மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


மதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம். திருமணமேடையில் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. என் அருகிலிருந்த லிசாவிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். லிசா மலையாளத்துப் பெண். மிகுந்த விருப்பத்துடன் இந்தவிழாவை காணவந்திருந்தாள்.  ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கேட்டு தெளிவுபடுதிக் கொண்டிருந்தாள்.

" சொக்கநாதர் பக்கத்தில் இருப்பது யார்?"

"மீனாட்சி..." இது நான்.
"தனியாக ஒரு அம்மன் இருக்கிறது. அதுவும் மீனாட்சி என்றீர்கள்...."
"அதுவும் மீனாட்சிதான். சொக்க நாதர் பக்கத்தில் இருப்பது பிரியாவிடை தேவி என்று சொல்வார்கள்"
"தனியா இருந்தால் மீனாட்சியம்மன், ஹஸ்பண்டோட இருந்தால் பிரியாவிடை தேவி. சரிதானே?. ஏன் அப்படி?" உண்மைதான், பிரியாவிடை தேவி ஒருபோதும் கணவனைவிட்டு பிரிவதில்லை. 

இதில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. முன்பு , இதே போன்ற கேள்வியுடன் நான் இருந்தபோது கிட்டிய பதில் நினைவிற்கு வருகிறது.

"சொக்கரு பக்கத்திலேயே இருப்பதும் மீனாட்சிதான். அவரைவிட்டு ஒரு கணமும் அகலாத சொரூபம் அது. அவர் சாப்பிட்டாரா... ஓய்வெடுத்தாரா....என்று அருகிலேயேயிருந்து அம்மாபோல பார்த்துக்கும். அது மட்டுமே பிரியாவிடையின் விருப்பம். சுவாமி கோபமாக இருந்தால் சாந்தப்படுத்துவது, அவருடைய கடமைகளில் பங்கெடுப்பது போன்றவையும் தேவி  பார்த்துக் கொள்வதால், சுவாமி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். எனவே பிரியாவிடை தேவியுடன் இருக்கும் சமயத்தில் அவரிடம் வேண்டிக்கொள்வதுதான் சரி. அதேபோல தனித்து வரும் மீனாட்சி மதுரையின் அரசிக்குரிய கடமைகளை செய்பவள். எனவே அப்போது அவளிடம் முறையிடுவதும் சரி."

எனக்கு ஒன்று புரிந்தது. அரசியாக மீனாட்சி தனித்துவம் பெற்று விளங்கினாலும், கணவனிடம் கொண்ட அன்பு , பிரியாவிடைதேவியாகவும் அவளை உருவெடுக்க வைத்துள்ளது. 

இதேபோன்ற நிறைய பிரியாவிடைகளை எனக்குத் தெரியும். அலுவலகம்  செல்லும் பரபரப்பில் புன்னகைக்க மறந்து இயந்திரமாக கிளம்பும் பல மீனாட்சிகளையும் தெரியும்.  சன்னலோர இருக்கையில் ஆசுவாசிக்கையில்..... உணவு இடைவேளையில் முதல் கவளத்தை எடுத்து உண்ணும்போது.... கோயில் கோபுரம் கண்ணில்படும்போது... எப்போதாவது தனக்கென்று கிட்டும் ஒரு நிமிட அவகாசத்தில் தன்னுடைய கணவனின் நலனை மனப்பூர்வமாக நினைத்துக் கொள்ளும் பெண்கள் அத்தனை பேருமே பிரியாவிடைகள்தான்.

எப்போதிருந்து இந்த பிரியாவிடைகள் உருவாகுகிறார்கள்? கணவன் மனைவிக்கிடையே ஒரு ஆத்மபூர்வமான உறவு ஏற்படும் போது உருவாகலாம். அதென்ன ஆத்மபூர்வம் என்று கேட்டால் உணர்தலும், புரிதலும், நெகிழ்தலும் என்பதுதான் என் பதில். (சிலருக்கு வராமலே போகலாம்.)

