மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இது மிகவும் முக்கியமான விசயமாக இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன். .

அவர்கள் அனைவரும் இரண்டிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். பெரும்பாலும் அவர்கள் சுட்டித்தனமான குழந்தைகள். துருதுருவென இருக்கிறார்கள். பளுமிக்க பொருளை இழுப்பதை பார்க்கும்போது  அதிக வலு இருக்கிறதும் தெரிகிறது. ஒரு பட்டாம் பூச்சியின் பரபரப்பு தெரிகிறது. அறிவு கூர்மையும் கவனிக்கத் தக்கது - ஒரு செயலை நாம் செய்வதை பார்த்துவிட்டால் கூர்ந்து கவனித்து செய்ய முயற்சிக்கின்றனர். இதெல்லாம் நேர்மறையான விவரங்கள்.

ஆனால் எதிர்மறையாக, சிறிய விசயத்திற்கும் மூட் அவுட் ஆவது. அடம் பிடிப்பது. பெருங்குரலெடுத்து அழுவது. ஒல்லியான தேகம். எரிச்சலுற்ற முகபாவங்கள்... இதெல்லாம் சாதாரணமாகவே குழந்தைகளிடம் இருப்பதுதானே என்று சொல்கிறீர்கள்.  ரொம்பவும் சாதாரணம்தான். ஆனால் அடிக்கடி நிகழ்வது என்பதும் குழந்தைக்குரிய மனோபாவம் மாறுவதும் கவனிக்க வேண்டிய விசயமல்லவா? இன்றைய அவசர காலகட்டத்தில் இவற்றை நாம் கூர்ந்து நோக்குவது இல்லை.

இன்னும் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது புரிகிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுகிறது. மருத்துவரின் கவனிப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஒரு விசயத்திற்காக அடம்பிடிக்கும்போது வேறு போக்கு காட்டி மாற்ற முடிவதில்லை. ஞாபகமாக மீண்டும் அடம் பிடிப்பதை தொடர்கின்றனர்.

வினு மூன்று வயது குழந்தை. படு சுட்டி. நிறைய பேசுகிறாள். எழுத முயற்சிக்கிறாள். பாடல்களுக்கு அழகாக நடனமாடுகிறாள். ஆனால், அவள் சொன்னதை நாம் செய்யவில்லை எனில் - கவனியுங்கள் நாம் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதல்ல விசயம் - எரிச்சலூட்டும் செயல்களை செய்கிறாள். பொருட்களை வீசி எறிவது. கத்துவது. தரையில் படுத்து உருள்வது. (விறுவிறுவென்று பூஜை அறைக்குள் சென்று குங்குமத்தை கொட்டுவது). அவளுடைய பெற்றோர் பயந்து போய் அவள் சொல்வதை செய்கின்றனர். உடனயே சமாதானம் ஆகி சிரித்து கொஞ்சுகிறாள்.

நான்கு வயது அர்சுன் இதே போலத்தான். கோபம் வந்தால் கத்துவதில் எங்கள் காலனியே அதிரும். கூடவே புரியாத வார்த்தைகளில் அவன் அம்மாவை திட்டவேறு செய்வான். என்னுடைய இந்த வயது நண்பர்கள் ஓரிருவர் தவிர பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், என்னிடம் விளையாடும்போது இத்தனை கலாட்டா இல்லை. அவர்களுடைய பெற்றோர் ஆச்சரியமுடன் 'உங்களிடம்தான் அடக்கமாக இருக்கிறான்" என்று கூறுகின்றனர்.  ஏன்? ஒரு விசயம் புலப்பட்டது இதனை என்னுடைய ஹோமியோ மருத்துவரும் உறுதிபடுத்தினார். அவை,

1.  சொல்லத்தெரியாத பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. இந்த பொம்மை வேண்டும், இந்த பாட்டு போடுங்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால், சிலவற்றை உணர முடிவதில்லை. முக்கியமாக பசி,உறக்கம் மற்றும் சத்து குறைவு. (இவர்கள் பொருளாதார வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்)

2.  கிட்டதட்ட அனைவருமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் குடிக்கிறார்கள். அந்த பானம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. (பாலின் விலையைவிட அதிகம். உபயோகிப்பதும் அதிகரிக்கிறது.)

