மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்
 
      கணவன் - மனைவி என்பது ஒரு பதவிதான் என்பதை நான் குறிப்பிட்டிருந்தேன். தேவைபட்டால் பதவி நீக்கம் செய்துவிடலாம் - தற்போதைய கலாச்சாரம் இதனை இயல்பான விசயமாக கருதுகிறது. மறுமணம் செய்து கொள்வதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. முந்தைய காலங்களில் கணவன் தன் மனைவியை "தள்ளிவைக்க" சரியான காரணம் தர வேண்டும். அப்படியில்லையெனில் அவனை அவனுடைய சமுதாயத்தில் ஒதுக்கி விடுவார்கள். சில சமயம் பிரிந்து வாழ்வது என்பது அவரவர் முடிவாக இருக்கும் சட்டப்படி அவர்கள் கணவன் மனைவியாகவே இருப்பர். இப்படியாக விவாகரத்து என்பது குறைந்த அளவிலேயே நடைபெற்றது.  

     ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் சமுதாயத்தை சார்ந்து இருப்பதைவிட சட்டத்தின் உதவியையே நாடுகிறார்கள்- தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று. . இந்த சட்டரீதியான தலையீடுகள்தான் விவாகரத்தின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. கணவன் மனைவிக்கிடையேயான பிணக்குகள் ஊதிவிடப் பட்டு பெரிய பிரச்சினையாக்கப் படுகின்றன. சட்டென ஒரு நாள் எடுக்கப்படுகின்ற முடிவாக இது இருக்கிறது. பிரிந்த பின் என்ன செய்யலாம் என்பதற்கான ஒத்திகைகளும் உடனடியாக ஆரம்பிக்கப் பட்டு விடுகின்றன. ஒரு உண்மையை மறுக்க முடியாது. மாற்றம் என்பது இருவருக்கிடையே மட்டுமே நிகழ்கிறது. சுற்றி இருக்கும் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறாத பழைய கலாச்சாரத்தின் வழியேதான் ஊடுருவிப் பாய்கிறது. பழையன கழிதல் புதியன புகுதல் என்பது உறவு முறைக்கு ஒத்து வராது. முக்கியமாக சம்பந்தபட்ட இருவருடைய குழந்தைகளின் மனமாற்றத்தையும் கவனிக்க வேண்டும்.

    என்னுடைய ஆசிரியப் பணியில் பிரச்சினைக்குரிய பல மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வாறு பிரிந்து வாழ்பவர்களாக பார்த்திருக்கிறேன். அவர்களிடம் தனிப்பட கலந்தாலோசிக்கும் போது கண்களில் நீர் செரிய தாழ்ந்த குரலில் பெற்றோர் பிரிந்து இருப்பதை கூறுவார்கள். அடுத்து அவர்கள் கூறியதுதான் கவனிக்கத்தக்கது. " அம்மா கொஞ்சம் விட்டு கொடுக்கலாம் மேடம். அவருக்கு எப்படியென்றாலும் எனக்கு அப்பா வேண்டும். எனக்கு அம்மாவிடம் பிரியம் இருக்கிறது. ஆனால் என்னுடைய பல பிரச்சினைகளை இருவரும் சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்" என்பார்கள். விவாகரத்து என்பது பெற்றோருக்கு தீர்வாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு தண்டனையாகிவிடுகிறது. வழிமாறிப் போகிற பிள்ளைகளை சரி செய்ய உண்மையான அன்பு மட்டுமே போதாது . சொல்பவர்களின் தகுதியும் ஒழுக்கமும் விமர்சிக்கப்படுகிறது. ஒழுக்கமாக பிள்ளைகளை வளர்த்து மேலும் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி என்பது வெறும் பாடங்களை கற்றுத்தரும் இடமல்ல , எதிர்கால உலகத்தினை வெற்றி பெற பயிற்சி தரும் மாதிரி உலகமாக செயல்படுகிறது. அங்கு நிறைய பாடங்களில் பெற்றோரை முன் வைத்துதான் விளக்கமே அளிக்கப்படுகிறது. கழிவிரக்கத்தில் தங்களை தாழ்த்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த பதிவினை நான் எழுத ஆரம்பித்த காரணமே இதுதான். நேற்றைய பிள்ளைகளாகிய நாம் சரியான பாதையில் வந்து நம்முடைய திறமையால் நாமும் முன்னேறி நாட்டையும் உயர்த்தியுள்ளோம். இதற்கு பின் கணக்கிலடங்கா பலரின் தியாகமும் மறைந்துள்ளது. முக்கியமாக பெண்களின் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு அவை மறுக்கப்பட்டுள்ளன. அவர்களின் எதிர்காலத்தை நம்முடைய சுயநலத்திற்கு இட்ட பலியாக கருதலாமா? எதிர்காலத்தில் நம் நாட்டிற்கு நல்ல பிரஜைகள் கிடைப்பது குறைகிறது என்பதை மறுக்க முடியுமா?  

இன்னும் விரிவாக அடுத்த பதிவில்.....

0 comments: