மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

       நிறைமாதங்களில்கூட பெண்கள் அலுவலகம் செல்கின்றனர். ஏன்? இது குறித்து பல பெண்களிடம் வினா எழுப்பியபோது கிட்டிய பதில் 'பொருளாதார சிக்கல்' என்றாலும், கணிசமான பதில்கள் கவலை கொள்ள வைக்கும் மற்றொரு காரணியை சுட்டுகின்றன. "வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்பதுதான் அது. தனக்கான நிம்மதியை தன் வீட்டில் பெற முடியாத நிலை மிக மோசமானது. . ஈருயிராய் இருக்கும் பெண் தன்னையும் கவனித்துக் கொண்டு வயிற்றுப் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு பிரியமான கணவனின் தேவைகளையும் அனுசரித்து கம்பி மேல் நடக்கும் வித்தையொன்றை புதிதாக கற்றுக் கொள்கின்றனர். சில கணவர்கள் "வேலையை விடு என்றாலும் விடமாட்டேன் என்கிறாள்" என்று குறை வேறு சொல்கின்றனர். மருத்துவ விடுப்பு எடுப்பதாலோ அல்லது வேலையை விடுவதாலோ ஏற்படும் பின் விளைவுகள் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களை ஓய்வு எடுக்க வைப்பது கணவனின் கடமை அல்லவா?  மருத்துவர் ஆலோசனையும் முடிந்தவரை அலுவலகம் செல்வது உடற்பயிற்சிபோல நல்லதுதான். ஆனால் கவனமாக இருப்பது நல்லது என்ற எச்சரிக்கையுடன் அனுமதிக்கின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியம்?


   தாயாகிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு எத்தனை சங்கடங்கள் ஏற்படுகின்றன. தலைசுற்றல்,மயக்கம், நெஞ்சு எரிச்சல், ஒக்காளிப்பு .... இவற்றை தாண்டி உண்ணுகின்ற அன்னம் பாதி வழிகூட தாண்டாமல் மீண்டு வந்துவிடும். இந்த அவஸ்த்தை இல்லாதபோது வேளை கெட்ட வேளையில் வரும் பசி.  தொண்டைக்கு அருகில் ஏதோ காத்து இருக்கும் பயத்தால் உண்ணப்படும் ஒரு வாய் உணவு . சில வகைகள் மட்டும் வாயில் காப்போனை ஏமாற்றி வயிற்றை அடைந்துவிடும். குழந்தை வளர வளர அடி வயிற்று பாரம் கூடும். மனதிலும் பயத்தின் பாரம் கூடும். இரண்டும் தாங்காமல் கால்களில் கணிசமான வலி. அது என்னவோ அனைவரும் விழித்திருக்கும்போது வருகின்ற உறக்கம், இரவின் அமைதியில் வருவதில்லை. நடப்பது நல்லது என்று மருத்துவர் சொன்னது நினைவு வர உறக்கம் வராமல் மழலை நடை. இன்னும் கொஞ்ச நாள் கழித்து வயிற்றுக்குள் உருளும் குழந்தை சமயத்தில் உதைக்கும். கால் வலியுடன் இப்போது இடுப்பு வலியும் சேர்ந்து கொள்ளும். தேர்போல ஆடி அசைந்து நடந்தாலும் அன்னை மடி தேடும் அயர்வு. 


     உடலுக்குள் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுபடுவதால் சிறு கவலைகூட பிரளய தோற்றத்தை உண்டு பண்ணும். கொஞ்சம் அதீத கற்பனைகள் தோன்றும். திடீரென்று ஒரு ஆயாசம் வரும். பிழைத்து வருவோமா? என்ற கவலை தோன்றும். 'அம்மா' என்கிற வார்த்தையின் முழு அர்த்தமும் புரிந்து விடுவதால் தன்னுடைய அன்னையை நினைத்து ஏங்கும் மனது. சிறிது அனுசரனையுடன் யாராவது தலையை வருடினாலே உடைந்து விடும் போல கண்ணில் நீர் தேக்கம்.  பின்னர் நிறைமாதங்களில் அமரவோ நடக்கவோ படுக்கவோ சீராக செய்யமுடியாத ஒரு அஷ்டவதானி நிலை. குழந்தை பிறப்பு வரை இன்னும் பல சோதனைகள். நல்லவேளையாக இதில் எதுவுமே நீடித்து இருப்பதில்லை. தொலைக்காட்சி விளம்பரங்கள் போல நொடிக்கு நொடி மாறி விடும். நினைவில் நிலைத்து நிற்பது குழந்தையின் வளர்ச்சியும் அதன் எதிர்காலமும்தான்.

        நிறை மாதங்களில் உடலுக்கு தரப்படும் சிறு சிறு வேலைகள்கூட ஒரு உடற்பயிற்சிபோல உதவ வேண்டும். சுமை தூக்கக் கூடாது. படியேறக் கூடாது. மூச்சு வாங்க வேலை செய்யக் கூடாது. பதட்டமான சூழ்நிலை இருக்கக் கூடாது. சமதளத்தில் நீண்ட தூரம் நடக்கலாம். அதுவும் ஒரு மாலை நேர நடையாக இருத்தல் நலம். ஒவ்வொருவருடைய உடல் வாகைப் பொறுத்து பிரச்சினைகள் மாறுபடும் பொதுவாக பித்த உடம்பு உள்ள பெண்களுக்கு சிரமம் அதிகம் இருக்கும். இதெல்லாம் பேறுக்காலம் என்பது அருமையான கவனிப்பிலும் அன்பான பேச்சுக்களினாலும் மிக அமைதியாக கடத்தப்பட வேண்டிய ஒன்று என்று குறிக்கின்றனவே. 


      உடலும் மனமும் ஆரோக்கியமாக உள்ள பெண் என்றால் பிரச்சினை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லையே.  . "அவள் பிள்ளை பிறப்பதற்கு முதல் நாள் வரை வேலைக்கு சென்று வந்தாள். நீயானால் சுருண்டு சுருண்டு விழுகிறாய். என்னதான் வளர்த்தார்களோ?" இதுபோல் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்ப்பது இப்போதுகூடி விட்டது. அளவுகோல்கள் அனைவருக்கும் சமமாக இருப்பது நல்லதல்ல. நல்லபடியாக பேறுகாத்தை தாண்டி தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் எண்ணிக்கையின் சதவிகிதம் குறைந்துவிட்டது.

 

"இல்லையே எனக்குத் தெரிந்து நல்ல ஆரோகியத்துடன்தான் இருக்கின்றனர். பழையபடி தெம்பாக வலம் வருகின்றனர்" என்ற பதில் உங்களிடம் இருக்கும். ஆனால் அவர்களில் எத்தனை பேர் மன நலத்துடனும் இருக்கிறார்கள் என்பதுதான் என் கேள்வி. உடலை பொறுத்தவரை நவீன மருத்துவத்தின் துணையுடன் சிறப்பாக தேறிவிடுகின்றனர். அதே பளிச் புன்னகை, வாய் கொள்ளாத பேச்சு என்று வெளியுலகத்திற்கு மாற்றம் தெரியாத நடவடிக்கை. ஆனால் வீட்டிற்குள்...?. சிறு விசயத்திற்கும் அழுகை, கோபம், குழந்தை அழுவது பிடிக்காது, பரிவாக பேசினால்கூட சிடுசிடுப்பு, சந்தேகம் இதுபோன்ற மருத்துவம் கவனிக்க முடியாத மன ஆரோக்கியத்தை அவர்கள் இழந்துவிட்டதன் அறிகுறிகளை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பேசலாமா? 


18 comments:

தமிழ் மனம் 1

இனிது இனிது பெண்மை இனிது..
ஆரோக்கியம் பற்றி அழகாக விவரித்திருக்கிறீர்கள்..
தொடருங்கள் சகோதரி.

