மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பகுதி இரண்டிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்..

           போன பதிவில் இடம்பெற்றிருந்த படத்தில் மஞ்சள் வர்ண கோடுகள் ஆலோசனை பிணைப்பினையும் கருநீல வண்ண கோடுகள் அறிவுரை தருவதையும் குறிக்கிறது. அறிவுரை சரியான வழிகாட்டலை பரிந்துரைக்கும். ஆலோசனை என்பது ஒருவரை கைபிடித்து வழி நடத்திச்செல்வது போன்றது இலக்கை அடையும்வரை நம் கவனம் அவர்மேல் இருக்க வேண்டும். அதற்கு மிகுந்த நேரமும் இதயபூர்வமான பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால்தான் நம்முடைய உணர்வுசூழ் உலகத்தினரை சிறிய எண்ணிக்கையில் அமைத்துகொள்ள வேண்டும். அந்த படத்தில் A,B,C அனைவருமே ஒரே  குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும் என்பதால் மூன்று வட்டத்தில் பிரித்துள்ளேன்.

        இதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  நம்மைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் நல்ல எண்ணம் நம்மிடம் இருக்குமெனில் அவர்களுடைய மனதின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் நாம் பூரணமாக தெரிந்திருக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களைஅவ்வப்போது அமைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நமக்கு கை கொடுக்கும். என்னதான் திறமைசாலியாக அனுபவசாலியாக இருந்தாலும், படகினை தயார் செய்து வைத்திருப்பவரால் மட்டுமே வெள்ளம் பெருகும் நிலையில் படகினை பாதுகாப்பாக செலுத்த முடியும், மற்றவர்களை காப்பாற்றவும் முடியும்.

இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் எதிர்மறை மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அப்போதுதான் சரியான வழிகளை கையாள முடியும் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். உணர்வுசார் மனபோராட்டம்-EMOTIONAL CONFLICT, நெறிசார் மனப்போராட்டம்- ETHICAL CONFLICT,  நெறிசார் இரண்டக நிலை - ETHICAL DILEMMA.  (இவை அனைத்துமே மனோவியல் ஆராய்ச்சிகளில் இருக்கும் புதிய வார்த்தைகள் எனவே தமிழாக்கம் என்னுடைய முயற்சி).  அனைத்து விதமான உளவியல் பிரச்சினைகளுக்கும் இவையே அடிப்படை. இனி விரிவாக காண்போம்.


உணர்வுசார் மனபோராட்டம்-EMOTIONAL CONFLICT

     இதன் அடிப்படையானது முரண்பாடான உணர்வுகளின் மோதல் ஆகும். முரண்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் கட்டுப்பாடிழந்த நிலை. ஒன்று எதிரியை அழிக்க நினைக்கும் அல்லது தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும். மிக முக்கியமாக தன்னை பற்றிய சிந்தனையே மேலோங்கி நிற்கும். எந்த ஒரு விசயத்தையும் உள்வாங்கும்போது அதனை புரிந்துக் கொள்ளும் முறைதான் நமக்குள் ஏற்படும் உணர்வுகளும் அதன் வெளிப்பாடுகளும்.  உணர்வுகளை இரண்டு தூண்டுதல்கள் ஏற்படுத்துகின்றன. அவை சுயம்சார்ந்த தேவைகள்(wantself), கடமைசார்ந்த தேவைகள் (shouldself) ஆகும். உதாரணமாக, முக்கியமான அலுவலகத் தேர்விற்கான கேள்வித்தாள் உங்கள் கையில் தேர்விற்கு முதல் நாளே கிட்டிவிடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் சுயம் சார்ந்த முடிவு எனில் அதனை பயன்படுத்திக் கொள்வீர்கள். கடமை சார்ந்த முடிவு எனில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்கள். விருப்பங்களானது சுயம் சார்ந்த முடிவினையும், நெறி முறைகளானது கடமை சார்ந்த முடிவினையும் தருகின்றன.

     மிக அதிகமான தற்கொலை சம்பவங்கள் மற்றும் முயற்சிகளுக்கு இந்த எதிர்மறை காரணியே அடிப்படையாகிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கலுக்கு தீர்வானது,நம் விருப்பத்திற்கு எதிரானதாக (Conflict of interest) இருந்தால் மனப்போராட்டம் அதிகரிக்கும். எண்ண ஓட்டத்தினையையும் சிந்தனையையும் மிக விரைவாக பாதிக்கும். கடந்துபோன தோல்விகளை நினைவூட்டி தடுமாற வைக்கும் இனி அவ்வளவுதான் என்று இயலாமையை நம் மனதில் பதிக்கும். சில சமயம் ஆற்றாமையின் விளைவாக கோபத்தை அதிகரித்து, பழிவாங்கும் உணர்வை தூண்டும். அதிலும் எதிராளி தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லது பழிக்கு பயந்தவன் என்றால், தற்கொலை முடிவை எடுக்க வைக்கும். தன்னுடைய மரணத்தால் எதிரி மனநிம்மதியிழந்து தவிப்பது போன்ற கற்பனை காட்சிகள் தோன்றி, வக்கிரத்தன்மையினை  அதிகரிக்க வைத்து உறுதியான முடிவிற்கு வழிதேடும். சரியான வழிக்காட்டுதல் இல்லையெனில் சுயபரிதாபமும் பச்சாதாபமும் அதிகரித்து தவறான முடிவிற்கு தள்ளிவிடும். இது போன்ற நிலையில் மரணத்தின் எல்லைவரை செல்லும் வரை தனக்கு நடக்கப்போகும் பாதிப்புகளை அறிய முடியாத மாயை உருவாகிவிடும். கடைசி நொடியில் தன்னை காப்பாற்றுமாறு கதறும் சம்பவங்கள் இப்படித்தான் நடக்கிறது ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்பட்டாலும் அதன் தாக்கம் நீண்ட  நாட்கள் அவர்களிடம் இருக்கும் சிலசமயம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் நடப்பது உண்டு.

 இது போன்ற நிலையில் நம் உணர்வுசூழ் உலகத்தினர் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகபாவனைகள், நடத்தைகள் காட்டிக் கொடுத்துவிடும்.அவ்வாறெனில்,
1. அன்பும் கனிவும் கொண்டு விசாரியுங்கள். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிக முக்கியமான விசயமாக கையிலெடுங்கள்.

2. ஒருவர் உணர்வுகளின் திடீர் தாக்குதலில் உள்ளார் எனில் அது மூளையையோ, இதயத்தையோ அல்லது வயிற்றில் அமில சுரப்பையோ அதிகரிக்கும் முதல் இரண்டு விசயத்தில் மயக்கமடைவதும், நெஞ்சு வலிப்பதும் ஏற்படலாம். அப்போது மரணபயம் தானாகவே தோன்றிவிடும். அந்த சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சி தானாகவே தொடங்கிவிடும். எனவே கோபம், வேதனை, கலக்கம் போன்ற உணர்வுகள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

3. ஆனால், வயிற்றில் அமில சுரப்பு அதிகரித்தால், தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். எனவே முதலில் இதனை சரி செய்ய வேண்டும். ஜில்லென்று குடிக்கக்கூடிய பக்குவத்தில் சாத்துக்குடி( நன்கு பழுத்தது) சாறு இனிப்பு சற்று அதிகம் சேர்த்து தரலாம். குளிர்ந்த பால் தரலாம் ரொம்பவும் சூடாக இல்லாமல் சாக்லேட் கலந்த பானம் (Health drinks) தரலாம். காபி, போதை பானங்கள், கார்ப்னேட்டட் குளிர் பானங்கள், மசாலா அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை அமிலசுரப்பினை அதிகரிக்கக்கூடியவை

4. இதன்பின் அவர்கள் உடலளவில் நிதானத்திற்கு வருவதை கண்கூடாக பார்க்கலாம்.  நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு சென்று அமைதியாக இருங்கள். அவராக உரையாடலை தொடர வாய்ப்புள்ளது. அவர் பேசும்போது குறுக்கிட்டாமல், முழு மனதுடன் கவனமாக கேளுங்கள்.

5.  நீங்கள் பேசும்போது, தயவு செய்து அவர்களின் தவறினை சுட்டிக்காட்டாதீர்கள். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல. அவர்கள் உணர்வுசார் மனப்போராட்டத்தில் இருந்தார்களெனில், மற்றவர்களின் வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்.

