மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இந்த தொடர் மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாக  இருந்தாலும். நம்முடைய வாழ்வியல் மாறிப் போனதால் மிக அருகில் இருக்கும் ஆபத்தை சுட்டிக் காட்டகிறது. போன பதிவில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டதால் நடந்தவை. இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான். ஆனால், பிரச்சினையையே புரிந்து கொள்ளாமல் சிதைவுற்ற குடும்பங்களும் இன்னும் நிம்மதியில்லாமல் இருக்கும் குடும்பங்களும் உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கும். எனவே இன்னும் சற்று கூடுதல் விளக்கம் தர முயற்சிக்கிறேன்

           அந்தப் பெண் எனக்குத் தெரிந்தவள்தான். திருமணம் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றதுதான். மிகவும் நல்ல பெண். அன்பானவள். திருமணம் முடித்து சற்று நாள் பொறுத்து பிள்ளைபேறு வந்தது. சற்று சிரமமான பிரசவம். மிகவும் காத்திருந்து வேண்டி விரும்பி வந்த குழந்தை பாக்கியம். மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருக்க வேண்டும். ஆனால், அவள் கணவன் கவலையுடன் இருந்தான். என்னவென்று விசாரித்தால், அவள் யாருடனும் பேசுவதில்லை. ஏனென்றால் வீட்டினருடன் சண்டை.  பிறந்த குழந்தையையும் சரியாக கவனிப்பதில்லை.   ஊரிலிருந்து யாராவது வந்தால் -( பெரியவர்கள் யாருமில்லாமல் இருவர் மட்டும் சென்னையில் தனித்து இருக்கின்றனர்) சண்டை போடுகிறாளாம். "எனக்கு பில்லி சூனியம் செய்து வீட்டை விட்டு பிரிக்கபார்க்கிறார்கள்" என்பது அவளின் வாதம். கணவன் தரப்பில் நினைப்பது என்னவென்றால், குழந்தை பிறந்ததும் இத்தனை அடக்கமாக நடித்தவளின் உண்மை சொரூபம் தெரிகிறது. " என்கிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் அடிக்கடி ஏற்பட 'யாரையோ வைத்துக் கொண்ட' பழியையும் சுமத்திவிட்டாள்.  இத்தனையும் விளக்கிவிட்டு  " அவளை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடப் போகிறேன். சற்று நாள் பொறுத்து பார்க்கலாம்" என்று சோகமாக உரைத்தான். இது போஸ்ட்போர்ட்டம் மன அழுத்தத்தின் வேலை என்று எனக்குப் புரிந்துவிட்டது. அவளிடம் சென்று விசாரித்தபோது பொதுவாகவே மாதவிடாய் கோளாறு உண்டு என்பதை உறுதி செய்தாள். அந்தப் பெண்ணிற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடு பொதுவாகவே இருந்ததையும் குழந்தை பிறந்தபின் பாதிக்கும் அளவிற்கு மாறி இருப்பதையும் எடுத்துக் கூறினேன். ஆரம்பத்தில் சிறிதளவே இருந்த மன அழுத்தம், சூழ இருப்பவர்களின் குறை கூறலால் தன்மை பிறழும் அளவிற்கு மாறியிருப்பதையும் உணர்த்தினேன். பிறகு அனைவரும் புரிந்து கொள்ள  மருத்துவ ஆலோசனையுடன் நிலமை சரியானது - மருத்துவரை சந்திக்கும் முன் கூட அந்தப் பெண்ணின் மாமியார் "திமிர் பிடித்து திரிகிறாள். இதற்கெல்லாம் மருந்து இருக்கிறதாமா?" என்று கேட்டிருந்தார்.  ஆனால், தற்சமயம் நிலமையை புரிந்து கொண்டதால், பிள்ளை பேற்றிற்கு பிறகான தாயின் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      ஒரு விசயம் கூற விரும்புகிறேன். இப்போதைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பெண்கள் - அதாவது என்னுடைய வயதிலுள்ளோர் - இந்த காலகட்டத்தில்தான் நன்கு படித்து முக்கியமான பணிகளில் சேர்ந்தனர். அதுவரை வீட்டளவில் குறிப்புகளாக இருந்த சில கை மருத்துவ முறைகள் செவி வழிச் செய்தியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்தன. இந்த தலைமுறையில் அந்த தொடர்பு உடைந்துவிட்டது. கை வைத்தியம் பற்றிய குறிப்புகள் எதுவும் அவர்களிடம் இல்லை. தற்போது மிகச்சிறந்த மருத்துவ வசதி கிட்டுவதால், மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். அதிலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் தரக்கூடிய பெரிய சிரமத்தை தரக்கூடிய அறிகுறிக்கு மட்டுமே மருத்துவரை நாடுகின்றனர். மற்றவற்றிற்கு குறிப்பிட்ட மருந்து வகைகளையே தாமாகவே எடுத்துக் கொள்கின்றனர். காய்ச்சல் போன்றவற்றிற்கு கால்ப்பால் அல்லது ஃபெபானில் போன்றவையும் உடல் வலிக்கு வீரியம் மிக்க ப்ரூஃபென்னையும் எடுக்கின்றனர். இதேதான் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கும் நடக்கிறது. அதற்கான மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது பின்னர் மன அழுத்தத்தை உருவாக்கிறது.  மேலும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட கைவைத்திய தொடர்புச் சங்கிலி அறுந்து போனதால், உடனடியாக கவனிக்க வேண்டிய விசயங்களும் மறக்கப்பட்டு விடுகின்றன. பெண்ணிற்கு பிரசவத்திற்கு பிந்தைய மாதவிடாய் பற்றி அறிந்து கொள்ளக் கூட தாய்க்கு தெரியவில்லை. இந்தத் தெளிவின்மை இது போன்ற புதிய பிரச்சினைகளை கிளப்பிடுகிறது - இதனால் கருப்பை புற்று நோய் போன்ற கொடுமையான வியாதிகள் கூட பின்னாளில் ஏற்பட வாய்ப்புள்ளது.

