மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இந்த வார்த்தைகள் எனக்கு பாஞ்சாலியையும் பாரதியையும் நினைவு படுத்துகின்றன.கௌரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டபோது, மானம் காக்க கண்ணனை அழைக்கிறாள். துச்சாதனன் கையில் சிக்கிய ஆடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அபயக்குரல் எழுப்புகிறாள். அதற்கு முன்பே பலவாறாக சபையினரிடம் நியாயம் கேட்கிறாள். அத்தனையும் தோல்வியடைந்த மன நிலையில் கடைசியாக கண்ணனை அழைக்கிறாள். ஏற்கனவே கொண்டவர்களும் கைவிட்ட நிலையில் நைந்து போன மனம் , கண்ணால் சுற்றியுள்ளவர்களின் கடைசி நிமிட மனமாற்றத்தை தேடி , வாயால் கண்ணனை அழைத்து , கையால் மானத்தை காக்கும் முயற்சியுடன் துச்சாதனனை எதிர்கொள்கிறாள். வாயோ பலவாறாக கண்ணனை புகழ்கிறது. " நம்பி நின்னடி தொழுதேன்- என்னை நாணழியாதிங்கு காத்தருள்வாய்" இன்னும் பலவாறாக போற்றுகிறாள். நேரம் கடக்கிறது, ஓராடையுடுத்தி நின்றவளின் இடையில் கடை சுற்றாய் இருந்த ஆடையும் இழுக்கும்போது, இனி அவனன்றி நம்மை யாரும் காக்க முடியாது என்று தோன்றிய வினாடி ஆடையை தடுத்து இருந்த கை உயர்ந்தது. தலைக்கு மேல் இரு கரம் கூப்பி கண்ணனை அழைக்கிறாள். . உட் சோதியிற் கலந்தாள்; அன்னை உலகம் மறந்தாள்; ஒருமையுற்றாள். பிறகு வருகிறது கண்ணபிரான் அருளாலே.... வண்ண பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே... இதுதான் சரணகதி. அப்போது வந்த கண்ணன் கடைசிவரை காத்து நிற்கிறான். இது ஆன்மீகத்தின் ஒரு பாதை. ஆனால், கட்டுரை அதை பற்றியல்ல.


பிறகு பாரதியின் "நின்னை சரணந்தேன் " இதுவும் ஒருவித சரணகதிதான். எனக்கு உன்னையன்றி உலகில் வேறு கதியில்லை என்று
துன்பமினியில்லை, சோர்வில்லை,தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட... பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் கவலைகள் என்னை தின்னத்தகாது என்று நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! என்கிறார். இது காதலின் ஏழாம் நிலை (?). ஆனால் சரணடைந்த மனதை உதைத்துத் தள்ளும் அளவிற்கு எந்த கண்ணம்மாவும் கொடு மதியுடையோராக இருப்பதில்லை. முடிவு , கண்ணன் ஆட்கொண்டதுபோல ( விவாகரத்து... நீதிமன்றம் என்று அலையாமல்) கண்ணம்மாவும் ஆட்கொண்டாள். ஆனால் இது இனிய இல்லறம் பற்றிய கட்டுரையும் அல்ல.


மூன்றாவது சரணாகதி என்னுடைய பார்வையில். சரணாகதி என்பது முழு ஈடுபாடு என்று தெரிகிறது அல்லவா. இப்படி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமே.... முழுஈடுபாட்டுடன் ஒரு செயலை செய்தால் அது முழுமையடையும். அதாவது ஒரு செயல் வெற்றி பெற முழு கவனம் வைக்க வேண்டும்.
பசி நோக்கார் .... கண் துஞ்சார்... என்றெல்லாம் அய்யன் சொல்வது இதனைத்தான். மனதின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நினைத்தது சரியாக நடக்கும் - முக்கியமாக தோல்வியுறுவோமோ என்று அஞ்சினால் அப்படியே நடந்துவிடும். இந்த பயம் எப்போது தோன்றும்? நாம் செய்ய இருக்கும் காரியத்தின் முழு விவரமும் நமக்கு கிட்டாத போது நம்மை நம்புவதற்கு நம்மாலேயே முடியாது. அரைகுறையாக ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்ட விவரங்கள் -- ரிஸ்க் என்று எச்சரிக்கை மணியடித்துவிட அந்த காரியத்தை அப்படியே கைவிட்டுவிடுவோம். இதில் முழு ஈடுபாடு எங்கே வரும்?

   இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே. "இந்த விசயம் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்" இந்த வார்த்தையின் விளைவு மேற்கொண்டு இதனை தொடராமல் இருப்பது அல்லது அரைமனதோடு செய்து தோற்றுவிடுவது. " அப்பவே சொன்னேன்ல" என்று அருள்வாக்கு வேறு சொல்லிக்கொள்வோம். இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு, ஏன் இதில்
 வெற்றி பெற முடியாது என்று கேள்வி எழுப்புங்கள். உடனேயே வரிசையாய் காரணங்கள் தோன்றிவிடும். இதுதான் பிரச்சினை என்றால் அதற்கு தீர்வும் நாம் கண்டுவிட்டால் வெற்றி பெறமுடியும் அல்லவா?. தோல்வியின் காரணங்கள் புரிவதே வெற்றியின் பயணத்தை ஆரம்பித்துவிடாதா?. காதலுக்கு தாய்மாமன் தடை என்றால் " தூக்கிடலாமா....? " என்று தோன்றுகிறதே தவிர காதலை விடவா செய்கிறார்கள். . இப்போது சட்டென்று புரிந்திருக்குமே நாம் செய்யும் செயலை காதலிக்கக் கற்றுக்கொண்டால் தோல்வி கிடையாது என்று. இதனை இன்னும் சீரிய முறையில் ஆலோசித்து வெற்றி தேவதையின் அருளை பெறமுயற்சிக்கலாமா? 

என்றோ விதைத்த 
அன்பின் சிறிய கன்றுகள்
வேர் விட்டு வளர்ந்தன
சற்றே பெரிய மரங்களாய்...

