மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

காற்றினிலே கலந்த மூச்சுக் காற்று பிரிந்து
     கருவரை பிண்டத்தில் சேர உயிர் உருவானது
அதற்கு முன் பாடுபட்ட கதையினை
      சொல்ல நாவு துணியவில்லை எனக்கு
கணக்கை இங்கிருந்தே ஆரம்பிக்கிறேன்
       என் தாய்க்கு உணவு செல்லவில்லை
கண்களில் உறக்கம் கொள்ளவில்லை
       வாயில் பட்டது வயிற்றிற்கு இல்லை
தப்பி உள்ளே சென்றது வயிற்றுக்கும்
      தொண்டைக்கும் இடையில் உருண்டது
மசக்கை ஏற்கப்பட்டது தாயுள்ளத்தால்
      இரண்டே மாதத்தில் தளர்வு நடை
 

அடி வயிற்று பாரம் கால்களில்
      உள்ளே நான் உருண்டு புரண்டபோது
அவளுக்கு வலித்தாலும் மனது இனித்ததாம்
      உடல் வலி காரணமாக உறக்கமில்லை
உலகத்தின் அத்தனை பெயர்களையும்
     உறக்கமில்லா இரவுகளில் உச்சரித்தாயிற்று
கசப்பை உண்டு பிள்ளைக்கு மருந்து
     கையூன்றி எழவில்லை கால் நீட்டி அமர்ந்ததில்லை
பாதி தூக்கத்திலும் புரண்டு படுத்ததில்லை
      பார்த்து பார்த்து சாப்பிட்ட பின்னும்
பயத்தில் அடி வயிறை தடவிப்பார்த்தது
       உதிரம் குடித்து உயிர் மூச்சை வாங்கி
உடல் பிளந்து உயிர் பிறந்தது - நான்தான்
      பின்னும் எத்தனையோ தொடர்ந்தது
 

உதிரத்தை பாலாக மாற்றி வளர்த்தாள்
      ஆகும் ஆகாது பார்த்து பத்தியம்
அடிக்கடி உறக்கம் கலைத்து அழுகை
       எந்நேரமும் பசியாற்றுதல் உடைமாற்றுதல்
தலை நிமிர்த்தி, தவழ்ந்து, எழுந்து,
        நடந்து, பேசி, ஓடியாடி முடிப்பதற்குள்
ஓராயிரம் பிரார்த்தனை விரதங்கள் பூசைகள்
        பல்லு முளைக்க கொழுக்கட்டையென்றால்\
பட்டம் முடிக்க பாதயாத்திரை வேண்டுதல்
        இத்தனை அவதிகளையும் முடித்தபின்
பிண்டம் உயிரானதுபோல்  உயிர் பிண்டமானது
        இன்னும் அவளை நிம்மதியாக
கண் மூடி உறங்க விடாமல் அழைத்தேன்
       காலில் பட்ட அடிக்காக "அம்மா" என்று.


    இதற்கு முன்பாக வயதானவர்களை மூன்று வகையினராக பிரித்து அவர்களின் இயல்புகளை குறிப்பிட்டிருந்தேன். "ஒரு சிலர் குறிப்பிட்ட வகையில் மட்டும் இருப்பதாக சொல்லமுடியவில்லை. உதாரணமாக ஒரு சமயம் dettached வகையிலிருந்து complaining வகைக்கு மாறிவிடுகிறார்கள் ஏன்? " என்று கேட்டிருந்தனர். இது போல தன்மை மாறி நடப்பதற்கு வாழ்க்கை முறையில் ஏற்பட்ட திடீர் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் - பொருளாதார மாற்றங்கள், புதிய சூழ்நிலைகள் போன்றவை. அல்லது புதிய உறவுகளின் பாதிப்பு , உடல் நிலை கோளாறு, சுற்றியிருப்பவர்களின் அணுகு முறை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். இவை அத்தனையும் மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. மாற்றத்திற்கான காரணிகளை சரிசெய்யும்போது இவர்கள் பழையபடி மாறிவிடுவார்கள்.

       அணுகு முறை மாற்றம் நமக்கு சாதகமாக இருந்தால்கூட " கவலை விட்டது " என்றில்லாமல் அவர்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள் - புலம்புகிற ரகம் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும் அது ஒரு வடிகால், ஆரோக்கியத்தின் கதவை மூடாது. அதனால் மன அழுத்தத்தை குறைக்கவேண்டியது அவசியம். இல்லையென்றால் தேவையில்லாத பக்கவிளைவுகள் - இருதய நோய், பக்க வாதம், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகலாம். நமக்கு வேலைப்பளு கூடிய இன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது நமக்கும்தான் நல்லது.

      சில வீடுகளில் பெரியவர்களை திருத்துகிறோம் என்று அவர்களின் தற்போதைய இயலாமையை காட்டி அடக்கிவிடுவார்கள். சின்ன குழந்தைகளையே இவ்வாறு நடத்துவது தவறு என்று சொல்லும் மனோதத்துவம், இதனை கடுமையாக எதிர்க்கிறது. ஏனெனில் இவர்கள் விவரம் அறிந்த பெரியவர்கள். நமக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருமுறையும் நம்மை நகர்த்தியவரகள். வாய் மூடி மௌனியாக.... இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக...இருப்பது அவர்களை உயிரில்லாத உடல்களாக்கிவிடும். இவையெல்லாம் மனதை பாதிக்கக்கூடிய விசயங்கள். அவர்களின் கடைசி நாட்களை துன்பமிகுந்தவையாக மாற்றிவிடும்.

      அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களை மாற்ற முயற்சிக்காமல் நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கடைசி மூச்சுவரை அவர்களை சுவாசிக்க வைப்பது நம்முடைய தலையாய கடமையாகும். அவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அடுத்த தலைமுறைக்கும் தேவை.  