3.  சில குழந்தைகள் சரிவர சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட குடிக்கின்றனர். பெரியவர்களுக்கான ஆரோக்கிய பானத்திலேயே ஒரு நாளைக்கு இரு முறை என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எத்தனை முறை தருவது என்று குறிப்பிட வேண்டாமா?

4. உண்மை என்னவெனில், உணவை மறுக்கும் குழந்தையை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் முயற்சியினை அம்மாக்கள் செய்வதில்லை. "அவன் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று கூறிவிடுகின்றனர். நாலுவயது பையன் அரை தோசை சாப்பிடுகிறான். இது எப்படி அவனுக்கு போதும்?  மேலும் அவன் ஒரு துருதுரு குழந்தை.  விசாரித்தால், ஊட்டசத்து பானத்தை தருவதாகவும் அது சக்தி தருவதாகவும் சொல்கின்றனர். இது சரியான கருத்தா?

5. போதுமான உணவு உட்கொள்வது அவசியம் என்றும், அதிலிருந்து ஊட்டச்சத்துகளை உடல் பெற வேண்டும் என்பதும் அவசியம், அதுதான் உள்ளுறுப்புகள் பலப்படுவதற்கு தேவையானது என்கிறார் மருத்துவர்.

6. சில அமைதியான குழந்தைகளின் பின்னனியில் குழந்தைக்கு பொறுமையாக ஊட்டுவது, முக்கியமாக குழந்தைக்கு ஏற்ற உணவை தயார் செய்வது, சரியான அளவில் உறங்கச்செய்வது , போதுமான விளையாட்டு , கனிவான கண்டிப்பு என்று கவனிப்புகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

7. சத்திற்கு ஊட்டச்சத்து பானமும் பசிக்கு பிஸ்கெட், கொறிப்பு தீனிகள் போன்றவை மட்டும் போதுமா? இந்த அரை தோசை, மூன்று ஸ்பூன் சாதம் போன்றவை போதாது என்பது என் கருத்து. கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது, சரிதான். ஆனால் விளையாட்டு காட்டியாவது ஊட்ட வேண்டாமா?

8. ஒட்டிய வயிறுடன், சட்டென்று சோர்வைடைந்து சிணுங்கிக் கொண்டேயிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?


என்னிடம் மட்டும் அடம்பிடிப்பது இல்லை என்று சொன்னேனல்லவா, ஏன் என்றால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே குட்டி குட்டி தட்டுகளில் உணவுப் பொருட்களை நிரம்ப்பிவிடுவேன். சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தால் விளையாட்டாக கதை சொல்லி ஊட்டிவிடுவேன். வயிறு நிறைந்திருக்கும்போது கோபம் வராது என்பது அறிவியல் உண்மை.

இந்தப் பதிவு முடிந்த பின் விவாகரத்து பற்றிய தொடரை தொடர்கிறேன்.

பூமியின் எல்லை தேடி
குளிர்ச்சியை உணர்ந்த
                   முதல் சுவாசம்
மாலை சந்திரனின்
வெளிச்சமாய் தாய் முகம்
                  முதல் பசி தீர்த்தது
காலை பகலவனின்
பரிவாய் தந்தையின்
                  முதல் ஸ்பரிசம்

மழையாய் ஓடையாய்
            அருவியாய் நதியாய்
என்னை நனைக்கும் பின்
             உலர்த்தும் உறவுகள்
ஆலமரத்து கிளைகளின்
            அன்றில் பறவைகள்!


சமயத்தில் இடி இடிக்கும்
          சூறாவளி சுழன்றடிக்கும்
அனலாக வெயிலடிக்கும்
           கடல் கரைதாண்டி
 தரை தொடலாம்....
சில வேளை நான்
காணமலும் போகலாம்!

ஆனால்
என்னை மீட்டெடுக்கும்
எனக்கான என் உலகம்!



அப்பாவிற்கும் அவனுக்குமான
உரசல் ஆரம்பித்த நொடி
சபிக்கப் பட்ட வேளையோ
முதல் இடைவெளியில்
சின்னதாய் எழுந்த வலி
எங்கே என்று சொல்ல.....?
விழுந்த பொழுதெல்லாம்.....
தூக்கி வாரியணைத்த கரங்கள்
ஆறுதலாக பேசியது நினைவில்லை
ஆனாலும் அன்றைய நிம்மதி
நெடுநாள் மறக்கவில்லை!