ஒவ்வொரு மரத்திலும்
ஒரு இனிய பெயர்...
சில ஆழமாய் நின்று
பல கிளைகளுடன் கூடி
நிழல் தந்து காக்க,

மேலும் சில....
ஒரே மரமாய் உயரமாய்
விண்ணை முட்டி நின்று,
மழை காற்றுக்கு
வளைந்து, நிமிர்ந்து
என்றைக்கும் மறவாத
நினைவுகளோடு

எப்போதாவது வெறுத்த
ஒவ்வாத நினைவுகள்
பல உதிர்ந்தன சருகுகளாய்
கொஞ்சம் குப்பைகள் சேர
கூட்டி அள்ளி குவித்து
தீயிட்டதில் கொஞ்சம் புகை
அல்லன போய் நல்லன நின்று
என் தோட்டம் சுத்தமாகியது

வசந்த்தின் வருகைக்கு
மீண்டும் தயாராகி
 
உள்ளத்தில் தென்றல் வீசும்
புதிய பெயர்களுக்கான
மரக்கன்றுகள் நடுவதற்கு.     இந்தக் கதை நான் ஒரு புத்தகத்தில் படித்தது. மகாபாரதப்போர் முடிந்து , பாண்டவர்களை அரியணையில் அமர்த்திய பின் கண்ணன் துவாரகைக்கு கிளம்பும்போது வழியனுப்புகின்றனர் பாண்டு மக்கள். ஒவ்வொருவரிடமும் விடை பெற்றபின் குந்தியிடம் வருகிறான் கண்ணன். " அத்தை, எல்லாம் இனிதே முடிந்தது. நான் விடைபெறுகிறேன். உனக்கு என்ன வேண்டும் " என்றான். குந்திதேவியோ " எனக்கு இன்னும் இன்னல்கள் வரவேண்டும் " என்கிறாள். கண்ணன் அதிசயப்பட்டு " ஏன் நீ பட்டதெல்லாம் போறாதா. இன்னும் எதற்கு இவ்வாறு கேட்கிறாய்?" என , குந்தி தந்த பதில்தான் குடும்பத்தின் ஒற்றுமைக்கான வேதவாக்கு. " நான் இக்கட்டில் இருந்த போதெல்லாம் நீயும் என்னுடன் இருந்தாயே கண்ணா. நீ என்னுடன் இருப்பதற்காக எனக்கு இன்னும் இன்னல்கள் வேண்டும்."


     உன்மையான அன்பின் உறுதி இக்கட்டான தருணத்தில்தான் அதிகரிக்கிறது. ஒரு சிக்கல் வரும்போது - பொருளாதார சிக்கலோ, உறவுகளுக்கிடையேயான பிரச்சினையோ, உடல் நலக் கோளாறோ குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் தெரியும். யா
ருக்காவது உடல் நலமில்லாமல் போகும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள், பொருளாதார சிக்கலை சீர் செய்வதில் ஒவ்வொருவரின் பங்கும் - எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் வீடு கட்டினார்கள். சிறிய வீடுதான் -பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையும் இல்லை - அதன் பிறகு மூன்று வருடங்களுக்கு எல்லாவிதத்திலும் சிக்கனத்தை கடைபிடித்து சரி செய்தார்கள். அந்த வீட்டின் மதிப்பை பணத்தால் அளவிடுவதைவிட அன்பான மனத்தால் அளவிட்டால் விலை மதிப்பில்லாதது. அந்த மூன்று வருட விட்டுக்கொடுத்தல்கள் ஒருவர் மற்றவரின்மேல் வைத்திருந்த பிரியத்தை அதிகரித்தது. இனி வரும் காலங்களுக்கு அது ஒரு இனிய நினைவுப்பெட்டகமாக இருக்கும்.


      ஒரு இனிய குடும்பத்தில் பிள்ளைக்கு, அவன் வேண்டிய படிப்பு கிட்டாததால் மனவருத்தம் . பணம் தந்து வாங்கியிருக்கலாமே என்றெல்லாம் வருத்தமில்லை. இனி எப்படி முன்னேற முடியும் என்ற கவலைதான். வீட்டில் இருப்பவர்களின் ஆறுதல் தவிர்த்து, தொலைதூர உறவுகள்கூட அலைப்பேசியில் ஆலோசனைகள் தெரிவித்து... சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஆலோசனைகள் கேட்டு... பிறகென்ன, அந்தப் பிள்ளையின் உயர்வான தற்போதைய நிலை பற்றி சொல்லவும் வேண்டுமா? இது போன்ற உறுதியான பங்களிப்புகள் எத்தனை இனிமையானவை.

      எனவே குந்தி தேவியின் வேண்டுதல் போல இன்னல்களையும் இனிய உறவுகளையும் எதிர்பார்க்கலாமே. - இதெல்லாம் மற்றவர் துன்பத்தில் பங்கேற்கும் மனமுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். " கனகு பெரியப்பாவின் பையன் வீட்டை விட்டு தனிக்குடித்தனம் போய்ட்டானாமே" என்று மகிழ்பவர்களுக்கு இது பொருந்தாது. நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் ஆனந்தமான பின் விளைவைத்தரும் என்பது உறுதி. பாரதி தன் பார்வையில் ஒவ்வொரு உறவும் கண்ணன் வடிவாகவே கண்டார். எனக்கும் அதுவே. அன்பே சிவம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, என்று நீளும் குடும்ப பட்டியலில் எத்தனை கண்ணன்கள்.!  இன்னும் இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளை கண்டுகொள்ள.


           கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
                  எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
           செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
                  கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்
           தெளிவே வடிவாம், சிவஞானம், என்றும்
                   ஒளிசேர் நலமனைத்து ஓங்கி வருகின்றன காண்!

                                                                           --மகாகவி 

    இப்போது நாம் பல வகையான பிரிவுகளில் பிள்ளைகளின் மனமாற்றங்களை பார்க்கலாம். முதலில் தப்பே செய்யாமல் தவறு செய்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்பவர்கள். இந்த வகையில் உங்கள் பிள்ளைகள் இருந்து அவர்களை நம்பாமல் நீங்கள் கேட்கும் கேள்விகளும், சந்தேகமான பார்வைகளும் , உங்களையும் அறியாமல் சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் மனதில் ஒரு மூலையில் குவிந்து கொண்டே இருக்கும். "பீலி பெய் சாக்காடும் ..." போல ஒரு நாள் பாரம் கூடி உங்களுக்கு அந்த மனதில் இடம் இல்லாமல் செய்து விடும். இங்கே லட்சுமணன் கோடு மதிக்கப்படமாட்டாது. யோசித்துப் பார்த்தால் அந்த கோட்டினை நாம்தான் தாண்டியிருப்போம். சரி செய்ய நாம்தான் தணிந்து போக வேண்டும். அவர்கள் இப்போது முரட்டுத்தனம், பிடிவாதம் நிறைந்த குழந்தைகளாகக்கூட இருக்கலாம். ஏதோ ஒரு புள்ளியில் மாறிப்போன அவர்கள், மனதிற்குள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பார்கள் - எத்தனை வயதானாலும்.... மென்மையான உங்களுடைய அன்பு அவர்களை சரி செய்யும்.