                                ....... ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
                                          அழித்திட லெல்லாம் நின்செய லன்று காண்
                                தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
                                         வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
                                ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ
                                                                                                - மகாகவி பாரதியார்


             பெரியவர்களில் இன்னும் ஒரு பிரிவினர் உள்ளனர்.  தன்னை   எதிர்காலத்தை   முழுமையாக உணர்ந்து கொண்டு தன் பாதையை அழகாக அமைத்துக் கொண்டு   தேவைக்கேற்ப வசதியுடன் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். சுற்றியிருப்பவர்களை சார்ந்து இருக்கமாட்டார்கள். முற்போக்குவாதிகளாக இருப்பார்கள். பொதுவாக இவர்களுடன் இருப்பவர்கள் நிம்மதியான வாழ்க்கையை விரும்புவார்கள். இது dettached வகையினர். இந்த வகையினரின் முதுமைக் காலம் சௌகரியமாக இருக்கும். புதிய புதிய யுக்திகளை கற்றுக்கொண்டு தங்களை உற்சாகமாக வைத்திருப்பார்கள் . பிரச்சினை என்னவென்றால்    இவர்களின் பிள்ளைகள்தான் எல்லா விசயத்திற்கும் இவர்களின் ஆலோசனைக்காக காத்து இருப்பார்கள்.

            தங்களையும் முழுமையாக புரிந்து கொண்டு யாருக்கும் பாரமாக இராமல் , முழுமையான வாழ்க்கை வாழும் இவர்களை யாருக்குத்தான் பிடிக்காது.? சுற்றியிருக்கும் அனைவரையும் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கவும் செய்வதால் அபிமானிகளுக்கு பஞ்சமே இருக்காது சிறுவர் முதல் பெரியவர்வரை பட்டியல் இருக்கும். ஆஹா இப்படியும் உள்ளார்களா என்று கேட்கத்தோன்றுகிறதா?.

          உண்மையில் இது போல உங்கள் வீட்டுப் பெரியவர் இருந்தால், அவர்களைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும்வரை பிரச்சினையில்லை. திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டால் மனமும் சேர்ந்து பாதிக்கப்படும். சிறு குழந்தையை போல் மனதளவில் மாறிவிடுவார்கள். யாரையும் சார்ந்து இராமல், மற்றவருக்கு உதவி செய்து பழக்கப்பட்டதால் அசௌகரியத்தை வாய் விட்டு சொல்லவும் மாட்டார்கள். இத்தனை நாள் அவர்களின் அனுசரிப்பில் இருந்த நாம் இப்போது அவர்களை கனிவாக கவனித்துக் கொள்ளவேண்டும். பொதுவாக பெரிய இழப்பு ஏற்படும்போது - உ-ம், வாழ்க்கைத் துணையை இழப்பது போன்ற தருணத்தில் இத்தகைய பாதிப்புகள் இருக்கும். ஆல மரத்தை தாங்கும் விழுதுகள் போல நாம் அவர்களை தாங்கிப்பிடித்து தனிமை தவத்திலிருந்து வெளிக்கொணர வேண்டும். அவர்கள் சகஜ நிலையை அடையும்வரை நாம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களை இழக்கவேண்டியதாகி விடும்.

                   
  மூத்தவர் பொய் நடையும் - இள
                              மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்
                      வேண்டிய கொடுத்திடுவாள்- அவை
                              விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்
                                                                               - மகாகவி பாரதியார் 

கரையோரம் ஒரு விதை விழுந்தது
      ஆற்று நீரும் இதமான வெயிலும்
அதனை அழகாகவே வளர்த்தன
      பெரியதாய் வேர்பிடித்து வளர்ந்தபின்
கிளைகளில் பறவைகளின் கூடு
      விடியலை இசைத்து வரவேற்றது
விழுதுகள் சின்னதாக வந்தன
     அவற்றின் பாரமும் கூடியது
சற்று நாட்கள் சகித்து நின்றது
   
விழுதுகள் பூமி தொட்டுவிட
     பொறுமை காத்து வளர்ந்தன
எத்தனையோ புயல் தாண்டி
     விழுதையும் சேர்ந்து தாங்கியது
வேர் விட்ட விழுதுகள் நின்றன
    சில மரத்தை ஒட்டி பின்னி பரவின
மரத்திற்கும் விழுதிற்கும் உறுதிகூடியது
    இன்னும் பெரியதாக கிளைவிட்டது


மருந்தானது, பூசனைக்குரிய பொருளானது
    பல உயிர்களுக்கு புகலிடமானது
வாழ்த்து பெற்ற விருட்சமானது
     மரங்களுக்கு மனித நாகரிகம் தெரியாது
முதியோர் இல்லம் இல்லை போலும்
     தள்ளி வைத்தல், பிரிந்து செல்லுதல்
எந்தவித துக்க நிகழ்வும் இன்றி
    விழுதுகள் சூழ்ந்து ஒன்றாக கலந்தன


சிறு துளிகள் சேர்ந்து குளமாகியது
       முதல் துளி பிரித்தறிய முடியாமல்
நீர் வளையத்தில் ஒன்றாக கலந்தது
 அது போல்.....
வயதான மரத்திற்கு முடிவு இல்லாமல்
விழுதுகள் சூழ தல விருட்சமானது


இப்போது கேள்வி என்னவென்றால்
       கவிதையின் தலைப்பு பெருமை
பொறுமை காத்த மரத்திற்கானதா?
       கடமை தவறாத விழுதுகளுக்கா?

அன்புள்ள மகனுக்குக்கு
       ஆசிர்வாதங்களுடன் நான்
நீ அனுப்பி வைத்த அத்தனையும்
       தவறாமல் கிடைத்ததுள்ளன
ஆனால் ஏன் நனைந்துள்ளன
       இனிப்பில் உப்பின் சுவையும்
துணியின் கண்ணீர் கரையும்
        என்னை நினத்து அழுதாயா?

எனக்கு தெரியும் உன் நிலை
     பாவத்தை நினைத்து பயமா?
நீ யாராக இருந்தாலும்
      நீரூற்றி வளர்த்தது நானே
அப்போது பேசியதை மற
     எனக்கு யாரிடமும் கோபமில்லை

இங்கு வந்த பின் புரிகிறது
    அன்பு மட்டுமே சேமிக்கப்படுகிறது
இருளில்லாத வெட்ட வெளியில்
    வெளிச்ச விருட்சத்தின் வேர்
இரக்கம் கருணை பாசம் மட்டுமே
    மற்றவை கற்பூரமாய் கரைந்தன
 

கன்னத்தில் கை வைத்து
     இதயத்திரையில் திரும்பி பார்த்தால்
எண்ண அலைவரிசையில்
     அன்பின் முகவரிகள் மட்டும்
நாம் தந்ததும் பெற்றதும் காவியமாய்
      மனதின் ஒளிப்படமாய்......


