மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     இதுவரை இந்த கட்டுரையினை தொடர்ந்தவர்களுக்கு , ஒரு சிக்கலான சூழ்நிலையில் மனம் குழம்புவதால் நமக்குத் தெரியாமலே தவறான செயல்களுக்கு நாம் காரணகர்த்தா ஆகிவிடுவதும், தொடர்ந்து வரும் பின் விளைவுகளும் புரிந்து இருக்கும். ஒரு சிறப்பான சுய திறானாய்வு செய்து கொள்ளும் முறைகளையும் அதனை சரி செய்யும் முறைகளையும் தெரிவித்திருந்தேன். இன்னும் சிலருக்கு வேறு மாதிரி பிரச்சினை இருக்கும். இரண்டாவது பதிவில் நான் சுட்டியிருந்த அறிகுறிகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அதனை எப்படி சீர் செய்வது என்று இந்த பகுதியில் காணலாம்.

    முன்பதிவில் குறிப்பிட்டிருந்த முறைகளை இங்கு நீங்கள் செயல்படுத்திப் பார்க்கலாம். யாருக்கு என்றால் உங்களைவிட வய்தில் சிறியவர், உங்கள் சொல்லை மதிப்பவர், உங்களுக்கு கட்டுப்படுபவர் - அதாவது நீங்கள் அவருக்கு நம்பிக்கையான வழிகாட்டி எனில் உடனிருந்து ஆலோசனை வழங்கலாம். ஆனால், உங்களுக்கு மூத்தஸ்தானத்தில் இருப்பவர் - உ-ம் உங்களுடைய தந்தை, உங்கள் கணவர் - எனில் இந்த முறைகள் பயன்தராது. பாதிக்கப்பட்டவரிடம் நேரிடையாக சொல்ல முடியாது. அவர் அதை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்.

     என்னுடைய தோழி ஒருத்தி அவள் கணவருக்கு இதுபோல் பிரச்சினை இருப்பதை உணர்ந்து கொண்டாள்.. அவர் வெகு திறமைசாலி. கடந்துபோன வாழ்க்கையின் வெற்றியாளராக விளங்குபவர்.  "அவரிடம் இது பற்றி பட்டவர்த்தனமாக குறை சொல்லி உரையாடாதே" என்று சொன்னேன். "இந்த கட்டுரையினை எடுத்து சென்று படித்துக் காட்டவா?" என்று கேட்கிறாள். அதுவும் தவறுதான் ("ஆமா, அந்தம்மாவிற்கு வேற வேலையில்ல" என்று எழுதிய எனக்கும் சேர்த்து திட்டு விழும்). நான் ஏற்கனவே சொன்னதுபோல் முன்னெடுத்து செல்லும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆதிக்க மனோபாவம் சிறிதாவது இருக்கும். உண்மையிலேயே அவர்கள் திறமைசாலிகள்தான். இந்த ஒரு சிறிய தடுமாற்றத்தை வைத்து நாம் அவர்களை குறை சொல்லி மட்டம் தட்ட முயற்சிப்பது போலாகிவிடும். அதனால்,  பிரச்சினை சரியாகி சாதாரணமாகிவிட்டாலும் தன்னுடைய டிராகிற்கு வரத் தயங்குவார்கள். அது அவர்களை இத்தனை நாள் சிறப்பாக வைத்திருந்த தன்னம்பிக்கையினை ஆட்டம்காண வைத்துவிடும். சரி எப்படி அவர்களை சரி செய்வது?

1. நான் சொன்னதுபோல் நேரிடையாக கை நீட்டி குற்றம் சாட்டிப் பேசக்கூடாது." கொஞ்ச நாளாகவே நீங்கள் சரியில்லை. ராகு தோசம் இருக்குன்னு ஜோசியர் சொன்னார். அது மாதியே பாம்பு மாதிரி சீறுகிறீர்கள்" . இப்படியெல்லாம் பேச வேண்டாம்.

2. குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் கணவரின் கெடுபிடியால் பிள்ளைகள் மனம் வெறுத்து பேசலாம். கண்டிப்பாக உங்களிடம் மனம்விட்டு பேசுவார்கள்." அவர் முன்ன மாதிரி இல்லை. ரொம்ப கன்னிங் ஆகிட்டார்" என்று குறை கூறும்போது, " ஆமாம், நானும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்" என்று பேசாமல், "அப்பாவிற்கு வியாபாரத்தில் சிக்கல்" அல்லது " உடல் நலக்குறைவு இருப்பதாக" குறிப்பிடலாம்.

     ஒரு குடும்பத்தில் இது போல குறை சொன்ன பிள்ளைகளிடம் அம்மா "அவரை கல்யாணம் செஞ்ச நாளிலிருந்து இதுபோலத்தான் கஷ்டப்படறேன்" என்று புலம்ப, சரியான விளக்கம் இல்லாது போக பிள்ளை அப்பாவிடம் சண்டையிட்டுவிட்டான். இது ஒரு சிறிய கீறலாக விழுந்து விரிசலாக மாறி, வேண்டுமென்றே காதல் திருமணம் செய்து கொண்டான். குடும்பத்திற்கு கட்டுப்பட்டு வளர்ந்தவன் திடீரென்று தடம் மாறியதால் சரியான துணையை தேர்வு செய்யமுடியாமல் போக, இப்போது அவன் வாழ்க்கை தடுமாற்றம் ஆகிவிட்டது.

3. அவரால் இத்தனை நாள் நன்றாக இருந்தோம் அல்லவா?. அதனை உணர்ந்து நம்முடைய வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.  சத்தான தெம்பான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளச்  செய்யுங்கள். உங்களுடைய தேவையாக சுற்றுலா அழைத்துச்
 செல்லுங்கள். அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருப்பதை உணர்த்துங்கள். அன்றாட வேலைகள் செய்வதிலேயே குழப்பம் ஏற்படுவதால், அவர்களுக்கான சிறிய விசயங்களையும் கவனமெடுத்து செய்யுங்கள் - உடைகளை அயர்ன் செய்து தயாராக வைப்பது போன்றவை.

    பிள்ளைகள் முக்கியமாக சந்திக்கும் விசயம் என்னவென்றால் அப்பாவுடைய பொருட்களை பயன்படுத்திவிட்டு  - உ-ம் வண்டியை எடுத்து ஓட்டிவிட்டு சாவியை எங்கேயாவது வைத்து விடுவது, வண்டியில்- பிரச்சினை ஏற்பட்டுள்ளதை சொல்லாமல் விடுவது போன்றவைகூட பிரளயத்தை கிளப்பும். சாதாரணமாக இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விடுபவர் இந்த சமயத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுவார்.  படிப்பில் கவனம் சிதறிய என்னுடைய மாணவன் ஒருவனின் தந்தை கவுன்சிலிங்கின்போது  இது போன்ற 'பொறுப்பில்லாத்தனம்' (வண்டி சாவியை கண்ட இடத்தில் வைப்பது) தன் மகனிடம் இருப்பதை கண்டிக்கும்படி என்னிடம் கூறினார். அந்த பையனை பற்றி எனக்குத் தெரியும் என்பதால், அவனுடைய அம்மாவை அழைத்து விசயத்தை குறிப்பிடாமல் சில ஆலோசனைகளை தந்தேன். மகனிடம் மிகவும் பிரியம் வைத்திருந்த அவர் ஒத்துழைத்ததால் மகன் சரியானபடி படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கிறான்.

  இப்படியெல்லாம் கவனித்துச்  செய்ய வேண்டுமா என்றால் (அடிமைத்தனம் போல் தோன்றினால்) , முந்தைய பதிவுகளில் நான் குறிப்பிட்டது போல் குடும்பம் என்பது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும் சிரித்து பேசுவதற்கும் மட்டுமல்ல. ஏதோவொரு சிக்கலில் குடும்ப அங்கத்தினர்  மாட்டிக் கொள்ளும்போது எந்த பாதிப்பும் ஏற்படாமலும் குடும்பம் என்கிற அமைப்பு சிதறிப்போகாமலும் காப்பாற்றும் கடமையும் நம்மிடம் இருக்க வேண்டும். காற்றில் சன்னல் கதவோ, வாயிற்கதவோ ஆடலாம் வீட்டின் அஸ்திவாரமே ஆடிவிடக்கூடாது.