தாயின் வயிற்று குரங்கு குட்டி
தவறி விழுந்தால் தனிதானாம்
"நான் என்ன குரங்கு குட்டியா?"
மடியில் அமர்த்தி கதை சொல்லி
அம்மாவிடம் சலுகை வாங்கி
துண்டு விழுந்த நிதிநிலையிலும்
இரண்டு சக்கர வாகனம் வந்தது
அளவாய் பிடித்து செலவு செய்து
அழகாய் ஒரு இனிய வீடு
இன்னும் அழகாய் அவன் பெயரில்
அது மேலும் அழகானது செல்லமாய்
நொடிக்கொருமுறை அவனை அழைத்ததில்
இதெல்லாம் குரங்கிடம் உண்டா?

எல்லை தாண்டி வந்த
அந்நிய நாட்டுப் பார்வை எதற்கு?
விளக்கமாக பேசியிருக்கலாமே.....
காரணங்கள் கூறி இருக்காலாமே......
காதல் என்ன பொல்லாததா?
அவன் வயதிற்கு அல்லாததாகட்டும்
இப்பாது முக்கியமாய் தோன்றவில்லை
ஆனால் , வீணாய் போயிற்று ......
தண்ணீருக்குள் மூழ்கியது போல்
கடைசி மூச்சிற்காக தவித்து....
சற்று நேரம் முகம் பார்த்தபோது
- இல்லை! இல்லை! இவர் வேறு
மனதில் எழுந்தன வார்த்தைகள்
என்னவோ இதயத்தில் கழன்றது


சட்டென பிராணவாயு கிட்டியது
"இந்த அப்பாக்களே இப்படித்தான்?"
இனி... இது பற்றி
ரொம்பவும் கவலையில்லை
அண்ணாந்து வெறிக்கவும் இல்லை
அவரை அடுத்த முறை பார்க்கும்போது
கண்களை சந்திக்கப் போவதுமில்லை
ஏனெனில் .....
அவன் வளர்ந்து விட்டான்...!



 இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.       

     வாழ்க்கையின் அர்த்தமே உறவுகளை பேணுதல்தான். சமுதாயம் என்கிற ஒன்று உருவானதே இதற்காகத்தான். மனித உறவுகள் புனிதமானவை, வெற்றிகரமான வாழ்க்கை என்பது சுற்றம் சூழ வாழுதல்தான். புரிந்து கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல குடும்ப வெற்றியின் ரகசியம். குடும்ப வரைபடத்தில் நம்முடைய இடத்தை உணர்வதும் , மற்றவர்களுடைய இடத்திற்குரிய மதிப்பை தருதலும்தான்.

     எனக்கும் இந்த விசயத்தில் பாரதியின் பார்வைதான். உறவுகள் ஒவ்வொன்றையும் கடவுளின் அவதாரமாகத்தான் நினைத்தார். அதனால்தான் கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் குழந்தை, கண்ணன் என் தோழன் ...... என ஒவ்வொரு உறவிலும் கடவுளைக் கண்டார். கண்ணன் என் மனைவி என்றோ கணவன் என்றோ ஏன் எழுதவில்லை என்று கேட்பீர்கள். உறவுகளின் மதிப்பு மனதிலிருந்து வருவது. ஆனால் கணவன் - மனைவி எனபது ஒரு பதவியாக மட்டுமே மதிக்கப் படுகிறது. தேவையில்லை எனில் பதவியை நீதி மன்றத்தை நாடி பறித்து விட முடியும். அதனால்தான் கண்ணன் என் காதலன் என்றும் கண்ணம்மா என் காதலி என்றும் தலைப்பிட்டார். உண்மையில் கணவன்-மனைவி என்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். இதே போலத்தான் சகோதரனின் இடத்தை தோழனுக்கு தந்தார் - இது என்னுடய தாழ்மையான கருத்து.

      நல்
இல்லம் நல்ல சமுதாயம். வெளி உலகத்தில் எப்படியிருந்தாலும் எனக்காக ஒரு அழகான குடும்பம் , இனிய நாட்களை தர காத்திருக்கிறது என்ற எண்ணமே காற்றில் ஏறி விண்ணையும் சாடும் வலிமையை தருமல்லவா. இந்த தொடரின் முன் வந்த ஆறு பதிவுகளும் சில விதி விலக்குகளை தவிர்த்து அனைவருக்கும் பொருத்தமானவைதான். இதனை சரிவர - இடம், பொருள், ஏவல் அறிந்து என்பார்களே அதுபோல் - பயன்படுத்திக் கொண்டு இனிய இல்லறம் காணுங்கள்.