வேரறுத்த கிளைக் கதைகளும்
     அவ்வப்போது வந்து நீதி சொல்லி
என்னையே தீர்ப்பெழுத வைக்கின்றன
      எனக்காக என்னிடம் பொய்கூற முடியுமா
நேசிக்க மறந்த சில சமயங்கள்
       மனித நெறியிலிருந்து தவறியுள்ளேன்


உண்மையை சொல்லப் போனால்
     கொதிக்கும் கொப்பரை, நெருப்பு மலை
என்றெல்லாம் இங்கு இல்லை
       மனிதாபிமானம் மட்டுமே நீதி
நம் கதையின் விமரிசகராய்
      நாமே சிரித்து அழுது அவமானப்பட்டு...


  ரகசியமாய் சொல்கிறேன்
 
   மன்னிக்கவும் மறக்கவும் செய்தால்
மனித்தத்துவம் தெய்வமாகிறது
     கடமை தவறாமலிருந்தால்
தெய்வத்தை மனிதனுள் உணரலாம்.


             இந்த முறை நாம் புரிந்து கொள்ளப்போவது எதையுமே எதிர்ப்போக்காய் செய்யும் பெரியவர்களை. அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாத முரட்டுக்குழந்தைகள் - உணர்ச்சிபூர்வமாக பேசினால் , Emotional blackmail செய்வது போலாகிவிடும். பொதுவாக வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து தன்னுடைய கடுமையான முயற்சியினால் முன்னேறியவர்கள் இந்த வகையினர். கடந்த கால அனுபவங்களின் தோல்வி வெற்றி காரணமாக    சில கோட்பாடுகளை வரையறுத்து வைத்திருப்பார்கள். அதனை நாம் மாற்ற முயற்சிக்கும் போது தகுந்த காரணங்களை விளக்கவேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்களை முதலில் பேசவிட்டு அவர்களின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒப்புதல் இல்லாமல் போனால்கூட குறுக்கிட்டு பேசக்கூடாது (எத்தனையோ முறை நம்முடைய அலுவலக அதிகாரிமுன் செய்திருப்போமே அதுபோலத்தான்). . அவர் பேசிமுடித்தபின் நம்முடைய சிரமங்கள், பின் விளைவுகள் ஆகியவற்றை கூறவேண்டும். அதற்கும் சில சமயம் செவி மடுக்கப்படாது. விவாதம் என்பதே பிரச்சினையை தலைகீழ் ஆக்கிவிடும்.  

             இந்த வகை பெரியோரிடம் அடிக்கடி கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டும் - ஒரு நாளிற்கு ஒரு முறையாவது. எப்போதுமே தொடர்பிலிருப்பது நம்முடைய பிரச்சினைகளை சட்டென புரிந்து கொள்ள உதவும். குடும்பம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது - அப்படி ஒரு தோற்றமாவது இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லதாக இருக்கும். அவர்களோடு கை கோர்த்து நடப்பதுதான் நல்லது. உண்மை என்னவென்றால் பிள்ளைகளின் நலனுக்காக பெரிய போராட்டமே நடத்தி அவர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்திருப்பார்கள். நாமும், அவர்கள் கடந்து வந்த பாதையின் சாதனை, வேதனைகளை புரிந்து வைத்திருப்போம். அதனை நம் துணையிடமும் பிள்ளைகளிடமும் தெளிவுபடுத்தி மரியாதையை பெற்றுத்தருவதும் நம் கடமை. " அவர் பிள்ளைதானே நான் எனக்கும் பிடிவாதம் உண்டு" என்றேல்லாம் போட்டிபோடாமல் விட்டுக்கொடுத்து பழக வேண்டும். எந்த நேரமும் மரியாதையை தேடிக்கொண்டே இருப்பார்கள்.

             பெற்றோர் எப்படியிருந்தாலும் நம் பராமரிப்பில் இருக்கும்போது, தனி கவனம் தேவை. முதல் பாகத்தில் சொன்னதுபோல "பாசம் காட்டி ஏமாற்ற முடியாது" . தனித்து நின்றல் அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. முதுமையின் காரணமாக அவர்களின் தனிமை பழக்கப்படாத போது தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். இன்னும் மரியாதை குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் ஐம்பது வயதில்கூட தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவம் உடையவர்கள். பொதுவாக இது போன்ற aggerssive வகையினரின் கடைசி நாட்கள்கூட போராட்டமாக இருக்கும். அவர்களை மாற்ற முடியாது, நம்மை மாற்றிக்கொள்வதால் இனிய சூழ்நிலையினை உருவாக்க முடியும்.

              எழுதவே தயக்கமாக இருந்தாலும் தேவையிருப்பதால் சொல்கிறேன். ஒரு உயிர் பூமிக்கு வருவதற்கு தரப்படுகிற அத்தனை முக்கியத்துவமும் அந்த உயிர் மண்ணைவிட்டு செல்லும்போதும் தரப்படவேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையின் கடமையுமாகும். அதை சரிவர செய்யாவிட்டால் குற்றம் உள்ள நெஞ்சு நம்முடையதாகிவிடும். பிறகு பரிகாரம் தேடி ராமேஸ்வரம் போகலாமா காசி போகலாமா என்று ஜாதககட்டை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்படும்.அது ஒரு அழகான விடியல்
காலையிலேயே மேகக்கூட்டம்
சில்லிட்ட உணர்வுடன்
விடுமுறையின் சூடான தேநீர்
சாரல் மழையின் வாசம்
எப்படியோ பூத்திருந்த டேலியா
லட்சு பாட்டியின் தனிமையில்
பகிர்ந்து கொள்ள ஆளில்லை


