கொல்லை புறத்து கொய்யாமரம்!
ஓட்டுத் தாழ்வாரத்தில் பரவி,
காயாகவும் பழமாகவும்...
பெரியதும் சிறியதுமாயும்...
இலைமறைவில் காய்த்து...
திக்கெங்கும் வாசம் பரப்பி
குட்டி குட்டி அணில்களை
விருந்தோம்பி அழைத்திட...
இரவிலோ பகலிலோ அல்லது
நான் பள்ளியில் இருந்தபோதோ
பழுத்து பசியாற்றிய கதையை
மறுநாள் வெற்றுகூடாகி நிற்கும்
பழப்படிவம் எடுத்து சொல்ல,
எனக்கு எதிரியாய் அணில்!
கூடையில் தூக்கிச் சென்று
தொலைத்துக் கட்டலாமா?
குரங்கிடம் சொல்லி தந்து
ஒழித்துக் கட்டலாமா? என்று
நித்தம் தாயிடம் ஆலோசனை.
அணில் இரக்கப்பட்ட சில நாள்
பழுத்த கொய்யா பழம் கிட்டவும்
அன்று மட்டும் கீச் கீச் குரலில்
நட்பு பாராட்டி பழம் விடும்
நானும் கொலை வெறியை
அழித்து விட்டு மரம் ஏறுவேன்
மறுபடியும் கதை தொடர....
எதிரியா? நண்பனா? கேள்வி
என் பால பருவத்தை கரைத்திட,
இன்றும்கூட ஆயாசமான நாளின்
அழுத்தம் கொண்ட இரவினில்
அன்னையின் வருடல் நாடி
மூச்சு எடுத்து உறங்கும்போது
தங்க கொய்யாப் பழமும்
வெள்ளி அணிலும் வந்து
விடியலை தேடித் தருகின்றன.