6. அவரின் சிறப்புகளை எடுத்தியம்பி புகழவும் வேண்டாம் ஏனெனில் தற்கொலை முடிவு என்பது தன்னுடைய தகுதிக்கு ஏற்ற நிலை கிட்டவில்லை, மறுக்கப்பட்டது என்ற ஆதங்கத்தின் விளைவாகவும் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் தன்னை பற்றிய உயர்வான அபிப்ராயம்(High self esteem) உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

7. அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்துங்கள். வாழ்ந்து ஜெயிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். இடமாற்றம் செய்வது மிக நல்லது. எதிர்மறை காரணிகளிலிருந்தும் தோல்வியின் தாக்கத்திலிருந்தும் வெளிக்கொணரும்.

8.   குறிப்பிட்ட மனநிலையிலிருந்து அந்த நொடி அவரை வெளிக் கொணர்வதே மிக முக்கியம் பிறகு அவர் நிதானத்திற்கு வந்த பின் சுயமாக நல்ல படியாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்.

9.        சூழ்நிலையினை (if needed) அனுசரித்து Counslingற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

10. தங்களுடைய உலகினை முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து புதிய பார்வையில் பார்க்க உதவுங்கள். 


உதாரணங்கள் – காதல் தோல்வி, தேர்வு தோல்வி, தொழில் நஷ்டம்,  – ஏனெனில், இவையனைத்தும் மற்றவர்களால்  தமக்கு நேர்ந்தவைகளாக எண்ணிக் கொள்வர். தராசு தட்டு  இந்த விசயத்தில் எதிரி பக்கம் சாயாது.


இன்னும் தொடரும்... இங்கே நான் குறிப்பிடும் மனிதர்களும் ஒரு வகையில் விளிம்பு நிலை மனிதர்கள்தான் (மனமுறிவின் விளிம்பில் இருப்பவர்கள்).இன்றைய உலகில் மனமுறிவு என்பதை ஒரு வியாதியாக கருதாமல், யாரும் பயணிக்கக் கூடாத  பாதை என்று கொள்ள வேண்டும். அதன் முடிவு பெரும்பாலும் இயற்கையான மரணமாக இருக்காது. இந்த விஷயத்தில் தற்கொலை என்றில்லை, விபத்து என்று அடையாளம் காணப்பட்ட சிலரின் முடிவுகூட மனமுறிவின் விளைவாக ஏற்பட்டதுவாகவே இருக்கும்.  அதனாலேயே இதனை இருபுறமும் அதலபாதாளம் நிறைந்த தனித்துவிடப்பட்ட பாதையாக உருவகிக்க வேண்டியதாகிறது.   

     இது போன்ற சம்பவங்களை உணர்வுபூர்வமாக கடக்கும் போது மனம் வலிக்க இவ்வாறு நினைத்திருக்கிறீர்களா? “இது போன்ற நிகழ்வுகள்  நடக்காமல் தடுக்க என் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும்.என்னால் இவர்களுக்கு உதவ முடியும்! உதவ விரும்புகிறேன்!”

      மிகவும்  நல்ல எண்ணம். எண்ணம் ஈடேற, உங்களை தகுதியாக்கிக் கொள்ள சில விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நம் கண்ணில்பட்ட அனைவரையும் நாம் சரி செய்ய முடியாது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல எல்லா பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவரை அணுகவும் முடியாது என்பதையும் உணருங்கள். 


      செய்திகளாக இது போன்ற விசயங்களை கேள்விப்படும்போது நமக்குள் எழும் ஒரு வினாவை அலட்சியப்படுத்த முடியாது. ‘அந்த நபருக்கு இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உடன் இருந்த ஒருவரும் கவனிக்கவில்லையா? என்பதுதான். இது கவனக்குறைவா? புறக்கணிப்பா? நேரமின்மையா?.

      இன்றைய உலகம் செயலளவில் விரைவான உலகம்தான். ஆனால், உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்து கொண்டு மறு கோடியில் இருப்பவரை எந்த நொடியிலும் தொடர்பு கொண்டு ‘நண்பரே நலமா?’ என்று கேட்கவும், எமோட்டிஸ் அனுப்பி உற்சாகப்படுத்தவும் முடிகின்ற அருமையான தகவல் தொடர்புகள் உள்ள இந்த காலத்தில் ஒரே நாளில் எத்தனை பேருடன் தொடர்பு கொள்கிறோம்!. பிறகு, எப்படி இந்த தனித்துவிடப்பட்ட உணர்வு வருகிறது. ஏனெனில்,  நம்மால் சிரிப்பை பகிர்ந்து கொள்ளமுடிகின்ற அளவிற்கு மனதை பாதிக்கும் உணர்வுகளை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனால் சிக்கலில் முழுபரிமாணமும் வெளிப்படுத்தப்படுவதில்லை. “உனக்கு உதவ நான் இருக்கின்றேன்!” என்ற விஷயத்தை பார்வையினாலும் உடல் மொழியினாலும் வெளிப்படுத்த முடிகின்ற அளவிற்கு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ செய்ய முடிவதில்லை. எனவே நம்முடைய எல்லை வரையறுக்கப்பட்டதாகிறது.

