மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

குற்ற உணர்விலிருந்து மீள, சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பதில்  இரண்டு பிரச்சினைகள் உள்ளன.

முதலாவது, சில விசயங்களை உண்மையாக எடுத்துக் கூறி மன்னிப்பு கேட்கமுடியாது. மகனையோ, நண்பனையோ, சகோதரனையோ மன்னிக்கும் உறவுகள் சில விசயங்களில் கணவன்/மனைவியை மன்னித்துக் கொள்வதில்லை. நான் குறிப்பிடும் சிக்கல் புரியும் என்று நினைக்கிறேன். இது போன்ற விசயங்களை எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்டாலும், பிற்காலத்தில் இதுவே ஆயுதமாக மாறி வேறு வகையாக தாக்கும் அபாயம் ஏற்படும். பிறகு அதற்கு வேறு வழி தேட வேண்டும்.
இரண்டாவது, நாம் மன்னிப்பு கேட்கவிரும்புபவரிடம் மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் நமக்கு கிட்டாது. சுதாவின் விசயத்தில் அவள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவளுடைய தந்தை உயிருடன் இல்லை.

இந்த சூழலை எப்படி சீர் செய்வது?

இந்த சிக்கலில் மறுமுகமும் உள்ளது. உறவுகளின் பிணைப்பை சிதைக்கக்கூடிய விசயங்களை மென்மையான மனம் கொண்டவர்கள் கேட்கவும் விரும்புவதில்லை. ஏதோ ஒன்று நடந்தது அது தெரியாமலேயே போய்விடட்டுமே என்ன்றுதான் நினைக்கிறார்கள். குற்ற உணர்வை சீர் செய்கிறேன் என்று நடந்துபோன விரும்பத்தகாத சம்பவத்தை சொல்லிவிடுவர்கள். கேட்டவர்களும் நியாயவாதியாக சமாதானமும் செய்துவிடுவார்கள். பிறகுதான் அவர்களுடைய சங்கடம் ஆரம்பிக்கும், நிர்மலமான சிந்தனைகளில் குப்பை  சேர்ந்துவிடும். கடலில் விழுந்தவனுக்கு கை கொடுத்து கரையேற்றிவிட்டவன் தவறி கடலில் விழுவதுபோல ஆகிவிடும்.  ஒரு பெண் என்னிடம் புலம்பியது, "ஏதோ நடந்திடுச்சு. திருந்திட்டோமென்று விட்டுத்தொலைய வேண்டியதுதானே. நான் என்ன சர்ச்சுல இருக்கிற பாதிரியாரா. அத்தனையும் கேட்டுட்டு பாவமன்னிப்பு தர. அவர்கிட்ட ஒன்றும் ரியாக்ட் செய்யவில்லை. அவர் நார்மலாகிவிட்டார். நான் தான் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் மன்னித்துவிட்டதுபோல நான் நடித்துக் கொண்டிருக்கிறேனோ என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் அத்தனை நல்லவளில்லையோ?" என்றார். இதுபோன்ற சிக்கலில் மற்றவரை ஆழ்த்த வேண்டாமல்லவா?


சரி, இப்போது என்ன செய்யலாம்?

1. மிகவும் நம்பிக்கையானவரிடம். நம்முடைய குடும்ப நலனை விரும்புபவரிடம்  இவ்விசயத்தினை சொல்லி தெளிவு தேடலாம். உண்மையான அன்புள்ளவர்களுக்குத் இந்த சிந்தனையிலிருந்து மீட்டெடுக்கத் தெரியும் - பாசத்திற்குரிய தந்தை, மூத்த சகோதரர், சகோதரி, நண்பர்.

2. ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள், இறைவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். பாவமன்னிப்பு பெறுவது போன்று. மனதளவில் இறைவனிடம் ஒன்ற முடியவில்லையெனினும் உடலளவில் பரிகாரம் செய்யலாம். ஒருவர் "நான் பிரதி வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிறேன்" என்றார். உண்மையில் இது செய்த தவறினை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். நினைவிலிருந்து விடுபட முடியாது. உடலை வருத்துவதும் கிடையாது.  உடலால் செய்த பாவத்திற்கு உடலுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வேண்டுதல்களை செய்வது பலன் தரும் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். இது சிலருக்கு பலனளித்து இருப்பதையும் பார்த்திருக்கிறேன். "ஒரு புது பிறவி எடுத்ததைப்போல இருக்கிறது" என்று சொல்லக் கேட்டும் இருக்கிறேன்.

