மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் ஒரு தவறிழைத்துவிட்டு அதன் பின் விளைவை உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்லவொன்னாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது நம் நெஞ்சம் படும் வேதனை சொல்ல முடியாது. அதிலும் தன் தவறான செயல் எண்ணித் தவித்து அதனால் மேலும் ஏதாவது துன்பம் விளையுமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டால் 'ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல அமைதியிழந்து அலைகழித்துவிடும்.  இதனைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் என்று சொல்கிறார்களோ?

வாழ்க்கையில் முதல் முறையாக தவறிழைக்கும்போது ஒருவித எதிர்ப்பு நம் உள்ளுக்குள்ளிருந்து வரும். அதை அலட்சித்து சில செயல்களை செய்துவிட்டு.  பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் கதையில் லேடி மெக்பெத் தன்னுடைய கைகளில் இரத்தக்கறை இருப்பதுபோன்றே ஒரு வித மாயையில் சிக்கி அடிக்கடி கையை கழுவிக் கொண்டே இருப்பாள் - ஏனெனில் ஏற்கனவே அவள் பல கொலைகளை செய்திருப்பாள். நம் பண்டைய இலக்கியங்களில் இது போன்ற செய்திகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றத்தை உணர்ந்த மறு நிமிடமே உயிர்த்தியாகம்தான் - மதுரையின் பாண்டிய நெடுஞ்செழியன் செய்ததுபோல்- செய்துவிடுவார்கள்.

தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான். மேலே நான் குறிப்பிட்ட சூழலில் இவை இரண்டையும் நாம் இழந்துவிடுவோம். விளைவு, மனிதன் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து விலங்கின் போர்வையை போர்த்துக் கொள்ள வேண்டி வரும்.

என்னைப் பொறுத்தவரை குற்றமுள்ள நெஞ்சம் பேசுவதும் பேசிக் கொல்வதும் மென்மையான இதயங்களில் மட்டுமே. ஒரு முறை அதன் பிடியில் சிக்கியவர்கள் வெளி வரத்தெரியாமல் தன்னுடைய இனிமையான சூழலை விட்டு விலகுவதும்,  அதனால் மேலும் அதே தவறினை செய்து புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன்னை தொலைத்தவர்களும் உண்டு. என்றைக்காவது தனிமை கிட்டும்போது தன்னை பற்றிய நினைவு வரும்போது கண்ணில் வரும் நீர் துளிகள் மன்னிக்க முடியாத வார்த்தைகளை தெரிவிக்கும். எனவே இது போன்ற மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் முன் மீளும் முனைப்பு முதல் திருப்பத்திலேயே வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா? 

                                       - அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.




தடுப்பார் யாருமின்றி பற்றற்று
ஒரு காற்றாக நான் திரிந்தேன்
சேருவதற்கு இடமில்லாமல்
ஆகாயத்தில் தனித்து திரிந்தேன்

நெருப்புடன் சேர்ந்து பார்த்தேன்
சுற்றியிருப்பவற்றை கொளுத்தி
சிறிய தீயை தூண்டி அழித்தது
காற்றுதான் என்று ஏசினார்கள்


கடலுடன் சேர்ந்து பார்த்தேன்
ஆழிப்பேரலையாகி ஆடினேன்
உயிர் பலிகொண்ட கருவியான
பழிச்சொல்தான் மிச்சமானது.

இனம் இனத்தோடு சேரலாமே
காற்றோடு சேர்ந்து பார்த்தேன்
சூறாவளியாகி சுழன்று வீசிட
மிச்சமும் மீதியின்றி பறந்தது.

வெறுத்துப்போன வேளையில்
சுழன்றாடும் சோழியை பிரித்து
பல்லாங்குழி ஆடுவது போல்
சீற்றம் குறைத்து தணிந்தேன்

சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.

மூச்சுக் காற்றை சுமந்தே...
வெற்று வெளியில் மிதந்து
ஏதோவொரு தடையாலோ
மற்றொன்றுடன் மோதியோ
உடைந்து மறையும் குமிழாக
அழிந்து போக விருப்பமில்லை.


