மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்
    தன்னுடய அச்சுக் கோட்டில் சுற்றிச் சுழலும் கோள்போல் சரியாக செயலாற்றும் மனம், சில வேளைகளில்  தடுமாறிவிடும். ஒன்று எல்லாமே நன்றாக நடந்துவிட்ட போதை. இல்லை எதுவுமே சரியாக நடந்திராத சோகம்.  என்னை பொறுத்தவரை, தள்ளாடும் மனதினை சரி செய்ய இரண்டிற்கும் ஒரே தீர்வுதான் , ஒரு விடுமுறை!. எந்த தொல்லையும் இல்லாத மதிய உறக்கம் -    இது அலுவலகம் செல்லும் பெண்களுக்கான தீர்வு மட்டுமே.

    அப்படி முடிவெடுத்து, அலுவலகம் செல்லாத ஒரு மதியவேளை. பொதுவாக, மதிய நேர உறக்கமெனில் என்னுடைய வசுக்குட்டியின் அறையைத்தான் நாடுவேன் - வசு என்னுடைய பதினெட்டு வயது மகள்.  அங்குதான் ஜன்னலோர வேப்பமரம் காற்றை அனுப்பி கவிதையாய் தூங்க வைக்கும். ஆனால், இரவில் வசுக்குட்டிக்கு  பாத்தியப்பட்ட இடம் என்பதால் குடியுரிமை கிட்டாது. எனவே விடுமுறையின் உல்லாசமாக இதனை அனுபவிப்பேன். இப்போதும், கட்டிலில் படுத்து உறங்க முயற்சித்தேன். வேப்பம்பூ மணம் தேடி நாசிகள் சுவாசிக்க ஆரம்பிக்க... இமைகள் கணத்து… கண்களை மூடப்போகும் வேளையில், சட்டென அந்த வாசம் நாசியை துளைத்தது. மிக மெல்லியதாக இருந்தாலும், மனதை வருடிச் செல்லும் இதமான நறுமணம். எதுவென்று யூகிக்க முடியவில்லை. ஏனோ அடிமனதில் வலியின் ஊற்று கிளம்பியது.   அது என்றைக்கோ கண்டு பயந்த கனவின் வெளிப்பாடா அல்லது உள்ளே புதைக்கப்பட்ட மோசமான நினைவுகள் சுவாசிக்க ஆரம்பிக்கின்றனவா?

    கல் விட்டெறிந்த குளம் போல் மனம் கலைந்துபோனது. பதட்டம் ஊறியது. உடனடியாக மூலக்காரணத்தை தேடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாசனையையே  வழிகாட்டியாக கொண்டு தேடுதலை ஆரம்பித்தேன். தலையணையின் அடியில்..... கட்டில் அருகில்....  அலமாரியில்.... புத்தகங்களுக்கிடையே..... தொடர்ந்து செல்லச் செல்ல வாசத்தின் வீச்சு குறைவதை உணர்ந்து திரும்பி எதிர் திசையில் பார்த்தேன். வசுவின் மேஜை!.  மூலத்தை அறியும் முந்துதலில் மேசை இழுப்பறையை அவசரமாக இழுக்க, விசை கட்டுபாடற்றுப்போய் அது தன்னுடைய நிலையிலிருந்து கீழே விழுந்து அதன் ரகசியத்தை தரையெங்கும் கொட்டி கவிழ்த்தது. காய்ந்து வாடிப்போய்.... அழுத்தி எடுத்தால் துகளாகிவிடும் அபாயத்தில், குப்பையாக ......  மகிழம்பூக்கள்!

   தரையில் அமர்ந்து, பூக்கள் உருக்குலைந்துவிடாமல் பொறுக்கி எடுத்தேன். எஞ்சிருந்த வாசம் உச்சரித்தது. விசாக்கா....!. உள்ளிருந்து கிளம்பிய பொருமலில் தொண்டை வலித்து, கண்கள் கலங்கிவிட்டன. ஒரு பெருமூச்சு .. அது விசாலாட்சி என்கிற விசாக்காவிற்காக. 

   வாழ்க்கை என்பது ஒரு மாயப் புத்தகம். கடந்த அத்தியாயங்களின் சில பக்கங்களை எளிதாக புரட்ட முடியும் - அம்மா, பள்ளிக்கூடம், சொந்த ஊர் போன்றவை. சில பக்கங்களை அத்தனை எளிதில் புரட்ட முடிவதில்லை. அதற்கு ஒரு மந்திர சாவி தேவைப்படுகிறது. அப்படித்தான் விசாக்காவின் பக்கங்களை புரட்ட மந்திர சாவியாய் இந்த மகிழம்பூ வாசம்.

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அப்பா  ஒரு அரசாங்க அதிகாரி. அடிக்கடி மாற்றல் வந்துவிடும். அப்போது நாங்கள் சென்னையில் இருந்தோம். ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் நினைவு வர சில காரணங்கள் இருக்கும். ஒன்று வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் வரும். அல்லது பெண் பிள்ளை நெடு நெடுவென்று வளர்வதை பார்க்கும்போது ஊரோடு சேரும் தவிப்பு  வரும். பின்னதுதான், என்னுடைய தந்தையின் சொந்த ஊர் பயணத்திற்கு காரணம். வேலை மாற்றல் வாங்கிக் கொண்டு காவிரிக்கரையிலிருந்த சொந்த ஊருக்கு திரும்பினோம்.