3. இந்த முறை மன நல ஆலோசகர்கள் குறிப்பிடுவது. நம்முடைய மனசாட்சிக்கு கடிதம் எழுதுவது. நாம் செய்த தவறினை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு ஒரு தாளில் எழுத வேண்டும். பிறகு இரண்டொரு முறை அதனை படித்துவிட்டு எரித்துவிட வேண்டும். இது மற்றவர் கையில் சிக்கக் கூடாது என்பது மிக முக்கியம். நமக்குத்தான் தெரியுமே இதை எதற்கு தெளிவாக எழுதிக் கொண்டு என்று சங்கேதக் குறியீடுகளாக எழுதக் கூடாது. இந்த முறையில் நம்முடைய ஆசை மனதையும் ஆழ் மனதினையும் இரண்டு வேறுபட்ட மனிதர்களாக பிரிக்கப் போகிறோம். எனவே எழுதும் போது குற்றவாளியாக இருக்கும்  நீங்கள், படிக்கும்போது ஒரு நியாயவாதியாக மாறிவிடுவதை உணர்வீர்கள். அப்போது குறியீடுகளாக செய்திகள் இருந்தால் அதனை விளங்கிக் கொள்ளவே நாம் கவனம் செலுத்த வேண்டியதாகிவிடும். இது கடிதம் எழுதும் நோக்கத்தை முழுமைபடுத்தாது. கடிதத்தின் தன்மையும் நேர்மையானதாக இருக்க வேண்டும். "தன்னேஞ்சறிவது பொய்யற்க"

சரி, செய்த தவறினை முழு மனதுடன் ஒப்புக் கொண்டாகிவிட்டது. மன்னிப்பு கேட்டாகிவிட்டது. இனி மூன்றாவது கட்டம்.

நம்மால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்துவது அடுத்த கட்டம். இதுதான் உண்மையில் நம் மனசாட்சிக்கு நாம் தரும் பதிலாகும். அவர்களின் இழப்பை சமன்படுத்தும் விதத்தில் வேறுவகையில் அவர்களுக்கு நல்லது செய்யலாம்.  பரமானந்தன் அதீத கோபப்படும் இயல்புடையவர். அதனால் மற்றவரை வார்த்தைகளால் காயப்படுத்திவிடுவார். பாதிக்கப்பட்டவர் மனது வருந்தி நொந்து செல்வதை பார்த்தபின், இயல்பு நிலைக்கு வந்து வருத்தப்படுவார். அவர்களை சமாதானம் செய்ய சில அன்பாக நடந்து கொள்வது, தேவையான உதவி செய்வது என்று முனைப்பு காட்டுவார். ஆனால் கோபத்தை குறைப்பதுதான் அவருக்கான சிறந்த தீர்வாக இருக்கும். இல்லையென்றால் எதிர்காலத்தில் அவரை முக்கியமான உறவுகள் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

நம்மால் பாதிப்படைந்தோருக்கு,  நேரடியாக பரிகாரம் செய்ய முடியாமல் போய்விட்டாலும் பொதுவான சமாதானங்களை செய்து கொள்ளலாம். சுதாவால் அவளுடைய இறந்து போன தந்தைக்கு ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறாள். இது அவளுடைய மருத்துவத் தொழிலை மீண்டும் சிறப்பாக செய்ய வைத்திருக்கிறது.

சில சமயம் நம்முடைய சூழல் திரும்ப திரும்ப தவறு செய்ய வைத்துக் கொண்டேயிருக்கும். குற்ற உணர்வு நம்முடைய வாழ்வியல் முறைகளால் வருவதாக இருந்தால், அதனை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். உயிர் கொல்லாமையை விரும்புபவர் இறைச்சி கடையில் வேலை பார்க்க முடியாதல்லவா?. நம்முடைய மனசாட்சியின் கொள்கைகளுக்கேற்ப, வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்வது நல்லது.

இத்தனையும் சரியாக, நேர்மையாக நாம் செய்திருந்தால் கடந்து சென்ற தவறினால் ஏற்பட்ட குற்ற உணர்விலிருந்து மீட்டெடுக்கும் மன்னிப்பு நமக்கு கண்டிப்பாக கிட்டும். இறுதியாக ஒரு ஆங்கில பழமொழி -  நமக்குள் தேவதைகளும் சாத்தான்களும் இருக்கின்றன. குற்றங்களை செய்யத் தூண்டுவது சாத்தான் என்றால் குற்ற உணர்வினை தருவதன் மூலம் நம்மை நேர்மையான வழியில் செல்ல வைப்பது தேவதைகள்.