மற்றொன்றுடன் மோதினாலும்
உடைந்து சிதறிப் போகாமல்
மோதியதை பலவாறாக்கும்
உள் புகுந்து அணு பிளக்கும்
கூரிய வினைதிட்பம் உள்ள
ஒரு பௌதீகத்தின் வழியாக
மோதல்களினால் பயனுற்று
அதீத ஆற்றல் கொள்கிறேன்
தொடர்ந்து வரும் பிளவுகளும்
கடி விசையுறும் துகள்களும்
சக்தியின் பிரவாகமாக மாற
உலகத்தை உயிர்ப்பிக்கிறேன்


எப்போதாவது....
ஒரு அணு உலையைப் போல்
வெடித்து சிதறிவிடாமலிருக்க
வெதுவெதுப்பான வெப்பத்தில்
பஞ்சுப்பொதியின் பரிவுடன்
உள்ளுக்குளேயும் குளிர்விக்கும்
தாய்க்கோழியின் மென்சிறகு
அணைப்பை வேண்டுகிறேன்.
 


வணக்கத்திற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா திரு.ரத்னவேல் அவர்களின், அழைப்பிற்கினங்க இந்த தொடர் பதிவினை பதிவிடுகிறேன். இது போன்ற அழைப்புகளை பதிவுலத்துடன் என்னை இணைக்கும் பாலங்களாக கருதுகிறேன். எனவே இதற்கு சந்தர்ப்பம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

1.     நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்.
       1. பால்வெளியை பார்க்கக்கூடிய தனிமையில் இரவு வானம்
       2. விருந்தோம்பல் - இது என் கணவருக்கும் மிகவும் பிடித்த விசயம்.
       3. சிக்கல்கள் - அதுதான் என்னை உலகத்துடன் இயைந்து உயிர்ப்புடன்
           செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விசயத்தைக்
           கற்றுக் கொள்கிறேன்.
                       

2..       நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.         
            1. தலை வலிக்க வைக்கும் தற்பெருமை பேச்சுக்கள்.
                இதில் முகஸ்துதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
            2. முதியவர்களையும், குழந்தைகளையும் துன்பப்படுத்தும் செயல்கள்.
            3. அதிக சத்தமிடும் எதுவுமே பிடிக்காது.  
   

3.     பயப்படும் மூன்று விஷயங்கள்.
         1. யாரையும் வருத்தப்பட வைக்கக்கூடாது .
         2. விபத்து. அது பற்றிய செய்திகளை கேட்கக்கூட மாட்டேன்
         3. வீண் பழிச்சொல்
 

4.      உங்களுக்குப்  புரியாத மூன்று விஷயங்கள்.
       1. தீவிர நண்பர்கள் யாரும் இல்லாத காரணம் . நன்றாக பழகுவார்கள், நான் யாரிடமாவது பேசிவிட்டால் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்வார்கள்.
       2. எல்லோரையும் போலவேதான் - எனக்கு மட்டும் சிறு தவறுக்கும் பாடம் கற்பிக்கும் ஏதோ ஒன்று( கடவுளோ, மனசாட்சியோ..) , நிறைய பேரிடம் ஏன் அமைதியாகிவிடுகிறது.     
       3. அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை.(நிறைய கற்றும் தருகிறது.)   
   

5.      உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
          1. இணையத் தொடர்புடன் கூடிய மடிக்கணினி,
          2. மாணவர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியதற்கான ஒரு விருது.
          3. 'வெற்றி என்பது  நாம் எத்தனை பேரை நம்முடன் சேர்த்து உயர்த்தியுள்ளோம் என்பதே' என்ற வாசகம் உள்ள ஒரு ஃப்ரேம்.

6. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
       1. குழந்தைகள்தான் -. மூக்கைத் தூக்கிக் கொண்டு மூச்சை இழுத்துக் கொண்டு மழலை நியாயம் பேசுவது மிகவும் பிடிக்கும்.
       2. பாடம் நடத்தும்போது வெளியுலக சஞ்சாரத்தில் இருக்கும் மாணவர்களின் முகபாவனைகள்
       3. வீட்டிற்குள்ளேயே நடக்கும் சின்ன சின்ன கலாட்டாக்கள். முக்கியமாக புதிதாக நான் கற்றுக் கொண்ட உணவை செய்யும்போது.
   