 அது சென்னை போன்ற பெரிய ஊராக இல்லாமல் சிறிய நகரமாகியிருந்த கிராமம்.  எங்கள் வீடு, ஊருக்கு கடைசியில் இருந்தது. காவிரிக்கரைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று கொள்ளுதாத்தா காலத்திலேயே கழனியும் காடுமாக இருந்தபோது வந்துவிட்டனராம். காலப்போக்கில்  வயல்காடு, தெருவாகி... பல்கிப்  பெருகி புறநகர் பகுதியாகி இருந்தது.  இருந்தாலும், சித்தப்பா, பெரியப்பா, மாமா என்று சொந்தங்கள் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், ஒவ்வொரு வீடும் ஒரு பெரிய வீட்டின் பகுதிகள்போல் செயல்களாலும் உணர்வுகளாலும் இணைக்கப்பட்டு ஒன்றுபட்டு இயங்கி வந்தன.. எனவே, சென்னையைப் போல் சுதந்திரம் கிட்டவில்லை. "அங்கே போகாதே..",. "இப்படி ஓடாதே..", "பொம்பளப்புள்ள சத்தம்போட்டு சிரிக்கக்கூடாது.." என்ற கெடுபிடிகள். . வளர்கின்ற பெண் நல்லபடியாக  வளர்க்கப்பட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அப்பாவும் அம்மாவும் அப்படியே என் வாழ்க்கையை கையகப்படுத்தினர். சித்திரக்கதைகளில் வரும்  பெரிய ஆக்டோபஸின் கைகளுக்குள் சிக்கிக் கொண்ட நிலை என்னுடையது. அது தன் கையை விரிக்கும் அளவுதான் என் சுதந்திரம்


     இருண்ட என் வாழ்க்கையில் வெளிச்சம்போல் வந்தவள்தான் விசாக்கா...! என்னைவிட ஏழு வயது மூத்தவள்.  அவள்,  எனக்கு அத்தாச்சி முறை வேண்டும் ஆனால்... அழைக்க எளிதாக இருந்ததால் நானாகவே அக்கா சேர்த்துக் கொண்டேன்.

"ஒரே ஊரிலிருந்தால் முறை பழக்கம் எல்லாந்தெரியும். ஊரூரா சுத்தினா இப்படித்தான். அதுகள எங்க கொறை சொல்றது." அப்பாயியின் - அப்பாவின் அம்மா - புலம்பல் இது. .

  

    எங்களுக்கு நாலாவது வீட்டில் அவள் இருந்தாலும், முதன்முதலில் அவளை நான் பார்த்ததே எல்லைக் கோவில் திருவிழாவில் வைத்துதான். பட்டுப்பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிகை வைத்து, மஞ்சள் முகம் பளபளக்க, முளைப்பாரி சுமந்து சென்ற கூட்டத்தில் தேவதைபோல தெரிந்தாள். கூடியிருந்த இளம் பெண்கள் கூட்டம் அவளை தலைவியாக அங்கீகரித்து இருந்ததை அவர்களுடைய  செயல்கள் சொல்லாமல் சொல்லின.

"விசா, இத செய்யலாமா?", "இது சரியா பாருடி" கேள்விகளுக்கு விசாக்கா பதில் சொன்ன விதம் என் விழிகளை விரிய வைத்திருக்கும்போல... திரு திருவென நான் முழிப்பதை பார்த்தோ, என்னவோ என்னை நோக்கி கை நீட்டி அருகில் வருமாறு அழைத்தாள். அந்த நிமிடத்தில் இருந்து நான் விசாக்காவின் ஆறாவது விரலாக மாறிப்போனேன். அவளிடமிருந்து தேவலோக வாசனை வீசுவதாகக்கூட தோன்றியது. அவளுடைய ஆளுமை அப்படி. சும்மா தொணதொணக்கும் அப்பாயிகூட அவளிடம் மறுத்துப் பேசவில்லை.

   பதினாறு வயதினிலே ஸ்ரீதேவிபோல், விசாக்கா சத்தம்போட்டு சிரித்தாள், காதோரத்தில் ரோஜாவை சொருகியிருந்தாள், ஆடு வெட்டும் போதுகூட தயங்காமல் முன்னே நின்று பார்த்தாள். " ஏய் பொம்புளப் புள்ளைங்க எல்லாம் அந்தப்பக்கம் போ" என்று கூவிய மருளாளிகூட விசாக்காவை ஒன்றும் சொல்லவில்லை.

    வியப்பின் உச்சத்தில் நான் நின்றபோது, விசாக்கா ஒரு குதிகுதித்து வீறிட்டாள். கண்கள் நிலைகுத்த... கைகளை தலைக்குமேல் தூக்கி முறுக்கியபடி அர்த்தமில்லாத வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தாள். " ஆத்தா... மலையேறிடும்மா" என்று உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்தன. சற்று பொறுத்து மருளாளியின் விபூதி வீச்சிற்கு கட்டுப்பட்டவள்போல் மூச்சு வாங்கிக் கொண்டு சாதாரணமாகிவிட்டாள்.

