மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்பு குட்டிம்மாவிற்கு,

      இப்படித்தான் உன்னை சின்ன வயதில் நான் அழைத்தேன். நலமாக இருக்கிறாயா?.அப்போது நீ சிறியவள் என்பதால் உன்னை நான் கவனிக்க உன் அண்ணன் அப்பாவின் கவனிப்பில் இருந்தான். அண்ணனுக்கு என் அருகாமையும், அப்பாவிற்கு நீ செல்லமகள் ஆனதும் எப்போது என்று என்னால் நினைவுபடுத்திக்கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு கோட்டில் நம் பிரிய நேரிட்டது. அந்த கோட்டின் காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை உன் அப்பா உன்னிடம் செல்லம் கொஞ்சியது கூட, நீ சரியாக வளர்க்கப்படாமல் போய்விடுவாயோ என்று எனக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம். காலம் முழுவதும் நீ என் பார்வையிலேயே இருக்கப்போகிறாய் என்றால் நான் கவலைப்படத்தேவையில்லை. உன்னை வேறு இடத்திற்கு அனுப்பும் பொறுப்பு எனக்கு இருந்தது. அது காலத்தின் கட்டாயம்.

      நானும் நிறைய தடவை யோசித்தது உண்டு, ஏன் ஒரு புதிய குடும்பம் உருவாக பெண்தான் வீட்டை விட்டுச் செல்லவேண்டுமா? கட்டிக்கொடுப்பது என்பது ஆணிற்கு கிடையாதா என்று?. குழந்தை பிறப்பு என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்டது.
ஒரு பெண் தாங்கும் கரு , புதிய பாடங்களையும் பார்வைகளையும் சூழ இருப்பவர்களுக்குத் தரும். எளிதாக தனக்கென்று ஒரு இடத்தை பெண்ணால் கணவன் வீட்டில் உருவாக்கிக்கொள்ளமுடியும். ஆனால் ஆணிற்கு விருந்தாளித்தனம் - பொறுப்பில்லாமல் அனுபவிப்பது - நிறைய ஆண் சிங்கங்கள் செய்வது போன்று - வந்துவிடும். பொறுப்பான பங்களிப்புகள் மட்டுமே உறவுகளை மேம்படுத்த முடியும். யாரால் எது முடியுமோ அந்த பொறுப்பை உணர்ந்து சமுதாயம் சட்டதிட்டங்களுடன் உருவாகியுள்ளது. விதி விலக்குகள் எப்போதாவதுதான் வெற்றி பெறும்.

       உன் கணவர் அப்பாவிடம் சொன்னாராம், உன்னிடம் என்னை பேசச்சொல்லி. உன் குரலை கேட்டால் நான் உடைந்து போய்விடுவேன் கண்ணம்மா. என்னுடைய வார்த்தைகள் காற்றலையில் கரைந்து போவதையும் நான் விரும்பவில்லை. எனவேதான் இக்கடிதம். இது உனக்கும் எனக்கும் மட்டுமான இணைப்பு. உனக்கு வேண்டும் நேரத்திலெல்லாம் இதனை படித்து என்னுடன் கைகோர்த்து உலா வரலாம். நீ என்னுடன் இருந்தபோதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இப்படி கரைகிறேன் என்று கேட்கிறாயல்லவா?. இப்போதும் உன்னுடன் நான் பேசவில்லை எனில் அம்மாவின் அன்பு மடி உனக்காக காத்திருப்பதை நீ உணராமல் போய்விடுவாய்.
குமரி என்ற பருவத்திலிருந்து பெண்ணாக , அன்னையாக மாறும் போது உடம்பிலும் மனதிலும் பல மாற்றங்கள் நிகழும். எதிர்காலம் பற்றிய பயம், பதட்டம், எதிரில் இருப்பது தெரியாத பனி மூட்டத்தில் சிக்கிக் கொண்ட உணர்வு வரும். கண்ணை மூடிக் கொண்டு காற்றில் ஏதாவது கரம் நம்மை பற்றிக்கொள்ளாதா என்று தேடும். மற்றவரிடம் எடுத்துச் சொல்ல முடியாத உணர்வுகள் தோன்றும். அப்போது உன்னை மடியிலிட்டு தட்டிக்கொடுத்து உறங்க வைக்க அம்மா இருக்கிறாள் என்பதை நீ நினைவு கொள்ள வேண்டும்.