குட்டி வினுவும் அறிந்ததில்லை
கிழிக்க காத்திருக்கும் புத்தகங்கள்
கை வலிக்க வைக்கும் பாடம்
மின்னணு விளையாட்டுகள்
சின்ன சின்ன உணவு வகைகள்
இத்தனையும் இல்லாத உலகம்
பட்டாம்பூச்சி பார்வையில்
ரோசாப்பூ வண்ணத்தில்
குவித்திருந்த உதடுகள்
அழகிய ஆச்சரியத்தை காண
பிஞ்சு விரல் விரிந்து
வானம்வரை நீண்டது
சில மணி நேர சொர்க்கம்
இருவருக்குமேதான்

பாட்டியின் சின்ன வயது உலகம்
குட்டி வினுவிற்கு இல்லை
புல்வெளியின் பச்சை வாசம்
காவிரியியாற்றின் தளிர் நடை
வெள்ளி மீன்களின் துள்ளல்
ஆட்டோ அவசர அலறல் இல்லாத
பசித்தப்பின் தரப்பட்ட உணவு
வியர்த்து வழியாத ஆடைகள்
இதமான நடையில் வரும் பள்ளி
பாட்டுடன் படிப்பு , கவிதையாய் கணக்கு
எந்த நாளும் எந்த வேளையும்
கிட்டிய தாத்தா பாட்டியின் பரிவு
தேவதைக் கதைகள் அரக்கனும் உண்டு
 
 
வினுவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில்
மட்டுமே அனுமதிக்கப்பட்ட சொர்க்கம்
அவளுக்குத் தெரியாது என்னவென்றால்
முதியோர் இல்லத்தில் அன்று மட்டுமே
இல்லம் செல்ல அனுமதியுண்டு

           மூத்தோரை மட்டுமே என்னுடைய பதிவுகள் ஆதரிப்பதாக புகார் எழும்பியுள்ளது. என்னுடைய பதிவினை படிப்பவர்களில் அநேகமானவர் இளைய வயதுடையோர். அவர் தன் நண்பர்களுக்கு இது போன்ற பிரச்சினைக்கு ஆலோசனை கூற வேண்டியிருக்கும். தோளில் கை போட்டுக்கொண்டு மெதுவாக அவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பு உள்ளது. வயது, உடல் நிலை மற்றும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் நெறிகள் இவற்றின் காரணமாக முதியோரின் நிலை எடுத்துச்சொல்ல வேண்டியதால் ஆதரிக்கவேண்டியதுதான். நேற்றைய பதிவு முதியோரிடத்து பற்று வைத்திருக்கும் இளையவர்களுக்கானது. இனி இரண்டாம் பாகத்தின் தலைப்பில் வரும் "அவர்கள்" - இளையவர்களை குறிக்கும். நண்பனுக்காக தூது சென்று ஒரு கோப்பை தேநீர் பருகிக்கொண்டே அடக்கமாக பெரியவர்களிடம் பேசவேண்டிய செய்திகள்.

                     அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - இரண்டாம் பாகம்
 
          இருபது வருடத்திற்கு முந்தைய பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். அன்றைய இளையவர்கள் பெரிதாக கனவு கண்டதில்லை. பொருளாதார வசதியை வைத்து குடும்பம் அமைந்ததில்லை. உதாரணமாக இருபதுகளின் முன் பாதியிலேயே திருமணம் நடந்துவிடும் - அவன் மளிகை கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தாலும். அவர்களுக்கான புதிய வாழ்க்கை அமையும் வரை வீட்டிற்கு வரும் மருமகளை கவனித்துக்கொள்வது பெரியோரின் கடமை. புகுந்த வீட்டின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள முடிந்தது - எதிர்த்து பேசாமல். மேலும் அப்போது படிப்பிற்காக பெரிய அளவில் செலவுகளும் இல்லை.  

        இன்றைய சூழ்நிலையில் " முதலில் நல்ல வேலை பிறகு சிறப்பாக திருமணம்" என்பதே கொள்கையாகிவிட்டது. திருமண நாளன்றே தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் - இதில் பெற்றோரால் மறுக்கப்பட்ட காதல் திருமணம் வேறு சகஜமாகிவிட்டது. இன்றைக்கு ஐம்பதுகளில் இருக்கும் "அன்றைய இளையோர்" புரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பொருளாதார அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர், அதிக சம்பளம் தரப்படும் வேலைகள் அவர்களின் வாழ்நாட்களின் சந்தோச தருணங்களையும் இனமான உணர்வுகளையும் விலையாக பெற்றுக்கொள்கின்றன. சுட்டெறிக்கும் நெருப்பில் நித்தம் அவர்கள் வெந்தும் வேகாமலும் வெளிவருவதை புரிந்து கொள்ளுங்கள. வேலையை தூக்கிப்போட்டுவிட்டு வரமுடியாத பணச்சிறைக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் - குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவை காரணமாக.  

        அன்னையின் மடி, தந்தையின் ஆதரவு இவற்றை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவை சுயபரிதாபத்தை வரவழைக்கும். அன்பின் வலியறியாது (மனம்) வலித்துக்கிடப்பவர்கள். இன்றைக்கு வெந்த புண்களுக்கு மருந்திடும் நிலையில் இருப்பவர்களுக்கு நாளைய கொதிக்கும் எண்ணெய் கொப்பரை, சாணமலை போன்றவற்றில் நம்பிக்கை இருக்காது. வெற்று சிரிப்பில் வெளியுலகத்தின் பார்வைக்கு வைக்கப்படும் கண்காட்சி புகைப்படங்கள். 

          ஆகவே நான் சொல்வது என்னவென்றால், கைகளில் தூக்கி தோளில் போட்டுதான் அன்பு பாரட்டவேண்டும் என்றில்லை. உடலில் தெம்பு இல்லாவிடினும் வார்த்தைகள், பார்வைகள் மூலம் மயிலிறகாய் வருடிக்கொடுக்கலாம். விட்டுக்கொடுத்தல்களினால் தேவையில்லாத நெருடல்கள் மறைந்து தேவைப்படும் போது மயிலிறகு வருடல்கள் நமக்கும் கிட்டும். 