"அவ மேல குல சாமி வரும்" என்ற அத்தையின் குரல் மெல்லிய பெருமையை சூடியிருந்தது.


     அவளுடைய கூச்சலில் சற்று தொலைவில் ஓடி சென்றிருந்த என்னை சகஜமாக அருகில் அழைத்துக் கொண்டாள். வினாடிக்கும் குறைவான ஒரு கால அவகாசத்தில் என்னை பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள். அவளுடைய நடிப்பிற்கு அந்த சோழ நாடே அடிமை என்பது அப்போதுதான் புரிந்தது. இது புரிந்தபின் விசாக்கா.. தேவதை ஸ்தானத்தில் இருந்து, தோழமை பொறுப்பிற்கு தகுதியாகிவிட்டாள். தைரிய தேவதையான  அவளுடைய சொல்லுக்கு மறு சொல் இல்லை. அவளை சுற்றிப் படர்ந்திருந்த சுதந்திரம் என் விருப்பமானது.

      பள்ளி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களில், தாய் கோழியின் சிறகின் அடியில் செல்லும் கோழிக்குஞ்சுபோல் அவளுடன் திரியலானேன்.  மிதிவண்டி ஓட்டுவது, துள்ளி  ஓடும் காவிரியில் துண்டு போட்டு மீன் பிடிப்பது, பசலை கீரையின் குட்டிக்குட்டி பழங்களில் உதட்டுச் சாயம் வரைவது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவள் இடும் கோலத்திற்கு செம்மன் பட்டை அடிப்பது என்று விசாக்காவின் நிழலில் என் நாட்கள் கடந்தன.


ஒரு அரை வருட பரிட்சை விடுமுறையில், மதிய வேளையில் கோழித்தூக்கம் போடும்போது, சலங்கை ஒலிக்க ஜன்னல் பக்கம் வந்து அழைத்தாள்.

"ஏய், குட்டி எந்திரிச்சு வா".

     மந்திரம் போட்டதுபோல உறக்கம் ஓடிவிட, அவளைத் தொடர்ந்தேன். "எங்கேடி போற...". அப்பாயியின் குரலுக்கு "விசாக்காகூட போறேன்" என்று கூறி விட்டு ஓடினேன். வயலைத்தாண்டி காவிரியை நெருங்கும் முன் ஒரு சிறிய தோப்பு இருக்கும். அங்கே அழைத்துப்போனாள். மதிய வேளையில் பச்சை நிறத்தில் மோகினி வருமாம் என்பதை நான் குறிப்பிட "அது ஆம்பள பசங்களத்தான் பிடிக்கும்" என்று ரகசியம் பேசி நடந்தாள். "எங்கே போறோம்" எனக்கு பதில் தராமல் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

   ஒரு குட்டையான மரம் அருகே சென்றாள். குனிந்து தரையை காட்டினாள். அழுக்கு நிறத்தில் சிறிய பூக்கள்... குவியலாக உதிர்ந்து கிடந்தன. பெரிய மரத்திற்கு சற்றும் பொருந்தாத மிகச்சிறிய பூக்கள். கையில் அள்ளி எடுத்து மூக்கருகே வைத்துக் காட்டினாள். "ம்...." அற்புதமான மணம் வீசியது. கடினமான நெடியில்லை... தலைவலிக்க வைக்கும் அழுத்தமும் இல்லை... இழுத்து சுவாசித்தபோது மனமெல்லாம் மகிழ்ந்தது. (புற விசயங்களைத் தாண்டி அக விசயமாக மனம் என்ற ஒன்று இருப்பதையே அப்போதுதான் உணர்ந்தேன்) விசாக்காவிடம் வீசிய தேவலோக வாசமும் அதுதான் என்பதும் புரிந்தது.

"மயிலம்பூ" என்றாள். காய்ந்ததும் புதிதாக உதிர்ந்துமாக கலந்திருந்த குவியலில் புது பூக்களை தேடி எடுத்தாள். நானும் முயற்சித்தேன்.

"ஏங்க்கா, கீழ இருந்து பொறுக்கற, மரத்திலேர்ந்து பறிக்காலாமே" என்றேன்.

“ஊகும், மரத்தில கொம்பேறி மூக்கண் சுருண்டு படுத்திருக்கும். கடிச்சா அவ்ளோதான். கடிபட்டவங்க பொணம் சுடுகாட்டுக்கு போறவரை மர உச்சில காத்துக் கிட்டேயிருக்குமாம்" என்றாள். பிறகு,

"பொறுக்கி வைடி, இதோ வர்றேன்" என்று காணாமல் போனாள். நொடியில் திரும்பினாள். கூடவே பிரபாண்ணாவும் வந்திருந்தான். அண்ணா என்பதும் நான் வைத்ததுதான். அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தால் நானாக அப்படி அழைத்தேன். எங்கள் சொந்தம் இல்லை என்பதும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் எனக்குத் தெரியும்.  மணிதாத்தா இறந்தபின் அவர்களது மகன் வெளிநாட்டில் இருப்பதால், இவர்களுக்கு வீட்டை விற்று விட்டதாக அப்பாயியின் புலம்பலில் தெரிந்திருந்தேன். எதற்கு புலம்ப வேண்டும்? சாதி இனம் தெரியாத வெளியாட்கள் உள்ளூரில் நடமாட அனுமதித்துவிட்டதை குறித்துதான் கவலைபட்டாள்.

