மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இலக்கில்லாமல் சுற்றும்
உலகத்திற்குத் தெரியுமா
இதுவரை சுற்றிய கணக்கும்
இனி சுற்றப்போகின்ற கதையும்

என்றைக்கு ஆரம்பித்ததோ
கவலைப்படாமல் சுற்றுகிறது
தன்னை சுற்றிக் கொள்வதுடன்
பிள்ளை வரம் வேண்டி
அரச மரம் சுற்றும் பெண்போல்
சூரியனையும் மூச்சு வாங்க
உருண்டு உருண்டு சுற்றுகிறதே
எனக்குதான் மெத்த கவலை

சூரியனிற்கு அருகில் நின்று
சுற்றிக் கொண்டிராமல்
ப்ளூட்டோ நெப்டியூன் போல
பதின் வயதுப் பெண் பின்
சுற்றும் வாலிபனைப்போல
இடைவெளிவிட்டு சுற்றலாமே?
ஒவ்வொரு சுற்றிற்கும்
எனக்கு கணக்கு இருக்கிறதே

ஒரு சிட்டையில் குறித்து கொண்ட
மளிகைக் கடைக்காரன் போல
வரவும் செலவும் சரியாகிறதே
உலகத்திற்கு கணக்கில்லையா?
அன்பு குட்டிம்மாவிற்கு,

      இப்படித்தான் உன்னை சின்ன வயதில் நான் அழைத்தேன். நலமாக இருக்கிறாயா?.அப்போது நீ சிறியவள் என்பதால் உன்னை நான் கவனிக்க உன் அண்ணன் அப்பாவின் கவனிப்பில் இருந்தான். அண்ணனுக்கு என் அருகாமையும், அப்பாவிற்கு நீ செல்லமகள் ஆனதும் எப்போது என்று என்னால் நினைவுபடுத்திக்கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு கோட்டில் நம் பிரிய நேரிட்டது. அந்த கோட்டின் காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை உன் அப்பா உன்னிடம் செல்லம் கொஞ்சியது கூட, நீ சரியாக வளர்க்கப்படாமல் போய்விடுவாயோ என்று எனக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம். காலம் முழுவதும் நீ என் பார்வையிலேயே இருக்கப்போகிறாய் என்றால் நான் கவலைப்படத்தேவையில்லை. உன்னை வேறு இடத்திற்கு அனுப்பும் பொறுப்பு எனக்கு இருந்தது. அது காலத்தின் கட்டாயம்.

      நானும் நிறைய தடவை யோசித்தது உண்டு, ஏன் ஒரு புதிய குடும்பம் உருவாக பெண்தான் வீட்டை விட்டுச் செல்லவேண்டுமா? கட்டிக்கொடுப்பது என்பது ஆணிற்கு கிடையாதா என்று?. குழந்தை பிறப்பு என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்டது.
ஒரு பெண் தாங்கும் கரு , புதிய பாடங்களையும் பார்வைகளையும் சூழ இருப்பவர்களுக்குத் தரும். எளிதாக தனக்கென்று ஒரு இடத்தை பெண்ணால் கணவன் வீட்டில் உருவாக்கிக்கொள்ளமுடியும். ஆனால் ஆணிற்கு விருந்தாளித்தனம் - பொறுப்பில்லாமல் அனுபவிப்பது - நிறைய ஆண் சிங்கங்கள் செய்வது போன்று - வந்துவிடும். பொறுப்பான பங்களிப்புகள் மட்டுமே உறவுகளை மேம்படுத்த முடியும். யாரால் எது முடியுமோ அந்த பொறுப்பை உணர்ந்து சமுதாயம் சட்டதிட்டங்களுடன் உருவாகியுள்ளது. விதி விலக்குகள் எப்போதாவதுதான் வெற்றி பெறும்.

       உன் கணவர் அப்பாவிடம் சொன்னாராம், உன்னிடம் என்னை பேசச்சொல்லி. உன் குரலை கேட்டால் நான் உடைந்து போய்விடுவேன் கண்ணம்மா. என்னுடைய வார்த்தைகள் காற்றலையில் கரைந்து போவதையும் நான் விரும்பவில்லை. எனவேதான் இக்கடிதம். இது உனக்கும் எனக்கும் மட்டுமான இணைப்பு. உனக்கு வேண்டும் நேரத்திலெல்லாம் இதனை படித்து என்னுடன் கைகோர்த்து உலா வரலாம். நீ என்னுடன் இருந்தபோதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இப்படி கரைகிறேன் என்று கேட்கிறாயல்லவா?. இப்போதும் உன்னுடன் நான் பேசவில்லை எனில் அம்மாவின் அன்பு மடி உனக்காக காத்திருப்பதை நீ உணராமல் போய்விடுவாய்.
குமரி என்ற பருவத்திலிருந்து பெண்ணாக , அன்னையாக மாறும் போது உடம்பிலும் மனதிலும் பல மாற்றங்கள் நிகழும். எதிர்காலம் பற்றிய பயம், பதட்டம், எதிரில் இருப்பது தெரியாத பனி மூட்டத்தில் சிக்கிக் கொண்ட உணர்வு வரும். கண்ணை மூடிக் கொண்டு காற்றில் ஏதாவது கரம் நம்மை பற்றிக்கொள்ளாதா என்று தேடும். மற்றவரிடம் எடுத்துச் சொல்ல முடியாத உணர்வுகள் தோன்றும். அப்போது உன்னை மடியிலிட்டு தட்டிக்கொடுத்து உறங்க வைக்க அம்மா இருக்கிறாள் என்பதை நீ நினைவு கொள்ள வேண்டும்.

     ஒரு அழகான குடும்பத்தில் உன்னை இணைத்து கொண்டுள்ளாய். கடவுள் வரைந்துள்ள குடும்ப வரை படத்தில் நீதான் அடுத்த கட்டத்தை உருவாக்கப் போகும் அடிப்படை ஓவியம்.
காட்டிலும் வனத்திலும் ஆற்றங்கரையிலும் இருக்கும் மண் விளையாட்டு பொம்மையாகவோ, வயிற்றுபசி தீர்க்கும் உணவு சமைக்குக் பாத்திரமாகவோ, கலை நயம் மிக்க சிற்பமாகவோ , மருந்தாகவோ மாற பக்குவம் செய்யப்படவேண்டும். ( கடற்கரையிலிருக்கும் மண்தான் எலெக்ட்ரானிக் பொருட்களின் மூளையை தாயாரிக்கவும், ஆற்றல் மிக்க அணு சக்தியை உருவாக்கவும் பயன்படுகிறதாம்.) நீ என்னவாகப் போகிறாய் என்று நீதான் முடிவு செய்ய வேண்டும். உன்னை நீ உருவாக்கிக் கொள்வதில் குழப்பம் மேலிட்டால் தோழியாக, நம்பிக்கையான தாதியாக நான் இருப்பதை மறவாதே.

         மகாபாரதப்போருக்கு காரணம் திரௌபதி மைத்துனனான துரியோதனனை செய்த கேலிச்செய்கைதான். ஒரு சிறிய விளையாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உறவுகளுக்கிடையே பேரழிவை உருவாக்கியது. எனவே, யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
உன்னை உருவாக்கிக்கொள்ளும் பணிக்கு அங்குள்ள ஒவ்வொருவரும் உதவப் போகிறார்கள். கை நீட்டும் புதிய உறவுகளை சினேகித்து அனுபவத்தின் காலடியில் தடம் பார்த்து நடந்து செல், . உன் வாழ்க்கையில் தென்றல் வீசி சாரலும் கவிபாடும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.
 


3. ஒரு மகளின் மகளான அன்னை. 

அன்பு மகளுக்கு
        அம்மாவின் ஆசை முத்தங்களுடன் கடிதம். நலமாக இருக்கிறாயா? இங்கு அனைவரும் நலம். ஊரில் மற்றவர்கள் அனைவரும் நலமா? அங்கு உனக்கு எப்படி உள்ளது?. உனக்கு என் மேல் கோபம் என்று நினைக்கிறேன். அழுத விழிகளுடன் நீ சென்றது எனக்கு இன்றைக்கும் விழித்திரையில் காட்சியாக படிந்துள்ளது. கண்ணை மூடினால் என் கண்மணி என்ன செய்கிறாளோ என்று கலங்குகிறேன். எதற்கும் கெடுபிடி செய்யும், அப்பாவின் சலுகைகளை தடை செய்யும், விருப்பமானதை வாங்கித்தர கணக்கு பார்க்கும் அம்மாவா இப்படி பேசுவது என்று நினைக்கிறாயா? ஆம், உன் அம்மாதான். நித்தம் உன்னுடன் சண்டை பிடித்து, உன் அண்ணன் போல் , உன்னை இயல்பாக இருக்கவிடாதவள்தான். வீட்டு வேலைகளை பார்க்க வேலையாட்கள் இருந்தாலும் உனக்கென்று சில வேலைகளை ஒதுக்கியதன் காரணம் புரியாது. உனக்கு உன் நிறுவனத்தில் தரப்பட்ட பயிற்சி உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அது போல ஒரு வீட்டின் மகாராணியாய் நீ வாழ உனக்கு சில புரிந்து கொள்ளல்கள் வேண்டும்.

நாம் ஒருவரை புரிந்து கொள்ள முகம் பார்க்க வேண்டியதில்லை. செயல்களை வைத்து எடை போட வேண்டாம். நம்மை அவர்கள் ஒரு திசைக்கு திருப்ப முயற்சிப்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் நல்லவரா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
முகம் மறைக்கும் உணர்வுகள், செயல்கள் தாண்டிய எண்ணங்கள் இவற்றை நாம் புரிந்து கொண்டால், அடுத்தவரை எடை போட முடியும். அப்படி பார்க்கும்போது கெட்டவர்கள் நல்லது செய்வதும், நல்லவர்கள் கெட்டது செய்திருப்பதும் புரியும். அந்த ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை.

