மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    குற்ற உணர்வில் ஒருவர் சிக்கிக் கொள்ளும்போது அவருடைய முன்னேற்றம் பாதிப்படைய கூடும். இந்த உணர்வின் விளைவாக தன்னம்பிக்கை, சுயமரியாதை இழத்தல், தன்னுடைய செயல்களில் நம்பிக்கை இன்மை, அவற்றை ஒரு தலைபட்சமாக விமரிசனம் செய்வது, ஒரு முடிவெடுக்க தயங்க வைப்பது, தன் மேலேயே சந்தேகம் கொள்வது போன்றவற்றை விளைவிக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக மிக மோசமான சூழல் என்னவென்றால், மனமறிந்து குற்றத்தை சுமப்பது. இது உள்ளுக்குள்ளேயே வெட்கப்படவைக்கும் . தவறினை எண்ணி எண்ணி எப்போதும் கூச வைக்கும். குழப்பம் மேலிடும். எதற்கும் பயன்படாமல் போய்விடுவோமோ என்ற பயம் கிளப்பும். எப்போதும் கவலைப்பட செய்யும். வாழ்க்கையின் கட்டுப்பாடு தன் கையில் இல்லை என்று மனதை அலைபாய வைக்கும்.  புற விளைவுகளாக இரத்த அழுத்தம், ரத்த சோகை, வயிற்றுப்புண் போன்றவை ஏற்படலாம்.

    இத்தனை சிரமங்களுக்கும் இடையில்  ஒரு நல்ல விசயம் என்னவெனில், இது பொறுப்புணர்வின் விளைவாக ஏற்படுகின்ற உணர்வு. நடந்த ஒன்றிற்கோ நடக்கப்போவதிற்கோ நம்மை பொறுப்பாளியாக நினைக்கும் எண்ணம், கடமை உணர்வின் அடிப்படை தாக்கம் ஆகும். மனிதனை விலங்கிலிருந்து மேம்பட்டவனாக ஆக்கும் உணர்வுதான் இது. எந்த ஒரு விலங்கும் தன்னுடைய தவறினை எண்ணி வருந்துவதில்லையே. இதுதான் மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையே உள்ள முக்கிய வேற்றுமையாகும். ஒன்று புரிந்திருக்குமே, இத்தனை தவறுகள் செய்துவிட்டு இவன் எப்படி குற்ற உணர்வே இல்லாமல் இருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் கிட்டியிருக்குமே. எனவே இந்த உணர்வு நமக்கு தோன்றியிருந்தால், மனிதன் என்ற நெறியிலிருந்து நாம் தவறவில்லை என்பதும், தவறு செய்வதும் திருத்திக் கொள்வதும் மனிதனுடைய வாழ்க்கை நெறியாகும் என்பதும் மனதில் பதிய வைக்க வேண்டும். இதுதான் குற்ற உணர்விலிருந்து வெளிவருவதற்கான ஆரம்பமாக அமைகிறது. - தெய்வம் தவறு செய்யாது, மிருகம் தவறினை திருத்திக் கொள்ளாது.


    குற்ற உணர்வு தரும் ஒருவித பயம், வரும் நாளில் நம்மை மீண்டும் தவறிழைக்க வைக்காது. எனவே அது இருப்பது நல்லதுதானே என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையென்னவெனில், முதன்முதலாக தவறு செய்யும்போது வரும் ஒருவித பய உணர்வு மறுபடியும் தவறு செய்யும்போது குறைந்துவிடும். அதுவே மீண்டும் மீண்டும் நடைபெறும்போது மனசாட்சி எனப்படும் ஆழ்மனம் தன்னிலை மறந்துவிடும் அல்லது மரித்துவிடும். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், தன் நெஞ்சறிந்த உணர்விலிருந்து ஒருவன் வெளிவருவதற்காக  மேற்கொள்ளும் செயல்கள் அவனை மனிதனாக வைத்திருக்க உதவும். அப்படியில்லையெனில் உலகில் மனித வடிவில் மிருகங்கள் பெருகிவிடும். இறைவனிடம் ஒப்பு கொடுத்து பாவமன்னிப்பு பெறுவது இதனைத்தான் வலியுறுத்துகிறது. பகவத் கீதையில் கூறப்படும் 'உயிர் வாழ்வதற்காக கொல்லலாம்" என்பதும் இதனைத்தான் குறிக்கிறது - எதற்காக எதனை அழிக்கப் போகிறோம் என்பது முக்கியம்.


   இங்கு நாம் குற்ற உணர்வை முற்றிலும் அழிக்கப் போவதில்லை. ஒருவனுடைய மனம் பதைத்துபோகும் அளவினை, அவனுடைய கொள்கையின் தரம் நிர்ணயிக்கிறது, அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து உயிர்வாழும் தகுதியை உறுதிப்படுத்துகிறோம். வாழும் கொள்கைக்கும் வாழும் கலைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பதம் செய்து கொள்வது. இனி, சில உதாரணங்களை பார்க்கலாம்.