             எவ்வுயிர் தன்னிலும் ஈசன் உள்ளானென
            எப்பொழுதுங் கதைப்பாய்- நன்னெஞ்சே
                                                        -மகாகவி பாரதியார்


இதுவரை இந்த தொடரில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி

 


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6  

   இந்த தலைப்பில் வந்த பதிவுகள் ஓரளவிற்கு பொதுவான வழிமுறைகளை தெரிவித்தன. இனி தெரிந்து கொள்ளவேண்டிய விட்டுப்போன விவரங்களை பார்ப்போம். முதலில் பெண் பிள்ளைகள் பற்றி,

1. பதின் வயதுகளில் மாறிப்போவது பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் பதின் வயதில் சூழ்நிலையை ரசித்தாலும் தடம் மாறும் வாய்ப்பு குறைவு. ஒரு வேளை எதிர் போக்கான மாற்றங்கள் தென்பட்டால் மீண்டும் நிலைக்கு கொண்டு வருவது கடினம். வாழ்க்கைக்குரிய கொள்கைகள் அப்போதுதான் வகுக்கப்படும். அப்போது இருக்கும் இயல்பானது வாழ்நாள் முழுவதும் மாறாது. அன்பு , பாசம் என்றாலும் சரி பிடிவாதம் முன் கோபம் என்றாலும் சரி பதினைந்தில் இருக்கும் மன இயல்புதான் நீடித்து நிற்கும். தங்களை பற்றிய மற்றவர்களுடைய கருத்துகள் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த "மற்றவர்கள்" எனப்படும் பட்டியலில் நாமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

2. ஆண் குழந்தைகள் விசயத்தை போல் சிரமப்பட வேண்டியதில்லை. எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள், பிரியமான வார்த்தைகள், உயர்வாக பேசுதல்கள் போன்றவை அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும். ஏதாவது தோல்வியை சந்தித்து விட்டால் கவனம் தேவை. மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பர். ஒரு முடிவு எடுக்கும் முன் மிகவும் யோசிப்பார்கள், அந்த சமயத்தில் தரப்படும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கிட்டும். ஆனால் முடிவெடுத்தபின் மாற மாட்டார்கள்.

3. பட்டுத் திருந்துவதென்பதே கிடையாது. அவதி பட்டாலும் அதை அனுபவிக்கத் தயாராய் இருப்பார்கள். எப்போதும் யாராவது ஒருவருக்காகவாவது உண்மையாக இருக்க நினைப்பார்கள். இதற்கான கொள்கைகளும் அவர்களே வகுத்துக்கொள்வதுதான்.

4. ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் நம்மை புரிந்து கொள்வார்கள்- வாழ்க்கையின் பிற்பாதியிலாவது. இவர்கள் அப்படியல்ல இளம் வயதில் கொண்ட கருத்துகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் சூழ்நிலைக் கட்டுப்பட்டு இருப்பதால் எதிர்மறை எண்ணங்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

5. அன்னையின் கட்டுபாட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் வழி தவறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு நிலையிலும் அன்னையின் ஆலோசனையை எதிர் நோக்குவார்கள் , திருமணத்திற்கு பின்கூட.. ஆண்கள் தனித்தன்மையை விட்டுத்தரமாட்டார்கள். அதேபோல பெண்கள் குடும்பத்தை விட்டுத் தரமாட்டார்கள் என்பது இன்றளவும் உண்மை - எந்த குடும்பத்திற்காக என்பது அவரவர் முடிவு, இதில் சமூக கோட்பாடுகள் எல்லாம் பின்பற்றப்படுவதில்லை.

6. நாம் பெண் பிள்ளைகளை பெற்றிருந்தால், அவர்களுக்கு வாழ்க்கை முழுவதற்குமான திட்டங்கள், தேவையான விவரங்கள், பயிற்சிகள் போன்றவற்றை பதினைந்து வயதிலேயே ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் நல்ல வாழ்க்கை அமைந்து, நம் வளர்ப்பை பற்றி பெருமையும் கொள்ளமுடியும்.