      நீ அருமையாக சமைப்பதாக சொன்னார்கள். அத்தனையும் புது வகைகளாமே. நீ கற்றுத்தந்ததை செய்யவில்லை என்கிறாயா. அடுப்பு பற்ற வைக்க நான்தானே உந்தித்தள்ளினேன். ஒரு தெரிந்த விசயத்தை கொண்டு புதிதாக ஒன்றை உருவாக்கும் நுட்பமான திறமை பெண்ணுக்கு உண்டு. இந்த திறமை அதீத கற்பனைகளுக்கும் வழி வகுக்கும். அவற்றின் பிடியிலிருந்து வெளிவர உனக்குத் தெரியும். ஏனெனில், கனவுலக தேவதையாக நித்தம் வானத்தில் சஞ்சரிக்க நான் விட்டதில்லை.
யதார்த்தம்தான் சிறகுகளை மறைத்து பாதங்களை பதிய வைக்கும். உன் வாழ்க்கையிலும் ஊன்றி நிற்பாய்.
    புதிய இடத்திற்கு செல்லும் போது வழிகாட்டிப்பலகைகள் உதவுவதுபோல், வாழ்க்கையிலும் சில அடையாளங்கள் கிட்டும். அவற்றின் விளக்கம் அகராதியில் இல்லை. குறித்து வைத்துக்கொள். தனிமையில் அவற்றை பாடமாக்கிப்பார். புதிய உறவினர்களின் பார்வைகளை புரிந்து கொள். வார்த்தைகளை அளந்து சொல். சில சமயம் உனக்கு விருப்பமில்லாதவை நடக்கலாம். உன்னுடைய வெளிப்பாடு, பின்னர் யோசிக்கும் போது உனக்கே பிடிக்காததாக இருக்கக்கூடாது. தப்பும் தவறுமாக செய்துவிட்டு , என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று உளறுவது தன்னை வெற்றி கொள்ள முடியாத கோழைத்தனம். அது குழந்தை மனம். அதிலிருந்து உன்னை வெளிக்கொணரவே இத்தனை செய்தேன். வேண்டியது கிடைக்கும்போது நிதானம் ஏற்படும், கிடைக்காதபோது புறந்தள்ளிவிட சொல்லும், இதுதான் மங்கையின் மனது.

     எதற்காக இத்தனை முன் ஏற்பாடுகள் என்கிறாயா?. இது வாழ்க்கைப்பாடம் மகளே.
தண்ணீரில் விழுமுன் நீச்சல் தெரிய வேண்டும் அல்லது விழுந்தால் காப்பாற்றக்கூடியவர்களை சூழ வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது நம்பிக்கையானது. மனிதர் மனதை படித்தால் கிட்டும். உன்னை நெருப்பில் நடக்க விட்டேன், நெருப்பை என் நெஞ்சிற்குள் புதைத்துக் கொண்டேன். இனி முழு நிலவில் உன் முகம் தெரியும். அது புன்னகை தவழும் முகமாக இருக்கும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.


ஒரு மகளின் மகளான அன்னை.-2 

நினைவு பதிவுகளில் மங்கலாய்
   கொல்லை புறத்து கொய்யாமரம்!
ஓட்டுத் தாழ்வாரத்தில் பரவி,
   காயாகவும் பழமாகவும்...
பெரியதும் சிறியதுமாயும்...
   இலைமறைவில் காய்த்து...
திக்கெங்கும் வாசம் பரப்பி
   குட்டி குட்டி அணில்களை
விருந்தோம்பி அழைத்திட...

இரவிலோ பகலிலோ அல்லது
   நான் பள்ளியில் இருந்தபோதோ
பழுத்து பசியாற்றிய கதையை
   மறுநாள் வெற்றுகூடாகி நிற்கும்
பழப்படிவம் எடுத்து சொல்ல,
    எனக்கு எதிரியாய் அணில்!
கூடையில் தூக்கிச் சென்று
    தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
   ஒழித்துக் கட்டலாமா? என்று
நித்தம் தாயிடம் ஆலோசனை.


அணில் இரக்கப்பட்ட சில நாள்
   பழுத்த கொய்யா பழம் கிட்டவும்
அன்று மட்டும் கீச் கீச் குரலில்
    நட்பு பாராட்டி பழம் விடும்
நானும் கொலை வெறியை
   அழித்து விட்டு மரம் ஏறுவேன்
மறுபடியும் கதை தொடர....
    எதிரியா? நண்பனா? கேள்வி
என் பால பருவத்தை கரைத்திட,

இன்றும்கூட ஆயாசமான நாளின்
     அழுத்தம் கொண்ட இரவினில்
அன்னையின் வருடல் நாடி
    மூச்சு எடுத்து உறங்கும்போது
தங்க கொய்யாப் பழமும்
     வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.
ஒரு ஞாயிற்று கிழமை காலை
    அன்னையும் தந்தையுமாய்
சின்னஞ்சிறிய அழகு குடும்பம்
   குடிவந்தபோது் சுவாசம் எடுத்தது.

நோயில் படுத்தாலும் படுத்தாத
     தென்றலுக்கும் விசிறி விடும்
வஞ்சினம் பேசாத மொழியோரால்
     இதயம் இருந்ததை உணர்ந்தது.

பூக்குவியலென குட்டி தெய்வம்
     மழலை குரல் குழலென
விடியல் பூபாளம் பாடியது
    ஐம்புலனில் ஒன்றை சரி செய்தது

ஆணும் பெண்ணுமாய் இயற்றிய
    அன்பின் மதமும் அதன் நெறியும்
காற்றலையில் வெளியெங்கும் பரவி
   செங்கலுக்குள்ளும் இரத்தம் பாய்ந்தது

குட்டி தெய்வங்கள் ஓடி ஒளிந்திட
   பார்த்துவிடாமலிருக்க கண்ணை
கைவைத்து மூடிக் கொண்டது
   உயரத்திலிருந்த வீட்டின் நெற்றிக்கண்

தாத்தா பாட்டியினை பயமுறுத்தி
    அம்மாவினை சீண்டி எழுப்பி
அப்பாவை தூண்டிவிட்டு ஓடி
    அண்ணன் கையிலும் சிக்காமல்
படி தாண்டி தடுக்கி விழுந்திட..

 'கடவுளே" என்று அலறியது 
வீடு என்றொரு தேவதை

புரியாத மழலை பேச்சில்
பிஞ்சுகால்கள் தளிரடியில்
சிறு விரல்கோலமிடலில்
பட்டாம்பூச்சி பார்வையில்
    - அன்னையின் பிராயம் கழிய

தோளில் தெரிந்த உலகத்தில்
பள்ளி பாட தெளிதலில்
அறிவின் கோவில் வாசலில்
விண்ணேறி சாடும் வயதில்
        - தந்தையின் பிராயம் கழிய

வானின் அதீத சிந்தனையில்
பன்னீர் தெளித்த மழையில்
காற்றின் கை வருடலில்
எண்ணற்ற உள்வாங்குதலில்
கண்சிமிட்டும் பூவின் காதலில்
         - இளம் பிராயம் கழிய

மீண்டுமொரு தந்தையாய்
தாதியாய் நண்பனாய் குருவாய்
குடும்பத் தலைவனாய்
உலகின் அடையாளமாய்
மொத்த வாழ்க்கையும் முடிய
        - இன்னும் கொஞ்சம் கழிய

ஒதுக்கப்பட்ட தாழ்வாரத்தில்
மழலை பேசி காற்றை வருடி
தளிர் நடை நடந்து விண் நோக்கி
தொலைந்த அடையாளம் தேடி
மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.
கண்ணை மறைக்குது .....
மற்றுமொரு பனித்திரை!
மூடிய மறுபக்கம்.....
பாதை தொடரணும்...
மூச்சு வாங்கும் ஏற்றமோ,
முடிவிலா கிடுகிடு பள்ளமோ,
ஏதுமறியா சம தளமோ,
 பயணி,  நான் கவனிக்கனும்
 தடையில்லாம செல்லணும்.
வழிச்செலவுக்கு மேல...
பிற்பாடு தேவைக்கு
அங்க போய் கணக்கு சொல்ல
இன்னும் கொஞ்சம் சேக்கணும்!
பயணமோ பாதியிலதான்
மிச்சத்தையும் மூட்டை
கட்டிக் கொண்டு ....
எப்படியிருந்தாலும்
ஈசன் அருளால்
ஊர் போய் சேரணும்.

      மதுரையில் கிட்டதட்ட 10 நாள் நடக்கும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், திருத்தேர், எதிர் சேவை , கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் ஆகியன முக்கிய நிகழ்ச்சிகள். 

      திருக்கல்யாணம் நடைபெறும்போது நிறைய பெண்கள் தாலிக்கயிறு மாற்றுவார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க மனைவி தாலி கட்டிக்கொள்ளும் போது கணவர் அருகில் அமர்ந்து உதவி செய்வது அருமையான காட்சி. மீண்டுமொரு வசந்ததின் நினைவு.