மனசாட்சியை  கடவுளைப் போல என்பதைவிட குழந்தையைப் போல என்றுதான் கொள்ள வேண்டும். நம்முடைய தவறுகள் அதனை காயப்படுத்திவிடுகிறது.  வலி பொறுக்க முடியாமல் ஏற்படும் அதன் அழுகையே குற்ற உணர்வினை தோற்றுவிக்கிறது.  நாம் ஒப்புக் கொண்ட நெறிகளை கடைபிடிப்பதன் மூலம் மனதினை பராமரிக்கும் பொறுப்பு மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.
 

மனதிற்கு அபயம் அளிக்கும் மகாகவியின் வரிகள் இதோ. 

மேவி மேவி துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்குமினி அஞ்சேல்;
ஐயன் பிள்ளை(யார்) அருளால் உனக்கு நான்
அபயமிங் களித்தேன்... நெஞ்சே
நினக்கு நான் உரைத்தன நிலை நிறுத்திடவே
தீயிடை குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்
ஏதுஞ் செய்துனை இடரின்றி காப்பேன்.

எனவே குற்ற உணர்வினை அமைதியான வாழ்க்கைக்கு நம்மை கொண்டு செல்லும் வழிகாட்டியாக கொண்டு அதனை சரிவர கையாளுங்கள். ஆழ் மனதினை சந்தோஷம் கொண்டிருக்கச் செய்யுங்கள். இனி அதனை ஒரு போதும் சக்தியிழக்கச் செய்ய மாட்டேன் என்று வாக்கு கொடுங்கள். வளமாக வாழுங்கள். வாழ்த்துக்கள். 

         

23 comments:

ஆழ் மனதினை சந்தோஷம் கொண்டிருக்கச் செய்யுங்கள். இனி அதனை ஒரு போதும் சக்தியிழக்கச் செய்ய மாட்டேன் என்று வாக்கு கொடுங்கள். வளமாக வாழுங்கள். வாழ்த்துக்கள். //

பகிர்வுக்கு மிக்க நன்றி, விரிவாக எடுத்து கூறி உள்ளீர்கள்..!!!

//நம்மால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்துவது அடுத்த கட்டம். இதுதான் உண்மையில் நம் மனசாட்சிக்கு நாம் தரும் பதிலாகும். அவர்களின் இழப்பை சமன்படுத்தும் விதத்தில் வேறுவகையில் அவர்களுக்கு நல்லது செய்யலாம். //

அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.நன்றிகள். vgk

தமிழ்மணம் 2 to 3 vgk

நமக்குள் தேவதைகளும் சாத்தான்களும் இருக்கின்றன. குற்றங்களை செய்யத் தூண்டுவது சாத்தான் என்றால் குற்ற உணர்வினை தருவதன் மூலம் நம்மை நேர்மையான வழியில் செல்ல வைப்பது தேவதைகள்.

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.

மிக மிக அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
திக்கற்றோர்க்கு மட்டும் அல்ல
குற்ற உணர்வு கொண்டோருக்கும்
தெய்வமே துணை என்பதுவும் மிகச் சரி
ஏனெனில் தெய்வம் நம் குறையைத் தீர்க்கும்
என்கிற நம்பிக்கை மட்டும் அல்ல
உறுதியாக யாரிடமும் சொல்லாது என்கிற
நம்பிக்கை கடவுளை நம்புகிறவர்கள்
அனைவருக்கும் உண்டு
மனம் விட்டு ஒருமுறை அழுதுவிட்டால்
நிச்சயம் கண்ணீரோடு குற்ற உணர்வும்
நிச்சயம் கரைந்து போகும்
அருமையான அனைவருக்கும் தேவையான
பயனுள்ள பதிவை தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள் த.ம 5

குற்ற உணர்வு - அடுத்த குற்றத்தை செய்யவிடாமல் கூட தடுக்கலாம். அருமையான பதிவு.

முதல் ரெண்டு பத்திகள் சமீபத்தில் படித்த நினைவு...யோசித்து பார்த்ததில் உங்கள் கடந்த பதிவு...இனிது...தொடருங்கள்...

சிறப்பாக வழங்கிவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

தொடர் முழுதுமே மிகுந்த பயன் தரக் கூடியது.
குற்ற உணர்வையும் அதைக் கையாளும் விதத்தையும்
தெளிவாக விளக்கி எடுத்துரைத்திருக்கிறீர்கள்
மேலும் இது போல் பல பதிவுகள் தந்து எங்களை
பயனுறச் செய்ய வேண்டும்

மனோதத்துவ ரீதியாக நல்லா எழுதி இருக்கீங்க!!

தெய்வத்திடம் அழுது உரைத்தால் ... தெய்வம் வெளியெ சொல்லாது.. அல்லவா சகோ.. ஒரு வழி இதுவும் பாவமண்ணிப்பு தான் பகிர்வுக்கு நன்றி சகோ...