   பிரபாண்ணாவும் சேர்ந்து பொறுக்கினான். மெல்லிய குரலில் கலகலத்துக் கொண்டே பேசி , மடியில் நிறைய சேர்த்தோம். சற்று பொறுத்து " போகலாமா?" என்று விசாக்கா நடக்க ஆரம்பித்தாள். மரங்களின் மறைவுவரை உடன் வந்த பிரபாண்ணா திரும்பிச் சென்றுவிட்டான்.


    வீட்டு வாசலில் மாலை வேலை முறைவாசல் தெளித்துக் கொண்டிருந்த அத்தையின் "எங்கேயடி போன?" கேள்விக்கு "குட்டிம்மா மயிலம்பூ கேட்டாள். பறிக்கப் போனேன்" என்று சொன்னாள்.

"அட, அங்க பாம்பு இருக்கும் பாப்பா, இனி தனியா போகக்கூடாது" என்ற அத்தையின்  பதில் அவள் காதில் விழுந்ததுபோல் தெரியவில்லை. கிணற்றருகில் குத்துக் கல்லில் குறுநகை தவழ அமர்ந்து கொண்டாள்

."விசாக்கா, நா எப்போ மயிலம்பூ கேட்டேன்" என்ற கேள்விக்கு, சிரித்தபடி சொன்னாள் "எங்கிட்ட ஏதோ வாசம் வீசுதுன்னு சொன்னியே. இதுதான். தேங்காண்ணேயில போட்டு தடவிக்கோ வாசம் கமக்கும்" என்றாள்.

    அவள் சொன்னது போலவே தேங்காயெண்ணெயில் போட்டு தலையில் தடவிக் கொண்டு பள்ளிக்கு சென்றபோது சுற்றியிருந்த தலைகளின் வேப்பெண்ணை வாசத்தை மறைத்து நறுமணித்து அந்த குட்டி நாட்டிற்கு ராணியாகினேன். எனக்காக வெகு தொலைவு பயணித்த விசாக்காவின் அன்பையும் மெச்சி நன்றி சொன்னேன். இது பற்றி கூறியபோது " அவள்களுக்கும் கொண்டுபோய் கொடு. உன்னை தலைல தூக்கி வச்சிடுவாங்க" என்றதுடன் நில்லாமல் அந்த சனிக்கிழமை மதியமே என்னை அழைத்துச் சென்று மயிலம்பூ பறித்து தந்தாள். கூடவே பிரபாண்ணாவும்தான். இது பின்னர் அடிக்கடி நடைபெற்றது. அனேகமாக என் தோழியர் அனைவரும் வேப்ப எண்ணெய் நாற்றத்திலிருந்து விடுபட்டார்கள். கொம்பேறி மூக்கன் மற்றும் பச்சை மோகினியின் பயத்தினால், இதில் முக்கியமான பங்களிப்பு என்னுடையதாகவே இருந்தது. இதற்காகவே எனக்கும் விசாக்காவிற்குமான பிரியத்தை அதிகரித்துக் கொண்டேன்.  அதே அளவு முயற்சியில் பிரபாண்ணாவும் இருந்ததை நான் உணரவில்லை.

    ஒருநாள்  என்றைக்குமில்லாத கலவரமாக விசாக்காவிற்கு விளக்குமாறினால் அடி விழுந்தபோது திகைத்துப்போனேன். அவள் தன் வழமை போல சாமியாடுவதையும், அனைவரும் அவள் காலில் விழுந்து வணங்குவதையும் காணும் ஆவலில் நோக்கிய எனக்கும் இரண்டு அடி கிட்டியது. பெருங்குரலெடுத்து நான் அழுததை என் அத்தையின் அழுகுரல் அமுக்கிவிட்டது.

    இரவின் அமைதியில் ரகசியமாக என்னிடம் பிரபாண்ணா பற்றி கேள்விகள் கேட்டனர். குழந்தை மொழியாக நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்டனர். "அவ தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு சொன்னேன்ல” என்ற அழுத அத்தையிடம் "விசாக்கா தைரிய தேவதையாக்கும் அவள் தப்பு செய்வாளா?" என்று கேட்டேன். தலையிலடித்துக் கொண்டு இன்னும் அழுகுரல் கூடியது.