7. பெண்களின் பங்களிப்புதான் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும். அது குடும்பமானாலும் சரி சமுதாயப் பொறுப்புகளானாலும் சரி. அந்த பிள்ளைகளை உருவாக்கிய பெருமை சிறப்பான பெற்றோர்களுக்கு கிட்டும்.

          இன்னும் சில செய்திகளுடன் இந்தத் தொடரின் கடைசி பதிவுடன் உங்களை  சந்திக்கிறேன்.



             
  உச்சி தனை முகந்தால்- கருவம் 
                      ஓங்கி வளருதடி
                மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
                      மேனி சிலிர்க்குதடி
                 என்னை கலி தீர்த்தே - உலகில்
                        ஏற்றம் புரிய வந்தாய்

                                       - மகாகவி பாரதியார்

    குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 7

 


இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        
    
    இதுவரை நம் பிள்ளைகள் வளர வளர நம்மை விட்டு பிரியக்கூடிய சந்தர்ப்பங்களை வரிசையாக பார்த்து வருகிறோம். பொதுவாக பதின் பிராயங்கள்தான் நம்மை கலக்கமடைய செய்யும் வயது. பத்து வயது வரை நம்மைதான் முன் உதாரணமாக கொண்டு வளர்கிறார்கள். நம்முடைய குண நலங்கள் பெரிதும் அவர்களிடம் இருக்கும். பதின்னொன்று ஆரம்பிக்கும்போது பள்ளியில் அவர்கள் பழகும் முறை மாறுகிறது. பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். நம்மை எடை போடக்கூட செய்வார்கள். பெரிதாக ஒன்றும் பிரச்சினை எழாது. பதினான்கு வயதில் படிப்பில் பிரிவினை தலைதூக்கும். பத்தாவது பரிட்சை முடிவுகள்தான் நாம் எதிர் நோக்கவேண்டிய கடுமையான காலம். அவன் தேர்வு பெற்றாலும் பெறாவிட்டாலும், மதிப்பெண் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் நமக்கு சோதனைதான். விருப்பப்பட்ட பாடம், விருப்பப்பட்ட பள்ளி என முட்டி மோதி இடம் பிடித்து அமர வைக்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் புதிய பள்ளிகளுக்கு செல்வார்கள். இந்த இரண்டு வருடங்கள் மட்டும் நாம் மிக கவனமாக - இந்த பதிவின் பாகம் 2,3,4 உள்ளவற்றை செய்யவேண்டும். பதின் வயது முடிந்து விட்டால் , இது வரை சரியான பாதையில் வந்த பிள்ளைகள் உண்மையிலேயே நம்பிக்கை நட்சத்திரங்கள்தான்.

     காதல் பற்றிய தெளிவான அறிமுகம் இல்லாத - puppy loveவிலிருந்து சரியான வழிகாட்டுதலின் பேரில் வெளிவரமுடியும். பதின் வயதுகளில் ஏற்படும் இது போன்ற சலசலப்புகள் காலப்போக்கில் மாறக்கூடியவை. வாழ்க்கை பற்றிய சிந்தனை வரும்போது இவை மாறிவிடும். ஒருவேளை உங்கள் பிள்ளை இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் வெறுத்து விடாமல் வெறுப்பு வராமல் கையாள வேண்டும். 2ஆம் பதிவில் சொன்னது போல வேறு ஒருவர் மூலம் அறிவுரை சொல்லலாம். உடனடியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சற்று பொறுமையாக கையாண்டால் அல்லாதது அழிந்து விடும். சற்று தீவிரமாவது போல இருந்தால், மேல் படிப்பை காரணம் சொல்லி இடம் மாற்றி விடுங்கள். உங்கள் பிள்ளையின் நீண்ட நாளைய நண்பர்களின் உதவியை நாடலாம். உங்கள் பிள்ளையின் காதல் பற்றி யார் என்ன என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். சில சமயம் அந்த பக்கம் ஊக்குவிக்கப்பட்டு தவறான முடிவுகள் மேற்கொள்ளப் படலாம். முக்கியமாக பதினெட்டு வயது முடியும் போது கவனம் தேவை. இளநிலை படிப்பு முடியும் போது அவர்கள் சரியான பாதைக்கு வந்து விடுவார்கள்.

