மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

"ஒரு கதை சொல்லவா...." நான் கேட்க... "நேணாம்" அவன் மறுத்தான்.
"சின்ன சின்ன நாய்குட்டி பாடலாமா" ...... "நேணாம்"
"ஐஸ்கிரீம்...." வேகமாக பதில் வந்தது. "நேணா.....ம்" அவனுடைய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணம் எனக்குப் புரியவில்லை. கோபமா? அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டானா?

அவன் வினுகுட்டி , என் சினேகிதன். இரண்டு வயது. இந்த வயது நண்பர்கள் எனக்கு அதிகம், நான் வீட்டிலிருக்கும் நேரங்களில் சில் வண்டுகளாய் ரீங்கரித்து மழலை மொழியால் நிரப்பிவிடுவார்கள். மழலை மொழி, சுறுசுறுப்பான சுட்டித்தனம், விவரிக்க இயலாத கள்ளமில்லா சிரிப்பு இவற்றுடன் வினுகுட்டி, அனைவரையும்விட  என் நட்பு வட்டாரத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தான். எங்களுடைய வயது வேற்றுமையை சற்றும் மதிக்காமல் என்னை தோழியாக அங்கீகரித்து கதைகள் பேசி, பாட்டு பாடி என் வயதை குறைத்துவிட்டிருந்தான்.

எங்கள் வீட்டிற்கு அருகில் அவன் அம்மா வழி பாட்டிவீடு. வீட்டிற்கு முதல் பேரன், எனவே கவனிப்பு அதிகம். இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்காக அவன் அன்னையுடன் இங்கு வந்திருந்தான். அவன் அன்னையின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அண்டை வீட்டார்கள் அனைவரும் அவனை கவனித்துக் கொண்டோம்.  எனக்கும் அவனுக்குமான சினேகிதம் எங்கள் குடியிருப்பில் பிரசித்தி பெற்றது. காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு வருபவன் இரவு உறக்கம் வந்தபின்தான் செல்வான். ஆனால் இடையில் அவன் வீட்டிற்கு சென்று உணவருந்துவது உடை மாற்றுவது என்று தன் வேலைகளையும் கவனித்துக் கொள்வான்.

சென்ற வாரம் அவன் தாயுடனும் தன் புது தங்கையுடன் தன் வீட்டிற்கு சென்றுவிட்டான். இன்று வருவதாக கூறியிருந்தார்கள். அவனும் வந்துவிட்டான்.

வாயிற்படியின் ஓரமாக தலையை குனிந்து கொண்டு விரல் சூப்பிக் கொண்டு நின்றவனை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையை தொடங்க போராடிக் கொண்டிருக்கிறேன். "அவன் எல்லாத்தையும் மறந்துட்டானு அம்மா சொல்றாங்க." அவன் அம்மாவின் புலம்பல். எனக்கும் அப்படித்தான் தோன்றியிருந்தது.

தொலைக்காட்சியை கை காட்டி "வீ...ம்" என்றான். அது சோட்டா பீமிற்கான அழைப்பு. போகோவில் சோட்டா பீம் போடவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.  பீமை மறக்காத அவனின் நேர்மை என்னை பொறாமைக்குள்ளாக்கியது.

ஐஸ்கிரீம் அவனிடம் நீட்டப்படவும் வாங்கிக் கொண்டான். தொலைக்காட்சியிலும் அவன் கவனம் இல்லையென்று தெரிந்தது. சற்று விரைப்பாக அவன் அமர்ந்திருந்தது... என் மேல் கோபமோ என்று கேள்வியை கிளப்பியது. என் இனிய சினேகிதனின் முகத்திருப்பலை ஆச்சரியமாக அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

"ஆண்டி, அங்கே அவனுக்கு அத்தனை சினேகிதர்கள் கிடையாது. உங்களைப் போல கதை சொல்லி பாட்டு பாடி விளையாடவும் ஆளில்லை. அந்த கோபமாக இருக்கும்" வினுவின் அம்மா கூறினாள்.

அமைதியாக கழிந்த அரை மணி நேரத்தின் பின் "நாங்கள் கிளம்பறோம்" என்று வினுவை தூக்கினாள். அவனுக்காக வாங்கியிருந்த விளையாட்டுப் பொருளை அவனிடம் நீட்டினேன். இந்த முறையும் 'நேணா'மை எதிர்பார்த்தேன். கையை நீட்டி வாங்கிக் கொண்டு விரைவாக டாட்டா காட்டினான். அவனை புரிந்து கொள்ள முடியவில்லையோ என்ற ஆதங்கம் வந்தது.

வாயிற்படியை தாண்டும் முன் என் பக்கம் திரும்பி ஒரு ஆழமான பார்வை பார்த்தான். பின் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டான். "நம்மளையெல்லாம் மறந்துட்டான்" அவன் பாட்டி மீண்டும் குரல் கமற கூறினார்கள். அவர்கள் சென்ற பின்னும் எனக்கு அமைதியான சிந்தனையில்லை.

ஏனெனில், அவனுடைய பார்வை எனக்கு பரிச்சயமானது. ஓடி வரும் போது... ஜம்ப்.. என்று சொல்லிவிட்டு குதிக்கும் போது.... பந்தை துரத்தி கொண்டு வரும்போது... கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்துக் கொண்டு அடிக்கத் தயாராகும் போது... உறக்கம் கண்களில் சுழன்று இமைகள் மூடிக் கொள்ளப் போகும்போது .... இது போன்ற பார்வைகளை அவனிடம் பார்த்துள்ளேன். நீ என்னுடன் இருப்பாய்தானே.... என்ற கேள்வியும் அதனை உறுதிபடுத்தும் சத்தியமான பதிலும் எதிர்பார்த்த பார்வையது.

