மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

        மனசாட்சி எனப்படும் ஆழ்மனம் நம்முடைய கடந்த கால பெருமைகளை ஒருபோதும் எடுத்துச் சொல்லாது - உண்மையில் பெருமையடித்துக் கொள்ளும் வேலையை செய்வது ஆசை மனம்தான். ஆழ்மனதினை பொறுத்தவரை தெள்ளிய நீரோடையின் போக்கு இருக்கும். அதன் போக்கில் ஒரு தடை வராதவரை, அது ஓடிக் கொண்டிருக்கும் ஓசையே கேட்காது.  தடையென்பது அது மறுத்தலிக்கும் செயல்கள்தான்.  பெரும்பாலும் நாம் தவறு செய்வது ஆழ்மனதின் இருத்தலை புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான். நாம் நல்லது செய்யும்போது அது குரல் எழுப்பாது. எனவே மனசாட்சி என்பது ஒரு மாயையோ என்று குழம்பிவிடுவோம். அதனுடைய இருத்தலையே சந்தேகிப்பதால் ஆசை மனதின் ஆளுகைக்கு உட்பட்டு தவறிழைத்துவிடுவோம். பிறகுதான் மனசாட்சியின் ஒரு விஸ்வரூப தரிசனம் கிட்டும். அதுதான் குற்ற உணர்வினை ஆயுதமாக்கி போர் தொடுக்கும். வெளியில் சொல்லிக் கொள்ள முடியாதவற்றை கற்றுத் தரும்.

              இன்னும் சற்று விளக்கமாக பார்க்கலாம்.  குற்ற உணர்வின் முதல் கட்டம். உள்ளுணர்வின் விளைவாக தோன்றும் மெல்லிய பய உணர்வு. ஒரு தவறினை செய்யப் போகும் எண்ணம் தோன்றும்போதே அடிக்க ஆரம்பிக்கும் எச்சரிக்கை மணியாகும். நாம் ஒப்புக் கொண்ட நன்னெறிகள், ஆன்மீக கோட்பாடுகள்தான் இந்த உணர்வினை தோற்றுவிக்கின்றன. கடலில் மூழ்குபவன் கைக்கு சிக்கிய மரத்துண்டினை பற்றிக் கொண்டு மூழ்காமல் தப்பிப்பதுபோல், இதனை உணர்ந்து கொண்டு  செய்ய வேண்டியவற்றை சீர் திருத்திக் கொண்டால் மனதையும் செயலையும் பாழாக்கும் குற்ற உணர்வில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம். பிஜூவிற்கு ஆரம்பத்தில் இது போன்ற எச்சரிக்கை உள்ளுணர்வு தரப்பட்டிருக்கும். அதனை அலட்சியம் செய்ததன் விளைவே இன்றைய நிலை. இந்த நிலையினை உணர்வதற்கும் அது சொல்லும் கடினமான முடிவுகளை எடுப்பதற்கும்  மன உறுதி வேண்டும் முழுக்க முழுக்க தன்னிலையறியும் நம்முடைய மனதின் ஒத்துழைப்பு இருந்தால் போதும். மனதின் உறுதியினை பாசமிகு குடும்பம், நல்ல நண்பர்கள், நன்னெறி சார்ந்த கொள்கைகளை கடைபிடிப்பது, ஒழுக்கமான பாதையில் செல்வது ஆகியன நிர்ணயிக்கும். 


           அடுத்த கட்டம் கடந்த காலத்தவறினை நினைவுபடுத்தி துன்பத்தில் ஆழ்த்தும். நாம் செய்யாமல் விட்ட ஒரு செயலையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இது ஒரு எதிர்மறையான உணர்வு. நம்மை நாமே மன்னித்து நடந்ததை மறக்க விடாமல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இயலாமையின் பிடிக்குள் தள்ளும். இதிலிருந்து தப்பிக்கும் திறமை நம்முடைய குழம்பிப்போன மனதிற்கு கிடையாது. மிகவும் நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு இந்த நிலையினை கடக்க முயற்சிக்கலாம். இதுதான் சுதாவின் நிலை. அவளுடைய நெருங்கிய உறவினர் - அன்னை அல்லது துணைவர் உதவியை நாடலாம். புரிந்து கொண்டவர்களின் உதவிக்கரம் புதை குழியிலிருந்து வெளிக் கொணரும்.
     அடுத்தது மூன்றாவது கட்டம். ஒரு தவறினை செய்துவிட்டு அதனை மறைக்க மேலும் தவறுகளை செய்து மீள முடியாத புதைகுழியில் சிக்கிக்கொள்வது. அடுத்தடுத்து செய்யும் தவறுகளினால் விடுபடும் வழியறியாது, தன்னிலையிலிருந்து விலகி நிற்பது -க்ருபாவை போல். பிறகு நம்மை நாமே குற்றவாளியாக்கி நொந்து கொள்வதால் பயனில்லை. அதிலிருந்து வெளிவர செய்யும் உதவியை அனுபவமிக்கவர்கள், வாழ்வியல் ஆலோசகர்கள் ஆகியோரிடம் கேட்கலாம். இது போன்ற விசயங்களில் நிபுணத்துவம் உள்ளவர்களை நாட வேண்டும். இந்த உணர்வினை சரியாக கையாள்வதன் மூலம் நம்முடைய முன்னேற்றம் உறுதிபடும்.