   மறுநாளுக்கும் மறுநாள் வெள்ளிக்கிழமையன்று விசாக்காவிற்கு அவசரத் திருமண ஏற்பாடு நடந்தது. மணப்பெண்ணாக,  அழகாக என் அக்கா வருவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மணமேடைக்கு அவளை நாலு பேர் தூக்கித்தான் வந்தனர். யார் கைக்கும் அடங்காமல் துள்ளி குதித்தவளை அழுத்திப் பிடித்து தாலிகட்டப்பட்டது. "அதெல்லாம் பொறகு சரியாயிடும். மயிலம்பூ பொறுக்க போய் பச்ச மோகினி பிடிச்சிடுச்சாம்" என்று அக்காவின் புதுக்கணவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

   சரியாக, அன்றைக்கே பின்னிரவில் " விசாலி அடிப்பாவி" என்று அத்தையின் கூச்சல் கேட்டது. அதேதான்...! விசாக்கா என்றொரு தேவதையை வி
றைத்துப் போய் சிலையாக கிணற்றில் இருந்து தூக்கினார்கள். அந்த நேரத்து இருளில் சூழ நின்ற கூட்டத்தை தாண்டி பிரபாண்ணா வீட்டு மாடி  ஜன்னலை என் பார்வை வருட, நீர் சுமந்த கண்களும் கலைந்த தலையுமாக பிரபாண்ணாவின் முகம் தோன்றி மறைந்தது.

   மறுநாள் காலையில் மோகினி காவு கொண்ட விசாக்கா 'வாழ்வரசியாக' அலங்கார ரதமேறினாள். கடைசி நிமிடத்தில் நினைவு வந்து ஓடிப்போய் பெட்டியில் மிச்சம் வைத்திருந்த மகிழம்பூக்களை வாழ்க்கையின் கடைசி முறையாக பார்த்துவிட்டு அவளிடம் ஓப்படைத்தேன்.

   
  
  அதன் பின்னர் கிராமத்தில்தான் வளர்ப்பின் பாதுகாப்பு  கிட்டும் என்ற என் தந்தையின் நம்பிக்கை தளர்ந்துபோய் மறுபடியும் சென்னைக்கே வந்து விட்டோம்.  பிறகு, கொம்பேறி மூக்கனும் ,பச்சை மோகினியும், பிரபாண்ணாவும் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டாலும், கேள்விகள் மட்டும் நான் வளர வளர புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன.


    நான் மகிழம்பூ கேட்டதால்தான் அது நடந்ததா?  தைரிய தேவதையான விசாக்கா ஏன் எதிர்த்துப் போராடாமல் தன்னையே அழித்துக் கொண்டாள்? இறந்துபோனவள் ஏன் திருமணத்திற்கு முன்பே அதைச் செய்யவில்லை?   ஒரு வேளை, பழசை மறந்துவிட்டு புது வாழ்க்கை வாழமுடியும் என்று பரிட்சையில் தோல்வியுற்ற பள்ளிக் குழந்தையாக நினைத்திருப்பாளோ? நினைப்பிற்கும் நடப்பிற்குமான இடைவெளியை பின்னர் வந்த நிமிடங்கள் புரிய வைத்தனவோ? அல்லது  குடும்பத்தின் மீதான தன்னுடைய அன்பை  நிலை நாட்ட அவர்கள் மகிழ்ச்சிக்காக மணம் முடித்து, பின் வாழ்க்கையை முடித்துக் கொண்டாளா? இதெல்லாவற்றையும் விட அவளின் இறந்த முகத்தில் கப்பிக் கொண்டு  நின்ற சோகம் சொல்ல மறந்த விசயம் என்ன?


    விளக்கம் பெற முடியாத இந்தக் கேள்விகள்தான் பின்னாளில் எனக்கு பாதுகாப்பு கவசமாக ஆனது.  கொம்பேறி மூக்கன்களின் பார்வைகள் பிடிபட்டுப் போய், எல்லை தாண்டும் குழந்தைத்தனம் என்னை விட்டு வெளியேறியது.   பெற்றவர்களும் உற்றவர்களும் செய்ய முடியாத நன்மையை வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் நம்மை கடந்து போகின்றவர்கள் செய்துவிடுவார்கள். அப்படித்தான் விசாக்காவின் காலகட்டம் எனக்குள் வடு ஏற்படுத்தி சென்றது. அவளை மறந்தாலும் மறக்கமுடியாத நெறிகளை என்னுள் புதைத்துச்  சென்றது. யாருமே சொல்லித்தர முடியாத வாழ்க்கைப் பாடத்தை விசாக்கா தன் வாழ்க்கையின் மூலமாக சொல்லிச்சென்றதை என்னுள் பொதிந்து வைத்துக் கொண்டேன்.

  எங்கேயோ அடித்த கோவில் மணி நடப்பிற்கு என்னை இழுத்து வந்தது. கையில் வைத்திருந்த மகிழம்பூக்களை வெளியே சென்று கொட்டினேன். முகம் கழுவிவிட்டு . அனிச்சையாக கண்ணில் விழுந்த முடியை ஒதுக்கினேன் .... மகிழம்பூவின் வாசனை... விசாக்காவின் கதையை நினைவூட்டியது.
 