       மருத்துவர்கள் நகரத்தின் இண்டு இடுக்கில்கூட இருக்கும் இந்த நாளில், ஒரு திறமைமிக்க மருத்துவரை கண்டுபிடிப்பது சிரமம்தான். எனக்கே என்ன நடந்தது என்றால், மேண்டோ டெஸ்ட் எனப்படும் ஒரு மருத்துவ சோதனையை மட்டும் செய்துவிட்டு டி.பி இருப்பதாக அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் அனுப்பிவிட்டார் - இவர் ஒரு பெண்களுக்கான மருத்துவத்தில் எம்.டிக்கு படித்தவர்தான். காச நோய் சிறப்பு மருத்துவர் தந்த மருந்துகள் மயக்கம் உண்டாக்க நான் மிகவும் பயந்துபோய் எனக்குத் தெரிந்த  அனுபவமிக்க மருத்துவர் - எம்.பி.பி.எஸ்தான்- அவரிடம் சென்று ஆலோசனை செய்தேன். பார்த்த மாத்திரத்திலேயே "நல்ல ஆரோக்கியமாக இருக்கிறாயம்மா, உனக்கு காச நோய்க்கான அறிகுறி இல்லை" என்று ஆறுதல் கூறினார். பிறகுதான் தெரிந்தது, வலி நிவாரண மாத்திரையினால் அஸிடிட்டி அதிகமாகி இருமல் வந்ததும், அதற்காக எடுத்துக் கொண்ட சளித் தொந்திரவிற்கான ஆண்டிபயாட்டிக்குகளும் என்னை மோசம் செய்ததை புரிந்து கொண்டேன். காரமில்லாத உணவு, வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடிய மருந்துகள், கீரைவகைகள் ஆகியன  என்னை நலம் பெறச் செய்தன. இதுபோலவே பெண்களுக்கான மருத்துவத்திலும் பல குளறுபடிகள் உள்ளன. வெறும்  மருந்துகள் மட்டும் உடல் ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதில்லை, அதற்கான உணவு கட்டுப்பாடும் சேர்ந்தால்தான் முழுமையாக குணமடையமுடியும். பத்திய உணவுகள் இதற்கென்றே சிறப்பாக பின்பற்றப்பட்டு வந்தன.