இனி குற்ற உணர்வின் பிடியிலிருந்து மீளும் நடவடிக்கைகளை பார்ப்போம்.

தவறினை ஒப்புக் கொள்வது:   நம்மை துன்புறுத்தும் அந்த உணர்வின் மையப்புள்ளியான தவறினை ஆராய வேண்டும். உண்மையிலேயே தவறு இருந்தால் மனமாற ஒப்புக் கொள்ள வேண்டும். அடுத்தவர் மீது குற்றத்தின் பொறுப்பினை சுமத்துவது, சாக்கு போக்கு சொல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏன்னெனில் நாம் சமாதானப்படுத்த முயற்சிப்பது நம்முடைய மனதினை மட்டுமே. இங்கு மறைப்பதும் ஒளிப்பதும் முடியாது. நேர்மை மட்டுமே செல்லுபடியாகும்.

மன்னிப்பு கேட்பது:

நம்மால் பாதிக்கப்பட்டவரிடம் அல்லது நமக்கு பொறுப்பானவர்களிடம் நாம் செய்த தவறினை நேர்மையாக எடுத்துச்சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பிஜூ தன் வீட்டிற்கு தெரியாமல் செய்த தவறினை ஒப்புக் கொண்டால் பெற்றவர்களின் மன்னிப்பு அல்லது தண்டனை கிட்டிவிடும்.

சில சமயம் மன்னிப்பு கிட்டாது. பரவாயில்லை, நாம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்பதுதான் முக்கியம்.  உண்மையில் மனம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.

மன்னிப்பு கேட்பதில்  இரண்டு பிரச்சினைகள் உள்ளன.

முதலாவது, சில விசயங்களை உண்மையாக எடுத்
துக் கூறி மன்னிப்பு கேட்கமுடியாது. மகனையோ, நண்பனையோ, சகோதரனையோ மன்னிக்கும் உறவுகள் சில விசயங்களில் கணவன்/மனைவியை மன்னித்துக் கொள்வதில்லை. நான் குறிப்பிடும் சிக்கல் புரியும் என்று நினைக்கிறேன். இது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டாலும், பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும். பிறகு அதற்கு வேறு வழி தேட வேண்டும்.
இரண்டாவது, நாம் மன்னிப்பு கேட்கவிரும்புபவரிடம் மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் நமக்கு கிட்டாது. சுதாவின் விசயத்தில் அவள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவளுடைய தந்தை உயிருடன் இல்லை.

இந்த சூழலை எப்படி சீர் செய்வது? அடுத்த பதிவில் பார்க்கலாம்.


17 comments:

பல நேரங்களில் மன்னிப்பு நாளைய துருப்புச் சீட்டாகி போவது உண்மை...தொடருங்கள் சகோதரி...

தொடர் அருமையாகச் செல்கிறது.

//பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும். பிறகு அதற்கு வேறு வழி தேட வேண்டும்//

ஆஹா! மிகவும் அருமையான வார்த்தைகள்.

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரது மனசாட்சிகளும்.

//நாம் ஒப்புக் கொண்ட நன்னெறிகள், ஆன்மீக கோட்பாடுகள்தான் இந்த உணர்வினை தோற்றுவிக்கின்றன//

நமக்கே தெரியாமல் ஆழ்மனதில் இருப்பதுதான்.மனசாட்சி,ஆனாலும் தவறு செய்து விட்டு போதை போன்றவற்றில் விழுந்து விடுகிறார்கள்.

மன்னிப்பு கேட்பதில் கூட பலருக்கு பிரச்சனை ஒன்றுமில்லை.
நாம் பார்க்கத்தானே செய்கிறோம், "நான் ஏதும் தவறாக பேசியிருக்கலாம், ஆகையால் என்னை வேண்ட்டம் என் பேச்சை மன்னித்து விடுங்கள் என்று" கொஞ்சம் இருமாப்பாகவே சிலர் பேசுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் தவறை ஒப்புக்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம் சகோதரி,
நான் பார்த்த மனிதர்கள் வரையில் என்னையும் சேர்த்துத்தான். சிலரிடம் வேண்டுமானால் நம் தவறை ஒப்புக்கொள்வோம். ஆனால் பொதுவாக செய்த தவறை ஒத்துக்கொள்வதில்லை
நீங்கள் கூறியவைகளை கடைபிடித்தாலே மனிதம் போற்றி விடலாம்.

சூழலை சமாளிப்பது எப்படி என்பது பற்றி விளக்கமாக அறிய காத்திருக்கிறேன்...

