மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்



இங்கே நான் குறிப்பிடும் மனிதர்களும் ஒரு வகையில் விளிம்பு நிலை மனிதர்கள்தான் (மனமுறிவின் விளிம்பில் இருப்பவர்கள்).இன்றைய உலகில் மனமுறிவு என்பதை ஒரு வியாதியாக கருதாமல், யாரும் பயணிக்கக் கூடாத  பாதை என்று கொள்ள வேண்டும். அதன் முடிவு பெரும்பாலும் இயற்கையான மரணமாக இருக்காது. இந்த விஷயத்தில் தற்கொலை என்றில்லை, விபத்து என்று அடையாளம் காணப்பட்ட சிலரின் முடிவுகூட மனமுறிவின் விளைவாக ஏற்பட்டதுவாகவே இருக்கும்.  அதனாலேயே இதனை இருபுறமும் அதலபாதாளம் நிறைந்த தனித்துவிடப்பட்ட பாதையாக உருவகிக்க வேண்டியதாகிறது.   

     இது போன்ற சம்பவங்களை உணர்வுபூர்வமாக கடக்கும் போது மனம் வலிக்க இவ்வாறு நினைத்திருக்கிறீர்களா? “இது போன்ற நிகழ்வுகள்  நடக்காமல் தடுக்க என் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.என்னால் இவர்களுக்கு உதவ முடியும்! உதவ விரும்புகிறேன்!”

      மிகவும்  நல்ல எண்ணம். எண்ணம் ஈடேற, உங்களை தகுதியாக்கிக் கொள்ள சில விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நம் கண்ணில்பட்ட அனைவரையும் நாம் சரி செய்ய முடியாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல எல்லா பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவரை அணுகவும் முடியாது என்பதையும் உணருங்கள். 


      செய்திகளாக இது போன்ற விசயங்களை கேள்விப்படும்போது நமக்குள் எழும் ஒரு வினாவை அலட்சியப்படுத்த முடியாது. ‘அந்த நபருக்கு இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உடன் இருந்த ஒருவரும் கவனிக்கவில்லையா? என்பதுதான். இது கவனக்குறைவா? புறக்கணிப்பா? நேரமின்மையா?.

      இன்றைய உலகம் செயலளவில் விரைவான உலகம்தான். ஆனால், உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்து கொண்டு மறு கோடியில் இருப்பவரை எந்த நொடியிலும் தொடர்பு கொண்டு ‘நண்பரே நலமா?’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனுப்பி உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம்!. பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட உணர்வு வருகிறது. ஏனெனில்,  நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. “உனக்கு உதவ நான் இருக்கின்றேன்!” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும் வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது.

     
       இங்கு ‘உணர்வுசூழ்உலகம்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.யாரிடம் நம்மால் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ள முடியும் என்றால், நம் மனதிற்கு அருகாமையில் இருப்பவரிடம்தான். ஒருவர் நம்மை உணர்வுபூர்வமாக பாதிக்க முடியும் என்றால், அவர்களையும் நாம் உணர்வுபூர்வமாக கையாள முடியும். உதாரணமாக,  நம் பிள்ளைகள், கணவன், மனைவி, சகோதரர்/ரி மற்றும் நண்பர்கள். எனவே உங்களுடைய உணர்வுசூழ் உலகத்தினரை அடையாளப்படுத்துங்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட       நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதுகாப்பது நம் பொறுப்பு என்று உறுதி மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்.

        சிலர் நம் அருகிலேயே இருந்தாலும் அவர்களை எளிதில் கையாள முடியாது. புரிந்துணர்வு ஏற்படாது அல்லது நாம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பமாட்டோம். ஆனால் அவர்களையும் நீங்கள் கவனம் கொள்ள விழைகிறீர்கள் என்றால் அவர்களை வேறுஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்லுங்கள் – அதாவது அவரை புரிந்து கொண்ட ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணிக்கையை பொறுத்த அளவில் உங்களால் கையாளக்கூடிய அளவு மட்டுமே இருக்கட்டும். ஒற்றை இலக்க எண்ணாக இருந்தாலும் போதும். மற்றவர்களை என்ன செய்வது? இதே போல வேறு ஒரு வட்டத்தை உருவாக்கி ஒருவரை பொறுப்பாக்கிவிடுங்கள். உதாரணமாக, அந்த காலத்தில் (அல்லது சற்று முன்பட்ட காலகட்டத்தில்) குடும்பத்தலைவர் சில குழந்தைகளயும் தலைவி சில குழந்தைகளையும் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் அருமையான புரிந்துணர்வு இருக்கும். தந்தைக்கும் தாய்க்கும் இடையேயும் புரிந்துணர்வு இருக்குமெனில் அங்கு  சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காணும் தெளிவான சூழ்நிலை இருக்கும்.

       உங்கள் பொறுப்பாக கொண்டவர்களுக்கு மனநிலை மாற்றம் ஏற்படுவதை புரிந்து கொண்டால், உங்களுக்கு தெளிவான அறிவுரை சொல்லக்கூடிய வெளிமனிதரை குறித்துக் கொள்ளுங்கள். அவர் அனுபவசாலியாக அறிவுசார் சிந்தனை உடையவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் சில சிக்கலான தருணங்களில் உணர்ச்சி சுழலில் சிக்கி, நாமும் குழம்பிப் போய்விடுவது உண்டு. (குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு இதனால்தான் ஏற்படுகிறது).


  இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அடுத்த பதிவில் சொல்கிறேன்!

13 comments:

//உனக்கு உதவ நான் இருக்கின்றேன்!” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும் வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது.//

இது மறுக்க முடியாத உண்மைதான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

தொடருங்கள்.

//ஆனால், உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்து கொண்டு மறு கோடியில் இருப்பவரை எந்த நொடியிலும் தொடர்பு கொண்டு ‘நண்பரே நலமா?’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனுப்பி உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம்!. பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட உணர்வு வருகிறது. ஏனெனில், நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. //

2-3 நாட்கள் முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. என்னுடைய நெருங்கிய உறவு பெண்மணி ஒருவர் வெளியூரிலிருந்து தொலைபேசியில் பேசினார். தனது கஷ்டங்களை அழுதுகொண்டே பகிர்ந்து கொண்டார். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர் + பொய் சொல்லுபவர் + அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடுவார் என எனக்கு இவரிடம் உள்ள முன் அனுபவங்களால் நன்றாகவே தெரியும். இருப்பினும் ஒரு மிகப்பெரிய தொகையை என்னிடம் கேட்டார். ஆகட்டும் 2-3 நாட்களில் அனுப்பி வைக்கிறேன் எனச்சொல்லி தைர்யமும் ஆறுதலும் அளித்திருந்தேன். அதுபோல நேற்று அனுப்பியும் வைத்தேன். அதன் பிறகு நேற்று என்னுடன் பேசிய அவரின் குரலில் நல்ல தெளிவு இருந்தது. ஒருவேளை நான் அவ்வாறு அனுப்பாமல் இருந்திருந்தால் பிறகு நான் வருத்தப்படும்படியாக ஏதேனும் செய்திகள் வந்திருக்கலாம்.

ஏனோ தங்களின் இந்தப்பதிவினைப் படித்ததும் இதைத்தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. அதனால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மிகவும் அருமையான பகிர்வு...

...உனக்கு உதவ நான் இருக்கின்றேன்!” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும் வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது...

நீங்க: சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை...

///நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. ///


மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை காரணம் அப்படி பகிரும் போது அதை அநேக பேர் சீரியஸாக எடுத்து கொள்வதில்லை. நம் உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பார்கள் என்று நினைத்து சொன்னால் அதை அவர்கள கேலிகுரிய விஷயமாக்க்கிவிடுகிறார்கள்

தற்கொலை பற்றி நீங்கள் எழுதும் போது நான் கல்லூரியில் படிக்கும் போது என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் மீண்டும் என் நினைவிற்கு வருகிறது.. நான் பொதுவாக என் மன உணர்வைகளையோ அல்லது பிரச்சனைகளையோ யாரிடமும் வெளிபடுத்டுவதில்லை அன்றும் சரி இன்றும் சரி. நான் கல்லுரியில் படிக்கும் போது மிகுந்த தற்கொலை செய்ய முயன்றேன் அதற்காக எளிதில் கிடைக்க கூடிய மூட்டைபூச்சி மருந்தை கூட வாங்கி வைத்துவிட்டேன் தினசரி கல்லூரிக்கு செல்வேன் ஆனால் வகுப்புக்கு செல்லாமல் கல்லூரிண் உள்ளே இருக்கும் ஹாஸ்டலில் உள்ள நண்பணின் அறையிலே தங்கிவிடுவேன் நாம் இறப்பதால் நம் பிரச்சனை தீர்ந்துவிடும் ஆனால் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அவமானங்கள் என்று பலவற்றை நினைத்து குழப்பமும் ஏற்பட்டது இப்படி பெருங் குழப்பத்தில் இருந்த எனக்கு அப்போது நான் படித்த ஒரு புத்தங்களில் உள்ள சில வரிதான் என்னை இன்னும் உயிர்வாழ வைத்து கொண்டிருக்கிறது. அந்த வரிகள் ; தற்கொலை முடிவுக்கு வந்த உன்னால் ஏதும் செய்யமுடியும் அதனால் நீ இந்த நிமிஷம் செத்துவிட்டாய் என்று நினைத்துக் கொள். உனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அதோடு முடிவுக்கு வந்துவிட்டன என நினைத்து அதன் பின் வரும் நிமிஷங்களில் நீ இப்போதுதான் பிறந்து இருக்கிறாய் இது உனது புதிய வாழ்க்கை என்று நினைத்து வாழ தொடங்கு எல்லாம் சரியாகிவிடும் என்று இருந்தது அந்த வரிகளால்தான் என் உயிர் இன்றும் இருக்கிறது.