குடும்ப நல ஆலோசனைக்கு வரும் கணவர்களின் முக்கியமான குற்றச்சாட்டு இது "என்னை பற்றி அவள் நினைத்துகூட பார்ப்பதில்லை எப்போது பார்த்தாலும் குடும்ப நலன், வருங்கால தேவை, அதற்கான திட்டமிடல் மட்டுமே... முந்தியெல்லாம் எப்படி பேசுவாள் தெரியுமா....?".

இதுதான் நமது சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்களின் மனக்குறை. தனக்கென்று ஒரு தனிப்பட்ட விசாரிப்புகளை மனைவியிடம் எதிர்பார்க்கிறார்கள் "சாப்பிட்டீங்களா? இந்த உடை நன்றாக இருக்கிறது... ஏன், டல்லா இருக்கீங்க... உங்களுக்காக வேண்டிக்கிட்டேன்... "... அலுவலகம் கிளம்பும் முன் எடுத்துச் செல்லவேண்டியவற்றை நினைவுபடுத்துவது... அதை செய்தால் கூட இயந்திரத்தனமாக செய்வதாகவும் (அட்டிடியூட் வேணுமாம்...) குறை.  (அம்மா செய்தவற்றை மனைவியிடமும் எதிர்பார்க்கிறார்கள்)

இவை விலகலில் அடிபடையாகவும் ஆகிவிடுகின்றன. ஏன் இப்படி?

வாழ்க்கைப் பாதையில்  நம்மை கடந்து போகும் தருணங்கள்  பலவற்றை எடுத்துச் செல்கின்றன. சிலவற்றை, நாம் அசந்திருக்கும் சமயத்தில் பறி கொடுத்திருப்போம். முக்கியமில்லாத நிகழ்வுகள் என்று நாம் நினைப்பவைதான் தருவதையும் பறிப்பதையும் செய்கின்றன. சமயத்தில் இது போன்ற ஆத்மபூர்வமான உறவினையும் கூட.... அதனால் உருவாகும் பிரியாவிடைகளையும்....

ஒரு வேற்றுமை என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் கணவன் அருகில் இல்லாதபோதுதான் பிரியாவிடைகள் ஆசுவாசிக்கின்றனர். பக்கத்தில் இருக்கும்போது நிகழ்கால தேவைகளும் எதிர்கால பயங்களும் அவளை செயல்படவிடுவதில்லை. இந்த தலைகீழான நிகழ்வுகளில் பிரியாவிடைகள் சில காலம் கழித்து மூச்சடைத்து மரித்துப் போவதும்.... ஆண்கள் மனதளவில் தனிமையை உணர்வதும் நடந்துவிடுகின்றன. அப்புறம் ஆத்மார்த்தமாவது ... வெண்டக்காயாவது.... எதுவும் இருப்பதில்லை.

எவ்வளவு பெரிய இழப்பு...! எப்படி இதனை தடுக்கலாம்....  முதலிலேயே நான் குறிப்பிட்டதுபோல முக்கியமில்லாதவை என்று நினைக்கின்ற சில விசயங்களை செய்யுங்கள். அருகில் இல்லாதபோதும் அன்பிற்குரிய மனைவியை நினையுங்கள். அதை அவள் உணருமாறு செய்யுங்கள்.

உதாரணமாக... உணவருந்தும் முன் அலைப்பேசியில் அழைத்து "சாப்பிட்டாயா" என்று விசாரிக்கலாம். ஒரு குறுந்தகவல் அனுப்பலாம். பேசமுடியவில்லையென்றாலும் நம்முடைய நல்லெண்ணத் தூதுவனாக அவை செயல்படும். நினைத்தேன் நினைத்தேன் என்று சொல்வதைவிட நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்பதுதான் உயிர்பிக்கும் தன்மை உடையது. இதுபோல சின்னச்சின்ன விசயங்களை செய்யுங்கள். பிரியாவிடைகளை தொலைத்து விடாமல்... மரித்துப் போகவிடாமல்... பக்கத்திலேயே இருக்குமாறுபார்த்துக் கொள்வதில்தான் உங்கள் நலன் உள்ளது. உண்மைதானே?