     
       இங்கு ‘உணர்வுசூழ்உலகம்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.யாரிடம் நம்மால் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ள முடியும் என்றால், நம் மனதிற்கு அருகாமையில் இருப்பவரிடம்தான். ஒருவர் நம்மை உணர்வுபூர்வமாக பாதிக்க முடியும் என்றால், அவர்களையும் நாம் உணர்வுபூர்வமாக கையாள முடியும். உதாரணமாக,  நம் பிள்ளைகள், கணவன், மனைவி, சகோதரர்/ரி மற்றும் நண்பர்கள். எனவே உங்களுடைய உணர்வுசூழ் உலகத்தினரை அடையாளப்படுத்துங்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட       நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதுகாப்பது நம் பொறுப்பு என்று உறுதி மொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்.

        சிலர் நம் அருகிலேயே இருந்தாலும் அவர்களை எளிதில் கையாள முடியாது. புரிந்துணர்வு ஏற்படாது அல்லது நாம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பமாட்டோம். ஆனால் அவர்களையும் நீங்கள் கவனம் கொள்ள விழைகிறீர்கள் என்றால் அவர்களை வேறுஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்லுங்கள் – அதாவது அவரை புரிந்து கொண்ட ஒருவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணிக்கையை பொறுத்த அளவில் உங்களால் கையாளக்கூடிய அளவு மட்டுமே இருக்கட்டும். ஒற்றை இலக்க எண்ணாக இருந்தாலும் போதும். மற்றவர்களை என்ன செய்வது? இதே போல வேறு ஒரு வட்டத்தை உருவாக்கி ஒருவரை பொறுப்பாக்கிவிடுங்கள். உதாரணமாக, அந்த காலத்தில் (அல்லது சற்று முன்பட்ட காலகட்டத்தில்) குடும்பத்தலைவர் சில குழந்தைகளயும் தலைவி சில குழந்தைகளையும் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் அருமையான புரிந்துணர்வு இருக்கும். தந்தைக்கும் தாய்க்கும் இடையேயும் புரிந்துணர்வு இருக்குமெனில் அங்கு  சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காணும் தெளிவான சூழ்நிலை இருக்கும்.

       உங்கள் பொறுப்பாக கொண்டவர்களுக்கு மனநிலை மாற்றம் ஏற்படுவதை புரிந்து கொண்டால், உங்களுக்கு தெளிவான அறிவுரை சொல்லக்கூடிய வெளிமனிதரை குறித்துக் கொள்ளுங்கள். அவர் அனுபவசாலியாக அறிவுசார் சிந்தனை உடையவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில் சில சிக்கலான தருணங்களில் உணர்ச்சி சுழலில் சிக்கி, நாமும் குழம்பிப் போய்விடுவது உண்டு. (குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு இதனால்தான் ஏற்படுகிறது).


  இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அடுத்த பதிவில் சொல்கிறேன்!


வணக்கம். மகிழம்பூச்சரத்தினை தொடரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.   என்னுடைய ஆராய்ச்சி பணி இன்னும் முடிவுறவில்லை. மனித மனங்களுடைய ஆழத்தில் புதைந்து அவர்களை பாதிக்கும் மன இயல்புகளை சரி செய்யும் வழியை காண முயற்சிக்கிறேன்.  விடை இன்னும் எட்டமுடியாத ஆழத்தில் இருக்கிறது. அதனை முடித்துவிட்டு பதிவுகளை தொடரலாம் என்று எண்ணினேன். அதற்குள்ளாக உங்களிடம் சில மனோவியல் உண்மைகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது ஒரு தொடராக இருக்கட்டும். இந்த பதிவு யாருக்கெல்லாம் பயன்படும்? இதனை எழுத என்னை தூண்டிய நிகழ்வுகள் எவை என்று சொல்ல விரும்புகிறேன்.