இப்படி உயிர் பிழைத்த நான் இப்போது பதிவுகள் எழுதி பலரின் உயிரை வாங்கி கொண்டிருக்கிறேன்.

சாகம்பரி எப்படி யாரோ எழுதிய அந்த வரிகள் என் உயிரை காப்பாற்றியதோ அது போல நீங்கள் எழுதும் இந்த தொடர் நிச்சயம் யாரோ ஒரு முகம் தெரியாத உயிரை காப்பாற்றும் என்பது நிச்சயம்....


வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் தொடருங்கள்.... வாழ்க வளமுடன்

உணர்வுசூழ்உலகம்’ -- அருமையான வார்த்தைப்பிரயோகம்
மனம் கவர்ந்தது..!

வணக்கம் சார், தங்கள் கருத்துரைக்கு நன்றி.

தாங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் உங்களுடைய மனநிலையினயினை புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நலனை கருத்தில் கொள்கிறீர்கள் என்பது மிக நல்ல விசயம். தொலைதூரத்தில் இருப்பவரிடம் உடனடியாக சிக்கலை தீர்ர்க்கும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியமும் கூட. We should not take life risk chances.நன்றி சார்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.குமார்.

சாகம்பரி said...
September 13, 2014 at 2:40 PM
//வணக்கம் சார், தங்கள் கருத்துரைக்கு நன்றி.

தாங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் உங்களுடைய மனநிலையினயினை புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நலனை கருத்தில் கொள்கிறீர்கள் என்பது மிக நல்ல விசயம். தொலைதூரத்தில் இருப்பவரிடம் உடனடியாக சிக்கலை தீர்க்கும் முயற்சி எடுக்க வேண்டியது அவசியமும் கூட. We should not take life risk chances.நன்றி சார்.//

அவர்கள் பொதுவாக மிகவும் நல்லவர்களே. என்னைவிட 7-8 வயது பெரியவங்க. 4-5 வருடங்கள் முன்பு தன் கணவனை சாலை விபத்தொன்றில் பறி கொடுத்தவர்கள். 3 பிள்ளைகள் இருந்தும் ஒன்றும் சரியில்லாமல் உள்ளனர்.

திருமணம் ஆகி செளகர்யமாக இருந்த மிக அழகான அவர்களின் ஒரே பெண்ணும் [50 வயது] சமீபத்தில் ஏதோ தீர்க்கமுடியாத நோய்வாய்ப்பட்டு இறந்து போய் விட்டாள்.

தன்னிடமிருந்த கொஞ்சநஞ்ச சேமிப்புப் பணத்தையெல்லாம் பல தனியார்களுக்கு இரக்கப்பட்டு கடன் கொடுத்து, முதலுக்கே மோசமாகி கோர்ட் கேஸ் என தொங்கலில் அலைந்து வருகிறார்கள்.

இப்போது தன் உடல்நிலையும் சரியில்லாமல் ஏதேதோ கஷ்டப்பட்டு வருகிறார்கள். மொத்தத்தில் வாழ்க்கையில் விரக்தி அதிகமாகியுள்ளது. மிகவும் ரோசக்காரி வேறு.

இந்தப்பெண்மணிக்கு நான் பலமுறை பண உதவிகள் செய்துள்ளேன். ஓரளவு நியாயமாக என் பணம் எனக்குத் திரும்பவும் வந்துள்ளது. வராவிட்டாலும் போகட்டும், மேலும் கேட்க தயங்குவார்களே என்று தான் நானும் கொடுப்பது வழக்கம்.

