மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        
    
    இதுவரை நம் பிள்ளைகள் வளர வளர நம்மை விட்டு பிரியக்கூடிய சந்தர்ப்பங்களை வரிசையாக பார்த்து வருகிறோம். பொதுவாக பதின் பிராயங்கள்தான் நம்மை கலக்கமடைய செய்யும் வயது. பத்து வயது வரை நம்மைதான் முன் உதாரணமாக கொண்டு வளர்கிறார்கள். நம்முடைய குண நலங்கள் பெரிதும் அவர்களிடம் இருக்கும். பதின்னொன்று ஆரம்பிக்கும்போது பள்ளியில் அவர்கள் பழகும் முறை மாறுகிறது. பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். நம்மை எடை போடக்கூட செய்வார்கள். பெரிதாக ஒன்றும் பிரச்சினை எழாது. பதினான்கு வயதில் படிப்பில் பிரிவினை தலைதூக்கும். பத்தாவது பரிட்சை முடிவுகள்தான் நாம் எதிர் நோக்கவேண்டிய கடுமையான காலம். அவன் தேர்வு பெற்றாலும் பெறாவிட்டாலும், மதிப்பெண் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் நமக்கு சோதனைதான். விருப்பப்பட்ட பாடம், விருப்பப்பட்ட பள்ளி என முட்டி மோதி இடம் பிடித்து அமர வைக்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் புதிய பள்ளிகளுக்கு செல்வார்கள். இந்த இரண்டு வருடங்கள் மட்டும் நாம் மிக கவனமாக - இந்த பதிவின் பாகம் 2,3,4 உள்ளவற்றை செய்யவேண்டும். பதின் வயது முடிந்து விட்டால் , இது வரை சரியான பாதையில் வந்த பிள்ளைகள் உண்மையிலேயே நம்பிக்கை நட்சத்திரங்கள்தான்.

     காதல் பற்றிய தெளிவான அறிமுகம் இல்லாத - puppy loveவிலிருந்து சரியான வழிகாட்டுதலின் பேரில் வெளிவரமுடியும். பதின் வயதுகளில் ஏற்படும் இது போன்ற சலசலப்புகள் காலப்போக்கில் மாறக்கூடியவை. வாழ்க்கை பற்றிய சிந்தனை வரும்போது இவை மாறிவிடும். ஒருவேளை உங்கள் பிள்ளை இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் வெறுத்து விடாமல் வெறுப்பு வராமல் கையாள வேண்டும். 2ஆம் பதிவில் சொன்னது போல வேறு ஒருவர் மூலம் அறிவுரை சொல்லலாம். உடனடியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சற்று பொறுமையாக கையாண்டால் அல்லாதது அழிந்து விடும். சற்று தீவிரமாவது போல இருந்தால், மேல் படிப்பை காரணம் சொல்லி இடம் மாற்றி விடுங்கள். உங்கள் பிள்ளையின் நீண்ட நாளைய நண்பர்களின் உதவியை நாடலாம். உங்கள் பிள்ளையின் காதல் பற்றி யார் என்ன என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். சில சமயம் அந்த பக்கம் ஊக்குவிக்கப்பட்டு தவறான முடிவுகள் மேற்கொள்ளப் படலாம். முக்கியமாக பதினெட்டு வயது முடியும் போது கவனம் தேவை. இளநிலை படிப்பு முடியும் போது அவர்கள் சரியான பாதைக்கு வந்து விடுவார்கள்.

      இதன் பிறகு வரும் காதல்தான் பிரச்சினைக்குரியது. பிடித்தால் விடாது. நாமும் நம் பிள்ளைகள் நல்ல வேலையில் அமர்ந்து விடுவதால் மறுத்து பேச மனமின்றி தலையை ஆட்டிவிடுவோம். இல்லை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னாலும் சிக்கல்தான். இந்த விசயத்தில் முடிவு அவர்கள் கையில்தான். இதனை நான்கு விதமாக ஆராயலாம்.

1. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இருந்தால் நல்லது. திருமணத்தை நடத்தி வைத்து உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சினை என்றால் இருவருமே உங்களிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு இருக்கவேண்டும்.

2. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இல்லை என்றால் நீங்களும் சேர்ந்துதான் அவஸ்தைபட வேண்டும். நன்கு படித்து சிறப்பான வேலையில் அமரும் பிள்ளைகள் குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்வதில்லை. தங்களுக்கே உரிய கர்வத்துடன் இருவரும் நடந்து கொண்டால் , பிரிவதை தவிர்க்க முடியாது. காதல் திருமணம் விலை மிக அதிகம் கேட்கும், தாங்கள் அடைந்ததின் தரத்தை ஆராய்ச்சி செய்யும். உங்களுடைய வழிக்காட்டுதல் ஒரு வேளை இதனை சரிசெய்யலாம்.

3. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியென்றால், உங்களை மீறியமுடிவுகள் எடுக்கப்படலாம். பிற்பாடு பிரச்சினை வந்தால் நாம் தலையிடவும் முடியாது,ஒருவேளை அந்த பக்கத்தில் ஒப்புக்கொண்டு விட்டால், மருமகன்/ள் உடன் உங்கள் பிள்ளைகளையும் மறந்து விடவேண்டியதுதான். அது சரியில்லாத குடும்பமாக இருந்து விட்டால் உங்கள் பிள்ளையின் வாழ்க்கை மாறிவிடும்.

4. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் உங்கள் பிள்ளையின் தேர்வு நல்ல தேர்வாக இருந்து நல்ல இல்லறமாக இருந்தால் மன்னிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய முதுமையின் தேவையில் உதவி கேட்கக்கூட தோணாது.

 ஒரு இளைஞன் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது பற்றி " அர்த்தமுள்ள இந்து மதத்தில் " கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியுள்ளார். இது போன்ற நல்ல நூல்களை கை வசம் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகளிடமும் இது பற்றி உரையாடலாம். தெளிவான கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டால், இத்தனை நாள் செய்ததுபோல் விட்டுக் கொடுத்தல்களை நாம் கையாண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும். இதனையும் சிறப்பாக செய்துமுடித்தால் நமக்கு அவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நான் உறுதியாக சொல்கிறேன் , முப்பதுகளில் உங்கள் பிள்ளைகள் உங்களை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.


    விட்டுப்போன சில வித்தியாசமான ஆனால் பெரும் சதவிகிதத்தில் இல்லாதவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

      குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6 

0 comments: