மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த சைலஜா மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த தொடர் பதிவுகள் மனிதச்சங்கிலி போல மனச்சங்கிலியால் பிணைத்து அழுத்தமாக ஒரு விசயத்தை சொல்ல வைக்கின்றன. கடலென விரியும் பதிவுகளில்  நம்முடைய கருத்தை பதிவதிலும் ஒரு மகிழ்ச்சி வரவே செய்கிறது.


இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது... இதோ வீட்டின் வாசல் கதவு தட்டப்படுகிறது. புரியாத மழலை மொழியில் என்னுடைய ஒன்றரை வயது சினேகிதன் - பக்கத்துவீட்டு சாச்சு - அழைக்கிறான். கதவை திறக்கவுமே உள்ளே வந்து அமர்ந்து கொள்கிறான். வீட்டில் வேறு யார் இருந்தாலும் உள்ளே வரமாட்டான்.  அவன் பாட்டியின் குரலையும் மறுத்துவிட்டு உள்ளே வருகிறான். இனிப்பு வகைகள், ரொட்டி எதுவுமே அவனுக்குத் தேவைப்படாது. அவனுக்குத் தேவை சில படங்கள் அவற்றை பற்றிய விளக்கங்கள். விலங்குகளின் படங்களைக் காட்டி ஒலியை நான் எழுப்பிக் காட்டவும் அவனும் செய்கிறான். சற்று பொறுத்து படத்தை சுட்டிக் காட்டி அவனாகவே ஒலியெழுப்புகிறான். கிளி உறுமுகிறது... சிங்கம் கீச்சிடுகிறது... மீண்டும் என்னை செய்ய சொல்வதுபோல் சைகை செய்ய, நான் சரியாகவே ஒலியெழுப்புகிறேன். தவறாக செய்யும் மக்குப் பையனை பார்ப்பது போல் கேலியாக என்னைப் பார்க்கிறான்.

இது அவனுடைய உலகம். நான்தான் அந்த உலகத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். இங்கு அவன் சொல்வதுதான் சரியாக இருக்கும். அடுத்த முறை அவனுடைய அலைவரிசைக்கு செல்ல முயற்சிக்கிறேன். இந்த முறை அவனுடைய கோட்பாட்டின்படி நான் சரியாக செய்துவிட்டேன்.  அடுத்த ஒரு மணி நேரம் கழித்து உறக்கம் வந்த கண்களுடன் அவன் சென்றபோது என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது. அதுதான் அவர்கள் உலகம். அந்த உலகத்திற்குள் செல்ல அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தெரிந்தால் மட்டுமே அனுமதி கிட்டும். அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும்.

அதுவும் இப்போது தொலைகாட்சியின் காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மழலையின் எண்ணங்களுடன் அவர்கள் சிந்திக்கும் வேகம் இருக்கிறதே மிக அதிகம். நீர் நிறைந்த வாளியில் விழுந்துவிட்ட ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு 'செத்துப் போயிட்டியே' என்று மூன்று வயது அம்மு அழுதபோது நானும் சோகமாக அமர வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது. அவர்களுடைய மன நிலையில் அதனை எடை போடுகிறார்கள் முடிவெடுக்கிறார்கள்.

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.

    - பள்ளி விழாவில் பாரதி வேடம் போட்ட மூன்று வயது சிறுவன் கூட்டத்தை பார்த்து பயந்து கண்களில் நீர் வழிய நின்றபோது.
    - ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் அருமையாக மழலையில் பாடிய மூன்று வயது சிறுமி சிவப்பு விளக்கு எரிந்தபோது அழ ஆரம்பித்தது.
    - கடுமையான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டில்  பல அடுக்குகளாக உடை உடுத்திக் கொண்டு பொம்மைபோல வலம் வரும் குழந்தைகள் - சொல்ல முடியாமல் சிணுங்கும்போது..
    - வீட்டில்கூட ஹக்கிஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்
    - பெரியவர்களை தவிர்த்து பொம்மைகளுடன் மட்டுமே ரகசியம் பேசி உறங்கிப் போகும் குட்டி தேவதைகள்..

மழலை உலகம் மகத்தானதுதான். அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.


துல்லியமான ஒலிகளைக்கூட உணரக்கூடிய மின்தடை ஏற்பட்ட மதியங்களில் சிலவீடுகளில் ஒலிக்கும் மழலையின் சிணுங்கல் குரல்களும் மிரட்டும் அதிகார குரல்களும் எனக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா? நம்மை விட விரைவாகவும் அழுத்தமாகவும்..... விளக்குங்களேன்.

உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள்.
 

பூஜ்ஜியங்கள் பூக்குமா? .


நான், டாமி, பொம்மி, அம்மா
குட்டிப்பாப்பா, மிட்டாய்கள்
வண்ண வண்ண பலூன்கள்..
ஏதோ ஒரு நாளில் ....
என் உலகம் கலைந்தது.
கனவு கரைய மனம் கனக்க
ஒன்றுமில்லாத வெறுமையில்
வெற்றிடத்தின் குறியீடாக
பூஜ்ஜியங்கள் பதிக்கப்பட்டன.
நாட்கள், மாதங்கள், வருடங்கள்
கடந்துவிட்ட மற்றொரு நாளில்
குட்டி தேவதையின் பரிட்சயம்
அழுகையிலும் சிரிப்பிலும்
குட்டி விண்மீன் பார்வையிலும்
என்னுள் உயிரற்று இருந்த 
பூஜ்ஜியங்கள் முளைவிட்டு
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டன.

  சைலஜா மேடம் சொல்லியபடி , இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை  அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாம்.! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்  எழுப்பலாம்.

இப்போது நான் அழைப்பவர்கள்...
குழந்தைகளுக்கான வலைப்பூ வைத்திருக்கும் சிறுவர் உலகம் காஞ்சனா மேடம்.
உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதும் கீதமஞ்சரி கீதா.
மனம் தொடும் கவிகள் எழுதும் வசந்த மண்டபம் மகேந்திரன் 


வெவ்வேறு களங்களில் சிந்தனை பதிக்கும் தோழர். சூரியஜீவா
                                                   மிக்க நன்றி!

37 comments:

தொடர் பதிவுகள் நல்லதொரு மனப்பாலம் என்பது உண்மைதான். எனக்கும் இதில் உடன்பாடுதான். குழந்தையின் அலைவரிசையில் பயணிக்கும் போது கிடைக்கும் சுகத்தையும், மழலைகள் பற்றிய உங்கள் பார்வையையும் கண்டு களி பேருவகை கொண்டேன். நல்லதொரு கட்டுரை படித்த திருப்தி சாகம்பரி. நன்றி!

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது. // உண்மை தான்..

பகிர்வுக்கு நன்றி சகோ..

அருமை அருமை
குழந்தையின் மன நிலையோடு
குழந்தைகளின் உலகிற்குள்
செல்லத் தெரிந்தவர்கள் பாக்கியவானகள்
நீங்கள் போனதுமட்டுமன்றி எங்களையும் சில நொடிகள்
அழைத்துச் சென்றமைக்கு மனமார்ந்த நன்றி
த.ம 3

அருமை. குழந்தைகளின் உலகம் அழகானது, வாழ்ந்து பார்க்க வேண்டியது என்பதால் நானும் தொடர் பதிவிடுகிறேன்.

மிகவும் அழகிய மழலைப்பதிவு. பாராட்டுக்கள்.
தமிழ்மணம்: 6
vgk

பதிவில் நிறைய விஷயங்கள் என் மனதிற்கு ஒத்த விஷயங்களாக இருக்கிறது மேடம்.

முக்கியமாக

//அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும்//

//சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது. //


//உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான்//

நல்லதொரு பகிர்விற்கு நன்றி மேடம்

வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா?

பாதி இழுத்துவிட்டதாக்வே தோன்றுகிறது.நல்ல பதிவு.

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.

//உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள்.

////<<><>>உண்மை சாகம்பரி... செல்வக்களஞ்சியங்கள் குழந்தைகள் மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்தாலும் குழந்தை இல்லா உலகம் வெற்று உலகம் தான்..நல்ல கருத்தோடு எழுதியதற்கும் என் அழைப்பை ஏற்று பதிவைத்தொடர்வதற்கும் மகிழ்ச்சி

குழந்தைகளுக்காக தொடர் பதிவு... ஒவ்வொருவரிடமும் நிறைய தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு... நல்ல பகிர்வு.... நன்றி...


நம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

அருமையான தொடர் பதிவு,
மழலைகளின்
மகத்துவத்தை
மகோன்னதத்தை
மனமும்
மதியும்
மகிழ
மகிழம்பூவாய் சரம் தொடுத்தவிதம் அருமை.

Nice.
TM 8.

மழலையின் மகத்துவத்தை
அழகாய் பகிர்ந்துகொண்டீர்கள் சகோதரி...
இங்கே என்னையும் தொடர் பதிவு
எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி...