      இரண்டாவது வகையில் தவறு செய்துவிட்டு அதை மறைப்பவர்கள். இங்கேயும் நாம்தான் காரணமாவோம். முதல் தவறை அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையினால் கவனிக்காமல் விட்டுவிட்டு அதே பாதையில் செல்ல விடுவது. அவர்களை நீங்கள் புரிந்து கொள்ளும்போது , கோட்டை தாண்டியது அவர்களாகவே இருப்பார்கள். . ஆனால் ஒன்று உங்களுடைய அன்பு உறுதியாக இருந்து, அவர்களை திருத்த வேண்டும் என்று நினைத்தீர்களானால் கண்டிப்பாக முடியும். நல்ல முயற்சிகள் , நண்பர்களின் ஆலோசனை , சில சமயம் மருத்துவர்களின் ஆலோசனைகூட பெறலாம். நம் ஆழ்மனதின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். ஒரு போதும் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று நினைக்காதீர்கள். உலகத்தின் பார்வையில் நன்மதிப்பை அவர்கள் பெறும்போது லட்சுமணன் கோடு மீண்டும் உருவாகியிருக்கும்.

     சில சமயம் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு தங்கள் உலகில் பார்வையில் சிறந்தவர்களாக, பொறுப்பானவர்களாக இருக்கலாம். அவர்கள் மீதுள்ள உங்கள் அன்பில் எந்த தவறும் இல்லாமல் கூட இருக்கும். உங்கள் வாழ்க்கைமுறை சிக்கல்களால் அவர்கள் மனதளவில் விலகி இருக்கலாம் ( விவாகரத்து, மறுமணம், துணையை இழந்த கவலையில் சிறு வயது பிள்ளையிடம் பிரியம் காட்டாமல் இருந்தது ....) . இங்கே கோட்டை யாருமே தாண்டியிருக்க மாட்டார்கள், கோட்டின் நிறம்தான் - பொன்னிறம்- கறுப்பு நிறமாகியிருக்கும். வேறு வழியேயில்லை அவர்கள் காலப்போக்கில் உங்களின் அன்பை உணர்ந்து திரும்பிவரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நின்று யோசிக்கும்போது இந்த லட்சுமணன் கோட்டை நாம் மதித்ததனால் உறவுகள் சூழநிற்பது புரியும் - என்ன நமக்குத் தேவையானவர்களிடம் மட்டும் அதனை காத்திருப்போம்.
நிறைவான வாழ்க்கை என்பது மன நிறைவில்தான் உணரப்படும்.

லட்சுமணன் கோடு. Part-2 

பொழுதிற்கு முன்
ஊர் சேர வேணும்
பகல் சாயும்போது
தொலைவில் தெரியுது
கல்லால் ஆன தடுப்பு !


 

பயணமோ பாதியில் 
இடையில் வந்த
முற்றுப் புள்ளியோ..!
மனதிற்குள் களைப்பு

இப்படியே நின்றால்
இருட்டில் தவிக்கணும்.
அடுத்த பாதை தேடி
எப்போ நான்......
ஊர் போய் சேருவது...
என்னவோ மலைப்பு !


அருகில் வரவும்
வெள்ளை கோட்டுல
பாதை தெரியுது
அப்போதான் புரியுது
அது முட்டு சுவரல்ல
சாலையின் வளைவு

திருப்பத்தில் வந்ததும்
கண்ணில் தெரியுது
நீண்டு வளைந்த
பாதையின் பளபளப்பு
மெல்ல தொடரும்
என் பயணம்        நேற்றைய  பதிவில் நான் குறிப்பிட்ட லட்சுமணன்  கோடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இடையிலும் இருக்கும் ( கணவன் மனைவி தவிர்த்து) . அது நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகையை உறுதி படுத்தும் எல்லை கோடு. எல்லையை தாண்டினால் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். அதனால் நம்மைவிட்டு விலகி விடுவார்கள்.  மற்றவர்கள் எனில் சற்று பொறுமையாகவோ, சில சமயம் தானாகவே இந்த விலகல் சரி செய்யப்பட்டு விடும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை பிரிந்த உறவுகளை மீண்டும் இணைக்கும் பாலமாக மாறும்.  இடைபட்ட நாட்கள் நம்மை பாதிக்காது.  இந்த பாதிப்பு பிள்ளைகளுக்கும்பெற்றவருக்குமிடையே வந்தால்....?

          பிள்ளைகள் பற்றி நான்  இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், அவர்கள் தான் நம் இன்றைய பெருமை,  நாளைய நம்பிக்கை. இந்த உறவுமுறை நம்பிக்கையிழந்து விட்டால்,  கடமை தவறியதாகிவிடும்.  நம் வாழ்க்கையும் பாதிக்கப்படும். ஆலமரமும் அதன் விழுதுகளும் ஒன்றின் மேல் மற்றொன்று நம்பிக்கை வைத்திருக்க வேண்டுமல்லவா?  நம் பிள்ளைகளிடம் நாம் நினைத்தபடி தடங்கல் இல்லாமல் உரையாட முடிந்தால் நாம் லட்சுமணன் கோட்டை பராமரித்து வருகிறோம் என்று பொருள்.

        உதாரணமாக , புதிதான நட்பு ஏற்பட்டால் உங்களுக்கும் தெரிவிப்பது. வெளியில் செல்லும் முன் சொல்லிவிட்டு செல்வது. தொலை தூரம் எனில் முன்கூட்டியே தெரிவிப்பது. அன்றைய நாளின் நடப்புகளை பகிர்ந்து கொள்வது.   எதிர்காலத்திட்டங்களை பற்றி ஆலோசிப்பது. வீட்டின் பொருளாதார நிலையை கலந்துரையாடுவது  (வளமான வங்கி இருப்புகள், சேமிப்புகள்  பற்றி சொல்லத்தேவையில்லை , அவர்கள் பொறுப்பை உணரும்  அளவிற்கு தெரிவித்தே ஆகவேண்டும்.) ஆகியவை நல்ல அறிகுறிகள்.