1. சுதாவை நிம்மதியில்லாமல் செய்துவிட்ட குற்ற உணர்விற்கு காரணம் - அவளுடைய தந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கடைசி காலத்தில் அவருக்கு அவளால் உதவ முடியாமல் போய்விட்டது என்பதுதான். அவள் ஒரு மருத்துவர் என்பதால், தந்தையின் கடைசி கட்ட இன்னல்களை குறைத்து இருக்க முடியுமோ என்ற உணர்வு தலைதூக்கி நிற்கிறது. பாசத்திற்குரிய தந்தைக்கே உதவமுடியாத அவளால் மருத்துவத் தொழிலில் பெரிதாக சாதிக்க முடியாது என்ற பயம் தோன்றிவிட்டது.

2. பிஜுவின் பிரச்சினை, வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களுடன் சுற்றுலா சென்றது. இதனை வீட்டிற்கு தெரியாமல் மறைக்க வேண்டி மேலும் பல தவறுகளை செய்தாகிவிட்டது - நண்பனுக்கு  பண உதவி செய்வது, அவன் செய்யும் தவறுகளுக்கு துணை நிற்பது , குற்ற உணர்வினால் போதை மருந்து பழக்கம்கூட வந்துவிட்டது. . அவனுக்கு நேர்மையான நண்பனாக இல்லாதவனிடம் மனதளவில் கைதியாகி நிற்கிறான். உடலளவில் பாதிப்பு இருப்பதால் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நிலையில் விளிம்பில் நிற்கிறான்.

3. கிருபாவின் நிலை என்னவெனில், தொழில் நிமித்தமாக அடிக்கடி பதட்டம் அடைவதும், அதனால் குடும்பப் பொறுப்பு தவறுவதும் அடிக்கடி நடக்கிறது. இதனை வீட்டினர் புரிந்து கொள்ளாததால், மனதளவில் தனக்கு யாருமே இல்லை என்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதனால் தொழில் பாதிப்படைகிறது.  வெற்றி பெற வேண்டிய கட்டாயம் போர் முனையில் இருப்பவனுக்கு மட்டுமல்ல தொழில் முனைப்பில் இருப்பவனுக்கும் வந்துவிடுகிறது. குழப்பமான சிந்தனையிலிருந்து மீள புதி சூழல் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் குடிம்பத்தை விட்டு விலகிய தன்னுடைய தவறு தெரிந்த பின் குற்ற உணர்வு வந்துவிட்டது. இதனால் மனைவி குழந்தைகளை பார்க்க கூசிப் போய் விலகி நிற்கிறான். இது பின் தங்கி நிற்க வைக்கிறது.

4. சிறிய விசயங்களுக்குகூட குற்ற உணர்வில் கூசிபோவது நடக்கிறது.
    - இரு சகோதரிக்கு இடையே வாக்குவாதம் நடந்துவிட்டது, இது பொதுவில் வைத்து நடந்தது. தங்கைக்கு குழந்தையில்லாததை குறிப்பிட்டு சீற , பதிலாக நீண்ட மௌனம் ஏற்பட்டுவிட்டது. ஒரு சிறு கேலி செய்த திருமணம் ஆன தமக்கையின் செயல் தன்மானத்தை பாதித்துவிட்டதாக நினைத்து பதிலுக்கு அவளுடைய இயலாமையை குறிப்பிட்ட செயல், குற்ற உணர்வை ஏற்படுத்திவிட தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு பொது நிகழ்ச்சிக்கு செல்லவே பயப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

  - சிறிய கவனக்குறைவினால் குழந்தைக்கு ஒரு விபத்து ஏற்பட்டுவிட, குழந்தையை கவனிக்கும் பொறுப்பான தாயாக தான் இல்லையோ என்ற தன்னம்பிக்கை சிதைவு தாயினை குழந்தையை விட்டு விலக வைத்துவிட்டது. 

- கணவனிடம்/மனைவியிடம் ஒரு தேவைக்காக சொல்லும் பொய்கூட ஒரு பிரிவினையை உண்டு பண்ணிவிடுகிறது.

 இவற்றை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமெனில், குற்ற உணர்வின் ஆரம்பப் புள்ளி ,அடிப்படை உண்மைகள், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை புரிந்து ஒள்ள வேண்டும். இன்னும் தொடரும். 

19 comments:

மனிதனை விலங்கிலிருந்து மேம்பட்டவனாக ஆக்கும் உணர்வுதான் இது.