   திருமணம் முடித்து மறுநாள் சொக்கருடன் மீனாட்சி திருத்தேரில் நகர்வலம். இன்றிலிருந்து எட்டு மாதத்திற்கு சொக்கரின் ஆட்சிதான். மீதி நான்கு மாதங்கள் மட்டுமே மீனாட்சி ஆட்சி. புதிய மன்னரிடம் நாட்டு மக்கள் வருகை பதிவு செய்ய வேண்டுமல்லவா அதுதான் தேரோட்டம். எப்போதும் கள்ளழகர் தங்கையின் திருமணத்திற்கு தேருக்கு மறுநாள்தான் தாமதமாக வருவார். எனவே மதுரை மக்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை திருத்தேருக்கு மறு நாள்தான் வரும். இந்த வருடம் தேரில் மீனாட்சி அலங்காரமாக வரும்போதே, மதுரை வந்துவிட்டார் அழகர். தங்கையின் திருமணக்கோலம் கண்டு இந்த முறை கோபிக்கமாட்டார் என்று நினைத்தால் , இந்த முறையும் கோபம் கொண்டு வண்டியூர் சென்று விட்டார். ( புதிய தங்க குதிரை வாகனம் அத்தனை எடுப்பாக இல்லை ஒன்றரை கோடியாம்)

      அதனால் என்ன, தேர் திருவீதி உலாவரும்போது இனிமையான காட்சிகள் நிறைய கிட்டின. மனவி மக்கள் அத்தனை பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்க வைப்பதும், பலூன், பஞ்சு மிட்டாய் என பிள்ளைகளின் தேவைகளுக்காய் பர்ஸை திறக்கும் குடும்பத்தலைவர்களின் பொறுப்பு. ஊரிலிருந்து வந்திருக்கும் அத்தை அல்லது மாமன் மகளுக்காக முண்டியடித்துச் சென்று இலவசமாக வினியோகிப்படும் பொங்கல், பானங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து " சாப்பிடுலேய்" என்று சொல்லும் குட்டி முறைமாமன்கள். ( இதில் சுற்றும் முற்றும் பெருமையாய் ஒரு பார்வை வேறு).

    எதிர் சேவையின் போது, விரதமிருந்து அழகர் வேசம் போட்டு வருபவர்கள் தண்ணீரை தெளிக்கும்போது நேயர் விருப்பமாக சிலர் கேட்டு நனைந்து செல்வர். இரவு முழுவதும் தண்ணீர் பீய்ச்சும் அவர்கள், மறுநாள் அழகர் மீது தீர்த்தவாரி செய்வதுதான் வேண்டுதலின் முக்கிய கட்டம். புதிதாக மாலை போட்டு இருப்பவர்களுக்கு தண்ணீர் பீய்ச்சத் தெரியாமல் திணறுவது ஒரு வேடிக்கை. ஓரு குட்டி அழகர் ரொம்ப நேரம் திணறிவிட்டு ஒரு துளியை தெளித்துவிட்டு வாய்விட்டு சிரித்தது ரம்மியமான காட்சி.

    இந்த சமயத்தில் மதுரையில் எங்காவது நின்று கொண்டு " அவரை எங்கே பார்க்கலாம்?" என்று பொதுவாக கேட்டால்கூட, புதூர் மாரியம்மன் கோவில்,டிஆர்வோ காலனி, டிவிஎஸ் பங்களா என ஏதாவது ஒரு இடத்தை யாராவது சொல்லிவிடுவார்கள். இந்த இடத்தில் அவர் என்பது அழகரைத்தான் குறிக்கும். " அழகர் கண்ணுல சிக்கலேயே " என்பதுபோல தேடி ஓடஓட எங்காவது மண்டகப்படிக்கு மின்னல் வேகத்தில் சென்றுவிடுவார். அழகரை கண்டுபிடிக்க வண்டியில் வரும் உண்டியலையும் சொல்வார்கள். மலையிலிருந்து வரும்போதே அவருடன் ஒர் டஜன் உண்டியல்கள் வரும். உண்டியல் வந்த கால் மணி நேரத்தில் அழகர் வந்து விடுவார்.
இங்கேயும் இரு சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்  கொண்டு   சந்து பொந்து     புகுந்து  எப்படியாவது அழகரை பார்க்கவைத்து மனைவியிடம் பாஸ் மார்க் வாங்கி வெற்றி வீரர்களாவது கணவர்களின் கடமை.

    என்னது திருவிழாவை பற்றி பக்தியான விசயங்கள் சொல்லாமல் இப்படி ரன்னிங் கமெண்ட்ரியாக வருகிறதே என்று யோசிக்கிறீர்களா. திருவிழாவினால் என்ன நன்மை என்று தெரிய வேன்டாமா. இவ்வளவு களேபரத்தில் குடும்பச்சண்டைகள் குறைந்து இனிமை திரும்புவது நல்ல விசயம்தானே. இந்த நாட்களில் மனதின் பதட்டம் அழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி பரவுவதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இதற்கு மேல் சொக்கர், மீனாட்சி, அழகரின் அருள் எல்லாம் கூடுதல் நன்மைகள். இனிய உறவுகள் உற்சாகம் பெற திருவிழாக்கள் அவசியம். என்ன நான் சொல்வது சரிதானே. 

தொலைதூர தொடுவானம்
கண்ணில் வெற்றிடத்தை காட்ட
முட்டிக் கொள்ளும் தூரத்தில்
வாழ்க்கையின் கேள்வி
அடுத்தது என்ன?....
அதை ஆண்டவன்தான்
பார்த்துக் கொள்ள வேண்டும்

எங்கோ ஒரு மூலையில்
நினைவு துளிர்த்தது
கடவுள் எங்கேயிருக்கிறார்?
கோவிலில்...  பூசையில் ....
மணியோசையில் .... மந்திரத்தில்...
எதிலும் காணாமல்
குருவைத் தேடி சென்றான்
கண் திறந்த குருவும்
காட்டிற்குச் செல் என்றார்
வீட்டிலிருந்த மனிதன்
காட்டிற்கு கிளம்பினான்

கடைகோடிக்கு சென்றபின்
கையில் கோடரியுடன்
வரிசையாய் மரங்களின் மீது
கவனமான பார்வையுடன் வந்தான்
கண்ணன் விறகு வெட்டியாய்,

கடவுள் நீயா என்ற கேள்விக்கு
கள்ளச்சிரிப்புடன் ஆம் என்றான்
வியப்பில் கேள்வி எழுந்தது
கையசைவில் எல்லாம் கிட்டும்!
ஏன் விறகு வெட்டும் வேலை?


''வாழ்ந்து பார்த்தால்தான்
வாழ்க்கை ரகசியம் புரியும்
ஏனென்றால்...
அனுபவம் என்பதே நான்தான்"

 

 

      யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன்.  என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. 
        இது முக்கியமான கேள்வி. ஆராய்ந்து பார்க்கும் போது, இன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது. தயக்கம் என்பது சமயம் பார்த்து செயல்படுமாறு கட்டுப்படுத்தும் ஈகோவின் ஆளுமைதான் என்பது நமக்கு புரிந்திருக்கும். இன்றைய சூழ்நிலையில், முந்தினவன் கை மந்திர வாள் என்ற பழமொழிக்கு ஏற்பதான், வாய்ப்புகளும் கைகூடி வரும். எங்கள் கல்லூரிக்கு வளாக நேர்முகத்தேர்வில் பொதுவாகவே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தயக்கம் இல்லாமல் சரளமாக பேசக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள் ஆகியோர்தான். நவீன கொள்கைகளின்படி நாம் ஈகோவிலிருந்து வெளிவந்தால்தான் தொழில் முறையில் வெற்றிக் காண முடியும். இந்த குணாதிசயம், கண்டிப்பாக ஈகோவை பலவீனப்படுத்தும். ஆனால், நம்முடைய தொழில்முறை பழக்கங்களில் இது போன்ற நடவடிக்கைகள் வெற்றி தேடித்தரும். (360 degree review வில் அனைவரிடமும் சரளமாக பேசுபவர்தான் வெற்றிபெற முடியும்). சரளமாக பழகுபவர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதே பழக்கம்தான் அலுவலகம் அல்லாத இடத்திலும் வரும். அதனால் என்ன?

       ஒரு முறை நினைவு கொள்வோம். இட் என்பது சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும் ஆசை மனம். ஈகோ என்பது இட்ஐ கட்டுப்படுத்தும். சரியான செயல்பாடுகளை வலியுறுத்தும். ஆனால் ஒரேயடியாக எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி எழுப்பி நம்மை தயங்க வைக்கவும் செய்யும். ஈகோவை மீறி நாம் செயல்படுவதனால், அதனை பலவீனப்படுத்துகிறோம், எனவே இட்ஐ வளர்த்துவிடுகிறோம். நமக்குத் தோன்றியபடி (கட்டுப்பாடின்றி?) செயல்படுவோம். இதுதான் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இதில், "என்னை புரிந்து கொள்வதில்லை" என்று மற்றவர்கள் மீது புகார் வேறு சொல்வோம். உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் சார்ந்த பழக்கத்திற்கும் வேறுபாடின்றி போய்விடுகிறது. எனவே இட் ,ஈகோ இரண்டும் தேவைப்பட்ட நேரத்தில் இடத்தில் சரியாக செயல்படவேண்டும். எப்படி?