      இந்த எல்லைக்கோடு எப்போதெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று பார்க்கலாம். பிள்ளைகள் பெரியவர்களாகும் போது முதன் முதலில் வெள்ளை மனதோடு தாங்கள் செய்த தவறினை மனமுவந்து ஒப்புக்கொள்ள வந்த போது நம்முடைய வெளிப்பாடு தவறாக இருந்திருக்கலாம். தவறின் முதல்பகுதியை மட்டும் சொல்வதாக மனதிற்குள் நினைத்து வாய் வார்த்தை வெளிவந்திருக்கலாம். உதாரணமாக , பையனின் சட்டையில் புகை பிடித்த வாசம் வருவது ( அநேகமாக பையன்கள் செய்யும் முதல் தவறு 
இதுவாகத்தான்  இருக்கும்), பெண்ணிற்கு அடிக்கடி அலைப்பேசி அழைப்பு வருவது, பரிசுப் பொருட்கள் இருப்பது ( சில அப்பாவி பெற்றோர்கள் தங்களுடைய சொந்த எண்ணையே தந்து பேசச்சொல்வார்கள், வரம்பு மீறி எதுவும் நடக்காதாம்...?). இது போன்றவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களை நம்புங்கள் - தேநீர் கடையில் நண்பனுக்காக நின்றபோது பக்கத்திலுள்ளவர் புகை பிடித்தது எனலாம், தோழி தந்தது எனலாம்- அந்த சமயத்தில் விட்டுப்பிடியுங்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம் 1 சதவிகிதம் என்றாலும் நம்புங்கள். ஆனால் , இது போன்ற தவறுகளின் பின் விளைவுகளை உன் நட்பிடம் சொல் என்று சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் தர மாட்டார்கள். நான் சொன்ன லட்சுமணன் கோடு இங்குதான் வருகிறது. நீங்கள் கோடு போட்டதாகவும் இருக்கும் , அவர்களை நம்புவதாகவும் இருக்கும். அதனால் கோடு தாண்டுதல் குறையும். ஒரு விசயம் - இருந்தாலும் உங்கள் பிள்ளையின் நடவடிக்கையில் ஒரு கண் வைத்திருங்கள். 
                                                                                         - நாளை கட்டாயம் கடைசி பகுதி

லட்சுமணன் கோடு. Part-1 

        பதின் வயது பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் இன்றைக்கு இருக்கும் தலையாய பிரச்சினை கேள்வி கேட்பதுதான். கேள்வி கேட்பது ஒரு பெரிய கலை. கேட்பவரின் நோக்கம் அல்லது வழிகாட்டுதல் , கேட்கப்படுபவரின் தற்போதைய நிலை , நோக்கம் ஆகியவற்றை தெரிவிப்பது அல்லது தெரிந்து கொள்வதுதான், கேள்வியின் காரணம். நம்மை நம் பெற்றோர் கேள்வி கேட்டனர் நாம் பதில் சொன்னோம். நமக்கும் அவர்களுக்கும் எழுதப்படாத ஒரு புரிதல் ஒப்பந்தம் இருந்ததால் சரியான பதில் சொல்லி தெளிவுபடுத்தினோம். 

         உதாரணமாக " ஊரிலிருந்து தாத்தா எப்ப வரார்?" என்ற கேள்வி கேட்டவுடன் - தாத்தா வருவது அப்பாவிற்கு எப்படி தெரியாமலிருக்கும்? - நம்முடைய பங்களிப்பை உறுதி செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி. அதற்கு பதிலாக " வெள்ளிகிழமை வர்றார். நான் போய் அழைத்து வருகிறேன். மறுநாள் கோவிலுக்கு போக அக்கா பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறாள் ....." என்று இன்னபிற விசயங்களும் இருக்கும். " கல்வி சுற்றுலா போயே ஆக வேண்டுமா?" என்று கேட்டால், பணசிக்கல், நம்முடைய பாதுகாப்பை தெரிந்து கொள்ள, சில சமயம் கிரக நிலை சரியில்லை என்றால் கூட தடுப்பு கேள்வி வரும். நாம் அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் சொல்லுவோம். பதில் கேள்விகள் கேட்டதாக எனக்கு நினைவில்லை. 
   கேள்வி என்பது நம் மேல் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடாகக்கூட இருக்கும். அதன் பின் தொக்கி நிற்கும் உண்மையான நோக்கம் புரிந்து கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கிடையே ஒரு புரிதல் இருக்க வேண்டும்.அதே சமயம் இருவருக்கும் இடையே தாண்டக்கூடாத லட்சுமணன் கோடு கண்ணுக்குத் தெரியாமல் நிற்கும். அது ஆயிரம் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும். ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள்ளே எழுந்து நம் நன்மைக்காகவே என்று நினைக்க வைக்கும். இது இப்போது இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் இடைவெளி குறைந்து விட்ட இந்த காலத்தில் , புரிந்து கொள்ளூதல் அதிகரித்து இருக்க வேண்டும் - பையனுடைய சட்டையை அப்பா போட்டுக்கொள்வது, அப்பா வண்டியை மகன் ஓட்டிச் செல்வது போன்றவை இடைவெளியை குறைக்கின்றன. மனநல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த இடைவெளி குறைத்தல் சரியாக வேலை செய்கிறதா? முன்பு " ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறாய் " என்றால் , சில சமயம் கேட்கும் முன்பே சொல்லி விடுவோம். தொலைபேசி அரிதாக இருந்த காலத்திலேயே, முன் கூட்டியே தெரிவித்து விடுவோம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது சரியான பதில், உண்மையான பதில் கிடைப்பதில்லை. அப்போது மட்டும் உண்மையா சொன்னோம்? என்று கேட்க வேண்டாம், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரில் நம் நடவடிக்கையை பற்றிய தகவல் நமக்கு முன்பாகவே வீட்டிற்கு சென்றுவிடும். எனவே பொய் சொல்லவோ தப்பு செய்யவோ வாய்ப்பிருக்காது. தொழில் காரணமாக ஆங்காங்கு பிரிந்து வாழும் இன்றைய நிலையில் இந்த தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நம் பிள்ளைக்கும் நமக்குமான உண்மை உரைகல் அடிக்கடி சரிவர தீர்ப்பு சொல்வதில்லை. கேள்விகள் எதிர்மறையான எண்ணங்களை அவர்களுக்கு தெரிவிக்கின்றனவே. ஏன்?

சரி நாம் அந்த லட்சுமணன் கோட்டின் அவசியத்தையும் , அதை பிள்ளைகள் நோகாமல் எப்படி இடுவது என்றும் பார்க்கலாம்.