                          பயமில்லை பரிவொன்றில்லை- எவர்
                                பக்கமுன் நின்றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
                         நயமிகத் தெரிந்தவன் காண்-தனி
                                 நடு நின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
                                                               - கண்ணன் என் தந்தையில் பாரதியார்   அடிக்கடி குறை சொல்லிக்கொண்டும் கோபப்பட்டுக் கொண்டிருக்கும் வயதானவர்களை சமாளிப்பது எப்படி? இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் பெரியவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதுதான். இது சரிபடாது என்று விட்டுத்தள்ளாமலும், வேறு எங்கேயும் கொண்டு தள்ளாமலும் இருப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்.

          முதலில் குறை சொல்வது பற்றி. socio psyco analytic theoryன்படி குறை சொல்பவர்கள் மற்றவரை சார்ந்து இருக்கிறார்கள். சார்ப்பு தன்மை என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வரும். அவர்கள் நம் மீது அக்கரையும், நம்பிக்கையும் வைத்து இருக்கிறார்கள் , அப்படி என்றால் நாம் சரியாகவே நடந்து கொள்கிறோம் என்றாகிறது. அதையும் மீறி குறை சொல்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

       ஏதாவது தவறாக நடந்துவிடுமோ ? அதன் விளைவாக குடும்பத்திற்கு தீங்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்ற பயம்தான். பெரியவர்கள் அவர்களுக்கு பிறகான காலத்திற்கும் குடும்ப நலனை எதிர்பார்ப்பார்கள். சில சமயம் தகுந்த விவரம் சொல்லாமல் நாம் விடுவதும் காரணமாக இருக்கும். உதாரணமாக இரவு வீடு திரும்ப நேரமாகும் என்பதை முன்பே தெரிவித்து இருக்கலாம். அந்த சில மணி நேரத் தாமதம், பயத்தினை ஏற்படுத்தி பதட்டப்பட வைக்கும். இது போன்ற சூழ்நிலையில் அட்ரினலின் சுரந்து உடலை சமப்படுத்தும். ஆனால் வயதானவர்களுக்கு இது குறைவதால், வயிற்றில் அமில சுரப்பு ஏற்பட்டு அல்சர் உருவாகலாம். பிறகு சூழ்நிலை சீரானாலும்கூட இந்த பாதிப்பு இருக்கும். மருத்துவருக்கு சிறிய அளவில் தோன்றும் இந்த கோளாறு நடைமுறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை மறுத்தல், சத்து குறைதல், கை கால் குடைசல் எடுப்பது போன்றவை ஏற்படும். எழுந்து நடக்கவே தெம்பில்லாதது போல ஆகிவிடும். மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். 
          
         தன்னை பற்றிய கழிவிரக்கம் கூடிப்போய் சுற்றி இருப்பவர்களை பற்றி தவறாக நினைக்கத்தோன்றும். தவறான வார்த்தைகள் வரும் - "என்னை மதிப்பது இல்லை , என்னை ஏமாற்றி விட்டாய், எனக்கு மட்டும் நல்ல பிள்ளையை கடவுள் கொடுக்காமல் போய்விட்டார் , நான் எப்ப போய் சேருவேன்னு காத்திருக்க" - இதில் ஒன்றிரண்டு வார்த்தைகளைக்கூட தாங்கும் சக்தி நியாயமான உள்ளங்களுக்கு இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் இவை வெளிவருகின்றன. பதிலுக்கு நாம் பேசினால் இது இன்னும் அதிகரிக்கும். அதன் விளைவாக ஏற்படும் கோபம், அழுகை போன்றவை அவர்கள் உடல் நலத்தை பாதிக்கும். கண்டிப்பாக நாம் விரும்பும் சூழ்நிலை வீட்டில் இருக்காது. நமது பிரியத்திற்குரிய பெற்றோருக்கும் நமக்குமான உறவு மனைவி முன்பாகவோ குழந்தைகள் அல்லது மற்றவர் முன்பாகவோ கேள்விக்குறியாவதை விரும்பமாட்டோம். இதனால் நமக்கும் மன அழுத்தம் ஏற்படும்.

  இத்தனைக்கும் காரணம் நாம் அவர்களுடன் சரிவர செய்தி பரிமாறிக்கொள்வதில்லை என்பதுதான். வாய் மொழியாக தரப்படும் விவரங்களின் அர்த்தங்களைகூட அங்க அசைவுகள் தவறாக மொழி பெயர்க்கும். அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கும்போது எதிர் கேள்விகளுக்கு விளக்கம் நிறைய தரவேண்டி இருந்தாலும் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க முடியும். அதனால் நம் மீதே நமக்கு நம்பிக்கைகூடும். நல்லதுதானே! இத்தனை பார்த்து பார்த்து பழக வேண்டுமா என்று கேட்டால் ஒரு காலத்தில் நம்முடைய மழலையை மொழிபெயர்த்து நம்மை புரிந்து கொண்டவர்களை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  

           பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம்
                         பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு
          நல்வழி செல்லுபவரை மனம்
                        நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு
                                                  - கண்ணன் என் தந்தையில் பாரதியார்           முதியோர் இல்லம் பற்றி பலவித கருத்துக்கள். தொண்டு நிறுவனங்கள் முதல் பொது நிறுவனங்கள் வரை முதியோர் இல்லங்களை நடத்துகின்றன. இத்தகைய சேவைகள் இலவசமாகவும் கட்டண சேவையாகவும் வழங்கப்படுகின்றன. வெளியூரிலோ வெளிநாட்டிலோ வேலை பார்ப்போரின் தனித்து இருக்கும் பெற்றோருக்கு முதியோர் இல்லம்தான் புகலிடம். மாதகட்டணத்தை செலுத்திவிட்டால் போதும் மிக நன்றாக கவனிப்பதாக நண்பர் சொன்னார். யாருமில்லாமல் தவித்துக்கொண்டிராமலும் , திரை கடல் தாண்டி திரவியம் தேடும் இளையவர்களின் மன நிம்மதிக்காகவும் இதனை ஆமோதிக்கலாம். உள்ளூரிலேயே பகல் நேரத்தில் யாருமில்லாத தனிமையில் நோய்வாய்ப்பட்ட பெரியவர்களை நன்றாக பராமரிப்பதற்காக முதியோர் இல்லம் தேவைதான். அதனால்தான் பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு நல சட்டம் 2007ன்படி அரசு முதியோர் இல்லங்களை உருவாக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இல்லாதோருக்கு.....

அது பூக்கள் இல்லாத தோட்டம்
          - தேனீக்களின் இன்னிசை இல்லை
ஒளியே காணாத இருண்ட கண்டம்
         - இரவு பகல் இரண்டும் தெரியாது
உவர்ப்பு உணரும் சதுப்பு நிலம்
        - உயிரினங்களின் உற்சாக ஒலி எங்கே?
உயிர் மூச்சு பருகும் ப்ரணவ பிரஜைகள்
        - கடைசி காற்றின் வருகைக்காக காத்திருப்பு!
உலகத்தின் முடிவான நாளுக்கான தேடல்
       -  முகாரியில் தொடங்கும்  பூபாளம்...?
நேற்று அம்மு பாட்டியென்றால்
        இன்று முதலிடத்தில் காசி தாத்தா
கடவுள் முன் பஜனை , வேண்டுதல்
       இங்கு சுகம் வேண்டப்படுவதில்லை
முன் சென்றவரின் நாட்களின் தாக்கத்தில்
       "இறைவா, யாருக்கும் பாரமில்லாமல்...."
இது மட்டுமே வரமாக கோரப்படும்.
        வழியற்றோருக்கான முதுமக்கள் தாழி


பசிக்கு அன்னையை அழைக்கும் மழலை
       பள்ளி சென்று திரும்பிய உற்சாக பிஞ்சுகள்
பரதமோ எதுவோ கற்று வென்ற பரிசுகள்
      காதலின் கண்ணாமூச்சி விளையாட்டு
வாய் பேச்சு , கை கலப்பு எதற்காகவாவது
       அவசரமாக அளிக்கப்பட்ட நாட்டமை பதவி
பெரிசு... கிழவி... என்றழைக்கப்பட்டாலும்
       சமயத்தில் கிட்டும் இதமான அனுசரணைகள்
எந்த நேரத்திலும் போர் அறிவிக்கப்படும்
       ஆயிரமாவது உலக யுத்தம் ஆரம்பிக்கலாம்
இத்தனை அதிகளத்திற்கும் நடுவே
       பரமபிதாவிடம் கேட்க ஆயிரம் வரங்கள்
ஒன்றுகூட தனக்கானதாக இல்லை.
       இறுதி நாட்களுக்கான அறிவிப்பின்றி
 
இனிய கனவாக மரணம் பரிசு.....!

இரண்டு நாள் முந்தைய செய்தி
      மதுரை தாயம்மாள் பற்றிய தகவல்
இருந்தும் இல்லாமல் போனவள்
    பத்து பெற்றும் பராமரிப்பு இல்லை.
சொத்து தந்தும் சொந்தம் இல்லை
    பெற்ற பிள்ளைகள்கூட கை விட்டனர்
பாட்டியின் வயது எண்பத்து ஐந்தாம்
    அதிகாரிகள் மனது வைக்க வேண்டுகோள்
கண்ணில் பரிதவிப்புடன் பாட்டியின் படம்
     புலியை தத்து எடுக்கும் நாட்டில்
விலங்கைவிட மனிதன் மட்டம்!
 

தலத்தில் மாண்புயர் மக்களை பெற்றிடல் 
        சாலவே யரிதாவதோர் செய்தியாம்! 
                                                                          - பாரதியார் 

       இனி என்ன சொல்வது. சாலையோரத்தில் பேருந்து நிலையங்களில் கையேந்தும் முதியவர்களை பற்றி பேசப்போவதில்லை. அதை நியாயப்படுத்தவும் போவதில்லை. என்னுடைய பார்வையெல்லாம் பெற்றபிள்ளைகள், உற்றோர் என பலர் இருந்தும் இல்லாமல் தனித்து விடப்படும் முதியவர்களை பற்றியதே. இருந்தும் இல்லாமல் என்பது பொருளாதாரத்தை பற்றி மட்டுமல்ல, உலகத்தின் பார்வையில் அவர்களுடைய நிலை பற்றியும்தான். என்னதான் வருங்காலத்தின் தேவையறிந்து சேர்த்து வைத்திருந்தாலும் பிள்ளைகளிடம் மறுக்க இயலாமல் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம் என்றால் சொத்தை பிரித்து தராத காரணத்திற்காக அவர்களை திரும்பிகூட பாராமல் இருப்பது வன்கொடுமையல்லவா? சட்டம் போட்டால் பாசம் கிட்டுமா? 


        "பாசம் உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்!" கவிஞரின் பாடல் உண்மையல்லவா. எங்கேயோ எப்போதோ தொலைத்து விட்ட எம்சமுதாயத்தின் மாண்புகளை எப்படி உயிர்பிப்பது? 

 தோற்றத்தில் ஏதாவது மாற்றமா?
    கண்ணாடி ஏதும் சொல்லவில்லை
நேற்றுவரை இருந்த அதே உருவம்தான்
    கோபித்துச் சென்ற தலை முடிகள்
காலி செய்த மேற்பரப்பின் மிச்சத்தை
    கோடிட்டது வெள்ளை கடலாய் நரை
முகத்தின் சுருக்கம்கூட புதிதல்ல
    இடை இடையே வரும் இருமல்
இன்றும் அதே சுருதிதான்
    நடையில் வந்த தடுமாற்றம்கூட
பத்துமாத பழையதுதான்
    அப்படியேதான் மனதில் துணையில்லாத 
ஆயிரம் நாட்களான தனிமை
     எல்லாமே நேற்றைய சங்கதிதான்
ஆனால்,
     தெளிவில்லாத பார்வையில் பட்ட
சன்னலோரத்து ரோஜா சிரித்தது
     மூத்தகுடிமகனை வாழ்த்தியதோ...?
தாத்தாவிற்கு அறுபதின் தொடக்கம்!
    எண்களின் விளையாட்டின் ஆரம்பம்!