     இரண்டையும் சரியாக கையாள மூன்றாவதாக ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. சூப்பர் ஈகோ...? இரண்டிற்கும் இடையே ஒரு இணக்கம் காண சூப்பர் ஈகோவால் முடியும். சூப்பர் ஈகோ மிகச் சரியாக செயல்படும். ஏதோ ஒரு இக்கட்டில் நாம் இருக்கும்போது சட்டென ஒரு யோசனை தந்து , நம்மை காப்பாற்றுவது இதுதான். நிதானமாக நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஆராய்ந்தால், உணர்ச்சி வசப்பட்டு செயல்பட்டது (நாம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ ? ) ரொம்பவும் யோசித்து தவறவிட்ட தருணங்கள் ( எதுவோ தடுத்திருச்சு?), நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட வியத்தகு முடிவுகள் ( உள்ளுக்குள்ள ஏதோ சொல்லுச்சு!) ஆகியவற்றின் போது ஆதிக்கம் செலுத்தியது நம் மனம்தான் என்று நினைத்திருந்த கருத்தினை இப்போது மாற்றிக்கொண்டு நம் மனம் என்பதே மூன்று குணாதிசயங்கள் ஒருங்கிணைந்ததுதான் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

        சூப்பர் ஈகோ சரியாக செயல்படும்போது நம்முடைய சிக்கல்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். இட்ஐ வளர்ப்பது நாம் உள்வாங்கும் சாமான்ய விசயங்கள்தான். ஈகோவை வளர்ப்பது நல்ல விசயங்கள், நல்ல சூழ்நிலைகள் ஆகியன. சூப்பர் ஈகோவை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. இயல்பாகவே நம்மை அறியாமலே உள்ளிடப்பட்ட விசயங்கள் அதனை பலப்படுத்துகின்றன. நாம் மௌனமாக இருக்கும் நிலையில் சூப்பர் ஈகோ அருமையாக செயல்படும். எப்போதெல்லாம் மௌனமாக இருப்போம்? தியானத்தில் , அமைதியான சூழ்நிலையில் , தனிமையில், ஏதோ ஒரு வேலையில் கவனமாக இருக்கும்போது - பொறி தட்டியது போல சில விசயங்கள் புலப்படும் இதெல்லாம் சூப்பர் ஈகோவின் இருப்பினை உணர்த்தும். தூசு படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது என்பது போல மாசு படிந்த மனதில் இது செயல்படாது. தூய்மையான எண்ணங்கள் மூலம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துவோம்.


இனி சில சிந்தனைகள்:

1. தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற வாக்கியத்தின் விளக்கம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகிறதா?
2. மலைக்கு செல் அல்லது கடலுக்கு செல் மனதுடன் பேசலாம் என்பதும் அதுதானோ? நிறைய வழிபாட்டுத்தலங்கள் கடற்கரையிலும் மலையிலும் அமைய இதுதான் காரணமோ.
3.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ?
  - ஒரு இஸ்லாம் நண்பர் சொன்னது - ஆகாயத்தினை நோக்கிய பார்வையில் மானசீகமாக  உலகத்தைவிட்டு வெளிக்கிளம்பி பூமியை தொலை நோக்கு பார்வையில் பார்க்கமுடிந்தால் குறிப்பிட்ட மந்திரத்தை 300 முறை சொன்ன பலன் கிட்டும்.  இது போன்ற தருணத்தில் நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறதுதானே.

தன்னை மறத்தல் அல்லது மறுத்தல-3

    அணு உலையில் ஒரு அணு பிளந்து இரண்டாகி, நாலாகி, எட்டாகி பல்கி பெருகுவது போல பெண் எழுத்து தொடர் பதிவு, பெண் பதிவர்களின் சக்தியை பல மடங்கு பெருக்கி இருக்கிறது. இந்தத் தொடரில் என்னையும் எழுத அழைத்திருப்பதற்கு பிரியத்திற்குரிய ராஜிக்கு நன்றி. உண்மையில் பெண் எழுத்து என்று ஒன்று உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த விசயத்தில் நான் லட்சுமி மேடம் கட்சி. ஆண், பெண் பேதமை உடலுக்குத்தான் உண்டு , ஆத்மாவிற்கு கிடையாது. எல்லா கலைகளைப் போல் எழுத்துக் கலையும் ஆத்மார்த்தமானது. இதில் பெண் என்று பேதம் பிரிப்பது ஏன்?.

       ஒருவேளை பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எழுத பெண் எழுத்தரால்தான் முடியும் என்றும் பெண் எழுத்திற்கு முகவுரை கூறுகிறார்களோ? பெண் மனதின் மென்மையை எழுத்தால் தெரிவிக்க முடியுமா என்ன? குடும்பத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் எண்ணங்களை தனிப்பட பிரித்து பேசமுடியாது. கணவனுக்காய் சிந்திக்கும்போது ஆணின் மனமும், குழந்தைகளுக்காய் சிந்திக்கும்போது குழந்தையின் பார்வையும் கொண்டு அவரவர்க்கு உரியதை முழுமையாக தந்து தன்னையும் சிறப்பாக பார்த்துக் கொள்ளும் பெண்ணை பற்றி ஆண்களுக்கும் தெரியாது. எப்போதும் தன்னுடைய எண்ணங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதை தனக்குள்ளேயே முடிவெடுத்து அதனை மற்றவர்க்கும் புரியவைத்து அவர்களின் முடிவுபோல் செயல்பட வைக்கும் குடும்பத்தலைவியின் திறமை ரகசியம்தானே. கலாச்சாரத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் ஆழ்மனம் மூடி வைக்கப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று நான் கருதுகிறேன். அகத்தியனின் 'விடுகதை' படம் பார்த்துவிட்டு மகள் வயதிலுள்ள சின்னப் பெண்களிடம் தவறான பார்வை பார்த்த ஆண்கள் எத்தனை பேர்? ஒரு நுணுக்கமான உளவியல் பிரச்சினை தவறான விளைவுகளை ஏற்படுத்தியது. இது போல்தானே மற்றவைகளும் தவறாக கையாளப்படுகின்றன.

          ஆண்கள், பெண்ணை பற்றி எழுதும் செய்திகள் உறுதியாக்கபட்ட செய்திகள் கிடையாது. செயல் படுத்துவதில் ஒரு சந்தேகம் இருக்கும். ஆனால் ஒரு பெண் நுணுக்கமான உணர்வுகளை பற்றி எழுதுவது, எலியை பிடிக்க பூனைக்கு வரைபடம் போட்டுத்தருவது போலாகிவிடும். ஒரு திறமையான பெண் எழுத்தாளர் இது போன்ற விசயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல எழுத முடியும். இதுபோன்ற எழுத்துகளினால், கல்வியறிவில் அடி மட்டத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையையே குலைத்துவிடாதா. இது போன்ற ஒரு பார்வைதான் 'இரண்டு பேர்' கதையிலும் அன்றைக்குப் பார்க்கப்பட்டது.

           ஏன் ஆண்களை பற்றி தவறாகவே நினைக்கிறீர்கள். என் நண்பன் என்னை பற்றித் தெரிந்து கொள்வது தவறா என்று எண்ணலாம். நண்பனின் நண்பனுக்கு யார் நன்னடத்தை சான்றிதழ் தருவார்களாம். ஒரு ஊடகத்தில் எழுதப்படும் எழுத்துக்கள் பரவலாக பலரை சென்று அடையும். இங்கு ஒரு சமுதாய பொறுப்பு இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். படித்த தெளிவான பெண்கள், மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டும். மாதவிடாய் சமயத்தில் பெண்ணின் உணர்வுகளை நுணுக்கமாக எழுதிய பெண் எழுத்தரின் எழுத்து பெரிய அளவில் பேசப்பட்டது, ஆனால் அதன் பாதிப்பு மிக மோசமானது. (எழுத்தாளரின் பெயரையும், சொன்ன விசயத்தையும் எழுத விரும்பவில்லை நான்.). இருபது வருசத்திற்கு முந்தைய வாசிப்பாளினிகளுக்கு புரியும்.

           நாசுக்கான விசயங்களை பெண்கள் கையாள வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது தேவையும் இல்லை. இது போன்ற விசயங்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை வேண்டுமானால் அடையாளம் காட்டலாம். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளரை தொலைத்துவிடும். வெறும் புகழுக்காக எழுதுவதாக புகார் வேறு எழும். காதல்,பாசம்,அன்பு,குடும்பப் பின்னணி, சமூகப் பார்வை, மருத்துவம்,மன வளம் இவற்றுடன் ஒரு சக்கர வியூகத்திலிருந்து வெளி வரும் நுட்பமான அறிவினை வளர்க்கும் பெண்களின் தன்மானம், வீரம், நெஞ்சுரம், முன் யோசனை போன்றவற்றை எழுதலாமே. எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உங்கள் பதிலானால் பெண் எழுத்து என்கிற வார்த்தையே தேவையில்லை என்றுதான் பொருள்.

     என் பார்வையை பதிலாக தந்துள்ளேன், நிறைய திட்டு விழுந்தாலும் ஒன்றிரண்டு மயிலிறகு வருடல்கள் கிட்டும் என்று நம்புகிறேன். இந்த தொடரினை தொடர அமைதியான அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆன பதிவர் இராஜராஜேஸ்வரியையும், அருமையான மன வளக்கட்டுரைகள் எழுதும் சக பதிவர் சண்முகவேலையும்     அழைக்கிறேன்.


      தன்னை மறத்தல் பற்றி இப்போது பார்க்கலாம். ஒரு உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில், உடனடி செயல்பாடு இட்'ன் பொறுப்பு. அது செயல்படுமுன் அதனை கட்டுப்படுத்துவது. ஈகோவின் பொறுப்பு. சில சமயம் ஈகோவையும் மீறி நம் வெளிப்பாடுகள் இருக்கும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுற்றி இருப்பவரை பொருட்படுத்தாமல் கோபமாக கத்துவது, அழுவது, உடல் நடுங்க கட்டுப்பாட்டை இழப்பது ஆகியன நடைபெறும். சிறு பிள்ளைகள் போல இருக்கும். ஏன் இப்படியாகிறது? பலவீனமான ஈகோவின் செயல்பாட்டை இட் எளிதாக தாண்டிவிடுகிறது. எப்போதெல்லாம் ஈகோ பலவீனமடையும். நமக்குப் பிரியமானவர்கள், நமக்கு நல்லது செய்பவர்கள் முன்னிலையில் ஈகோவின் சக்தி குறைந்து விடும். அவர்களிடம் தன்னை மறைத்தல் தேவையில்லை என்பதால். ஆனால், குறிப்பிட்டவர்களையும் தாண்டி, அனவரிடமும் இது போன்ற வெளிப்பாடுகள் நமக்கு நல்லது செய்யாது. "நான் ஒரு திறந்த புத்தகம்" என்று சொல்லிக் கொண்டு அனைவரிடமும் நம் மன உணர்வுகளை வெளிக்காட்டி கொண்டிருந்தால், தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும். எல்லோரிடமும் ஒளிவு மறைவில்லாமல் நன்றாக பழகுவது என்ற கொள்கை பலவீனமான ஈகோவை உருவாக்கும். இது நமக்கு ஆபத்தானது. சுதந்திரமாக பழகும் எல்லை என்பது ஒவ்வொருவரிடமும் மாறுபட வேண்டும்.. வீட்டை திறந்து போட்டு விட்டு திருடனை வரச்சொல்லிவிடுவது போல ஆகாதா. இன்றைக்கு நிறைய இளைஞர், இளைஞிகளை சிக்கலில் கொண்டு தள்ளுவது இந்த கொள்கைதானே.