இந்த முறை எனக்கு அவர்கள் ஃபோன் செய்தபோது மிகப்பெரிய அழுகை. நீண்ட நேரம் சமாதானம் செய்து அவர்கள் சொன்னதையெல்லாம் [பொய்யோ நிஜமோ] பொறுமையாகக் கேட்டுக்கொண்டேன்.

உதவாவிட்டால் நிச்சயம் ஏதேனும் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என என் உள்மனதுக்குத் தோன்றியது.

அதனால் மட்டுமே நிச்சயமாக உதவுவதாக வாக்குறுதி கொடுத்து, முதலில் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பிறகு சொன்னபடியே [மிகப் பெருந்தொகையை] என் வாக்கினை நிறைவேற்றியும் உள்ளேன்.

ஏதோ இதில் எனக்கு ஓர் மன நிம்மதியாக இப்போது உள்ளது. அது போதும் எனக்கு.

அன்புடன் கோபு

நன்றி மதுரைத் தமிழன் சார். எனக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு. பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது ஒரு சினிமா பாடலை கேட்டபடி சாம்பாரை அடிபிடிக்க வைத்துவிட்டேன். என் பாட்டி என்னை கேவலமாக திட்டிவிட்டார்கள். மானம் போனபின் உயிர் வாழ்வதாவென்று பினாயிலை குடித்துவிட்டேன் இல்லை முயற்சித்தேன். அதன் சுவையும் மணமும் பிடிக்காமல் ஒரு சொட்டு நாக்கில் விழவுமே துப்பிவிட்டு வாயை கொப்பளித்துவிட்டேன். என் அன்னைக்கு இந்த விசயம் தெரியவுமே கம்பெடுத்து வெளுத்து விட்டார்கள். “இனி இதுபோல் செய்வாயா?” என்று கேட்டபோது “இனி செய்யமாட்டேன்ம்மா. பினாயில் டேஸ்ட் நல்லாயில்லை” என்று சொன்னேன். என் முகபாவனையில் சிரித்துவிட்ட என் அன்னை, பிறகு கூறியதுதான் இன்றைக்கும் என் வேதவாக்கு. ‘உன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது மிக எளிதானதுதான். ஆனால் அதன் பின்பு உன்னை பற்றி மற்றவர்கள் கூறக்கூடிய கருத்துக்களை கற்பனை செய்துபார். பிறப்பை போலவே இறப்பும் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். நம் மறைவிற்கு பின்பும் யாரும் நம்மை களங்கப்படுத்தக் கூடாது. நமக்காக சிந்தக்கூடிய கண்ணீர்கூட தூய்மையானதாக இருக்க வேண்டும்”.

அதன்பின்பு எத்தனையோ பிரச்சினைகள் வந்தபோதுகூட எனக்குள் நான் சொல்லிக் கொண்டது இதுதான். ”என் வாழ்க்கை இந்த கட்டத்தில் முடிவடையக் கூடாது. (I should not stop at this point. I have to achieve more).அதற்கு இன்னும் சிறப்புகள் சேர்க்கவேண்டும். அதுவரை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது என் கடமை”. இது ஒரு வலிமையான மனபக்குவத்தை எனக்கு தந்தது.
தங்களுடைய கருத்து இந்த பதிவின் முக்கியத்துவத்தை மேன்மைமிக்கதாக்கி விட்டது. நன்றி.

தோழி ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி. ரொம்பவும் முக்கியமான வார்த்தையை குறிப்பிட்டு தங்களின் இன்வால்மெண்டை புரிய வைத்துவிட்டீர்கள்.

ஆழிசூழ் உலகு போல
உணர்வுசூழ் உலகு....
உண்மையே சகோதரி...
நாம் அனைவரும் உணர்வுகளுக்கு
உட்பட்டவர்கள்....
முன்னிலையின் உணர்வுகளை
புரிந்து செயல்பட்டால்
செயல்களெல்லாம் பொன்னாகும்...
புரிந்துணர்வில் தான் பிரச்சனைகள் விளைகின்றன...
அருமையான உளவியல் கட்டுரை சகோதரி...

//“இனி இதுபோல் செய்வாயா?” என்று கேட்டபோது “இனி செய்யமாட்டேன்ம்மா. பினாயில் டேஸ்ட் நல்லாயில்லை” என்று சொன்னேன். //

ரஸித்தேன். சிரித்தேன். குழந்தைத் தனமான குறும்பான பேச்சல்லவா !

:)