முடிவுரையாக நான் சொல்ல விளைவது  மகாகவியின் வார்த்தைகளைத்தான். "மதிதனை மிகத் தெளிவு செய்து" எந்த சூழலிலும் நாம் சார்ந்த குடும்பம் பாதிக்காமல், நம் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி "என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்" என்பதுதான். இந்த பதிவினை தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.


15 comments:

இந்தக்கட்டுரை நல்ல ஒரு சில உதாரணங்களுடன் மிகச்சிறப்பாக எழுதி முடித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

பாராட்டிற்கு நன்றி சார். உதாரணங்கள் தங்களின் ஆலோசனையால்தான் சேர்த்து எழுதுகிறேன். நன்றி VGK சார்.

//குடும்பம் என்பது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும் சிரித்து பேசுவதற்கும் மட்டுமல்ல. ஏதோவொரு சிக்கலில் குடும்ப அங்கத்தினர் மாட்டிக் கொள்ளும்போது எந்த பாதிப்பும் ஏற்படாமலும் குடும்பம் என்கிற அமைப்பு சிதறிப்போகாமலும் காப்பாற்றும் கடமையும் நம்மிடம் இருக்க வேண்டும். //

ஆமாம்.இந்த எண்ணம் நெஞ்சில் இருந்தால் செயல் எளிது.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள்.

சிலவற்றை வெளியில் பகிரங்கமாகச் சொல்லமுடியும்.

சிலவற்றை சொல்லிக்கொள்ளக்கூட முடியாத பரிதாப நிலைமையில் இருப்பவர்களும், அதுபோன்ற பிரத்யேகமான ஒரு சில கொடுமையான பிரச்சனைகளும் உண்டு.

தங்களின் இதுபோன்ற பொதுவான கட்டுரைகள் ஒருசிலருக்காவது ஒரு சில வழிகளில், அவர்களின் மிகச்சாதாரணமான குடும்பப் பிரச்சனைகளுக்கு, நல்லதொரு தீர்வு அளிக்க உதவலாம். அதுவே உங்கள் எழுத்துக்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

உதாரணத்துடன் கூறுவது என்றுமே படிக்க சுவையாகவும், மனதில் தங்குவதாகவும் இருக்கும். அதனால் தான் Just Suggest செய்தேன்.

தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

தங்கள் கருத்து சரியே, நன்றி திரு.சண்முகவேல்.

Thank you Sir

செல்லுங்கள். அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருப்பதை உணர்த்துங்கள். //

பயனுள்ள பகிர்வுக்குப் பராட்டுக்கள்.

மதியை தெளியச் செய்த பதிவு.
கோர்வையாக படிக்கும்போது
தெளிவு பிறக்கின்றது என்பது
நிதர்சனமான உண்மை.

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள். படிக்கிறோம்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

பயனுள்ள பகிர்வுக்குப் பராட்டுக்கள். //கருத்துரைக்கு நன்றி ராஜேஸ்வரி.

ஐந்து பதிவுகளையும் தொடர்ந்து வந்ததற்கு மிக்க நன்றி திரு.மகேந்திரன்.

இந்த தொடர் பதிவின் ஐந்து பகுதிகளையும் படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார். தங்களின் மேலான கருத்துரைகள் தொடர்ந்து மனவளகட்டுரைகளை எழுத ஊக்குவிக்கின்றன. நன்றி.

தெளிவாகவும், தேர்ந்த நயத்துடனும் மதிதனைத் தெளிவு செய்யும் வித்தையை அழகாகக் கற்றுத்தந்துள்ளீர்கள். வாழ்வியல் சிக்கல்களுக்கு நல்வழிகாட்டியென அமைந்த அரிய கட்டுரைகளை அளித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் சாகம்பரி.

வாழ்வியல் சிக்கல்களுக்கு நல்வழிகாட்டியென அமைந்த அரிய கட்டுரைகளை அளித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் சாகம்பரி. //பாராட்டிற்கு மிக்க நன்றி கீதா.

தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html