36 comments:

தமிழ்மணம் 3

பொறுமையாகப் படித்து விட்டு மீண்டும் பிறகு வருவேன். vgk

அவளை மறந்தாலும் மறக்கமுடியாத நெறிகளை என்னுள் புதைத்துச் சென்றது. யாருமே சொல்லித்தர முடியாத வாழ்க்கைப் பாடத்தை விசாக்கா தன் வாழ்க்கையின் மூலமாக சொல்லிச்சென்றதை என்னுள் பொதிந்து வைத்துக் கொண்டேன். /

மகிழம்ப்பூச்சரமாக முகிழ்த்த அருமையான அனுபவம்..
மகிழ்ம்பூவைப் பார்த்தால் இனி இதுதான் மணம் வீசி
மனம் நிறைக்கும்..

ஞாபகங்கள் அரிய பொக்கிஷம். அதிலுள்ள மனிதர்கள் நம்மை என்றேனும் பாதித்திருப்பார்கள். விசாக்கா உங்களை பாதித்த மாதிரி. பெரிய பதிவாக இருந்தாலும் - சரளமான நடை வாசிக்க தூண்டியது.

அருமையான கதை.எனக்கும் எழுதவேண்டுமென்று தோன்றுகிறது.

எப்போதுமே சின்ன வயது அனுபவங்களில் இப்படித்தான் சில சமயங்களில் வாழ்க்கையின் நெறிமுறைக்களுக்கிணங்கி நடக்கக்கூடிய பாடங்கள் கிடைக்கும். அதனாலேயே அந்த அனுபவங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து விடுகின்றன. அதை மிக அழகாக, அழகிய நடையில் எழுதியிருக்கிறீர்கள்!!

\\\தன்னுடய அச்சுக் கோட்டில் சுற்றிச் சுழலும் கோள்போல் சரியாக செயலாற்றும் மனம், சில வேளைகளில் தடுமாறிவிடும். ஒன்று எல்லாமே நன்றாக நடந்துவிட்ட போதை. இல்லை எதுவுமே சரியாக நடந்திராத சோகம். ///

\\நினைப்பிற்கும் நடப்பிற்குமான இடைவெளியை பின்னர் வந்த நிமிடங்கள் புரிய வைத்தனவோ//

\\\ பெற்றவர்களும் உற்றவர்களும் செய்ய முடியாத நன்மையை வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் நம்மை கடந்து போகின்றவர்கள் செய்துவிடுவார்கள்.///


கதையா அனுபவமா என்று பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு நயமான வாரிகளால் எழுதப்பட்டிருக்கின்றன!மிக அருமை!

அருமையான கதை
வாழ்வில் எத்தனை ஆண்டுகள் போனாலும் சில நிகழ்வுகள்
சில உறவுகள் நம் மனத்தைவிட்டு நீங்குவதே இல்லை
அதன் தொடர்புடைய ஏதோ ஒரு மனதில் பட
மனம் பழைய நினைவுகளில் பற்றி எரியத் துவங்குகிறது
கதைக்கான கருவும் சொல்லிச் செல்லும் விதமும் அருமை
வாழ்த்துக்கள்

த.ம 8

சகோதரி!
கதை அருமை! நெஞ்சைத் தொட்ட கதை!
இல்லை! நெஞ்சைத் சுட்ட கதை!

தொடர்ந்து படிக்கத் தூண்டும் கதை! அழகு மிகு உயர்ந்த நடை! நல்ல உரைநடைக் காவியம்
பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம்

சொல்வதற்கே எனக்கு வார்த்தைகள் இல்லை மேடம்.மௌனமாக இந்த சிறுகதையினுள் சற்று இருக்க விரும்புகிறேன்

அசத்தல் நடை..

நீங்கள் பதிவை வெளியிட்ட உடனே பார்த்தேன் வேலைக்கு செல்லும் அவசர்த்தில் இருந்த நான் இதை மிக ரிலாக்ஸாக படிக்க வேண்டும் என்று கருதி சிறிது ஒத்தி போட்டேன். இன்று குழந்தைக்காக வெலையில் இருந்த விடுமுறை எடுத்த நான் அவள் எழும் முன் இதை படிக்க ஆரம்பித்தேன். இந்த அமைதியான் காலை பொழுதில் படிக்க ஆரம்பித்த நான் நீங்கள் உங்கள் வசுவின் அறையைப் பற்றி சொன்னதும் நான் சிறு வயதில் மதுரையில் எஸ்.எஸ் காலனியில் உள்ள கம்பர் தெருவில் வசித்த என் வீடு ஞாபகம் வந்து விட்டது. அதில் அப்படியே சிறிது திளைத்து விட்டு மீண்டும் வெளி வந்து உங்கள் பதிவை தொடர ஆரம்பித்தேன். பதிவை தொடர்ந்த எனக்கு என் கனவு தேவதையை நீங்கள் வர்ணிக்க ஆரம்பித்தும் எனக்கு ஒரு ஷாக் இந்த் அம்மா எப்படி என் மனதில் உள்ளதை ( பட்டுப்பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிகை வைத்து, மஞ்சள் முகம் பளபளக்க,அவளிடமிருந்து தேவலோக வாசனை வீசுவதாகக்கூட தோன்றியது. அவளுடைய ஆளுமை அப்படி.பதினாறு வயதினிலே ஸ்ரீதேவிபோல், விசாக்கா சத்தம்போட்டு சிரித்தாள், காதோரத்தில் ரோஜாவை சொருகியிருந்தாள் )அப்படீயே கூறுகிறார்கள் என்று ஆச்சிரியப்பட்டேன்.