     ஒரு அழகான குடும்பத்தில் உன்னை இணைத்து கொண்டுள்ளாய். கடவுள் வரைந்துள்ள குடும்ப வரை படத்தில் நீதான் அடுத்த கட்டத்தை உருவாக்கப் போகும் அடிப்படை ஓவியம்.
காட்டிலும் வனத்திலும் ஆற்றங்கரையிலும் இருக்கும் மண் விளையாட்டு பொம்மையாகவோ, வயிற்றுபசி தீர்க்கும் உணவு சமைக்குக் பாத்திரமாகவோ, கலை நயம் மிக்க சிற்பமாகவோ , மருந்தாகவோ மாற பக்குவம் செய்யப்படவேண்டும். ( கடற்கரையிலிருக்கும் மண்தான் எலெக்ட்ரானிக் பொருட்களின் மூளையை தாயாரிக்கவும், ஆற்றல் மிக்க அணு சக்தியை உருவாக்கவும் பயன்படுகிறதாம்.) நீ என்னவாகப் போகிறாய் என்று நீதான் முடிவு செய்ய வேண்டும். உன்னை நீ உருவாக்கிக் கொள்வதில் குழப்பம் மேலிட்டால் தோழியாக, நம்பிக்கையான தாதியாக நான் இருப்பதை மறவாதே.

         மகாபாரதப்போருக்கு காரணம் திரௌபதி மைத்துனனான துரியோதனனை செய்த கேலிச்செய்கைதான். ஒரு சிறிய விளையாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உறவுகளுக்கிடையே பேரழிவை உருவாக்கியது. எனவே, யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
உன்னை உருவாக்கிக்கொள்ளும் பணிக்கு அங்குள்ள ஒவ்வொருவரும் உதவப் போகிறார்கள். கை நீட்டும் புதிய உறவுகளை சினேகித்து அனுபவத்தின் காலடியில் தடம் பார்த்து நடந்து செல், . உன் வாழ்க்கையில் தென்றல் வீசி சாரலும் கவிபாடும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.
 


3. ஒரு மகளின் மகளான அன்னை. 

16 comments:

படிக்கும் போதே தாயின் அருகாமை உணரப்படுகிறது.

அடடா ஒரு தாயின் அன்பு ... ஒரு தோழியாக..

பாசமுள்ள அனுசரையான ஆலோசனைகள்....

//பொறுப்பான பங்களிப்புகள் மட்டுமே உறவுகளை மேம்படுத்த முடியும்.//

excellent

அருமை அருமை
தாய் மகளை வளர்கையில்
பராமரிக்கிற ஒரு இடைவெளியை
காரண காரியதோடு மிக அழகாக
நாசூக்காக சொல்லிப்போகும் விதம்
மிக அருமை
தொடர்ந்து ஆவலுடன் வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

அருமை அருமை.. கடிதங்கள் தொடரட்டும். இதை பலர் படிக்க வேண்டும்

நாளை அம்மாவாகப்போகும் ஒரு பெண்ணை ஒரு அம்மாவால் தான் சிறந்ததொரு சிற்பமாகச் செதுக்க முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

உண்மைதான் ராஜேஸ்வரி. நன்றி.

நீண்....ட நாள் கழித்து வருகை! . கருத்துரைக்கு நன்றி திரு.கருன்

நன்றி திரு.மனோ.

நன்றி திரு.சண்முகவேல்

ஆழ்ந்த கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

நன்றி திரு.எல்.கே. கடிதம் என்பது மறைந்து போன ஒரு இலக்கியம். இனியும் வரும்.

அதை புரிந்து கொள்வது இன்றைய அம்மாக்களின் கடமையும் கூட. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

எங்கள் வீட்டிலும் ஒரு குட்டிம்மா இருக்கிறாள். அவளை நினைத்து மனங்கனிந்து கண்ணோரம் நீர்கசியச் செய்த கடிதம். நிகழ்காலத்துக்குத் தேவையான கருத்துகளைத் தாங்கிவரும் ஒரு அற்புதக் கடிதம். தொடருங்கள்.

ஒவ்வொரு வீட்டிலிருக்கும் குட்டிம்மாக்களுக்கும் இந்த கடிதங்கள் என்னுடைய இனிய பரிசாகட்டும் கீதா.