கருத்துரைக்கு மிக்க நன்றி திரு.மனோ.

அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//மிக்க நன்றி VGK சார்.

தங்கள் கருத்து உண்மை ரமணி சார். ஒருவர் பழனி பாத யாத்திரை சென்றார். இரண்டாம் நாளே பழக்கம் இல்லாத காரணத்தால் தளர்ந்துவிட்டார். மேலும் காலில் கல் குத்தி ரத்தம் வர ஆரம்பிக்க, அந்த வலியைவிட மனது வலித்து அழ ஆரம்பித்துவிட்டார். "கடவுள் என்னை மன்னிக்கவில்லை போலும்" என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். கூட யாத்திரை வந்தவர்கள் தேற்றிவிட, காலில் துணியை கட்டிக் கொண்டு மீதி யாத்திரையை முடித்தார். முடித்த பின் தனக்கு மன்னிப்பு கிட்டிவிட்ட நிம்மதியை உணர்வதாக கூறினார். அவர் அழ ஆரம்பித்த போதே குற்ற உணர்வு நீங்கிவிட்டதாக நான் கருதிகிறேன். நன்றி சார்

அருமையான பதிவு. //நன்றி திரு.ரமேஷ்.

இரண்டு நாள் இடைவெளி விழுந்துவிட்டதால், தொடரும் முயற்சியாக ஆரம்பித்தேன். நன்றி சகோ.ரெவேரி.

ஓரளவிற்கு சரியாக வந்துவிட்டதை தங்கள் கருத்துரை தெரிவிக்கிறது திரு.சண்முகவேல். நன்றி.

மிக்க நன்றி ராஜி.

மிகவும் மகிழ்ச்சி நன்றி திரு.சிபி.

ரமணி சாருடைய கருத்தை ஒத்திருக்கிறது. மனம் திறந்து அழுவது என்பது மனதளவில் விடுதலையின் அறிகுறி. டிஸ்கவரியில் I should not be alive என்றொரு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அட்லாண்டிக் பெருங்கடலில் நடுகடலில் சிக்கிக் கொண்ட ஸ்டீவன் என்பவரது அனுபவம். படகு உடைந்து போய், 76 நாட்கள் ஒரு மிதவையிலேயே கடலில் கழித்த அவருக்கு உதவி கிட்டாது என்று அவ நம்பிக்கை தோன்றுகிறது. அவர் கண்ணிருடன் சொல்கிறார் " நான் வாழ்ந்த கேவலாமான் வாழ்க்கைக்கு எனக்கு இந்த தண்டனை தேவைதான். இனியோரு சந்தர்ப்பம் கிடைத்தால், என்னை மாற்றிக் கொண்டு அன்பு மிக்கவனாக வாழ்வேன்". அடுத்த நளே உதவி கிட்டி காப்பாற்றப்படுகிறார், அவர் செய்த முதல் வேலை அவரால் தனித்து விடப்பட்ட பெற்றோரிடம் சென்று சேர்ந்ததுதான். உண்மையான மனமாற்றம்தான் குற்ற உணர்வின் விடுதலை அறிவிப்பு. இது போன்ற அனுபவ பகிர்வுகளை ரீடர்ஸ்டைஜெஸ்டிலும் Real life drama' வில் காணலாம்.

//மனசாட்சியை கடவுளைப் போல என்பதைவிட குழந்தையைப் போல என்றுதான் கொள்ள வேண்டும். நம்முடைய தவறுகள் அதனை காயப்படுத்திவிடுகிறது. வலி பொறுக்க முடியாமல் ஏற்படும் அதன் அழுகையே குற்ற உணர்வினை தோற்றுவிக்கிறது//

வாஸ்தவமான உவமை! குற்ற உணர்விலிருந்து விடுபடும் வழிகளின் எல்லாப் பரிமாணங்களையும் விளக்கி தெளிவுபடுத்திவிட்டீர்கள். இனி பின்பற்ற வேண்டியது ஒன்றே எங்கள் கடமை. அழகாக மனதில் பதியும்படி ஆணித்தரமாக எடுத்துரைத்தக் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி சாகம்பரி.

அழகாக மனதில் பதியும்படி ஆணித்தரமாக எடுத்துரைத்தக் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி சாகம்பரி. //மிக்க நன்றி கீதா.

நம்மால் பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்துவது அடுத்த கட்டம். இதுதான் உண்மையில் நம் மனசாட்சிக்கு நாம் தரும் பதிலாகும்/

நிறைவாய் மனம் ஏற்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.