    உண்மையில் எதிரில் இருப்பவர்கள் நம்மை எளிதாக எடைபோட இது ஏதுவாகி விடுகிறது. மேற்குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள் அனைத்தும் வேண்டியவர் முன்னிலையில், நம்முடைய இடம் என்று உணரக்கூடிய பாதுகாப்பான எல்லையில் நடைபெறவேண்டும். நம்மை சுற்றி இருக்கும் அனைவரும், நம்முடன் பழகும் அனைவரும் நம்மை புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய பலம், பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அதனை மீறி நாம் பழக ஆரம்பிக்கும்போது, அந்த மற்றவருக்கு நம்மையும் அறியாமல் ஒரு அனுமதியை அளித்துவிடுகிறோம். நாம் முற்றிலும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள், மனதளவில் சென்றுவிடுவோம். பிறகு, பலவீனமான சந்தர்ப்பங்களில் - சமயம் பார்த்து நடந்து கொண்டு அவர்கள் எளிதாக நம்மை ஆளுமை செய்ய முடிகிறது. இதுதான், சமூக பாதிப்பிற்கு பெரிய காரணம் ஆகிறது. சாமியார்களின் வெற்றிக்கு இதுதானே காரணம். குடும்பப் பிரச்சினைகளில் அன்னியர்களின் தலையீட்டிற்கு காரணம் குடும்பத்தில் யாரோ ஒருவருடைய பலவீனமான ஈகோதான்.

      சிலர், இது போன்ற போலியான வலை வீசல்களில் மயங்கி கற்பனை காதலுக்குள் இறங்கி விடுகின்றனர். தாய் தகப்பனை மறக்க வைத்த காதல்(?), கணவன்/மனைவியையும் மறக்க வைக்கிறது. பல குடும்பங்களின் சிதைவிற்கு இதுதான் காரணம் அல்லவா? இது பெண்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தள்ளிவைக்க வேண்டாம். முட்டாள்தனமாக தன்னுடைய மன பலவீனம் அத்தனையும் புரிந்து கொள்ளும்படி நடந்து கொண்டு, பெண்களிடம் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் ஆண்களுடைய நிலைக்கும் பலவீனமான ஈகோதான் காரணம். ( மனைவியை பற்றி அன்னியப் பெண்ணிடம் பகிர்ந்து கொள்தல், கணவனின் கெடுபிடிகளை மற்ற ஆண்களுடன் பிரஸ்தாபித்தல்)

    யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன். என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. அதே சமயம், என்னுடைய ஈகோவை பலவீனப்படுத்தும் நவீன கொள்கைகளைத் தாண்டி இல்லற வாழ்க்கையில் வெற்றி காண முடியுமா?
                                                                                                                       - அடுத்த பதிவில்
 
 தன்னை மறத்தல்அல்லது  மறுத்தல்-4                                                                                                        -

   முந்தைய பதிவில் நான் கேட்டகேள்விகளை இரண்டுவிதமாக அணுகலாம். ஒன்று சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்துவது அல்லது அடக்குதல். இந்த இடத்தில் நம்மை கட்டுப்படுத்துவதுடன் சூழ்நிலையையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இதனை கையாளுவது எப்படி? இரண்டாவது, இது போன்ற மறைப்புகள் இன்றி ஒருவரிடம் நம்மால் எப்போதெல்லாம் பேச முடியும்?

   முதலில், தன்னை மறுத்தல். மறைத்தல் என்றே சொல்லலாமே ஏன் மறுத்தல் என்று சொல்லவேண்டும். நமக்குள் எப்போதுமே இரண்டு குணதிசயங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை முதலில் உணரவேண்டும். ஃப்ராய்டு சொன்ன மூன்று குணதிசயங்களில் - இட், ஈகோ, சூப்பர் ஈகோ- ஏதாவது இரண்டு மட்டுமே ஒரே சமயத்தில் செயல்படும். இட் என்பது ஆசை மனம். லௌகீக விசயங்களுக்கு முதலில் இதுதான் ரியாக்ட் செய்கிறது. ஒரு சந்தோசமான விசயம் நடக்கும்போது, ஜாலியாக எம்பி குதிக்கத் தோன்றும் அல்லது சின்னதாக விசில்கூட அடிக்கத் தோன்றும். இது இட்'ன் செயல்பாடு. நம்முடைய ஈகோதான், ஆழ்மனம், இதனை கட்டுப்படுத்தும். நடு ரோட்டில் வைத்து விசிலடிக்கக்கூடாது, இத்தனை பேருக்கு முன்பு குதிக்கக்கூடாது, தனிமையில் இதையெல்லாம் செய்து கொள் என்று நாம் இட்'ன் செயல்பாட்டிற்கு போகும் முன் அழுத்தமான குரல் கொடுத்து நம்மை கட்டுப்படுத்தும். மறுத்தல் என்பது, ஈகோவின் வேலை. நமக்கு நாமே சொல்லி கட்டுப்படுத்துகிறோம்.


   தளர்ந்துபோன சில வேளைகளில் , என் பெயரை நானே சொல்லி - மெல்லிய குரலில்தான் ஆனால் அழுத்தமாக - " விடுப்பா, இன்னும் சந்தர்ப்பம் இருக்கு, ஜெயிப்போம். அது வரைக்கும் முயற்சிப்போம்." என்று தேறுதல் சொல்லி இருக்கிறேன். நம் பெயரை சொல்லி ஒரு விசயத்தை நமக்குள் பதியவைப்பது நல்ல பலன் தரும். யாரோ நம்முடன் துணைக்கு இருப்பது போன்ற உணர்வினை தரும். புதிய சக்தி கிட்டும். இங்கெல்லாம் நாம் ஈகோவை பயன்படுத்துகிறோம்.


உண்மையில் ஈகோவிற்கு இதையெல்லாம் யார் கற்றுத்தருவது. நாம்தான். பார்த்து, படித்து, கேட்டு மனதில் பதிய வைத்த விசயங்கள்தான் நம்மை ஒரு சூழ்நிலையில் இயங்க வைக்கின்றன. நல்ல வெளிப்பாடு, தவறான வெளிப்பாடு என்பன நாம் மனதில் இருத்திக் கொண்ட விசயங்களால்தான். சொல்லப்போனால் நம்முடைய சில வெளிப்பாடுகள் , யாராலோ நடிக்கப்பட்டு நமக்குள் ஒத்திகை பார்க்கப்பட்டவைதான். அதனால்தான் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் செயலற்று போய் நிற்போம். திகைத்த பார்வையுடன் , அதிர்ச்சியாய் உறைந்து நிற்போம். இந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வது என்பது இட்'ற்கும், ஈகோவிற்கும் தெரியாது. இட் சந்தர்ப்பத்தை உணர்ந்தால், ஈகோ சூழ்நிலையை எடைபோடும். 

     உதாரணமாக, நாம் ஒரு காட்சிக்குள் நுழையும்போது, அதற்கேற்ப சில எதிர்பார்ப்புகளையும், பாவனைகளையும் இட் உருவாக்கும். ஈகோ தன்னுடைய நினைவுப்பதிவுகளை திருப்பி, இது போன்ற காட்சியில் எப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுவோம் என்பதை பட்டியலிட்டு தயாராக இருக்கும். உதாரணமாக , ஒரு பிரச்சினை சம்பந்தமாக முக்கியமான நபரை சந்திக்கப்போகிறோம் என்று கொள்வோம். நம் உயர் அதிகாரியாக இருக்கலாம். அவர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு நாம் மனதளவில் தயாராக இருப்போம். கோபம் மூட்டும் வகையில் பேசினால், எப்படி கையாளுவது என்ற முன்மாதிரி திட்டத்தை மனம் தயார் செய்யும். அதன் படியே காட்சியும் சென்றால், நல்லது. எதிர்பாராத விதத்தில் சூழ் நிலை மாறினால் - நாம்  உணர்ச்சி வசப்படும் நிலை வந்தால், ஈகோ உடனே செயலுக்கு வந்து விடும். நம்மை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈகோவிற்கும், சூப்பர் ஈகோவிற்கும் உண்டு சூப்பர் ஈகோ நம்முடைய உயர்வான எண்ணங்களின் பிரதிநிதி. கடவுள் மாதிரி. ஆனால் நிறைய சமயங்களில் ஈகோ அளவிற்கு விரைவாக செயல்படுவதில்லை. இட் அல்லது ஈகோவின் செயல்பாடு முடிந்தபின் மெதுவாக ஆனால் தெளிவாக நம்மை பாராட்டும் அல்லது குற்றம் சாட்டும். சூப்பர் ஈகோவை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்.


 உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில் - கண் சிவந்து உரக்க கத்துவது, கட்டுபாடின்றி நடந்து கொள்வது, வேண்டியவர்கள் முன்னிலையில் சில சமயம் ஆதங்கமாய் கண்ணில் நீர்கூட வரும் என்பது இட்'ன் விளைவு ஆகும். " இவர்கள் முன்னிலையில் கட்டுப்பாடு இழக்காதே, இப்போது என்ன நடந்துவிட்டது அமைதியாக இரு. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். " இது போன்ற கட்டுப்பாட்டு திட்டங்களை  ஈகோ செயல்படுத்தும். விரைவாக செல்லும் வண்டியை பிரேக் போட்டு நிறுத்துவது போல், கட்டுபாடு வரும். இதன் விளைவாகவும் அனிச்சையாக கண்ணில் நீர் வரும். ஆக நம்மை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஈகோவிற்கு நல்ல விசயங்களை பதிவு செய்ய வேண்டும். அதிகம் படித்தல், அதிக விசங்களை பகிர்ந்து கொள்ளுதல், தொலைகாட்சியில் நல்ல நிகழ்ச்சிகள்கூட நம் ஈகோவிற்கு நிறைய சொல்லித்தரும். டிஸ்கவரி சேனலில் , ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனை எதிர்பாரா
த விபத்தில் சிக்கி முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்ட நிகழ்ச்சி எனக்கு நிறைய விசயங்களை சொல்லித் தந்தது. நம்மை கட்டுப்படுத்தும் ஈகோவை நல்லபடியாக உருவாக்கினால், அது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உறுதி.
                                                                                                                - இன்னும் மீதி நாளை


தன்னை மறத்தல் அல்லது மறுத்தல் -3

     ஒரு நாள் குட்டி கிருஷ்ணர் இராமயணக் கதையை கேட்டுக்கொண்டிருந்தார். அதாவது தன்னுடைய கதையை இன்னொரு முறை வாய் மொழியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த கதையின் நியாய தர்மங்கள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருந்தாலும், வெளியில் குட்டி கிருஷ்ணர் குழந்தை மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாரம். சீதையை ராவணன் கடத்திய கட்டத்தில், தன்னிலை மறந்து வெகுண்டு " லட்சுமணா எடு வில்லை" என்று வீர முழக்கமிட்டாராம். இந்த கதையை படித்த போது எனக்குத் தோன்றியது என்னவெனில், இறைவன் தன்னிலை மறப்பானா என்ன? இல்லை, சூழ இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு உபதேசமா? ஒரு அதர்மம் நடக்கும் போது, காண சகிக்காத குணம்தான் முழு வீச்சில் வெளிப்பட்டதா? இதற்கு பல விளக்கங்கள் சான்றோர் தந்திருந்தாலும் இதையும் ஒரு கருத்தாக முன்வைக்கிறேன்.

    ஈஸ்வர் சந்தர் வித்யாதர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவ்வப்போது நாட்டின் சுதந்திரத்தின் தேவையை தன் கருத்துக்களால் வலியுறுத்துவார். அவரை ஆங்கிலேயர்கள் பழிவாங்க எண்ணி விருந்திற்கு அழைத்தனர். விருந்து ஆரம்பிக்கும் முன் வெள்ளித்தட்டில் பட்டுத்துணி போர்த்தி பரிசளித்தனர். அதனை திறந்து பார்த்தால் அவருடைய ஒரே மகனின் தலை அதில் வைக்கப்பட்டு இருந்தது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத அவர் பரிசிற்காக நன்றி கூறி அமைதியாக விருந்தை உண்டு கிளம்பினார். உடன் வந்தவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி இவ்வாறு இருக்க முடிந்தது என்று. " என் மகனின் நிலை எனக்கு பெரும் துயர்தான். ஆனால் அதனை பார்த்து நான் துடித்து கதற வேண்டும், அந்த காட்சியை பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று காத்திருந்தனர். அப்படி ஒரு வெற்றியை நான் அவர்களுக்கு தரவிரும்பவில்லை. அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று கண்ணில் நீர் வழிய கூறினார். இங்கும் ஒரு அநீதீ நடந்தது அதற்கான வெளிப்பாடு மாறிப் போனது.

    பொதுவாக உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலையில் ஒருவரது உணர்ச்சி வெளிப்பாடு, சுற்றி இருப்பவர்களின் பொருட்டு மாறுமா?. நமக்கென்று ஒரு வெளிப்பாடு இல்லையா?. நமக்கு நம்பிக்கையானவர்கள் முன்னிலையில் நாம் முழுவதுமாக நம்மை வெளிப்படுத்துவோம் என்பது மெய்யா? அப்படியெனில் நம் முன் சூழ் நிலைக்கு ஏற்ப முழுவதுமாக ரியாக்ட் செய்பவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று பொருளா? கண்ணில் நீர் வழிய பேசுதல், கோபத்தின் ஒருவகை வெளிப்பாடா? அல்லது இயலாமையா? எனக்காக ஏதாவது செய்ய மாட்டாயா என்ற எதிர்பார்ப்பா? ஒரு வேளை இதனை ஆராய முடிந்தால் நம்மால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் நமக்குமான உறவினை சரியாக அளவிடமுடியுமா? இதனை புரிந்து கொண்டால் உறவுகளின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முடியுமா?

                                                           -  அடுத்த பதிவில் முயற்சிக்கலாமா?

தன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்.- 2

 

இடறி விழுந்த போது
கால் நகம் பெயர்த்து
குருதி முகம் காட்டிட
மண் போர்த்திட.....

தலைக்கு சுமை தந்த
தட்டு கவிழ்ந்திட .......
உறக்கம் கலைந்த செங்கல்
பல்லகிலிருந்து இறங்கிட...

திடீரென்ற அதிர்வில்
கூலித் தொழில் நிறுத்தி,
பார்வைகள் திரும்ப
இரக்கம் வரும்முன்....

கட்டிடத்தையும் மனதையும்
கல்லால் கட்டியதை சொல்லும்
அதிகாரப் பார்வை மாறி
போலியாய் பதறியது.


இன்று மாலை கையில்
பணத்தை வாங்கு முன்
பார்வைக்கு சம்பந்தமில்லா
பரிவுடன் கேள்வி எழும்

பிஞ்சு வயிற்றின் பசியெனும்
பள்ளத்தாக்கில் வாழ்க்கையோடு
மானத்தையும் புதைக்க பயந்து
போர்களத்து வீரனாய்

கண்ணில் வலி மறைத்து
தன்னிலை மறுத்து
மற்றுமொரு போராட்டம் தேடி
சுமை நோக்கி நகர்ந்தாள்.

     
     மலரினும் மெல்லிய மனம் -2 

    இனி அடுத்த விசயங்களை பார்க்கலாம். எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது என்ற நிலை, நமக்குள் இருக்கும் தலைமைப் பண்பின் தூண்டுதல். ஏதேதோ காரணத்திற்காக நம்முடைய நியாயங்கள் அடிமையாக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று உள் மனது உறுத்தும். அந்த சூழ்நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாது போகும். இந்த குற்ற உணர்வுகளை நாம் ஜெயித்தாக வேண்டும். உண்மையை சொல்லவேண்டுமெனில்  ,  ஆரம்பத்தில்   நம்முடைய   நிலைமையே 
உறுதியற்றதாக இருக்கும். அந்த நிலையில் போராடினால் நம் மேல் உள்ள நம்பிக்கையையும் சேர்த்து பலி கொடுப்பது போலாகிவிடும். நாம் அப்படியே இருந்தால் இது போன்ற நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் காண வேண்டியிருக்கும். எனவே, வேறு வழியில் இதனை ஈடு செய்ய முயற்சியுங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். ஒரேயடியாக போராடக்கூடாது. நீங்கள் நல்லது செய்ய நினைப்பதுகூட சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பாகிவிடும். இந்த விசயத்தை பொறுத்தவரை குற்ற உணர்விலிருந்து வெளி வருவது மட்டுமே முக்கியம். கூடிய விரைவிலேயே உங்கள் மனம் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு, இது போன்ற சிக்கல்களை சரியாக கையாளும். கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் பொறுமை வேண்டும்.


அடுத்தது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குற்ற உணர்விலிருந்து எப்படி வெளி வருவது. இது போன்ற சூழ்நிலையில் இரண்டுவித மனநிலைக்கு ஆட்பட்டிருப்போம். ஒன்று நாம் உணர்ந்து கொண்ட உண்மையின் உணர்ச்சிபூர்வ பாதிப்பு, மற்றொன்று இதுவரை நாம் நமக்கு பழக்கி வைத்திருக்கும் தர்ம நெறிகளின் ஆளுமை. முன்னதை விடுப்பதுதான் நியாயம். தவறை உணர்ந்து உடனேயே நம் மனதின் ஓட்டத்தை மாற்றியிருப்போம். ஒரு உதாரணம் பார்க்கலாம். ஒரு வேளை இதுமட்டும்தான் வெளிப்படையாக உரையாடக்கூடியது என்பதால், இதனை உதாரணமாக கொள்கிறேன். ஒருவருக்கு தீங்கிழைக்கப்பட்ட கடும்கோபத்தில், " இவர்களெல்லாம் உயிருடன் இருந்து என்ன செய்யப்போகிறார்களாம்?" என்று தோன்றியிருக்கும். ஒருவருடைய மரணத்தில் நமக்கு  
மகிழ்ச்சி என்று   எண்ணும்போது    மனித்தத்துவத்தை     இழந்து  விடுகிறோம் அல்லவா? நம்முடைய தரம் தாழ்ந்து போனதைப்போல உணர்வோம்.