7.  தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
       1. நண்பர்களுடன் சேர்ந்து மேலாண்மை படிப்பிற்காக ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க முயற்சிக்கிறேன்.
       2. ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்- ஒரு தனி மனிதனின் கொள்கைகளுக்கும், அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கொள்கைகளுக்குமான வேறுபாடு,  அந்த மனிதனின் வாழ்க்கைத் தோல்விக்கான காரணமாகிறதா? - Behavioural Ethics
       3. கூடிய மட்டும் என்னை சுற்றியிருப்பவர்களுக்கு -வீட்டிற்கு வெளியிலும்தான் - இருக்கும் மனோவியல் சிக்கல்களை தீர்க்க முயற்சிக்கிறேன் - .


8.   வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
       1. ஒரு இனிய முதியோர் இல்லம்.
       2. திருகைலாய யாத்திரை
       3. என்னுடைய கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுவது.    

9.   உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:
       1. புத்தகம் வெளியிடுவது
       2. கல்வி நிறுவனம் ஆரம்பிப்பது
       3. முதியோர் ஓய்வு இல்லம் ஆரம்பிப்பது.
    

10. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
       1. யாரையாவது குறை சொல்லும் சொற்கள்.
       2. தீர்க்கவே முடியாத சிக்கல் என்று ஒன்றை வருணிப்பது
       3. தன்னம்பிக்கையை குலைக்கும் வார்த்தைகள்.

11) பிடிச்ச மூன்று உணவு வகை?
        1. பருப்பு உருண்டை குழம்பு
        2. பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
        3. திருவையாறு அல்வா எனப்படும் அசோகா (இனிப்பு வகைகள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும் , இதற்கு 1% மார்க் அதிகம்)

12) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
        1. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா - பாம்பே ஜெயஸ்ரீ - இது ஒரு ஆன்மீக பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது.
        2. எங்களுக்குக் குறையும் உண்டு - வீரமணிதாசன் - 'மனம் தூங்க வேணும்' என்ற வரிக்காக.
        3. பொன்னை விரும்பும் பூமியிலே - டி.எம்.எஸ் - அவருடைய பாடல்களிலேயே இதை மட்டும்தான் என்னுடைய குரலுக்கு பாடமுடிகிறது.

13) பிடித்த மூன்று படங்கள்?
        1. பாண்டவர் பூமி - அடுத்த தலைமுறைக்கு நம்முடைய நினைவுகள்தான் பெரிய பொக்கிசம். அதற்கு ஒரு வீடு அவசியம் என்று புரிய வைத்தது.
        2. தாரே ஜமீன் பர் - மக்கு என்ற வார்த்தையே  சொல்லிக் கொடுப்பதின் குறைபாடுகளை மறைக்கும் ஆயுதம்தான், என்று நான் எப்போதும் சொல்வேன். இந்தப் படமும் அதைத்தான் சொன்னது.
        3. வீரபாண்டிய கட்டபொம்மன்- நாம் நிற்கும் சுதந்திர பூமி எத்தனையோ துயரங்களைத் புதைத்துக் கொண்டுள்ளது. அதனை மறக்கவே கூடாது.    


14) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
        1. இறை பக்தி - இது இல்லையென்றால் அடுத்த அடியை எடுத்து வைக்கும் தெம்புகூட இருக்காது என்று நம்புகிறேன்.
        2. என்னுடைய  குடும்பத்தின் நலம் - இது என் மனோ தைரியத்தை பாதுகாக்கும் மந்திர சாவி
        3. உறவுகளின் தொடர்பு   - நிலச்சுமையென நான் வாழவில்லை என்பதற்கான அத்தாட்சி.
             


15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

 1. அரைகுறையாக விட்ட வீணை வாசிப்பு
 2. ஆயில் பெயிண்டிங்
 3. இன்னும் கொஞ்சம் மனோவியல்

16. இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
     1. தமிழ் உதயம் - திரு.ரமேஷ்
     2. வசந்த மண்டபம் - திரு மகேந்திரன்
     3. சில மணித்துளிகள்-  பிரணவன்


     நன்றி