எனக்கு சட்டென புரிந்தது... இப்போதும் அவன் அந்த சத்தியத்தை எதிர்பார்க்கிறான். மற்றவர்களிடமும் அதையேதான் எதிர்பார்த்திருக்கிறான். அதனை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கான உலகம் மாறிவிட்ட சோகம்... அதனை மௌனமாக ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறான். இங்கே அவன் கொண்டாடிய தருணங்கள் நினைவில் மறைய நாளாகும் அதுவரை இந்த அமைதி அவனிடம் இருக்கும்.  அதுவரை அந்த அமைதி கோபம் என்றோ மறதி என்றோ தவறாக புரிந்து கொள்ளப்படும்.

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடைய பள்ளி சினேகிதியின் மௌனம் பொறாமை என்று பெயரிடப்பட்டது.  கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டு விலகிய சினேகிதியின் மௌனம் கோபம் என்று விளங்கிக் கொண்டது. திருமணம் முடிந்த என் சகோதரியின் மௌனம் புது வாழ்க்கையின் மயக்கம் என்றும் என் திருமணத்தின் பின்  என் தாயிடம் நான் கண்ட மௌனம் என்னை மறந்து போய்விட்டதாகவும் கொள்ளப்பட்டது. இது போலவே எண்ணிலடங்கா மனங்களை... சத்தியத்தை எதிர்பார்த்து நின்றவர்களை புரிந்து கொள்ளாமல்  ஏமாற்றிய ஏமாந்து போன என் தவறு எனக்கு புலப்பட்டது.

ஒவ்வொரு பிரிவும் இரண்டு பக்கமும் சில ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் விதிக்கிறது. அவை இரண்டு பக்கமும் சரியாக புரிந்து கொள்ளப்படும்போதுதான் பிரிவுகளும் மதிக்கப்படுகின்றன. இல்லையென்றால், எந்த உணர்வும் இல்லாமல் அனாதையாக சில நினைவுகள் நம் இதயத்தின் ஆழத்தில் கசடாக தங்கிப் போய்விடுகின்றன. மழை நேரத்தில் ஒண்ட இடம் தேடும் நாய்குட்டியின் விசும்பல்களாக அவை எப்போதாவது  இரத்தம் இல்லாத கீறல்களை உருவாக்கவும் செய்கின்றன.

வினுவின் பாட்டியை தேடிப் போய் சொன்னேன்."அவனுக்கு மறதியில்லை... ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மௌனமாக ஏற்றுக் கொள்கிறான். அவனை முடிந்தவரை நாம் அடிக்கடி சென்று பார்ப்போம். " என்று கூறினேன். இதுகூட ஒருவேளை அரை சத்தியத்தை காப்பாற்றுகின்ற முயற்சியாக இருக்கலாம்.


வினுவின் ஸ்பெஷல் பல்டி, ரங்கோலியில்....

ஒரு சிற்றோடை பிறந்தது
மலையரசனின் மகளானது
இயற்கை அன்னை தாலாட்டிட
எட்டி நடை போட்டு துள்ளியது!
குறுமரங்கள், செடி, கொடிகள்
கைவீசி வருடிட குறுஞ்சிரிப்பில்
மலையிலிருந்து குதித்தோடியது!

சற்றே அதன் துள்ளல் குறைந்து
சமவெளியில் அமைதியாக ஓட,
இன்னும் பல வயல்வெளிகளை
மரங்களடர்ந்த வனப்பகுதிகளை
கருணையுடன் ஈரமாக்கியது.
வேர்களின் தாகம் தணித்து
கரைகளில் பசுமை விரித்த
அழகிய ஓட்டத்தின் முடிவில்...
கை விரித்து வாரியது நீலக்கடல்!

உப்பு நீரில் கலக்கும் முன்
திரும்பிய கடைசி பார்வையில்
மலையும் தெரியவில்லை
தாலாட்டிய மரங்களும் இல்லை
சினேகமாய் ஓடியாடி வளர்ந்த
வெள்ளி மீன்கள் கூட துள்ளியோடின.
எதுவும் அதனுடன் வரவில்லை


உறவுகள் சேர்வதும் பிரிவதுமாக
நொடிகளும் யுகங்களுமாக மாறி
காலடியில் நழுவிய கணங்களில்
(வாழ்க்கை....)
கடத்தப்பட்டிருந்ததை உணர்ந்திட
நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தது.
ஆனாலும்...
எங்கேயும் தேங்கி நின்றிடாத
நிம்மதியுடன் கடலில் கலந்தது.


எதையும் தனக்கென எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே பலமாக கொண்டு, குடும்பத்தின் நலனை  தன்னுடைய உயிர் மூச்சாய் நினைத்து,  இன்றைக்கும் கலாச்சார விருட்சத்தின் ஆணிவேரில் உரமாக தன்னை பகிர்ந்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் மழை நேரத்து குளிர்காற்றையும் மண்வாசனையையும் குழைத்து 'மகளிர் தின வாழ்த்துக்களை ' இதமாக பகிர்கிறேன்.