எது எப்படியிருந்தாலும், ஒரு பிரச்சினையை புரிந்து கொள்வதே சிக்கலை அவிழ்க்கும் வெற்றிக்கான முதல் படியாகிறது. பேறுகால மனக் கோளாறுகளை உணந்து கொண்டு அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுத்து தாயான பெண்ணை நலபெற வைப்பதும் , நமக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை எடுத்துச்சொல்வதும்  நம்முடைய கடமையாகிறது. 'தாயொடு ஆரோக்கியம் போம்' என்று சொல்லி வைத்ததை  நி
னைவு கூர்ந்து இந்தப் பதிவினை முடிக்கிறேன். நன்றி.

உயிரைக் காக்கும்; உயிரினை சேர்த்திடும்;
உயிரினுக்  குயிராய் இன்ப  மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
                                                             - மகாகவி

29 comments:

பெண்மைக்கான மருத்துவ பிரச்சனைகளை புரிந்துகொள்ளவும்
அதை தீர்வுக்கு கொண்டுவரவும் நீங்கள் எழுதிய தொடர் கட்டுரை
அற்புதம் சகோதரி.
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையைக் காப்போம்.

ஒரு பிரச்சினையை புரிந்து கொள்வதே சிக்கலை அவிழ்க்கும் வெற்றிக்கான முதல் படியாகிறது. ////

ஒவ்வொரு கஷ்டங்களும் அதை தான் சொல்கிறது. அதை அழகாக எழுதி உள்ளீர்கள்.

பெண்மையைப்பற்றியான அற்புதமான கட்டுரை....

அனைவரும் அறிய வேண்டிய கட்டுரை....

எது எப்படியிருந்தாலும், ஒரு பிரச்சினையை புரிந்து கொள்வதே சிக்கலை அவிழ்க்கும் வெற்றிக்கான முதல் படியாகிறது. //

'தாயொடு ஆரோக்கியம் போம்'//

அறுசுவையொடு ஆரோக்கியமும் தாயோடு சென்றுவிடும் துயரம்!

பெண்மைக்கான தொடர் சூப்பர்..

// நான் மிகவும் பயந்துபோய் எனக்குத் தெரிந்த அனுபவமிக்க மருத்துவர் - எம்.பி.பி.எஸ்தான்- அவரிடம் சென்று ஆலோசனை செய்தேன். பார்த்த மாத்திரத்திலேயே "நல்ல ஆரோக்கியமாக இருக்கிறாயம்மா, உனக்கு காச நோய்க்கான அறிகுறி இல்லை" என்று ஆறுதல் கூறினார். //

இது எவ்வளவு சந்தோஷமான விஷயம். நமக்கு வைத்தியம் செய்யும் மருத்துவரின் இதமான நம்பிக்கையூட்டும் பேச்சுக்களே, நமது அவஸ்தைகளை வெகுவாகக் குறைத்து, நிம்மதி அளிக்கிறது என்பது உண்மை தான்.

நல்லதொரு வைத்தியரிடம் நாம் செல்லவும், அவர் நல்லதொரு சந்தோஷமான மனநிலையில் அப்போது இருந்து, முழுக்கவனத்தையும் நம் மீது அவர் செலுத்துமாறு நமக்கு சூழ்நிலையும் சாதகமாக அமைந்து, நமது நோய்க்காண காரணத்தை அவரும் துல்லியமாகக் கண்டுபிடித்து, தகுந்த சிகித்சை அளிக்கவும், ஒரு கொடுப்பிணை வேண்டும். நான் இதை பலமுறை அனுபவித்துள்ளேன்.

