பிஞ்சுகால்கள் தளிரடியில்
சிறு விரல்கோலமிடலில்
பட்டாம்பூச்சி பார்வையில்
- அன்னையின் பிராயம் கழிய
தோளில் தெரிந்த உலகத்தில்
பள்ளி பாட தெளிதலில்
அறிவின் கோவில் வாசலில்
விண்ணேறி சாடும் வயதில்
- தந்தையின் பிராயம் கழிய
வானின் அதீத சிந்தனையில்
பன்னீர் தெளித்த மழையில்
காற்றின் கை வருடலில்
எண்ணற்ற உள்வாங்குதலில்
கண்சிமிட்டும் பூவின் காதலில்
- இளம் பிராயம் கழிய
மீண்டுமொரு தந்தையாய்
தாதியாய் நண்பனாய் குருவாய்
குடும்பத் தலைவனாய்
உலகின் அடையாளமாய்
மொத்த வாழ்க்கையும் முடிய
- இன்னும் கொஞ்சம் கழிய
ஒதுக்கப்பட்ட தாழ்வாரத்தில்
மழலை பேசி காற்றை வருடி
தளிர் நடை நடந்து விண் நோக்கி
தொலைந்த அடையாளம் தேடி
மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.