புவனம் போற்றும் மழலை பற்றி நிச்சயமாக
எழுதுகிறேன் சகோதரி...
நன்றி.

///உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான்//

சரியாக சொன்னிர்கள் குழந்தைகள் இல்லாத இடம் சுடுகாடுதான்

நல்ல பதிவு.

//என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது//மிக சரியாக சொன்னீர்கள்
குழந்தைகள் பூ போன்றவர்கள் அவர்களது வாசம் பூக்கள் வாசனையைவிட மேன்மையானது அது அனுபவித்து பார்த்தவர்களுக்குதான் புரியும்.

உங்கள் பார்வையையும் கண்டு களி பேருவகை கொண்டேன். நல்லதொரு கட்டுரை படித்த திருப்தி சாகம்பரி. நன்றி! //
மிக்க மகிழ்ச்சி சார். நன்றி

//பகிர்வுக்கு நன்றி சகோ.. //
மிக்க நன்றி திரு.கருன்

பாராட்டிற்கு மிக்க நன்றி ரமணி சார்.

@தமிழ் உதயம்
//கண்டிப்பாக தொடருங்கள். தங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன். நன்றி திரு.ரமேஷ்.

பாராட்டிற்கு மிக்க நன்றி VGK சார்.

பதிவில் நிறைய விஷயங்கள் என் மனதிற்கு ஒத்த விஷயங்களாக இருக்கிறது மேடம்.
//மிக்க மகிழ்ச்சி ராஜி.

@இராஜராஜேஸ்வரி
//ஆமாம் தோழி. மிக்க நன்றி

தொடர் பதிவில் தொய்வில்லாமல் கை மாற்றிவிடுவது முக்கியமான பொறுப்பு என்று நினைக்கிறேன். தாங்களின் அழைப்பையும் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன். மிக்க நன்றி சைலஜா மேடம்.

பாராட்டிற்கு மிக்க நன்றி பிரகாஷ்.

கவிதைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி A.R.R சார்.

@துரைடேனியல்
முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

புவனம் போற்றும் மழலை பற்றி நிச்சயமாக
எழுதுகிறேன் சகோதரி...
நன்றி. //
மிக்க மகிழ்ச்சி சகோ. தொடர்பதிவிற்கு காத்திருக்கிறேன்

குழந்தைகள் பற்றிய தங்களின் கருத்து என்னை மகிழ்விக்கிறது மதுரை தமிழன். மிக்க நன்றி.

அருமையான பகிர்வு.

அன்பு சகோதரி,
தங்கள் அழைப்பிற்கிணங்கி தொடர்பதிவை
பதிவாக்கியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது
வந்து பாருங்கள்.

http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post_17.html

குழந்தைகள் பற்றிய உங்கள் பார்வை வெகு அசத்தல் சாகம்பரி. குழந்தைகள் இல்லாத உலகம் வெறுமையானது என்பதில் உடன்படாதவர் எவர்தான் இருக்க முடியும்? முத்தாய்ப்பாய் அமைந்த கவிதை பதிவுக்கு கிரீடம். பாராட்டுகள் சாகம்பரி. தொடர்பதிவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. விரைவில் பதிகிறேன்.

மழலையை பற்றிய பதிவை மிகவும் ரசிக்கவும் முடிந்தது.. நிறைய யோசிக்கவும் வைக்கிறது... மிக அருமையாக சொல்லிருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ!

பதிவை படிக்கும்போது மென்மையான லேசான உணர்வாயிருந்தேன்.இந்த தொடர்பதிவிற்கும் உங்களை அழைக்க முடியவில்லை,காலையிலே இந்த பதிவை படித்தேன்.பிறகு ஓடிப்போய் நான் அழைத்திருந்த 4 பேரில் கீதா அவர்களின் அழைப்பை நீக்கினேன்.

அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.
>>>
நிஜம்தான் சகோதரி, நம் நிலை விட்டு கீழிறங்கி குழந்தைகள் உலகத்துக்கு வரும்போதுதான் மகிழ்ச்சியின் எல்லையை நாம் தொட முடிகிறது. இஹ்டை தாயாக நான் உணர்கிறேன்.

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.
>>>
நிஜம்தான் சகோதரி

த ம 12

இன்று குழந்தைகள் பற்றிய தொடர்பதிவை பதிந்துள்ளேன். தங்கள் அழைப்புக்கு மீண்டும் நன்றி சாகம்பரி.