ளது
குறித்து மிக்க மகிழ்ச்சி
தொடர வாழ்த்துக்கள்

ம் நீங்கள் சொன்ன ஒரு ஒரு வரிகளும் உண்மை
இதுபோன்ற தனித்தன்மை வாய்ந்த பதிவுகள்தான் உங்களை பார்த்து வியக்க வைத்துக்கொண்டு இருக்கிறது
வாழ்த்த வயது இல்லை அன்பான வணக்கங்கள்

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

மனித்துவத்தை போற்றும் அரிய தகவல் பொக்கிஷம் அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுகிறது. //

அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்.

பேருந்துகளில் வயதானவர்களுக்குகூட இருக்கைகளை விட்டுகொடுக்கிறார்களோ இல்லையோ ஆனால் தாய்மைபேறு பெற்ற பெண்ணானால் உடனே அனுசரனையாக விட்டுக்கொடுப்பது நம் நாட்டில் உண்டு...அந்த அளவுக்கு தாய்மை அடைந்த பெண்ணை பரிவோடு மதிப்பது கன்னியத்தை குறிக்கிறது...அருமையான பகிர்வு... நன்றியுடன் வாழ்த்துக்கள்

”உயிரினும் இனிதான பெண்மை” என்ற இந்தத் தொடரின் ஆரம்பமே மிகவும் நன்றாக உள்ளது.

தாய்மை அடைந்த ஒரு பெண்ணை பாராட்டி, சீராட்டி, வளையல்கள் அடுக்கி, மசக்கைக்காரிக்கு வடுமாங்காய், வடாத்துமாவு போன்ற என்னென்ன வாய்க்கு ருசியாகப் பிடிக்குமோ, அத்தனையும் கொடுத்து, நல்லபடியாக பிரஸவமும் நடந்து, தாயும் சேயும் நலமாக வீடு வந்து ... பச்சை உடம்புக்காரிக்கு பத்திய சமையல்களும்,அந்தப்புதிய ஜீவனுக்கு முடிந்தவரை தாய்ப்பாலும் கிட்டிட எவ்வாறெல்லாம் அந்தக் காலத்தில் (இப்போதும் கூட சில வீடுகளில்)சுற்றமும், நட்பும் பிரியமுடன் செயல்படுவார்களோ, அதே போல இந்தத்தங்களின் தொடரினை நாங்களும் உளமாற வரவேற்கிறோம்.

தொடரின் அடுத்தடுத்த பகுதிகளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

அருமையான தலைப்பு
அங்கெ உரைத்த அத்தனை
வாக்கியங்களும் முத்துக்கள்.
பெண்மையை ஒவ்வொரு நிலையிலும்
நாம் போற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆணும் பெண்ணும் என்று பால் வேறுபாடின்றி
மனிதத்துடன் மாண்புடன் பழகும் நால்வருமோ அன்றுதான் பெண்மை முழுமையாகப்
போற்றப்படும்.

தொடர்ந்து வரும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோதரி.

இது போன்ற கனிவு நம்மை மனிதனாக வைத்திருக்கும். நண்றி திரு.சண்முவேல்

நன்றி பிரகாஷ்.

பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

மிக்க நன்றி சிவா.

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.

சரிதான், ராஜேஸ் உங்களைப் போன்ற இளையவர்கள் விட்டுக் கொடுத்து மனித நேயத்தை காட்டுகிறார்கள். நான் குறிப்பிடுவது பள்ளி, கல்லூரி மாணவிகள் (மாணவர்கள் இல்லை) அதே போல் வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்கள், கையில் குழந்தையுடன் இருப்பவர்களுக்கும் இது போன்ற ஆதரவு கட்டாயம் தர வேண்டும். நன்றி.

எத்தனை கவனிப்புகள். தங்கள் விவரணை இன்னும் பொருள் சேர்க்கிறது நன்றி VGK சார்.

//மனிதத்துடன் மாண்புடன் பழகும் நால்வருமோ அன்றுதான் பெண்மை முழுமையாகப்
போற்றப்படும்.// உண்மைதான் நன்றி திரு.மகேந்திரன்

பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறீர்கள். விழிப்புணர்வு உண்டாக்கும் இக்கட்டுரையை வெகுவாக வரவேற்கிறேன்.

இக்கட்டுரையை வெகுவாக வரவேற்கிறேன். //கருத்துரைக்கு நன்றி கீதா.