வெகுண்டு வந்தது காளை
எதிர்க்கும் மனிதனோ
புலியின் பாய்ச்சலில்

சிலர் வாலைப்
பிடித்து இழுத்தனர்
- சீறித் திரும்பியது

சிலர் திமிலை
பிடித்துத் தொங்கினர்
உதறித் தள்ளியது

சிலர் துரத்தினர்
கைக்கு சிக்காமல்
துள்ளியோடியது

ஒருவன் மட்டுமே
நேராய் நின்று
கொம்பைப் பிடித்தான்

இருவரும் காலூன்ற
முயற்சித்த நிமிடத்தில்
பார்வைகள் சந்தித்தன

மனிதனின் உறுதியில்
காளைக்கு மனித பயம்
காளையின் கண் சிவப்பில்
மனிதனுக்கோ உயிர் பயம்

உயிரல்லவோ முக்கியம்
தோற்றால் ஏது
அடுத்த சந்தர்ப்பம்?
அந்த நொடியில்
மனிதன் காலூன்ற
மிருகம் பணிந்தது

முடிவை நோக்கி
தள்ளும் பிரச்சினையோ
முடிவில்லா இன்னலோ
 
நிமிர்ந்து நின்றால்
கடைசி சந்தர்ப்பத்திலாவது
வெற்றி உறுதிபடும்கொஞ்சம் யோசிக்கவுமே
தவறு புரிந்து போனது

எப்படி பொறுத்து கொள்வது
தவறு மனதிற்கு பட்டபின்
திருத்துதல் கடமை


வேதியியல் மாற்றம்
மூளைக்குள் உருவாகி
வயிற்றுக்குள் இறங்கி
ஒரு பேரலை உருவானது
எத்தனை பயிற்றுவித்தும்
பொறுமை மறந்து போய்
எண்ணங்கள் ஒலியாயின
வார்த்தைகள் ஏவுகணையாய்
இலக்கினை தாக்கின

எதிர்புறமோ எதிர்ப்பின்றி
வரவர வாரிக்கொள்ளும்
நுரையலை கடலானது
அகராதியில் உள்ள
அத்தனை வசை பாடலும்
முடிந்த பின்னும்
பரிதாபமான பார்வை
ஆனாலும்.....
ஏன் இப்படி கேசம் கலைந்து...

சிவந்து போன கண்கள்...
கண்ணாடியில் என் முகம்
கலங்கித் தெரிந்தது

எனக்கு மட்டுமே புரிந்த
என் தவறு வெளியில்
தெரியாத சில சமயம்
இப்படித்தான் ஆகிறது
தவறு செய்த நான்
கண்ணாடிக்குள் நிற்க
மனசாட்சி நீதிபதியாக
மறுக்க முடியாத
தீர்ப்பு சொல்லத் தயாரானது!கடுதாசி வந்தது !
இப்படியே போனால் ....
     மாரிக்கு கறி சோறாம்!
இது கெடா வெட்டி வச்ச
      மாரியாத்தா படையல் அல்ல
பட்டினிக்காக கழுவேறிய
       பிச்சையின் ஆத்தாவுக்காக
யாராம் அவள் ?முட்டுச்சந்து மூலையில்
கட்டில் கடை போட்ட மாரி
எனக்கோ.....
சவ்வு மிட்டாய் கிழவி !
இன்னும் உப்பு மாங்காய்
முந்திரி பழம் வெள்ளரி என
பள்ளி நேரத்து சிற்றுண்டி சாலை
அங்கு மட்டும்....
கடன் அன்பை முறித்ததில்லை!
பாசக்கார கிழவி ...

படித்தவுடன் வலியை உணர்ந்தேன்
இதயம் மூளை மரத்துப்போன
வாழ்வியல் போராட்டத்தில்
தோற்றுப்போனது மானுடம்


திங்களன்று சேதி வந்தது
மாரி கிழவி இறந்தே விட்டாளாம்
கறி சோறு தின்று அல்ல ..
கஞ்சி தண்ணி குடிக்காமல்
கண்மூடி தவமிருந்து
கடைசி மூச்சை விட்டாளாம்

வடக்கிருத்தல் என்றால்
வடக்கு பார்த்துதான் என்றில்லை !                           என்னை    கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று  சொல்லுவேன் .சிறு வயதில் பிள்ளைக் கனவு
மதிப்பெண் தேர்வு முடிவுகள்
ஆழ் மனதின் ஆசைகள்

வளரும்போது படிப்புக் கனவு
வெள்ளையுடை , கறுப்பு ஆடை
விதவிதமாய் சீருடையுடன்
சில சமயம் சீருடையில்லாமல்
கலெக்டர் கனவுகள்

வளர்ந்த பின் எதிர்கால கனவு
கட்டுக்கட்டாய் நோட்டுகள்
கை நிறைக்கும் வேலை

பிறகும் கூட கல்யாணக் கனவு
அமைதியாய் அன்பாய்
அழகாய் இனிய இல்லறம்

சற்று பொறுத்து
வயதான காலத்து கனவு
நான் தான் முந்தி என்று

கனவுக்குள் நினைவுகள்
சில சமயம் நினைவே கனவாய்
கண்ணை திறந்தால் புரியும்
கனவுகள் நிஜமானதில்லை

இருந்துவிட்டு போகட்டும்
இனி வரும் கனவெல்லாம்
அடுத்த பிறவி பற்றி

பலித்ததோ இல்லையோ
வாழ்க்கையின் அடுத்த படி
கனவில்லை என்றால்
கண்ணுக்குத் தெரிவதில்லை
" சாப்பிட்டு விட்டீர்களா? "  
  கையில் மருந்துடன் வெள்ளுடையின் கேள்வி 
            சாதாரண கேட்டலில் கண்ணில் நீர் .
 ஆம்...   இந்தமுறை வேதாவின் சரிதைதான்..
           காவேரி     ஆற்றங்கரையில் 
  கடவுளுக்கு வாழ்க்கைபட்ட பூமியில் 
          அவளுக்கு மட்டுமான வீடு 
சொல்லப்போனால் ,
         குறை ஒன்றுமில்லை அவளுக்கு 
வளத்திலும் நலத்திலும்  
         வேண்டாதது தவிர்த்து 
வேண்டிய அத்தனையும் உண்டு 
        வெளிநாட்டு வேலையில்
வேதாவின் மகன் அருளியது.
        அருளுவதுகூட கடமைதான் 
பின் ஏன் கண்ணீராம் .....?
           மகன்  கேட்க வேண்டிய கேள்வி  
 என்னவோ தெரியவில்லை 
         அதை மட்டும் கேட்பதில்லை 
வழமையான விசாரிப்பு இல்லாமல் 
        என்ன பேச்சு அது ....!
நேற்றுகூட  அவன் பேசினான் 
      பேசியதை பெட்டி செய்தியில் காண்க 
மற்றபடி வேதாவின் விருப்பம்  
      அன்றும் நிரலில் இல்லை 
தொலை பேசியின் குரல் 
       நேயர் விருப்பம் இல்லாத 
வானொலி நிகழ்ச்சி போலானது ..
      அப்புறம் என்னவாயிற்று  ?

ஒருநாள் குட்டி பேரன்  கேட்டான்
       ' பாத்தி மம்மம் சாப்ட்டியா?'
 தொலைபேசி புண்ணியம்தான்
       வேதா அதன் பிறகு பேசவேயில்லை!