என் சிறு வயது கனவில் வந்து கொண்டிருந்த தேவதையை நீங்கள் மீண்டும் விசாக்கா முலம் கொண்டு வந்ததன் மூலம் என் வாழ்க்கை இளமைக்கு மீண்டும் திரும்பியது.

///// ஒரு குட்டையான மரம் அருகே சென்றாள். அழுக்கு நிறத்தில் சிறிய பூக்கள்... குவியலாக உதிர்ந்து கிடந்தன. பெரிய மரத்திற்கு சற்றும் பொருந்தாத மிகச்சிறிய பூக்கள். கையில் அள்ளி எடுத்து மூக்கருகே வைத்துக் காட்டினாள். "ம்...." அற்புதமான மணம் வீசியது. கடினமான நெடியில்லை... தலைவலிக்க வைக்கும் அழுத்தமும் இல்லை... இழுத்து சுவாசித்தபோது மனமெல்லாம் மகிழ்ந்தது. (புற விசயங்களைத் தாண்டி அக விசயமாக மனம் என்ற ஒன்று இருப்பதையே அப்போதுதான் உணர்ந்தேன்) விசாக்காவிடம் வீசிய தேவலோக வாசமும் அதுதான் என்பதும் புரிந்தது///

இப்போது என் மனமும் மகிழ தொடங்கியது. படிக்க படிக்க வயிரும் மனதும் குழையத் தொடங்கியது. படித்து முடித்த பின் எதையோ இழந்த சோகம் என் மனதில். இப்போது என் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு என்வென்று சொல்ல முடியாத உணர்வு தோன்றுகிறது.
உங்களின் எழுத்து எழுத்தாளர் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வரிசையில் சாகம்பரி என்ற படைப்பாளரும் சேர்ந்து உள்ளார் என்ற பெருமிதம் எனக்குள் வருகிறது.

சாகம்பரி வாழ்த்துக்கள் உங்களுக்கு

///பெற்றவர்களும் உற்றவர்களும் செய்ய முடியாத நன்மையை வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் நம்மை கடந்து போகின்றவர்கள் செய்துவிடுவார்கள். அப்படித்தான் விசாக்காவின் காலகட்டம் எனக்குள் வடு ஏற்படுத்தி சென்றது. அவளை மறந்தாலும் மறக்கமுடியாத நெறிகளை என்னுள் புதைத்துச் சென்றது. யாருமே சொல்லித்தர முடியாத வாழ்க்கைப் பாடத்தை விசாக்கா தன் வாழ்க்கையின் மூலமாக சொல்லிச்சென்றதை என்னுள் பொதிந்து வைத்துக் கொண்டேன். ///

மிக அருமையான வரிகள்.
இந்த் அனுபவங்களை அமைதியாக கண்ணை மூடி அனுபவித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன்

நல்லதொரு அருமையான தைர்யமான கதாபாத்திரமாக விளங்கியுள்ளார்கள் தங்களின் வாழ்க்கையில் அந்த தங்கள் தோழி விசாக்கா.

//மகிழம்பூவின் வாசனை... விசாக்காவின் கதையை நினைவூட்டியது.//

உங்களுக்கு மட்டுமல்ல. இதைப்படித்த எங்களுக்கும் தான்.

அனபின் சாகம்பரி, நான் சிறு கதைகள் படிப்பதில்லை. ஆனாலும இதைப் படித்தேன். சிறு வயதுச் சிறு சிறு சம்பவங்களும் ஒவ்வொரு பாடமாகவே அமைந்து விடுகிறது. மிக நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

காத்திருக்கிறேன் சார்.

@இராஜராஜேஸ்வரி ...
//மகிழம்ப்பூச்சரமாக முகிழ்த்த அருமையான அனுபவம்..
மகிழ்ம்பூவைப் பார்த்தால் இனி இதுதான் மணம் வீசி
மனம் நிறைக்கும்.. //
எனக்கும்தான். மிக்க நன்றி தோழி.

@தமிழ் உதயம்
பெரிய பதிவுதான். குறைக்கவே முடியவில்லை. சிறுகதை ஸ்பெஷலிஸ்டே நன்றாக இருந்தது என்று பாராட்டிவிட்டீர்கள். மிகவும் சந்தோசமாக உள்ளது. நன்றி .

@shanmugavel ...
நன்றி சகோ. நீங்களும் நன்றாகவே எழுதுவீர்கள். சீக்கிரம் எழுதுங்கள்.

வணக்கம் மனோ மேடம் தங்களின் கருத்து மிகவும் சரியே. பாடங்கள் தரும் அனுபவங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து விடுகின்றன. மிக்க நன்றி.

