மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்



அது ஒரு அழகான விடியல்
காலையிலேயே மேகக்கூட்டம்
சில்லிட்ட உணர்வுடன்
விடுமுறையின் சூடான தேநீர்
சாரல் மழையின் வாசம்
எப்படியோ பூத்திருந்த டேலியா
லட்சு பாட்டியின் தனிமையில்
பகிர்ந்து கொள்ள ஆளில்லை


குட்டி வினுவும் அறிந்ததில்லை
கிழிக்க காத்திருக்கும் புத்தகங்கள்
கை வலிக்க வைக்கும் பாடம்
மின்னணு விளையாட்டுகள்
சின்ன சின்ன உணவு வகைகள்
இத்தனையும் இல்லாத உலகம்
பட்டாம்பூச்சி பார்வையில்
ரோசாப்பூ வண்ணத்தில்
குவித்திருந்த உதடுகள்
அழகிய ஆச்சரியத்தை காண
பிஞ்சு விரல் விரிந்து
வானம்வரை நீண்டது
சில மணி நேர சொர்க்கம்
இருவருக்குமேதான்

பாட்டியின் சின்ன வயது உலகம்
குட்டி வினுவிற்கு இல்லை
புல்வெளியின் பச்சை வாசம்
காவிரியியாற்றின் தளிர் நடை
வெள்ளி மீன்களின் துள்ளல்
ஆட்டோ அவசர அலறல் இல்லாத
பசித்தப்பின் தரப்பட்ட உணவு
வியர்த்து வழியாத ஆடைகள்
இதமான நடையில் வரும் பள்ளி
பாட்டுடன் படிப்பு , கவிதையாய் கணக்கு
எந்த நாளும் எந்த வேளையும்
கிட்டிய தாத்தா பாட்டியின் பரிவு
தேவதைக் கதைகள் அரக்கனும் உண்டு
 
 
வினுவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில்
மட்டுமே அனுமதிக்கப்பட்ட சொர்க்கம்
அவளுக்குத் தெரியாது என்னவென்றால்
முதியோர் இல்லத்தில் அன்று மட்டுமே
இல்லம் செல்ல அனுமதியுண்டு

2 comments:

//காவிரியியாற்றின் தளிர் நடை
வெள்ளி மீன்களின் துள்ளல்
ஆட்டோ அவசர அலறல் இல்லாத
பசித்தப்பின் தரப்பட்ட உணவு//


கவிதை அருமை. வாழ்த்துக்கள்

நன்றி மதுரை சரவணன்.
காலையிலேயே சிரிப்பை தொலைத்துவிட்டு கத்தி முனையில் நிற்கும் பார்வையுடன் பள்ளிப்பேருந்திற்காக காத்திருக்கும் பிள்ளைகள், இழந்தது அதிகம். உண்மைதானே?