பதிமூனாம் நாள் முடித்தபின் 
      கவலையாய் மகன் கேட்டான் 
' அங்கெல்லாம் காக்கா  இல்லை 
      அம்மா எப்படி சாப்பிடுவாங்க ?'

           சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது . சொல்லியது மட்டுமல்ல  சொல்லப்படாத வார்த்தைகள் கூட மதிப்பானவையாவது  காதலில் மட்டுமல்ல கடைசி காலத்திலும்தான்.

         எனவே நான் சொல்ல வருவது என்னவென்றால் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பது நம் மனதை தளரவிடாமல் உறுதியாக வைத்திருப்பதற்காக சொல்லப்பட்டது. நல்லது கெட்டது எதற்கும் உணர்ச்சியே காட்டாத பாவனையில் இருந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதனையே கடைபிடித்தால்... நன்றாக இருக்காது - ஒரு நாடக பாவனைதான் வரும். ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள தத்தம் கருத்துக்களை சொல்லித்தான் ஆக வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ( தாத்தா, பாட்டி) இருந்தார்கள் , அவர்களின் வழியாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும். இப்போது கூட்டுக் குடும்ப முறை குறைந்து விட்டதால், இவற்றை நாம்தான் சந்திக்க வேண்டும். அதற்குத்தேவையானவை, 
1. கண்டிப்பாக இதனை சரி செய்ய வேண்டும் என்கிற மன உறுதி.

2. சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற யூகமும் வேண்டும் இரு வித கருத்தையும் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பதட்டப்படாமல் இருப்போம். சரியான பதிலை பொறுமையாக தர முடியும்.


3. பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கவும்.


4. கடைசி வார்த்தை நம் வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் நம்முடைய கருத்தை தெளிவாகக்கூறிவிட வேண்டும். பிறகு எப்போதும் போல சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய பதில்களையும் ஒரு முறை பொறுமையாக அலசிப்பார்க்கவும். ஒரு வேளை நியாயமாக தோன்றினால் மாற வேண்டியது நாம்தான். அதற்கான காரணங்களையும் தெளிவாக சொல்லுங்கள். இல்லையென்றால் பேசி வெற்றி பெற்றுவிடலாம் என்று மற்றவர்களுக்கு தோன்றும்.


5. மிக முக்கியமான விசயம் என்றால் நேரம் கழித்து மறுபடியும் முயற்சிக்கலாம்.


6. " எதிரியின் ஆயுதத்தத்தை நாம்தான் தீர்மானிக்கின்றோம்" என்ற வாக்கியத்தை நினைவில் கொள்ளவும். ஒரு நீண்டவிவாதத்தின் பின் சமாதானத்திற்கு வருவது இயல்புதான். தேவையில்லாத மனக்கசப்புக்களை தவிர்க்கலாம்.


     இதற்கெல்லாம் பயந்து ஒதுங்கினால் , பீலி பெய் சாக்காடும்.... என்ற குறளுக்கு ஏற்ப , ஒரு நாள் எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல் குமுறல்கள் வெளிவரும். முதல் அத்தியாயத்தில் சொன்னது போல வேறு வழிகளில் மனதை திருப்பிக் கொண்டால் நாம் நன்றாக இருப்போம். ஆம், நாம் மட்டும்தான் நன்றாக இருப்போம். குடும்பத்தில் முக்கிய பொறுப்பில் நாம் இருந்தால் குடும்பத்தையும் பாதிக்கும். நாம் பொறுப்பில்லாதவர் ஆகிவிடுவோம். அதை விட நல்லதில் மகிழ்ந்து, அல்லாததில் வருந்தி - காரணம் கண்டுபிடித்து, கோபப்பட்டு, சரி செய்து சிரிக்கலாம். நல்ல குடும்பத்தின் தலைவராவது அத்துனை எளிதன்று. சின்ன சின்ன தவறுகளை சரி செய்வது , குடும்பத்தினருடன் உண்மையான கவனம் வைத்திருப்பது , கடந்துபோன வருத்தமான விசயங்களை மறப்பது போன்றவை நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். 
               
                இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
                எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
               தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்.
               தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.
                                                                                                  - மகாகவி


                             இது வரை தொடர்ந்து வந்ததற்கு நன்றி.

   யாது வரினும்... யாது போயினும்.- Part 5


     இன்றைய பதிவில் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை சமாளித்து, அவர்களுடனான நம் உறவை எப்படி சமன் செய்வது என்று பார்க்கலாம். இந்த வகையில் முதல் இடத்தை பிடிப்பது , நம் பிள்ளைகள். இரண்டாவது வருவது நம் குடும்பத்தாரில் யாராவது தற்காலிகமாக அல்லது நிரந்தர நோயாளியாவது - மாமனார், மாமியார் போன்ற வயதானவர்கள். வயதானவர்களிடம் இயல்பாகவே நாம் கனிவுடன் நடந்து கொள்வோம். நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது அவர்கள் பேச்சையும் செயலையும் மனதிற்குள் கொண்டு போகக்கூடாது. " இத்தனை நாள் இதையெல்லாம் மனதிற்குள் வைத்துக் கொண்டுதான் பழகினார்களா? " என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. அதைவிடுத்து விளக்கம் கேட்டால், உடல் நலம் சரியில்லாதவருடன் வம்பு வளர்ப்பதாக பழிச் சொல் வரும். மேலும் இது போன்ற பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் நம்முடன் இருக்கும் மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வார்கள். இது மல்லு கட்ட வேண்டிய விசயமல்ல.

     வளர்ந்து வரும் நம் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்தான் , நாம் விரைவாக சரி செய்ய வேண்டியது. உங்களுக்குப் பிடிக்காத அல்லது தேவையில்லாத பழக்கங்கள் ஆரம்பிப்பது தெரிந்தால் - முதலில் பொறுமையாக அதன் பின் விளைவுகளை விளக்குங்கள். அவர்களும் பதில் பேசுவார்கள் - தற்கால பார்வை நம்மிடம் இல்லையென்றும் மற்ற நண்பர்கள் வீட்டில் அப்படி இல்லையென்றும் வாதிப்பார்கள். நூறு சதவிகித கவனத்துடன் நாம் இருந்தால் , அவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியும். இல்லையென்றால், உலக வழக்கப்படி குரல் உயர்த்தி பேசுவோம். ஆரம்பத்தில் பயந்து வாய் மூடினாலும், நாளடைவில் வார்த்தையாட ஆரம்பிப்பார்கள் - இதனை அம்மாக்கள்தான் அதிகம் சந்திப்பார்கள். அப்பாவிடம் முகம் திருப்பப்படும். அவர்கள் வாயாட ஆரம்பித்தால், நாம் இத்தனை நேரம் இழுத்து வைத்திருந்த பொறுமை போய்விடும். வசை பாடல் வழிமுறையாக முந்தின வாரம், முந்தின மாதம் நடந்தது, நமக்குத் தெரிந்த இது போன்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவோம்.