//நாம் செய்யாமல் விட்ட ஒரு செயலையும் அதனால் ஏற்பட்ட விளைவையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இது ஒரு எதிர்மறையான உணர்வு. நம்மை நாமே மன்னித்து நடந்ததை மறக்க விடாமல் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இயலாமையின் பிடிக்குள் தள்ளும்.//

மிகச் சரியாக ஆய்ந்தெடுத்த வார்த்தைகள் மூலம் சூழ்நிலையின் இறுக்கத்தை, சிக்கலை விளக்கித் தெளிவுபடுத்துகிறீர்கள். மிகுந்த பாராட்டுக்களும் நன்றியும் சாகம்பரி.

//சில விசயங்களை உண்மையாக எடுத்துக் கூறி மன்னிப்பு கேட்கமுடியாது. மகனையோ, நண்பனையோ, சகோதரனையோ மன்னிக்கும் உறவுகள் சில விசயங்களில் கணவன்/மனைவியை மன்னித்துக் கொள்வதில்லை. நான் குறிப்பிடும் சிக்கல் புரியும் என்று நினைக்கிறேன். இது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டாலும், பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும்//வாவ் மிக சரியாக சொன்னிர்கள். வாழ்க்கையை நீங்கள் எவ்வளவு அழகாக புரிந்து வைத்துள்ளிர்கள்.
வாழ்க்கை சக்கரம் நல்லபடியாக ஒட வேண்டும் என்பதற்க்காக தான் செய்யத தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் பின் அதையே நாம் செய்த தவறாக கருதி மீண்டும் மீண்டும் குத்திகாட்டி கேலிக்கும் கேள்வி குறிக்கும் ஆளாக்கி விடுவதால் நாமே தவறு செய்திருந்தாலும் மனது மன்னிப்பு கேட்க மறுத்துவிடுகிறது

நல்ல எழுத்தையும் சிந்தனையும் கண்டு நான் பொறாமை கொள்ளும் வெகு சில ஆட்களில் நீங்கள் முதன்மையாக இருக்கிறிர்கள்.
உங்கள் பதிவுகளை படிக்கும் போது நான் எழுதும் பதிவுகளை பார்க்கும் போது நாமும் எழுத வேண்டுமா என்றுதான் தோன்றுகிறது

""சில சமயம் மன்னிப்பு கிட்டாது. பரவாயில்லை, நாம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என்பதுதான் முக்கியம். உண்மையில் மனம் எதிர்பார்ப்பதும் அதையேதான்"" - உண்மையான வரிகள்...
மன்னிப்பு..,
கிடைக்கவில்லை
என்றாலும்
கேட்க பட வேண்டியது..,
கேட்காவிட்டாலும்
கொடுக்க பட வேண்டியது..,
பாராட்டுக்கள் சகோ .....

நாம் மன்னிப்பு கேட்கவிரும்புபவரிடம் மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் நமக்கு கிட்டாது. சுதாவின் விசயத்தில் அவள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவளுடைய தந்தை உயிருடன் இல்லை.
காலம் மன்னிப்புக்கேட்பதில் மிக முக்கியம். இடம்,பொருள்,ஏவல், நேரம் ,காலம்...

மிக்க நன்றி ரெவரி.

/அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரது மனசாட்சிகளும். // மிக்க நன்றி சார்.

உண்மைதான். மிக்க நன்றி திரு.சண்முகவேல்

ஆனால் தவறை ஒப்புக்கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம் சகோதரி,
நான் பார்த்த மனிதர்கள் வரையில் என்னையும் சேர்த்துத்தான். சிலரிடம் வேண்டுமானால் நம் தவறை ஒப்புக்கொள்வோம். ஆனால் பொதுவாக செய்த தவறை ஒத்துக்கொள்வதில்லை//

தங்களின் கருத்து முற்றிலும் சரியே, சகோ. ஆனால் இங்கு நாம் மன்னிப்பு கேட்கப்போவது நம் மனசாட்சிக்காக. ஓளிவு மறைவு ஒரு போதும் விடுதலையை பெற்றுத்தராது. அடுத்த பகுதியில் விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

மிகவும் நன்றி கீதா. மகிழம்பூச்சரத்தின் அருமையான வாசிப்பாளர்களுக்காக வார்த்தைகளை உணர்பூர்வமாக கொண்டுவர கடமைபட்டுள்ளேன்.

நன்றி Mr.Tamilguy. அடுத்த பகுதியினையும் படித்து சரியாக அமைந்துள்ளதா என்று சொல்லுங்கள். சில பதிவுகள் பிரச்சினையை சொல்லும்- அவர்கள் உண்மைகள் போன்றவை. சில தீர்வு தரும் -மகிழம்பூச்சரம். வார்த்தையின் அமைப்பு நடை பற்றி சிலாகிக்கவே வேண்டியதில்லை. தைரியமாக சில விசயங்களை சொல்லும் தங்களின் பதிவுகள் எனக்கும் பொறாமையை தந்துள்ளன.

வருகைக்கு நன்றி திரு.சின்னத்தூறல். தொடர்வதற்கும் நன்றி.

காலம் மன்னிப்புக்கேட்பதில் மிக முக்கியம். இடம்,பொருள்,ஏவல், நேரம் ,காலம்... . கண்டிப்பாக தேவை. இல்லையென்றால் மிக்க நன்றி தோழி.