பதிவை அருமையாக எழுதி, எளிமையாகப்புரியும் வண்ணம் முடித்துள்ளீர்கள். நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

தமிழ்மணத்தில் 0/0 ஆக இருந்ததை, நானே முதல் வோட் போட்டு 1/1 ஆக ஆக்கியுள்ளேன். நீங்கள் தங்கள் வோட்டைப் போட்டு 2/2 ஆக ஆக்கிக்கொள்ளுங்கள். அன்புடன் vgk

இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகளை என்னுடைய பதிவுலக நண்பர்கள்மீது நம்பிக்கை வைத்து எழுதுகிறேன். பாராட்டிற்கு நன்றி திரு.மகேந்திரன்.

// ஒவ்வொரு கஷ்டங்களும் அதை தான் சொல்கிறது. அதை அழகாக எழுதி உள்ளீர்கள். // உண்மைதான். வருகைக்கு நண்றி திரு.தமிழ் உதயம்

வணக்கம் திரு.சங்கவி. ஊக்கமூட்டும் தங்களின் கருத்துரைக்கு நன்றி சார்.

பெண்மைக்கான தொடர் சூப்பர்.. //நன்றி திரு.பிரகாஷ்.

உண்மதானே தோழி, மகப்பேறு முடித்த பெண்ணிற்கு தாயின் சீராட்டும், பாலூட்டும் தாயின் ஆரோக்கியம் குழந்தைக்கும் தேவைதானே. நன்றி ராஜேஸ்வரி.

நமது நோய்க்காண காரணத்தை அவரும் துல்லியமாகக் கண்டுபிடித்து, தகுந்த சிகித்சை அளிக்கவும், ஒரு கொடுப்பிணை வேண்டும்.// அனுபவக் கருத்து சார். தங்களின் கருத்துரை மேலும் இப்பதிவிற்கு வளம் சேர்க்கிறது நன்றி சார்.

தமிழ் மணத்தில் ஓட்டு போட்டதற்கு நன்றி VGK சார்.

பிரசவத்திற்கு பின்னால் ஒரு வித மனச்சிதவு ஏற்படும். அதிலிருந்து மீள குடும்பத்தினர் தான் உதவ வேண்டும்.
அருமையான தொடர். பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

மனமார்ந்த நன்றிகல்

vizhippunarvu pathivunga

பெண்களூக்கான நல்ல பதிவு

//வெறும் மருந்துகள் மட்டும் உடல் ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதில்லை, அதற்கான உணவு கட்டுப்பாடும் சேர்ந்தால்தான் முழுமையாக குணமடையமுடியும். பத்திய உணவுகள் இதற்கென்றே சிறப்பாக பின்பற்றப்பட்டு வந்தன.//

உண்மை,இன்று பலர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

மருத்துவ தொடர் கட்டுரை அற்புதம்...சகோதரி
வாழ்த்துக்கள்...

இன்றைய சூழலில் இளையவர் முதியவர் பாகுபாடின்றி ஒரு குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அற்புத விஷயத்தைத் தெளிவாகவும், அக்கறையுடனும், பொறுமையாகவும், அழகுத் தமிழில் பதிவிட்ட தங்கள் முயற்சி அளப்பரியது. சமுதாயத்துக்கு நல்கியிருக்கும் இச்சேவையை தலைவணங்கி வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

அருமையான தேவையுள்ள விஷயத்தை கட்டுரை வடிவில் தந்தமைக்கு நன்றி சகோ..

தமிழ் மணம் ஆறு

உண்மைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி புதுகைத் தென்றல்.

வருகைக்கு நன்றி ஆச்சி.

நன்றி திரு.சி.பி.செந்தில்குமார்

பத்தியம் என்பது இந்த காலத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால்தான் குணமாக தாமதம் ஆகிறது. நன்றி திரு.சண்முகவேல்.

இது போன்ற பகிர்ந்து கொள்ளுதல்கள் தனித்த சூழலில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் அவசியம். மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி கீதா.

கருத்துரைக்கும் ஓட்டுப் பதிந்தமைக்கும் நன்றி திரு.M.R

நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

வணக்கம் திரு.சமுத்ரா. வருகைக்கும் கருத்துரைக்கு நன்றி