இனி ரயில் பயண கட்டண சலுகைகள்
        - பக்கத்து ஊருக்குகூட சென்றதில்லை
வருமான வரியில் கழிவு
        - இந்த வயதில் வருமானமா? 
சொத்தை பாதுகாக்க சட்டம்
       - சேர்த்து    வைத்திருந்தால்தானே
முதியோர் உதவித்தொகை
       - எப்படி?  யாரிடம் வாங்குவதாம்? 
இன்னும் பல செல்ல அறிவிப்புகள்.

தாத்தாவின் இன்றைய நிலைக்கு 
   தேவையில்லாத பல இருந்தாலும்
மெச்சிக்கொள்ளத்தக்க சேதிகள்தான்
    கிராமத்து பனையேறி தாத்தாவின்
பனையேறாத நாட்களின் தேவை ஒன்றுதான்
    இன்றைய கேள்வியும் அதுதான்

மதிய உணவு இன்றைக்காவது கிட்டுமா?


                                  மூத்தகுடிமக்களுக்காக அரசாங்கம் ஆயிரம் சலுகைகள் அறிவித்தாலும் சட்டங்கள் போட்டாலும் உரியவரிடம் உரிய நேரத்தில் இவற்றை கொண்டு சேர்க்கவேண்டியது நம் போன்றோரின் கடமையுமாகும். இது போன்ற விபரங்களை தெரிந்து கொள்வது, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம்தானே. நம்முடைய மனிதாபிமானம் மட்டுமே மனித்துவத்தை காக்கும்.

           கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆகவேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும். இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.

         மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது. அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத்தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.
 
           அடுத்தவரின் உதவி நாடும், வயதான காலத்திலும் - உரிமையிருந்தாலும், உண்மையானவர்களிடம் மட்டுமே ஆதரவு தேடும். அது கிட்டிவிட்டால் பூரண மன அமைதி கிட்டும். 

பட்டுத்தெரித்த நீர் திவலைகள்
நெஞ்சினிலே நினைவலைகள்
மழை என் பாட்டியை போல
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!
எனக்கும் பாட்டிக்குமான நாட்கள்
சூர்ப்பனகைக்கும் மகிஷிக்குமானது
என்ன இப்படி என்கிறீர்களா?

அம்மா ஆசிரியப்பணியிலும்
 அப்பா அரசாங்கப்
பணியிலுமாக
வீட்டிலும் பணியின் நிழல் தொடர,
எனக்கோ பாட்டிதான் எல்லாமும்!
தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்தால்
வெடிபோடுவது வெளியில் அல்ல
பாட்டியின் கோட்டை அடுப்பில்தான்
புகை அமர்த்த ஊதினால்
பொட்டுவெடி பறையடிக்கும்
சர வெடியின் அதிரடியில்
சல்லடை சல்லடையாகிவிடும்
விளைவாக பாட்டியின் கச்சேரி
அப்புறம் என்னுடைய எதிர் பாட்டு
இத்தனைக்கும் பிறகு
தோல்வி வெற்றியை கணக்கிடாத
எதிரணி தலைவர்கள்போல கைகுலுக்கி
அறுசுவை(?) விருந்தாடுவோம்
பாவம்! நானும் இல்லைஎன்றால்
பிறகு யார்தான் பட்சணங்களை சாப்பிடுவது.

பாட்டிக்கும் அம்மாவிற்குமான போரில்
நான் அவளுக்கு எதிர் முகாமில்
புதிய ஆள்போல் முகம் திருப்புவேன்
தேர்தல் வாக்குறுதிகள் போல
இலவச அறிவிப்பு தருவதோடு நில்லாமல்
உண்மையிலேயே தின்பண்டங்கள் தந்து
மறுபடியும் ஆட்சியை பிடித்து...
எனக்காகவே அம்மாவிடம்
சமாதான படலமும் ஆரம்பிக்கும்


பாட்டியின் இனிய பக்கமும் உண்டு
பேறு காலத்தின் தேவைகளுக்கு
எல்லோரும் தேடுவதும் அவளைத்தான்
இரவு பகல் எந்த நேரமும்
தாயையும் பிள்ளையையும்
தாதிபோல பக்குவம் பார்த்து சீராட்ட
தள்ளாமையை தள்ளி வைப்பாள்.
எனக்கும் அவள்தான் துணை.
எப்படியிருந்தாலும் அவள் என் பாட்டி!


என்னுடய பேரன்கள் எப்படியென்றால்.....?
இன்றைய முதியோர் இல்ல உலகத்தில்
சின்ன குழந்தைகளான பாட்டிகளும்
பெரியவர்களாகிவிட்ட பேரன்களும்
சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!

கொதிக்கும் எண்ணை கொப்பரை சட்டி
சாட்டை சவுக்கடி புராணகாலத்து பழசு
இப்பொதெல்லாம் உடனடி நீதிதான்
கத்தி எடுத்தால் கத்திதான் நீதிபதி
நிழல் இல்லா வெட்ட வெளியில்
கொதிக்கும் மணலின் சூடு பரவ
குடை தேடுமா? செருப்பை தேடுமா?
அநியாயமாய்
என்றைக்கோ வெட்டி போட்ட மரம்
நினைவில் நீதிபதியாய் நிற்கிறது
தன்னெஞ்சு அரித்தல் இதுதான்
மனிதனின் நீதிமன்றத்தை மறுக்கலாம்
கடவுளின் தண்டனைக்கு மாற்று...?

கவிதாவின் நிலையும் அதுதான்
நடப்பின் வலியைவிட
உண்மை ஊசியாய் குத்தியது
வசு அத்தனை தரம் தாழ்ந்தவனா
இல்லை அவள்தான் தாழ்த்தியது
யாருமில்லாத பூலோகம் வேண்டி
அவளின் விருப்பமாக அவன் ஆட
முன்பு அவள் எடுத்த ஆயுதம்
அடுத்தவள் கையில் சிக்கியது
குழந்தை பேற்றிற்கான இடவெளியில்
கட்டுப்பாட்டு விசை திசை மாறியதே!