இதைவிட மோசமானவைகூட இருக்கலாம். நம்மை அறிந்து கொண்ட குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட என்ன செய்லாம். இரண்டுவித மன நிலையிலிருந்து நம்மை பிரிக்க வேண்டும். குற்றம் செய்தவர், நீதிபதி என பிரிய வேண்டும். எப்படி? தனிமையில் ஒரு வெள்ளத்தாளில், உங்களுடைய பெயருக்கு நீங்களே ஒரு கடிதம் எழுத வேண்டும். இது பழைய முறை. இதற்கு பதிலாக ஒரு ஈ-மெயில் தயாரித்து உங்களுடைய மெயில் ஐடிக்கு அதனை அனுப்பிவிடுங்கள். உங்களுடைய தரப்பு நியாயம் அத்தனையும் அதில் இருக்கட்டும். உடனேயே மெயிலை திறந்து பார்க்க வேண்டாம். இந்த வேலையை செய்தபின் உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். மறு நாள் மெயில் பார்க்கவும். புதிதாக ஒரு விசயத்தை வாசிப்பதுபோல உணர்வீர்கள். ஆனால், வாசிப்பது நம்முடைய ஆழ்மனம் . இங்குதான் பழைய நினைவுகள் பதுக்கிவைக்கப்பட்டு, அரக்ககுணத்துடன் காத்திருக்கும். பெரிய மீசைமேல் ஏதோ ஒரு பழைய வெறுப்பு நிற்க மீசை வைதிருந்தவரை திருடன் என்று திட்டியவரை கண்டிருக்கிறேன். நன்றாக உடையணியும் பெண்களின் மேல் தவறான எண்ண வீச்சல்கள்.... இதெல்லாம் பெரிய குற்றமில்லை மனதளவில் நினைப்பதுதான். அதை திருத்த வேண்டும்.நாம் மெயிலை படிக்கும்போது நம்முடைய மனதிற்கு தெரிந்துவிடும், இது தவறான செயல் என்று. இரண்டு மூன்று முறை வாசித்தபின் அதனை அழித்து விடுங்கள். தவறான எண்ணங்களும் அழிந்து விடும். இணைய வசதியில்லையெனில் கடிதம் எழுதி கவரில் போட்டு மூடிவிடுங்கள். யார் கையிலும் கிட்டக்கூடாது. படித்தவுடன் எரித்து விடவேண்டும். இந்த செயல்கள் முழுக்க தனிமையில் நடக்க வேண்டும்.

குற்ற உணர்விற்கு மட்டுமல்ல, மனதை அரித்துக் கொண்டிருக்கும் எந்த விசயத்தையும் இவ்வாறு செய்து மாற்றமுடியும். எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு நம்முடைய மனதின் மென்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான், மனித்தத்துவத்தை மகத்தானதாக்கும்.

 மலரினும் மெல்லிய மனம் -1

     எதனால் இது போன்ற சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறோம்? இது போன்ற உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தால், நீங்கள் உதவும் குணமும், தலைமைப்பண்புகளும் உடைய நல்ல மனிதர். அனைவரையும் நம்மைப்போலவே நினைத்து விடுவோம். முன்பின் தெரியாதவருக்குக்கூட வெகு இயல்பாக உதவி செய்ய முற்படுவோம். அப்படி எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் சூழலில் , ஒன்றிரண்டு பேர், நம்மை புரிந்து கொள்ளாமல் பேசுவது, நடந்து கொள்வது அந்த இடத்தில் நம்மை அன்னியப்படுத்திவிடும். அதுதான் கூசவும் வைக்கும். தெரிந்தவர்கள் முகத்தை பார்க்கக்கூட தடுத்துவிடும். ஒரு வேகமான இரத்த ஓட்டம் காலிலிருந்து தலை வரை பாயும்.

     அது போன்ற ஒரு தருணத்தில் சிவந்து போன முகத்துடன், உணர்ச்சியை துடைத்த பார்வை பார்த்த என் சக ஆசிரியையை நான் பார்த்ததுண்டு. யாருக்கும் தெரியாமல் , சிறிதாக புன்னகைத்து தோளில் நான் கை வைத்தபோது அவர் கொஞ்சம் சரியாகிவிட்டதாக உணர்ந்தாராம். அதை என்னால் எப்படி சரிவர செய்ய முடிந்தது என்று பிறகு யோசித்தேன். அது போன்ற சூழ்நிலையில் நான் சிக்கியிருந்த போது என் உள் மனது ஆறுதல் தேடியிருக்கிறது என்று புரிந்து போனது. இதுதான் நான் சொல்ல வந்தது , இது போன்ற சம்பவங்களில் பார்வையாளரான நம் பங்கும் மிக முக்கியம். ஒரே ஒருவரின் ஆறுதலான , அந்த நிமிடத்து செய்கைகூட நிலைமையை சீர் செய்யும்.

     அவ்வாறு இல்லாமல் போனால், இரவு உறக்கத்தை அபகரித்துவிடும். தனியாக இருப்பதை தவிர்த்து, அம்மா/அப்பாவின் மடியில் தலைவைத்துப் படுத்து ஆறுதல் தேடலாம். இல்லையெனில் துணைவர்/ துணைவியிடம் கையை பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிடலாம். விசயம் என்னவென்றால் நம்மை நன்றாக புரிந்து கொண்டவர்கள், அந்த நேரத்தில் கேள்வி கேட்காமல் நம்முடைய தனிமையை அனுமதிப்பார்கள். அது எப்படி தனிமையென்று சொல்லமுடியும் என்று கேட்பீர்கள், நான்தான் சொன்னேனே வெறுமையின் உச்சி என்று, உடலிற்கும் மனதிற்கும் சம்பந்தமில்லாத நிலை, மனம் தனித்துதான் இருக்கும். எதுவுமே இல்லையெனில் மொட்டை மாடியில் நின்று கொண்டு குளிர்ந்த காற்றை நன்றாக உள்ளிழுத்து மன அழுத்ததை வெளியேற்றலாம். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை தேடலாம். தொடு வானத்தின் பால் வீதியை ரசிக்கலாம். உலகத்தின் சற்று உயரத்திலிருக்கும் சௌகாரியமான கற்பனை நம் இறுக்கத்தை குறைத்துவிடும்.  

                                                                                                            - மற்ற விசயங்கள் நாளை

மலரினும் மெல்லிய மனம் -3 


     ஒரே விசயம் மூளைக்குள் உட்கார்ந்து கொண்டு ஆட்டி வைக்கிறது. அந்த சமயத்தில் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாது. வெறுமையின் உச்சியில் நிற்போம். எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாடு இருக்காது. எதையாவது செய்து மனதிலிருந்து அந்த நினைவை வெளியேற்ற நினைப்போம். சந்தோசம், துக்கம், கோபம் போன்றவை கண்ணீர் விடுதலின் மூலமும், மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளுதலிலும் குறைந்துவிடும். நான் சொல்வது வேறுவகை உணர்வுகள். இவற்றை பகிர்ந்து கொண்டாலும் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று ஒரு பார்வைதான் கிட்டும். உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருப்பது ஒரு வடிகாலாக இருக்கும் - (ஒரு வேளை இது பெண்மை உணர்வாகக்கூட இருக்கலாம்). . நம்மேல் நமக்கு நம்பிக்கை குறையும் நிலை இது.

      உதாரணமாக, யாருக்காவது நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு மொக்கையாகி நிற்பது, சில செயல்களை செய்துவிட்டு embarrassing ஆக உணர்வது, அசடு வழிவது, எதிர்த்துப் பேச முடியாத சிறிய நிலையில் உள்ளவர்களுக்கு நியாயம் செய்ய முடியாமல் இருப்பது, சொல்லால் செயலால் அன்றி நினைவுகளால் தவறிழைப்பது - இது மிக முக்கியம் சம்பந்தப் பட்டவர்கள் நம்மை உயர்வாக எண்ணுகையில் நம் மனது நம்மை குறுக வைக்கும். இந்த எண்ணம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். குறுகிய நாட்களில் மறைந்துவிடும். அதற்குள், நம்மை மேற்சொன்ன விதத்தில் ஆட்டி வைக்கும். ஆரம்பத்தில் அடிக்கடி மனம் பேசினாலும், நாளைடைவில் பழகிபோய் ஊமையாகிவிடும். அது மிக ஆபத்தானது. ஏனெனில் ஆழ்மனதில் படிந்துவிடும். சமயம் பார்த்து நம்மை ஆட்டி வைகும்.

     மின்னழுத்த நிலையில் சர்ஜ் , ஸ்பைக் என்று இரு நிலை உள்ளது. சர்ஜ் 230v லிருந்து 400v வரை செல்லும் , அதிக நேரம் நீடித்து நிற்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பாழாகும். ஒரு துயர சம்பவம் நம் மனதை அதன் ஆளுமையில் வைத்திருப்பது போல். ஸ்பைக் என்பது 230v லிருந்து 2000vவரைக்கூட செல்லும்.ஆனால் நொடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். இதனால் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் தீப்பிடிக்கும் அபாயம் கூட உண்டு. நான் சொன்ன உணர்வுகள் இப்படித்தான், சட்டென அதிகபட்ச அதிர்வுகளை உண்டாக்கும்.