      இதன் பிறகு வரும் காதல்தான் பிரச்சினைக்குரியது. பிடித்தால் விடாது. நாமும் நம் பிள்ளைகள் நல்ல வேலையில் அமர்ந்து விடுவதால் மறுத்து பேச மனமின்றி தலையை ஆட்டிவிடுவோம். இல்லை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னாலும் சிக்கல்தான். இந்த விசயத்தில் முடிவு அவர்கள் கையில்தான். இதனை நான்கு விதமாக ஆராயலாம்.

1. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இருந்தால் நல்லது. திருமணத்தை நடத்தி வைத்து உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சினை என்றால் இருவருமே உங்களிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு இருக்கவேண்டும்.

2. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இல்லை என்றால் நீங்களும் சேர்ந்துதான் அவஸ்தைபட வேண்டும். நன்கு படித்து சிறப்பான வேலையில் அமரும் பிள்ளைகள் குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்வதில்லை. தங்களுக்கே உரிய கர்வத்துடன் இருவரும் நடந்து கொண்டால் , பிரிவதை தவிர்க்க முடியாது. காதல் திருமணம் விலை மிக அதிகம் கேட்கும், தாங்கள் அடைந்ததின் தரத்தை ஆராய்ச்சி செய்யும். உங்களுடைய வழிக்காட்டுதல் ஒரு வேளை இதனை சரிசெய்யலாம்.

3. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியென்றால், உங்களை மீறியமுடிவுகள் எடுக்கப்படலாம். பிற்பாடு பிரச்சினை வந்தால் நாம் தலையிடவும் முடியாது,ஒருவேளை அந்த பக்கத்தில் ஒப்புக்கொண்டு விட்டால், மருமகன்/ள் உடன் உங்கள் பிள்ளைகளையும் மறந்து விடவேண்டியதுதான். அது சரியில்லாத குடும்பமாக இருந்து விட்டால் உங்கள் பிள்ளையின் வாழ்க்கை மாறிவிடும்.

4. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் உங்கள் பிள்ளையின் தேர்வு நல்ல தேர்வாக இருந்து நல்ல இல்லறமாக இருந்தால் மன்னிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய முதுமையின் தேவையில் உதவி கேட்கக்கூட தோணாது.

 ஒரு இளைஞன் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது பற்றி " அர்த்தமுள்ள இந்து மதத்தில் " கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியுள்ளார். இது போன்ற நல்ல நூல்களை கை வசம் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகளிடமும் இது பற்றி உரையாடலாம். தெளிவான கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டால், இத்தனை நாள் செய்ததுபோல் விட்டுக் கொடுத்தல்களை நாம் கையாண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும். இதனையும் சிறப்பாக செய்துமுடித்தால் நமக்கு அவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நான் உறுதியாக சொல்கிறேன் , முப்பதுகளில் உங்கள் பிள்ளைகள் உங்களை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.


    விட்டுப்போன சில வித்தியாசமான ஆனால் பெரும் சதவிகிதத்தில் இல்லாதவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

      குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6 


இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        


         நம் பிள்ளைகளிடமிருந்து நாம் விலகும் சந்தர்ப்பங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். பொதுவாக அவர்கள் உங்களை விட்டு விலகுவதாக நீங்கள் நினைக்கும் சந்தர்ப்பங்கள்தான் அவை. சிறிய வயதில் உங்கள் விரலை பற்றிக்கொண்டு நடந்தவர்களுடன், இனி கை கோர்த்து செல்ல வேண்டியது நம் பொறுப்பு. இப்போது சற்று வளர்ந்துவிட்ட நம் பிள்ளைகளுக்கு நம் கைகளை உதறும் எண்ணம் வராமல் மென்மையாக வழி நடத்திச் செல்ல வேண்டும். 

   முதலில் படிப்பு. பள்ளிப் படிப்பிலேயே அவர்களின் எதிர்காலத்தை நோக்கி நகர்த்துங்கள். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தை நம் விருப்பமாக செய்யக் கூடாது - உதாரணமாக, கணக்கே பிடிக்காத பையனை பொறியியல் படிக்க அனுப்புவது போன்றவை. விளக்கமாக சொல்லப்போனால், தன் படிப்பினை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் அது நம் விருப்பமாகவும் இருக்க வேண்டும் . எப்படியென்றால் , பள்ளி    வகுப்பிலேயே கணக்கை  விரும்பும்படி சிறப்பு பயிற்சியினை தரலாம் (அதற்குரிய ஆசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டும்,      சிலர்    ஆசிரியரை     குளிர்விக்கும்     விதமாக  அவரிடமே    பயிற்சிக்கு அனுப்புவார்கள். "பாஸ்  போட்டுருவாங்கப்பா"    என்று)   நேரம்        கிடைக்கும்போது  பொறியியல் படிப்பின் மகத்துவத்தை சொல்ல வேண்டும் - அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படியும் அவன் விரும்பவில்லை என்றால் விருப்பப்பட்ட படிப்பு அவர்களுக்கு கிடைக்க அனுமதிக்க வேண்டும். முக்கியமான விசயம் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் பிரிவு எதுவாக இருந்தாலும் .


