மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    அவள் 35 வயதான கிராமத்துப் பெண். நான் அவளை சந்தித்தபோது வித்தியாசமாக நடந்து கொண்டாள். நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று வினோதமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக மற்றவர் சொன்னபோது, எனக்குத் தோன்றியது ஒன்றுதான். "கருப்பை கோளாறு!". இந்த சந்தேகம் வந்தவுடனேயே வழக்கமாக நான் கேட்கும் கேள்வியை கேட்டேன். "எப்போதாவது கருக்கலைப்பு செய்திருக்கிறாளா?". ஆச்சரியமாக பார்த்துவிட்டு "ஆமாம், பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருக்கிறாள்" என்றார்கள். கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவின் மாற்றத்தின் விளைவாக இது போன்ற மனக்கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் இது கருப்பை புற்று நோய்க்கான ஆரம்பமாகவும் மாறலாம். .

       ஏதோ ஒரு காரணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வது இல்லை. சரியாக செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன.   கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளை பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாக பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. பத்து வகுப்பு வரை படித்திருந்தாலும் பள்ளி பாடத்தில் இது பற்றி குறிப்புகள் இல்லாததால் கிராமப்புறத்தில் அதிக பெண்கள் கருப்பை புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.

சரி, கிராமப்புறத்தில் இந்த காரணங்கள் உள்ளன, நகர்புறத்தில் இது பற்றி என்ன செய்தி கிட்டுகிறது?  ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வது, கருப்பைக்குள் ஏற்படும் சிறிய கட்டிகள் இவற்றை சரிவர உணராமல் போவதும் காரணமாகின்றன. மேலும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்கும்போதும், வேறு வகையான புற்று நோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுக்கும்போதும் கருப்பை புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு பரம்பரை கோளாறுகளாலும் வரும். அதிலும் குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப்பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோர் கருப்பை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.  அதிர்ச்சியூட்டும் விசயம் என்னவெனில் இது போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளை சரிவர கையாளாமல் புற்று நோய்க்கு வித்திடும் கவனக்குறைவு நகர்புறங்களிலும் அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டு விட்டால், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால் குணப்படுத்த முடியாத சிக்கல் உருவாகிவிடும். நோய் முற்றிவிட்டால், உயிரிழப்பின் சதவிகிதம் அதிகரித்துவிடும்.

முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.
இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், ஃபெலோபியன் குழாய்கள்.
மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உ-ம், பெல்விஸ் பகுதிகள்
நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.

கருப்பை கோளாறினை கண்டறிவதுதான் முதல் படி. சில குறிப்புகள் உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்றில் வீக்கம், முதுகிலும் இடுப்பிலும் வலி, சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி, சிறுநீர் பிரச்சினைகள் ஆகியன ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம். இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும். ஏனென்றால், வலியை உணர்வதும், பொறுத்துக் கொள்வதும் ஒருவருடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது. நீங்களே கவனித்திருக்கலாம், சிறிய காயத்திற்கு கூச்சல் போடுபவர்களும் உண்டு, பெரிய அடிபட்டிருந்தாலும் அமைதியாக பொறுத்துக் கொள்பவரும் உண்டு. பொதுவாகவே பெண்களுக்கு வலியை பொறுத்தமட்டில் சகிப்புத்தன்மை அதிகம் என்பதால் (பிரசவ வலியையே பொறுத்துக் கொண்ட அனுபவம்தான்...) இவற்றை எளிதில் கண்டுணர மாட்டார்கள். மேலும், குடும்ப நலத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை உணரமாட்டார்கள். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கமுடிவது இல்லை.

எனவே இந்த விசயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள்தான் அவர்களை கவனிக்க வேண்டும். உங்களுடைய மனைவியோ, அம்மாவோ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சற்று கூடுதலாக கவனம் செலுத்துங்களேன். சில குறிப்புகள் தருகிறேன். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனேயே அவர்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துவிட்டது என்று முடிவு செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அது சாதாரண கருப்பை கோளாறாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இனி உங்களால் கண்டு கொள்ளக்கூடிய அறிகுறிகளை பார்க்கலாமா?

1. கருப்பை புண்கள்தான் கட்டிகளுக்கு ஒருவிதத்தில் காரணமாகின்றன. திடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டு துடிப்பார்கள். ஓய்வெடுத்த சற்று நேரத்திலேயே சரி ஆகிவிடும். மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

2. ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படை காரணம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு மனக்கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கிறது. சிறிய விசயங்களுக்கு கவலைபடுவார்கள், சந்தேகப்படுவார்கள், குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். எப்போதும் சோர்வுற்ற மன நிலையில் இருப்பார்கள்..

3. உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் சமயத்தில் சோர்வு, வெளுத்த முகம், களைப்பு ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

4. சிலர்  மன நோயாளிபோல் நடந்து கொள்வார்கள். கூச்சலிடுவது, காரணமில்லாமல் அழுவது, சண்டைபிடிப்பது போன்றவை இருக்கும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் கருப்பை புற்று நோய் அறிகுறிகள் அல்ல. கருப்பை புற்று நோய் முன்னோடிகளான ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, கருப்பை கட்டிகளின் உருவாக்கம் ஆகியவற்றை உணர்த்தும். கவனிக்காமல்விட்டால் இவை புற்று நோய்கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் வலியுறுத்துகிறேன்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. மனித உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறுநீரகம்தான் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. அது செயலிழப்பது என்பது பல தவறுகள் மற்றும் அலட்சியம் ஆகியன காரணமாகும். அதேபோல ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம்.  அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வோம்.

சுயநலத்தின் வெளிப்படாக
எதிர்பார்த்து ஏமாற்றமுடன்
சீறலும் சினமுமாக 'அது...'
சில சமயம் காயங்களுடனும்,
சில சமயம் வலி
களுடனும்...

ஏதோ செய்து அடக்கிவிட்டு
கொல்லைப்புற இருளில்
கொட்டிலில் கட்டினேன்...
அன்பின் நித்தியத்தையும்
சத்தியத்தையும் ஓதினேன்!

கேட்கும் சக்தி இருந்தபோது
பின்னொரு நாளை எண்ணி
பணிந்து பழகி மௌனித்தது!
கூரிய நகங்களை தீட்டாமல்
அடிபட்ட காயங்களை கிளறி
வலியின் வலிமை தூண்டாமல்
அமைதியாகவே இருந்தது!

மோசமான ஒரு நொடியில்
கொட்டிலை விட்டு சென்று
சிவப்பு சிதிலங்களுடன்
என் நம்பிக்கை சிதைத்து
மீண்டும் திரும்பியது......
இப்போதும் ஏமாற்றப்பட்டேன்!

கட்டவிழ்ந்து போகும் முன்
அந்த நொடியின் நெடி மாற
பூமிக்குள் புதைந்திருக்கலாம்...
கடலலையில் மறைந்திருக்கலாம்
மேகத்தில் தொலைந்திருக்கலாம்
ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்....

பின் என்ன...? வழக்கம் போலவே.....
நெருப்பில் சுயம் எரித்து மீளும்
உபாயம் தேடி தவமிருக்கிறேன்!