       இது போல நம் பெற்றோர் நம்மிடம் நடந்து கொண்ட போது நாம் மனம் நொந்து போய் , நம்மை மாற்றிக் கொள்ள முயற்சித்தோம். இந்த காலத்தில் அப்படியல்ல - நாம்தான் நேர்மையின் திருவுருவாய் பிள்ளையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசி மட்டம் தட்டி மனதை வேதனைப் படுத்தி விட்டோமோ? என்று வருத்தப்படுவோம். ஆனால், இன்றைய இளையவர்கள் " என்னை மட்டம் தட்டி விட்டீர்கள் அல்லவா?" என்று கோபிப்பது போல நடித்து சம்பந்தப்பட்ட பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள். சில பிள்ளைகள் வாயே பேசாமல் சிரித்து மழுப்பி விடுவார்கள். " எனக்கு பசிக்குது, தலைவலிக்குது " என்று திசைதிருப்பி விடுவார்கள். இந்த வழி முறைகள் எதிலும் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பதில் பேசக்கூடாது, கோபப்படவும் கூடாது. ஏற்கனவே நான் சொன்ன முழு கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும் . அதற்கான பயிற்சிகளை நாம் பயில வேண்டும். மனதிற்குள் பதிய வேண்டியது , நம் பிள்ளைகளின் நல்லதிற்குதான் இதை செய்கிறோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை அவர்களை பின்பற்ற வேண்டும் என்று நாம் நினைக்கக்கூடாது. இப்படி இருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் பூரண மனக்கட்டுப்பாடு கிட்டும். சுயநலமில்லாத மனம், தெளிவான நோக்கம் , அதற்கேற்ப உடல் மொழி (நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன்) இவையே மனக் கட்டுபாட்டின் தாரக மந்திரங்கள்.
                                                                                         - இன்னும் கொஞ்சம் நாளைய பதிவில்
                       
                       விசையுறு பந்தினைப்போல் -உள்ளம்
                       வேண்டிய
படி செல்லும் உடல் கேட்டேன்.
                       நசையறு மனம் கேட்டேன்- நித்தம் ----
                       ------------ ----------- ----------
                      அசைவறு மதி கேட்டேன் ------

                                                                           - மகாகவி பாரதி

ாது வரினும்... யாது போயினும் -Part-6


           முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் புதிதாக வரும் உறவுகளிடம் எப்படி சுமூகமான புரிந்து கொள்ளலை ஆரம்பிப்பது எனக் காணலாம். இந்த வகையில் முக்கியமாக இடம் பிடிப்பது வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள் என்கின்ற உறவுதான். ஒரு பெண் ஒரு வீட்டிற்குள் புதிதாக வரும்போது நிறைய உறவுகள் ஏற்படும். மாமனார்,மாமியார், கணவன், நாத்தனார், கொழுந்தன் போன்றவை. ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் இருக்கும். சிலருக்கு உணவின் ருசி என்பதில்லை, தனிப்பட்ட துண்டு, சோப் வைத்துக்கொள்ளுதல், சூடாக தேநீர் அருத்துவது, சிலர் தட்டு போன்றவைகூட தனியே வைத்திருப்பார்கள். முந்தைய தலைமுறையில் திருமணமாகி வரும் பெண்கள் வீட்டில் ஒய்வு கிடைக்கும் நேரத்தில் இவற்றையெல்லாம் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை முக்கியமான எட்டு மணி நேரத்தை அலுவலக வேலை அபகரித்துக் கொள்வதால். எனவே முதலிலேயே இவற்றை சொல்லி விடுங்கள், சில சமயம் என்ன நடக்கும் என்றால் புதுப்பெண் என்பதால் கொஞ்ச நாள் அனுசரித்து செல்லுவார்கள். பிறகு ஒரு பொல்லாத நாளில் குறையாக இது பறை சாற்றப்படும். சில வீடுகளில் தேதி வாரியாக இது போல நடந்த நிகழ்ச்சிகளை  பட்டியலிடுவார்கள். இது குற்றம் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இது போல நடந்து கொள்ளாமல் ஆரம்பத்திலேயே இதமாக தெரிவித்து விடலாம். "அதெல்லாம் செஞ்சாச்சு . இருந்தாலும் சரி பட்டு வரவில்லை" என்பதெல்லாம் குறைந்த சதவிகிதத்தில்தான் இருக்கும். 

         நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். ஒருவேளை சிறு உரசல் ஏற்பட்டாலும், உடனே கொதித்துப் போய் அளவில்லாமல் வார்த்தைகளை பேசினால் சீர் செய்ய முடியாததாகிவிடும். இது போன்ற பி
ச்சினைகள் சமாதானத்திற்காக வரும்போது ஒன்று தெளிவாக புரியும். இரு தரப்பினருமே " நான் அப்படிப் பேசவில்லை" அல்லது "நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை" என்பார்கள். இதிலிருந்து ஒன்று புரியும், மனிதன் ஒரு சமூக விலங்கு. எந்த நிலையிலும் நியாயவாதியாகவே சமூகத்தின் கண்ணில்பட நினைக்கிறான். அதற்கான நடவடிக்கையே இது போன்ற சமாளிப்புகளும், சமாதானங்கள்- ஒரு ரகசியம் சொல்கிறேன் -நாமும் குடும்பம் என்ற அமைப்பை விரும்புகின்றவர்கள்தான் - ஆரம்பித்த சண்டையை லாகவமாக முடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற சமாளிப்புகளை கேட்கும் போது அதனை சோதனைக்குழாயில் வைத்து ஆராயாமல் "அப்படியா? உன்னை புரிந்து கொண்டேன்" என்று சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்டு விடவேண்டும். இல்லையெனில் வாக்குவாதத்தின் போது நாம் பேசியவற்றை - கண்டிப்பாக சொல்கிறேன் உங்கள் வார்த்தைகளும் கடுமையாக இருந்திருக்கும் - திரும்பவும் நம் விருப்பமில்லாமல் கேட்கவேண்டியிருக்கும் .