          இன்றைய சூழ்நிலையில் எல்லா படிப்புமே சமுதாயத்திற்குத் தேவையானவைதான்.   இத்தனை  விட்டுக்    கொடுத்தல்களும்     இளநிலை   படிப்பிற்கு  மட்டும்தான் .  அதன் பிறகு என்ன படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரலாம் என்று கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய சூழ்நிலையில் முதுநிலை படிப்புகள்தான் வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்றன. நல்ல கல்லூரிகளில் இதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.  ஒரு விவசாயக் கல்லூரியில் அதிக அளவில் சிவில் சர்வீஸ் எழுத வைக்கின்றனர். நிறைய மாணவர்கள் அதில் தேர்வு பெற்று அரசு வேலையில் இருக்கின்றனர். இது போன்ற வழிகாட்டுதல்கள்தான் அவர்களுக்கு தேவை.அதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். உங்கள் கட்டாயத்தினால் அவர்கள் படித்தால், நல்ல நிலையை அமைத்துக் கொடுக்கலாம். ஆனால் வேறு சில விசயங்களில் நாம் விட்டுத்தர வேண்டியிருக்கும். " நான்தான் படிக்கிறேன்ல. இந்த விசயத்தில் தலையிடாதீர்கள்" என்று பேரம் பேசுவார்கள். நாம் விலக்கி வைக்கப்படுவது மட்டுமல்ல அவர்கள் தலைகீழாக மாறிப்போவதும் இந்த இடத்தில்தான். மற்றவர்கள் முன் பெருமையாக பேசுவதற்காக இது போன்ற பேரங்களை நடத்தக்கூடாது. இந்த பெருமையெல்லாம் தற்காலிகமானது.

     அதைவிட "உன்னுடைய விருப்பம் போல் படி. நான் உன் துணைக்கு இருந்து உன்னை உன் பாதையிலேயே சிறப்பான நிலைக்கு கொண்டுவருவேன்." என்ற உங்கள் ஆதரவு அவர்களை வழி தவற வைக்காது. எந்த பிரச்சினை என்றாலும் அவர்கள் நம்மிடம் ஆலோசனை செய்வார்கள். வாழ்க்கையின் அடுத்தபடிக்கு செல்லும் போதும் என் குடும்பம் என் பெற்றோர் என்கிற எண்ணம் இருக்கும். நான் சொல்வது காதல், கல்யாணம் என்று தடம் மாறிப்போவதைதான். இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

         இது போன்ற  பதிவுகள் செய்யும்போது படிப்பவர்களுக்கு  ஏதாவது  கருத்து இருக்கலாம்.  விளக்கம் தேவைபடலாம். அவற்றை கேள்வியாக கருத்துரைமூலம் பதிவு செய்தால் , இந்த தொடரின் கடைசி பதிவில் விளக்கம் தரமுடியும் (frequently asked questions). அப்போதுதான் இந்த பதிவின் நோக்கம் முழுமை பெறும்.

                       இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
                                   இனிதில்லை யென்றுமவன் எண்ணுவத்தில்லை 
                        அன்பு மிக உடையான் - தெளிந்
                                 தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே .......
                                                           - கண்ணன் என் தந்தையில் மகாகவி பாரதியார்

 குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 5

இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        

                  அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் நட்பு  வட்டாரத்தின்  மீதுதான்   உங்கள் பிள்ளையின் சினேகிதர்களை நன்கு புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தவறான நட்பு எனில் அவர்களை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பட்டவர்த்தனமாக கூறவேண்டாம் . விடுமுறை நாட்களில் தேநீர் அருந்தும் போது அமைதியான உரையாடலில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கேயோ எப்போதோ நடந்த செய்தியாகக் கூட இதனை தெரிவிக்கலாம் - நண்பனை உதாரணம் காட்டக்கூடாது. நல்ல நண்பனாக இருந்தாலும்கூட அவர்களை பற்றி உதாரணம் காட்டி உயர்வாக பேசாதீர்கள். சில சமயம் நல்ல நண்பர்களிடமிருந்து அவர்கள் விலக முற்படுவார்கள்.

