மருத்துவ ரீதியாகவும் , மனோவியல் ரீதியாகவும் மனிதர்களை அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கலாம். தாவரவகை, மிருக வகை மற்றும் கனிம வகை மனிதர்கள் (Plant, animal, mineral). ஒருவரின் குணாதிசயம்தான் நோய்க்கு காரணமாகிறது. அதை புரிந்து கொண்டால்தான் சரியான மருந்து கொடுக்கமுடியும். அவரவர் வகைக்கு ஏற்ற மருந்தை பயன்படுத்துவதே வியாதியை குணப்படுத்தும். ( நம்முடைய பழங்கால முறைப்படிகூட அகஸ்தியர் மூலிகை மருந்துகளையும், புலிப்பாணி மிருகங்களிலிருந்து மருந்துகளையும் - இரத்தம் குடிக்கும் அட்டைகூட மருந்துதான், போகர் கனிம வகையில் மருந்துகளையும் தயாரிக்கும் ரகசியங்களை கொண்டிருந்ததாக படித்திருக்கிறேன்.)
நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் பழிசுமத்துகிறார் என்று கொள்வோம். இதற்கு பதிலாக - ஒன்று .நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் வருந்தி நமக்குள்ளேயே குமைந்து போவோம். இரண்டு, கோபமாக மறுதலித்து அவர்களை மீது மேலும் சில பழிகளை நம் பங்கிற்கு திருப்பிவிடுவோம். என்னை அவமதித்தற்கு பதிலடி என்பதன் விளைவு இது. மூன்றாவதாக பொறுமையாக அதனை விளக்க முற்படுவோம். நம்மை யாரும் தவறாக நினைக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்பின் விளைவு இது மூன்றில் ஏதாவது ஒன்று நம்முடைய எதிர் செயலாக இருக்கும். பொதுவான ஒரு சூழ்நிலையை மூன்று விதமாக எதிர் நோக்குவது புரிகிறது அல்லவா?. இதுதான் முறையே தாவரவகை, மிருகவகை, கனிம வகை மனிதர்களின் செயல்பாடாக இருக்கும்.
இப்போது நம்முடைய பதிவிற்கு வருவோம். மனிதர்களை விட்டு விலக்க முடியாமலும், முன்னேற்றம் கை விட்டு நழுவுவதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஒரு மன உளைச்சலில் சிக்கினால் நாம் தாவர வகை. உறவுகளையும் , முன்னேற்றத்தையும் விட்டுகொடுக்கும் முறைகளை பின்பற்றி தக்க வைத்துக் கொண்டால், கட்டுக்கோப்பாக வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் கனிம வகை மனிதர்களாவோம். எதையும் கண்டுகொள்ளாமல், தன் முன்னேற்றமே குறியாக சுய நலமாக செயல் பட்டால் அவர் மிருக வகை. பணம் இருந்தால் போதும் அத்தனையும் அடைந்து விடலாம் என்பார்கள். ( அம்மா, அப்பாவைத் தவிர அனைத்தையும் வாங்கி விடலாம் என்றுகூட சொல்லுவார்கள்.)
இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், நீங்கள் எந்த வகை என்று புரிந்து அது போல முடிவெடுங்கள். உதாரணமாக தாவர வகையாக இருந்தால், கண்டிப்பாக உறவுகளை விட்டுப் பிரிந்து ஒரு வாழ்க்கையை விரும்பமாட்டீர்கள், தனிப்பட்ட அடையாளத்தை அடைய முடியாது. கனிம வகையாக இருந்தால் சமன் செய்ய முயற்சிப்பீர்கள்(negotiations), குடும்பத்தையும், தனி மனித முன்னேற்றத்தையும் பாலன்ஸ் செய்ய முயற்சிக்கலாம். இரண்டில் ஒன்று என்பது மன உளைச்சலைத் தரும். . மிருக வகை என்றால் சாதனை மனிதர்களாவீர்கள், சாதிக்கவிட்டால்தான் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
இப்போது மற்றவர்களுடன் நம்மை ஒப்பு நோக்கி ஒரு முடிவெடுப்பது தவறு என்று புரிகிறதல்லவா? நமக்கு ஏற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மன அழுத்தத்தை தவிர்த்து நிம்மதி என்னும் தென்றல் மனதிற்குள்ளேயும் வீசி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.