     ஆழ்கடலில் மிதக்கும் பனிப்பாறைகள் வெளியே சிறிய ஐஸ்கட்டிகளாகத் தெரியும். ஆனால் ஒரு கப்பலையே உடைக்கும் பலம் கொண்டதாக இருக்கும். இந்த உணர்வுகளும் அப்படித்தான், நிறைய சமயத்தில் பழைய நினைவுகளை நினைவூட்டி தயங்க வைக்கும். அந்த தயக்கம் தோல்விக்கு வழி வகுக்கும். இதை எப்படி கடப்பது?                                                                                                      -இன்னும் தெளிவாக நாளை
மலரினும் மெல்லிய மனம் -2

எப்போதாவது தனிமையில்
திரும்ப வரும் கேள்வி இது
ஆராய்ச்சி செய்யும் அறிவு
தேடலை ரகசியமாய் வைத்தது
சூழ்நிலை ஓட்டத்தில் நான்
சில வேளைகளில்...
நொடிகளின் வலையில் சிக்கி..
சில வேளைகளில்...
கடிகார முள் தொண்டையில்...
அந்த நேர துடிப்பில்
கேள்வி மறைந்திட நிம்மதியாய்
மாய உறக்கத்தில் நான்.
மறந்து போன கேள்விக்கு
விடை கிட்டாவிடினும்
கடைசியில்.......
கேள்வியாவது கிட்டுமா?


 


தோல்வியை அலட்சித்து
ஆரம்பத்தில் சின்ன வெற்றிகள்
நினைத்தபடியே நடந்தது
எண்ணிய காரியம் பலித்தது


கொஞ்சம் வளர்ந்தபின்
மனதில் அச்சம் வந்தது
உயரத்திலிருந்து விழுந்தால்
எழுந்து நிற்பது எப்போது...
பாதுகாப்பாக.....
இறைவனிடம் வேண்டுதல்கள்


இன்னும் உயரம் கூடிய 'நான்'
வெற்றி வசப்பட்ட பிறகு....
கண்ணுக்கு தெரியாத கடவுள்
சில சமயம் நினைவில் வந்திட(?)
எப்போதாவது நன்றி அறிவிப்பு


திகட்டத் தொடங்கிய வெற்றி
அடுத்த கட்ட வெறுமையை
வெளிச்சமிட்டு காட்டிய போது.
ரொம்ப உயரத் தனிமையில்...


ஆகாயம் நோக்கிய பார்வைக்கு
ஆண்டவன் கிட்டவில்லை
பூமியை நோக்க மனிதர்களும்
காணாமல் போயிருந்தனர்.
இல்லை... இல்லை....
இப்போது உண்மையில்
காணாமல் போனது '
நான்'தான். 

தோல்வியை அலட்சித்து
ஆரம்பத்தில் சின்ன வெற்றிகள்
நினைத்தபடியே நடந்தது
எண்ணிய காரியம் பலித்தது


கொஞ்சம் வளர்ந்தபின்
மனதில் அச்சம் வந்தது
உயரத்திலிருந்து விழுந்தால்
எழுந்து நிற்பது எப்போது...
பாதுகாப்பாக.....
இறைவனிடம் வேண்டுதல்கள்


இன்னும் உயரம் கூடிய 'நான்'
வெற்றி வசப்பட்ட பிறகு....
கண்ணுக்கு தெரியாத கடவுள்
சில சமயம் நினைவில் வந்திட(?)
எப்போதாவது நன்றி அறிவிப்பு


திகட்டத் தொடங்கிய வெற்றி
அடுத்த கட்ட வெறுமையை
வெளிச்சமிட்டு காட்டிய போது.
ரொம்ப உயரத் தனிமையில்...


ஆகாயம் நோக்கிய பார்வைக்கு
ஆண்டவன் கிட்டவில்லை
பூமியை நோக்க மனிதர்களும்
காணாமல் போயிருந்தனர்.
இல்லை... இல்லை....
இப்போது உண்மையில்
காணாமல் போனது '
நான்'தான். 


     இவர்கள் உலகத்தின் பார்வையில் சின்னவர்கள். நம்மை போன்று சுய சிந்தனை இல்லாதவர்கள். நாம் சொன்னதை கேட்கும் பொம்மைகள். பசி, உறக்கம் போன்றவற்றை மட்டுமே உணர்ந்தவர்கள், அவர்கள் அழுகைக்கூட அதற்கு மட்டுமே என்று நினைத்தோம். அவர்களுக்கு என்று சுய விருப்பம் இல்லாதவர்கள், தேர்ந்தெடுக்கத் தெரியாதோ என்று நாம் சந்தேகிக்கிறோம். ரொம்ப நாட்களாகவே அவர்களை நாம் சரிவர புரிந்து கொண்டதில்லை. உண்மையில் அவர்களுடைய உலகத்தின் மொழி தெரியாத அறியாமையில் சிக்கி இருப்பவர்கள் நாம்தான். அப்படி நாம் குறைத்து மதிப்பிடுவது குழந்தைகளைத்தான்.


      வயிற்றில் இருக்கும்போதே குழந்தை ஒலியலைகளை உணரத்தொடங்கிவிடும் - பிரகலாதன் கதை, அபிமன்யுவின் கதை இதனை ஆதரிக்கிறது. ஆனால் இது வெறும் புராண மேற்கோள் மட்டுமல்ல அறிவியல் உலகத்தின் உறுதிபடுத்தப்பட்ட உண்மையும் இதுதான். அம்மாவின் சுவாசம் வழியாக அவர்கள் உலகத்தின் அதிர்வையும், ஒலியையும்      
உணர்கிறார்கள்,     நல்ல எண்ணங்கள்     தேவக்குழந்தைகளை உருவாக்குகின்றன.   பிறந்தபின் ஒளிவடிவங்களையும் புரிந்து கொள்கிறார்கள். பல சந்தேகங்கள் இருந்தாலும் நம்மிடம் தொடர்புகொள்ள முடியாமல் , நினைவுகளில் தேக்கி வைக்கப் படுகின்றன. பொதுவாக சின்ன குழந்தையிடம் பேசும்போது மம்மம் , தயி மம்மம் , பிக்கா என்று நாம் பேசுவோம். உண்மையில் நம்முடைய மொழியை சரிவர பேச முடியாமல் அப்படி ஆகிறதே தவிர அது அவர்களின் மொழியல்ல. அதை ஒரு மொழியாக நினைத்து நாம் பேசும்போது அவை சிரிக்கக்கூட செய்யும் ( நாம்தான் பாப்பா சீக்குது... என்று மேலும் காமெடியாகி விடுகிறோம்)

     என் தம்பி மகள் இரண்டு வயதுதான், கோவிலுக்கு மகிழுந்தில் செல்கையில், சாலையின் இருபுறமும் மலைகள். அவள் பேச ஆரம்பித்த பின் முதல் தடவையாக மலைகளை பார்க்கிறாள். " அது என்ன ?" என்றாள். "மலை" என்றோம். இதே கேள்வியை அனைவரிடமும் கேட்டாள், எங்கள் பதில் "மலைதான்". சந்தேகமாக அவள் பார்க்கவும் நாங்கள் சுதாரித்து "அது என்ன பாப்பா?" என்றோம். " மண்ண குவிச்சு வச்சிருக்காங்க " என்றாளே பார்க்கலாம் ( அதுதான் உண்மையென்று புவியியல் அறிஞர்கள்  
கருத்து.   பூமித்தட்டுகள்  ஒன்றுடன்   ஒன்று   மோதியபோது    நிலப்பகுதி உயர்ந்து  மலைகளாகியதாம்.). குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. இதுபோல கோர்வையாய் நான் பேச ஆரம்பித்தது என்னுடைய ஐந்தாவது வயதில்தான், அதற்குள் சுற்றி இருப்பவர்கள் உலக அகராதியை எனக்குள் புகுத்திவிட அவர்கள் சொல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதைய ஒலி மற்றும் ஒளி வடிவமான உலகத்தில் அவர்களுக்கு பல விதமான உள்வாங்குதல் உள்ளது. எதிர்வீட்டு குட்டிப் பெண்- நான்கு வயதுதான், கோபமாக இருந்தாள். அப்பாவிற்கும் பெண்ணிற்கும் சண்டையாம். விசாரிக்கலாம், என்று நான் எண்ணி ஆரம்பித்து தப்பாகிவிட்டது. " அப்பா அடித்தாரா... " என்றேன். அவள் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிட்டாற்போல அதி வேகமாக   "இல்லை...  இல்லை   திட்டினாரு"   என்று   உர்ரென்று   முறைத்தபடி  கூறினாள்..  "அடித்திருந்தால் அவள் அப்பா கதி அவ்வளவுதான் போல"என்றேண்ணிக்கொண்டேன். த்து வயதில் நாம் பெற்றிருந்த வளர்ச்சியை ஐந்து வயதிலேயே பெற்று விடுகின்றனர்.

    நவீன உலகத்தில் குழந்தைகளின் அதிவேக உள்வாங்குதலை புரிந்து கொள்ளாமல், நாம்    
பழையபடியே  பேசிக்கொண்டிருந்தால்,   மக்கு  பெரியவர்களாகி  விடுவோம்.  நம்முடைய எதிர்கால திட்டத்தில் அவர்களுக்கான உலகமும் இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் , இந்த குட்டி மனிதர்களிடம் நம்முடைய தவறுகளுக்கு விளக்கம் அளிக்க நேரிடும்.


ஆகாஷ், லைலா,மாலா
   புயலுக்கு   மனுச பெயர்கள்
சில மனுசங்களுக்கு.........?
    பெயராக இல்லாவிடினும்
பிரசன்னமாகும்போது ...
     சூறைக்காற்று, சுனாமி என
நிலம் நடுங்கித்தான் போகிறது.
     உயிர் செயலற்று போக
விடுபட்ட சிதிலங்களை
     இணைக்கும் முயற்சியில்

விக்ரமாதித்தனாய் நான்
     கேள்விகளுடன் வேதாளம்
வாயை திறந்த போதில்
     சிலையென என்னை நிறுத்தி
தலைகீழாக தொங்கியது
     எக்காளமிட்ட வேதாளம்.
தலை வெடித்து சிதறாமல்
     காப்பாற்றிக் கொண்ட நான்....
நிலச்சுமையென......