மனிதனை மனிதனாக்க மனிதர் தேவை
போற்றவோ அல்லது தூற்றவோ
அவளுக்கான நியாயத்தை பேச
வெற்று பூமியில் யாருமில்லை
வாய் வார்த்தையாக செயலாக அவளால்
பிரித்து போடப்பட்ட அவன் பெற்றோர்
'அவர்கள்' சொன்னால் கேட்பானா?
அவளுக்கும் அதில் விருப்பமில்லை
செயலும் பலனும்அவளுடையது


இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் எடுக்கின்ற முடிவைதான் கவிதாவும் எடுக்கிறாள். நீதிமன்றம், விவாகரத்து... என மாறிவிடும். பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இளையவர்களுக்கு இன்றைய நடப்பே பெரியதாகிவிடும். திருமண வண்டி அவ்வப்போது குடை சாயும்போது நிமிர்த்தி வைக்க அனுபவமிக்க பெரியோர் தேவை. அறுபதுகளில் ஓடி கொண்டிருக்கும் பழைய வண்டிகளின் கதையும் இதுதான். அனுபவத்தால் மட்டுமே ஆழிப்பேரலையைகூட ஆரவாரமில்லாமல் அடங்கமுடியும்.


தன்னுடைய சம்பாத்தியத்திலோ அல்லது சொத்துக்களினால் வரும் வருவாயைக் கொண்டோ தன்னை பராமரித்துக் கொள்ள முடியாத மூத்தகுடி மக்கள்(60 வயதிற்கு மேற்பட்டவர்) அல்லது பெற்றோர் (60 வயதிற்குட்பட்டவராக இருந்தாலும்) மாவட்ட அளவிலான தீர்ப்பாயத்தை அணுகி மனு தாக்கல் செய்து இந்த சட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

மேற்படி மனுதாரர்கள், தங்களின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும்படி , தங்களின் பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்கள் ( 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மீது மனு தாக்கல் செய்யலாம்.

மனுதாரர் அல்லது அவர் சார்பாக நியமிக்கப்பட்ட நபர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மனுதாக்கல் செய்யலாம்.

பிள்ளைகள் எனப்படுபவர் மகன், மகள், பேரன், பேத்தியாக அல்லது தத்து பிள்ளைகளாக இருக்கலாம். வாரிசுதாரர் எனப்படுபவர் குழந்தை இல்லாத மூத்தகுடி மக்களின் சொத்துக்களின் மேல் உரிமை அனுபவிப்பவர் அல்லது உரிமை பெறப்போகின்ற உறவினராக இருக்கலாம்.

பராமரிப்பு செலவுத்தொகையானது ஒருவரது உணவு, உடை தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ஆகியன அடங்கும்.

மனுதாரரின் வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டத்தீர்ப்பாயத்திலோ , யார்மீது மனுதாக்கல் செய்யப்படுகிறதோ அவருடைய வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டத்தீர்ப்பாயத்திலோ முறையிடலாம். பிள்ளைகள் வெளி நாட்டில் வசித்தால் அதற்குரிய அதிகாரிகள் மூலம் தீர்ப்பாயம் ஆணை வழங்கும்.

மனுதாரரின் கோரிக்கை சரியானதாக இருந்தால், அவர்களது பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்களுக்கு மனுதாரரின் பராமரிப்பிற்கான தொகையை மாதாமாதம் தரும்படி தீர்ப்பாயம் ஆணையிடும். இதனை செயல்படுத்தாத பட்சத்தில் பிள்ளைகள் அல்லது வாரிசுதாரர்கள் கைது செய்யப்படலாம்.

மனுதாரருக்கு தரவேண்டிய தொகையினை தண்டத்தொகையுடன் சேர்த்து கட்டவேண்டி வரும். அல்லது சிறைசெல்ல நேரிடும்.

மூத்தகுடிமக்களின் உயில் மூலம் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை பராமரிக்காமல் கைவிட்டால், தீர்ப்பாயத்தினை அணுகி சொத்துக்களை
(தானமாக தந்திருந்தாலும்) திரும்ப பெறமுடியும். ( மேற்படி சட்டம் நடைமுறைக்கு வந்தபின் -2007ற்கு பிறகு சொத்து மாற்றப்பட்டிருக்க வேண்டும்.)

முழு விவரங்களை அறிய
www.india.gov.in/allimpfrms/allacts/2180.pdf 

பலவீனமான முதியவர்களுக்கு சத்துணவுக் குறைபாட்டினால் பசியின்மை, குறைந்த  அளவு உணவு உட்கொள்வது,   தானாகவே எடை குறைவது போன்றவை ஏற்படலாம்.
   
ஊட்டச்சத்துள்ள எளிய உணவு வகைகள் உட்கொள்ளவும்.  
பழங்கள், காய்கறிகள், முழுமையான உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொழுப்புக் குறைவாக உள்ள பால் கடலை வகைகள், சோயாபீன் வகைகள், மீன் ஆகியவற்றை உண்ணலாம்.  

பதப்படுத்தப்பட்ட உண்வு வகைகளான ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்கவும் பூண்டு, வெங்காயம், மற்றும் நார் சத்து மிக்க காய்கறிகள், தக்காளி, சோயா, மற்ற பருப்பு வகைகள், சிட்ரஸ் வகைப்பழங்கள், திராட்சைகள் பச்சைத் தேயிலை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

இறைச்சி, பால்பண்ணைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட சிலவகை உணவு வகைகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கோக்/பிஸ்கட்டுகள் ஆகியவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ உட்கொள்ள வேண்டும்.  

இதய நோயாளிகள் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும். கொழுப்பு அதிகமுள்ள சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும்..

ஹைப்பர்டென்ஷன் இருந்தால் உப்பின் அளவைக் குறைக்கவும். கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை ஆதிகரிக்கவும்.

பொதுவாகவே சரியான இடைவெளி (3 மணி நேரம்) விட்டு குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணலாம். காலை உணவை கண்டிப்பாக உண்ணவும்.

   
அதேபோல், இரவு உணவை முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட வேண்டும். வறுக்கப்பட்ட உணவை விட கொதிக்க வைத்த ஆவியில் வேகவைக்கப்ப்ட்ட உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிட வேண்டும் .

குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ஒரு வேளையாவது உண்ணுதல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.