      நண்பர்களை தேர்வு செய்யும் முறை பற்றி ஒவ்வொரு வயதிலும் சொல்லிக்கொடுங்கள். புதிய பள்ளி , இடமாற்றம் ஏற்படும்போது உண்டாகும் புதிய நட்புகளை கவனியுங்கள் . சிறிய வயதில்கூட நண்பர்களை சரியாக தேர்வு செய்யும் குழந்தைகள் பெரியவனானதும் சரிவர செய்வதில்லை. அதற்கு அவர்களிடமிருந்து நாம் விலகிப்போவதுதான் காரணம்.

         பள்ளிப்பருவ வயதில் அவர்களிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள் போன்றவை நம்மை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிடுகிறது. இங்கேதான் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முறை மாறிவிடுகிறது. இது போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது தர வேண்டிய விளக்கங்களை உங்களுடைய நலன் விருப்பும் உறவினர் - சகோதரர் , மைத்துனன் போன்றவர் மூலம் தெரிவிக்க செய்யலாம். சொல்லவேண்டிய விசயமும் சரிவர போய் சேர்ந்து விடும். " ஏன் நானே சொல்லக்கூடாதா?" என்று நீங்கள் கேட்கலாம் . வேறு வழியில்லை எனில் இதனை செய்யலாம். ஆனால் உங்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி மிகவும் குறைந்து விடும். அதுவும்கூட விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் உங்கள் விருப்பம் என்ன என்று தெரியாமலே போய்விடும். பிறகு அனுமதி கேட்காமல் அத்தனையும் அறிவிப்பாக மாறிவிடும். 

            உதாரணமாக, உங்கள் பிள்ளையின் விருப்பம் வேறுபடும் நிலையில் உங்கள் சார்பாக பேசுபவர் , பிரச்சினையை சரி கட்டுவது போல பேசலாம் "அப்பாவிற்கு இது பிடிக்காது. இருந்தாலும் உனக்காக உன் மகிழ்ச்சிக்காக இதற்கு சம்மதிப்பார். நீ அதற்கேற்ற பிள்ளையாக இரு" எனலாம். நாமே நேரிடையாக இதனை சந்திக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு உளறிக் கொட்டி விடுவோம். "பிள்ளைகளின் மகிழ்ச்சியைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை" போன்றவை உங்களை எளிதாக சமாளித்து விடலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடும். பின்னர், அவர்கள் உங்களிடம் பழகும் முறை எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிவிட வாய்ப்புகள் உண்டு.

  பெண் பிள்ளைகளுக்கு தாயார் சொல்லித்தரலாம். இதில் தந்தை குறுக்கே புகுந்து மதிப்பு பெற முயற்சிக்க கூடாது. அது பெண்கள் சம்பந்தப் பட்ட உரையாடலாக அது அமையட்டுமே. உங்களுக்கும் உங்கள் துணைக்குமான உறவு மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை குறைத்துப் பேசக்கூடாது. பெற்றவர்கள் வாழும் முறைதான் குடும்ப உறவின் மற்றொரு பரிமானத்தை காட்டும்.

 இந்த விசயம் சரியாக நடந்துள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது. உங்கள் பிள்ளை அவன் நண்பர்களிடம் நடந்து கொள்ளும் முறையை கவனித்தால் புரிந்து விடும். அவனுடைய நல்ல நண்பர் கூட்டத்தில் தலைமை பண்புடன் நடந்து கொண்டால் கடிவாளம் உங்கள் கையில்தான் உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் நண்பர்களுக்கும் கௌரவ ஆலோசகர் நீங்கள்தான்.

அடுத்த பதிவில் இன்னும் சில சந்தர்ப்பங்களை பற்றி விரிவாக காணலாம்.
 
                   உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
                              ஓங்கியடித்திடுவான் நெஞ்சில்
                  கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
                             காறியுமிழ்ந்திடுவான் ......
                                              - கண்ணன் என் தோழனில் மகாகவி பாரதியார்


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 4