அனுபவப்பட்ட கதைதான். தாங்கள் குறிப்பிடும் சிறு சிறு கருத்துத் தூவல்களையும் உணர்ந்து எழுதப்பட்டதாகவே கொள்ளலாம். மிகவும் நன்றி திரு.நம்பிக்கை பாண்டியன்.

விசாக்கா என்றில்லை சார், இதுபோல நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையை நமக்கு பரிசாக தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த கதை ஒரு நன்றி அறிவிப்பு மட்டுமே. உங்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

@புலவர் சா இராமாநுசம்
மிகவும் மகிழ்கிறேன்.மிக்க நன்றி ஐயா.

ஓ...., மிக்க நன்றி ராஜி.

@அமைதிச்சாரல்

அசத்தல் நடை..//
மிக்க நன்றி.

மிக்க நன்றி.

மிக நீண்ட பின்னூட்டமாக பதிந்து இந்த கதையின் மதிப்பை உயர்த்திவிட்டீர்கள்.

இது அனுபவத்தை வைத்து பின்னப்பட்ட கதை என்பதால் சட்டென்று கதையின் களத்திற்குள் போகமுடிகிறது. இதுபோன்ற உள்வாங்குதல்கள் நீங்கள் குறிப்பிட்ட மதிப்பிற்குரிய தலைமுறை எழுத்தாளர்களிடம்(legends) உள்ளன என்பதையும் நான் அறிவேன். அவர்களின் எழுத்தில் இருந்த சத்தியத்தை இந்த பதிவும் வெளிப்படுத்தி இருக்கலாம். நான் என்ன சொல்கிறேன் என்றால் இத்தனை பாராட்டுதல்களும் குழந்தைத்தனமாகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட விசாக்காவிற்குதான்.

இதுபோல நிறைய மனிதர்கள் என்னை கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அத்தனை பேரை பற்றியும் எழுத முடியாது. ஆனால் விசாக்கா பற்றி எழுத முடியும் ஏனென்னில் விசாக்காவிற்காக என்னிடம் வந்து கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை. அவளை அனைவரும் மறந்துவிட்டனர். நினைவுகளின் பங்களிப்பைக்கூட தரவ மறுத்துவிட்டனர். அதுதான் எழுதுவதற்கு என்னை ரொம்பவும் தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

மதுரைத் தமிழன், மீண்டும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு பிஸியான இந்த நேரத்திலும் இதனை படித்து கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி சார்.

@வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

இது ஒரு அனுபவக் கட்டுரையாக வேண்டிய பதிவு சகோதரி. சிறுகதையாக எழுதுவதில் இன்னும் சற்று சுதந்திரம் கிட்டுவதாக உணர்ந்தேன். பாராட்டிற்கு மிக்க நன்றி.

பூங்கொத்து!

@அன்புடன் அருணா

அழகான மலர்களுக்கு மிக்க நன்றி.

கதையைவிட்டு வெளியில் வரமுடியவில்லை, சாகம்பரி. உணர்ந்து எழுதியிருப்பதால் ஆரம்பம் முதல் முடிவு வரை எழுத்தும் கருவும் கருத்தைக் கட்டிப்போட்டுவிட்டன. புரியாத வயதில் பெரியதொரு அனுபவப்பாடம்.விசாக்காவின் முடிவை இன்னும் மனம் ஏற்கத்துணியவில்லை.

எனக்கும் ஒரு கௌசி அக்கா இருந்தாள்.இப்போது எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளைப் பற்றிய நினைவுகளை மேலெழுப்பிவிட்டது இக்கதை.

உங்களுடைய கருத்து உண்மைதான். விசாக்காவினை பற்றி ஒரு பதிவிடுவதே அவளுக்கு செய்யும் நன்றி என்று தோன்றியது. மிக்க நன்றி கீதா.

மனம் கவர்ந்த கதை.அதனால்தான் உங்கள் தளத்திற்கும் மகிழம்புச்சரம் என்று வத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் பதிவு நெஞ்சைப் பிசைந்தது.

என்னுடன் பள்ளியில் கூடப் படித்தவள் இறந்து போனாள் என்று பிற்பாடு வேறு ஒரு நெருங்கிய தோழி சொல்லி தெரியவந்தது. காதல் தோல்வியாம். சொல்லொணா உணர்வுகள் ஆக்ரமித்தன. வேறு என்ன சொல்ல! இதற்கு இழுத்துக் கொண்டு ஓடிப் பொயாவது வாழலாம். :(

என்னுடைய சிறிய வயதில் மகிழம்பூ மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. அதுவும் ஒரு காரணம். மிக்க நன்றி ஆச்சி.

@Shakthiprabha .....
முதல் வருகைக்கு கருத்துரைக்கும் மிக்க நன்றி

வணக்கம் சாகம்பரி. என்னால் மறக்க முடியாத இக்கதையை வலைச்சரத்தில் கோர்க்காமல் இருப்பது சாத்தியமாகுமா :)
நன்றி :)

உங்களின் இக்கதையையும் இன்னும் சில இடுகையைப் பற்றியும்
என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.

உங்கள் பதிவு இணைத்த
எனது இடுகை