முதல் ஓட்டிற்கு நன்றி . முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி, திரு.மகேந்திரன்

சூப்பர்ப்..........!!!

// "வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை" //

அடடா! எவ்வளவு வருத்தமான விஷயம் இது.


// தாயாகிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு எத்தனை சங்கடங்கள் ஏற்படுகின்றன.... தேர்போல ஆடி அசைந்து நடந்தாலும் அன்னை மடி தேடும் அயர்வு//

அவர்களை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் உள்ளது.
பிரஸவம் என்பதே ஒரு மறுபிறவி எடுப்பது போலல்லவா!

தொடர் மிகச்சிறப்பாகச் செல்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk


voted 3-4 in TM

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

தங்கள் எழுத்துக்கள் கர்ப்பிணிகள் மீது பரிவைத் தூண்டும் .நன்று.

ENTER THE WORLD said....

அருமை ........

//முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

with the busy schedule itself - வருகைக்கு மிக்க நன்றி மனோ சார்.

இன்றைய காலகட்டத்தில் பிரசவம் என்பது ஒரு பொற்காலமாக இருந்தது மாறி கடுமையான கோடைக்காலமாகி விட்டது. அது பற்றி பேச எண்ணினேன். கருத்துரைக்கு நன்றி VGK சார்.

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
தொடர்ந்து படித்து வருகிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா.
// இந்த கட்டுரைக்கான ஊக்கமளிக்கும் கருத்துரைகள் நன்றி சார்.

உண்மை. அதுதான் இந்த பதிவின் நோக்கமும் நன்றி திரு.சண்முகவேல்

//இன்றைய காலகட்டத்தில் பிரசவம் என்பது ஒரு பொற்காலமாக இருந்தது மாறி கடுமையான கோடைக்காலமாகி விட்டது. அது பற்றி பேச எண்ணினேன்.//

But one thing Madam. The present days are only, really Golden Days (comparing to the olden days) for getting proper/periodical medical check-up and also for very safe delivery with the help of advanced medical facilities. This is my feeling only & I do not know whether I am correct or not. vgk

மருத்துவ வசதியை பொறுத்தவரை சிறப்பான காலம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை சார். மனிதனின் சாராசரி ஆயுள் 60லிருந்து 80ற்கு மாறிவிட்டதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. நான் சொல்வது மனதின் ஆரோக்கியம் குறித்து. இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன் சார். மிக்க நன்றி.

//மருத்துவ வசதியை பொறுத்தவரை சிறப்பான காலம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை சார். மனிதனின் சாராசரி ஆயுள் 60லிருந்து 80ற்கு மாறிவிட்டதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. நான் சொல்வது மனதின் ஆரோக்கியம் குறித்து. இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன் சார். மிக்க நன்றி.//

OK OK I understood. Please carry on.

மிக அவசியமான பயனுள்ள பதிவு
விளக்கிச் செல்லும் விதமும் அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

கர்ப்பத்தை ஒரு பொருட்டாக நினையாதவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இப்பதிவே அத்தாட்சி. என் தோழியின் கணவர், அவள் நிறைமாதத்தின் போதும் வேலைக்குச் செல்ல வலியுறுத்தியிருக்கிறார். அவள் இஸ்லாமியப் பெண். பர்தா அணிந்திருப்பதால் அவள் கர்ப்பிணி என்றும் தெரியாமல் எவரும் பேருந்தில் இருக்கை அளிக்கவில்லை. இடிபாடுகளில் சிக்கி அவள் பெரும் தொல்லைக்குள்ளானதை நினைத்தால் எனக்கு இன்றும் வருத்தம் மிகும்.

சில நாட்களாக வலையுலகுக்கு வரமுடியவில்லை. இப்போதுதான் படித்தேன். நல்லதொரு மனவியல் அலசலுக்கு மனமார்ந்த நன்றி.