சரிதான் சகோதரி
நாம் வாழும் நிலைக்கான நம்மிடம் இருக்கும் கொள்கைக்கும்
வாழ்வியலுக்கும் இடையேயான இடைவெளியை புரிந்துகொள்வதில் தான்
நம் வாழ்வின் பெரும்பகுதி கழிகிறது.
நிறைய விட்டுக்கொடுத்தல்களும்
எதையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மையும்
நிறைய வளர்த்துக்கொண்டால்
வென்று விடலாம் இவ்வாழ்வை.
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு கட்டமாக தக்க உதாரணங்களுடன் சொல்லும்போது மனத்தில் அழகாகப் பதிந்துவிடுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களில் நானும் சிலரைச் சந்தித்திருக்கிறேன் என்பதால் கூடுதல் கவனத்தோடு புரிந்துகொள்ள முயல்கிறேன். அப்போதுதான், அப்படிக் குற்ற உணர்வில் தவிப்பவர்களை அவ்வுணர்விலிருந்து மீட்கமுடியும் அல்லவா? மிகவும் நன்றி சாகம்பரி.

நல்ல மனவள கட்டுரை...தொடருங்கள்..

ரெவெரி

ஹைய்யா நான் தான் தமிழ்மணத்துல இணைச்சு,ஓட்டு போட்டேன்.பதிவு சரியாக செல்கிறது,தொடருங்கள்.

குற்ற உணர்வு நம்மையே அழித்துவிடும் அம்மா...

// தன் நெஞ்சறிந்த உணர்விலிருந்து ஒருவன் வெளிவருவதற்காக மேற்கொள்ளும் செயல்கள் அவனை மனிதனாக வைத்திருக்க உதவும். அப்படியில்லையெனில் உலகில் மனித வடிவில் மிருகங்கள் பெருகிவிடும்.//

குற்ற உணர்வைப்போல ஒரு சித்திரவதை வேறு எதுவும் இல்லை.

தொடர் அருமையான உதாரணங்களுடன், வெகு அழகாகச் செல்கிறது, மேடம்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.vgk

மிக மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
நம்முடைய குண மாறுதலுக்கும் செயல் வேகத்திற்கும் கூட
இந்த குற்ற உணர்வுதான் காரணமாக இருக்கிற தோ ?
குற்ற உணர்வை ஒரு திருப்பு முனையாகக் கொள்ளலாமோ ?
அருமையான பல கேள்விகளை எழுப்பிப் போகும் பதிவு
அருமையாக மிக அழகாக அனைத்தையும்
விளக்கிச் செல்லும் பதிவும் கூட
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

//நாம் வாழும் நிலைக்கான நம்மிடம் இருக்கும் கொள்கைக்கும்
வாழ்வியலுக்கும் இடையேயான இடைவெளியை புரிந்துகொள்வதில் தான்
நம் வாழ்வின் பெரும்பகுதி கழிகிறது.//
என்னுடைய 40வது வயதில்தான் இதனை புரிந்து கொண்டேன். ஆனால், இப்போதையவர்களுக்கு இந்த விடை சிறிய வயதிலேயே கிட்டிவிடுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள் முற்பகுதியிலேயே ஆரம்பித்துவிடுகிறது. புரிந்து கொள்ளும் பக்குவமும் வந்துவிட்டது.

மிக்க நன்றி ரெவெரி

நிறைய முறை இதனை நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள் சகோ. நான் இணைக்க முயற்சித்தாலும் முடியாமல் போய்விடுகிறது. மிக்க நன்றி

மிக்க மகிழ்ச்சி கீதா. இந்த பதிவுகள் அனைத்துமே யாருக்கோ தேவைப்படும் செய்தியை தன்னுள் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய கவுன்சிலின் அனுபவத்தில் வெற்றிபெற வைத்த சந்தர்பங்களை பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி.

குற்ற உணர்வு நம்மையே அழித்துவிடும் அம்மா... // உண்மைதான் பிரகாஷ். மிக்க நன்றி

வாழ்த்துக்களுக்கும்பாராட்டிற்க்கும் நன்றி சார்.

ஒரு கவிஞர் என்பதைவிட சீரிய சிந்தனையாளர் என்றே உங்களை புரிந்து கொள்ள முயல்கிறேன்- கவிக்கோ அப்துல் ரகுமான் போல. கேள்விகள் எழுப்பி பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறீர்கள். குற்ற உணர்வு ஒரு திருப்பு முனை என்பது சரியான கருத்துதான். ஏனெனில், அதனை கடக்கும் விதம்தான் ஒருவனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நன்றி ரமணி சார்.

உங்கள் பதிவு மற்றவர்களின் பதிவுகளில் இருந்து வேறுபட்டு தனித்துவமாக நிற்கிறது. மற்றவர்கல் பதிவுபோல மேம்போக்காக படித்து செல்லமுடிவதில்லை. படித்து மனதில் நிறுத்தி சிந்தனை செய்து மனதை நல்ல தெளிவாக்கி வைத்து கொள்ள முடிகிறது.
உங்கள் தரமான பதிவு முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்

நல்ல பதிவு.
உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா.

அருமையான பதிவு.
மறுபடியும் படித்தேன். நல்ல விளக்கங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.