      முதலில் சில செய்திகளையும் கவனம் கொள்ள விழைகிறேன். வேலைக்கு வந்துவிட்டு காலை பத்து மணிக்கே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்... இருசக்கர வாகனத்தில் வந்து இரயில் பாதையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று ரயில் முன் பாய்ந்து இறந்த ஆண்... ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென ரயில் முன் பாய்ந்தது... சில நொடி இடைவெளியில் கிடைத்த தனிமையில் வீட்டிற்குள்ளேயே தற்கொலை முடிவை எடுத்தவர்கள்.... தேர்வு முடிவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட இளம் பிராயத்தினர்....

இந்த சம்பவங்களில் நாம் முதல் பார்வையில் நினைப்பது என்னவென்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு அந்த நொடியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான். ‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாக முடிவெடுக்கப்பட்ட அந்த கடைசி நொடியில் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், ஏற்கனவே பயத்தினாலோ... துக்கத்தினாலோ... தொடர் தோல்விகளினாலோ...  மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ‘பீலிபெய் சாக்காடும்’ நிலையில் இருப்பதால் சூழ்நிலையில் ஏற்படும் மிக சிறிய விருப்பத்தகாத சம்பவங்கள் கூட காலனின் கொடும் வாளாக மாறிவிடுகின்றன.இன்னும் ஒரு விசயத்தையும் பகிர விரும்புகிறேன்.  ‘உலகம் ஒரு சிறிய கிராமம்’ ஆகிவிட்ட இந்த தகவல் தொடர்பு காலத்தில்  பல புதிய மனிதர்களை நாம் கவனிக்க (சந்திக்க அல்ல) நேரிடுகிறது.  பல்வேறு தரப்பை சார்ந்த மக்கள்-  மொழி,இனம்,மதம் மற்றும் ஊர் இவற்றால் வேறுபட்டவர்கள் நம் சூழ்புறத்தின் புதிய அடையாளமாகின்றனர்.   ஒவ்வொரு முறையும் இது போன்று புதிய சூழல் வரும்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட நம்முடைய மனஇயல்புகள்தான் உதவுகின்றன.  நம்முடைய பார்வையின் கோணத்தை தீர்மானிப்பதும் இவைதான்.  மிக சமீபமாக என்னுடைய கவனத்தை இழுத்து முடிவில் ஒரு கேள்விக்களத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தும் ஒரே விசயம்... ஒரு ரயில் அல்லது பேருந்து பயணத்திலோ... பாதையோர நடை பழக்கத்திலோ நான் சந்திக்கின்ற குறிப்பிட்ட சில முகங்கள் – இறுக்கம் நிறைந்த... சிந்தனை வயப்பட்ட...  சிரிக்க மறந்த முகங்கள். ஏதோ ஒரு கணத்தில் வெடித்து தன்னைத்தானே அழித்துக் கொள்ள காத்திருக்கும் வெடிகுண்டுகள் போல சிலர்... (இதில் துள்ளித்திரியும் பருவத்தில் உள்ள சிறு வயதினரும் அடக்கம்).


    முதலில் நான் குறிப்பிட்ட செய்திகளுக்கும்  இப்போது நான் குறிப்பிடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? மாற்றம் எதுவுமே நிகழாதபட்சத்தில் நாளைய செய்திகளாகப் போகும் இன்றைய மனிதர்கள் அவர்கள்.  இன்றைய செய்திகள் ஏதோ ஒரு வகையில் நாளை நிகழவிருக்கும் தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டுகோளாகவும் அமைகின்றன. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது உண்மை. ஆனால் ஒரு இறப்பு சக மனிதர்களிடம் கேள்விகளையும் குற்ற உணர்வுகளையும் பதிந்து செல்லக்கூடாது.  ‘அது ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம் இதுவாகவே இருக்க வேண்டும்.  அதுவே மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும்.      புலிக்கும், நாய்க்கும், குருவிக்கும் பாதுகாப்பு தேடும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பெருகி வரும் இந்த காலத்தில், நம்மை சுற்றியிக்கும்  வலுவிழந்த  உணர்வு சூழ் உலகத்தை மனோ பலம் மிக்கதாக ஆக்க வேண்டுமல்லவா?.  இதில் சக மனிதர்களாகிய நாம் ஏதாவது செய்ய முடியுமா?. செய்ய முடியும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த பதிவுகள் உதவும். - அடுத்த பதிவில் நம்மை அறிந்து கொள்வோம்..