      ஏன் அமைதியாக ஒரு பிரச்சினையை அணுக முடியாதா? முடியும். அதற்கு நீங்கள் உறுதியான, தெளிவான மனதுடன் இருக்க வேண்டும். இவைதான் நம்முடைய body language எனப்படும் உடற் சைகைகளை கட்டுப்படுத்தும். குரலின் தொனி மிக முக்கியம். அழுத்தமாக ஆனால் குரல் உயர்த்தாமல் பேச வேண்டும். இந்த தொனிதான் எதிரில் இருப்பவர்களின் மனதையும் சேர்த்து கட்டுப்படுத்தும். நாம் சொல்வது மிக முக்கியம் எனப் புரியும். தவறான உடல்மொழி பேசுவதை தவறாக அவர்கள் மூளைக்கு தெரிவிக்கும். ஒரு கோபத்தில் இருக்கும் போது இதையெல்லாம் செய்ய முடியுமா? இதற்குதான் யோகா, தியானம் பொன்றவை பயன்படும். நம்மை நாம் தெளிவாக புரிந்து கொண்டு மற்றவரையும் சரியாக புரிந்து கொள்ள மனக்கட்டுபாடு தேவை. அதை பெற இவை மிகவும் உதவியாக இருக்கின்றன.
                                                                                                                        ......தொடர்ச்சியாது வரினும்... யாது போயினும்.Part-5 


         முதல் பகுதியில் சொன்னது போல் நம்மை சம நிலைபடுத்திக் கொள்வது முக்கியம், அதைவிட முக்கியம் அடுத்தவருடன் நம் நிலையை சமன் செய்வது. இல்லையென்றால் - கடலில் விழுந்தவனை தூக்கிவிட கை நீட்டி நாமும் கடலில் விழுந்து விடுவோம். ஏற்கனவே விழுந்தவனும் எழ மாட்டான். அதனால் நாம் உறுதியாக இருந்தால் பிரச்சினையின் ஆரம்பம், முடிவு, அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை - நாம் நினைத்தபடி நடக்கவேண்டுமெனில் சூழ்நிலை நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 

        " பாம்பென்றால் மிதி பழுதென்றால் தாண்டு " சூழ்நிலையை கையாள கிடைத்த ஒரு சூட்சுமம். எது பாம்பு ? எது பழுது? என்று தெரியாமல் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்த்தால் சரி வராது. பேசினால் பிரச்சினை வரும் என்று பயந்தோ " எனக்கு யார் தயவும் தேவையில்லை " என்று நினைத்தோ வெளியாட்களிடம் ஒதுங்கலாம். வீட்டில் உள்ளோரிடம் ஒதுங்கி நின்றால் அது வீடாகவே இருக்காது. எனவே குடும்பத்தாருடன் முரண்பாடுகள் வரும்போது அதனை எதிர் நோக்கி சரி செய்ய வேண்டும். நத்தை தன் கூட்டிற்குள் ஒதுங்குவது போல தன்னக்குள்ளே முடங்கிக் கொள்ளக்கூடாது. 

      கண்டிப்பாக இதற்கு மாற்றுக் கருத்து உண்டு. பொருளாதாரம் , பொருளீட்டல் சம்பந்தமாக பதட்டமும் கவலையுமாக திரியும் உலகில், பிரச்சினையின் ஆணிவேரை அழிக்கும் பொறுமை நமக்கு இருக்காது. ஆனால் நல்ல குடும்பம் அமைய அதை செய்துதான் ஆகவேண்டும். குடும்பத்திற்குள் அன்பிற்கு மட்டும்தான் எல்லையில்லை, மற்ற அனைத்திற்கும் எல்லையுண்டு. பொதுவாக பிரச்சினைகளின் மையம் தவறாக புரிந்து கொள்ளல்தான். இது இரண்டு வகை. ஒன்று ஒரு உறவு புதிதாக உருவாகும்போது நம் எல்லைகளை வரையறுத்து விடுவது நல்லது. கணவன்/மனைவி, மருமகன்/மருமகள் ,அவர்களது குடும்பம், புதிய நண்பர்கள் எல்லாமே இதனுள் அடக்கம். (சில சமயம் நம்மை கலங்க வைக்கும் சம்பவங்கள் நட்பின் மூலமாகவும் நடைபெறும்) இரண்டு ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் - பிள்ளைகள் பதின் வயதை தொடும் சமயம், அவர்கள் படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வேறிடம் செல்லும் போது , மற்றவர்களின் உடல் நலம் பாதிக்கும்போது. நம்முடைய வாழ்க்கை முறைகள் பாதிப்படையும். 

    ஒருவருடனான பிரச்சினையை சரி செய்ய நினைத்து சம்பந்தப்பட்டவரிடம் முயற்சி செய்து தோற்றுப் போன பழைய கதைகளை மறந்துவிட வேண்டும். அப்போது உங்கள் பக்கமும் தவறிருக்கலாம். ஒருவேளை உங்களை உயர்வான ஒரு நிலையில் சித்தரித்து அது போன்ற மனோபாவத்தில் இருந்தால், கண்டிப்பாக நம்முடைய தொனி அதனை காட்டிக்கொடுத்துவிடும் .இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும். எனவே இது போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்குமுன் நீங்கள் உறுதியான மனதுடன் இருக்க வேண்டும். மேலும் உண்மையான பிரியம் இருக்க வேண்டும். ஆளுமைத்தன்மைகளை விட்டுவிட்டு வெளிப்படையான ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்.  
                                                                         
                                           .... தொடர்ச்சி
          உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
               உள்ளம் நிறைவோமா? - நன்னெஞ்சே!
         தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
             சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே!

                                                        - மகாகவி பாரதியார்.


யாது வரினும்.. யாது போயினும்.Part-4 

          வழக்கமாக நான் மன வள கட்டுரைகள் இடும்போது யாருக்காக இந்த பதிவு என்பதை தெரிவித்து விடுவேன். சென்ற பதிவில் தெளிவுபடுத்தவில்லை என நினைக்கிறேன். முதலில் ஒரு பிரச்சினையை பார்ப்போம். பொதுவாக கல்லூரி விதிமுறைகளின்படி அலைப்பேசியை மாணவன் பயன்படுத்தக்கூடாது.
 
       ஒரு மாணவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அலைப்பேசியில் அடக்கப்பட்டிருந்த விசயங்கள் வயதிற்கு மீறியவை. நிச்சயம் வழி நடத்தப்பட வேண்டியவன். இது பற்றி ஆலோசனை கூற பெற்றோரை அழைத்தபோது விசயம் புரிந்தது. தந்தை அவனுடன் பேச மாட்டாராம். பேசிப்பல வருடங்கள் ஆகிவிட்டதாம். ஒரே மகன் வேறு. " ஒன்பதாம் வகுப்பு அவன் படிக்கும்போதே அவன் போக்கு பிடிக்கவில்லை. சத்தம் போட்டால் கை மீறிப்போகிறது. நிம்மதி போய்விடுகிறது. எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டேன்" என்றார். மருத்துவரின் ஆலோசனைப்படி யோகா, தியானம் செய்கிறாராம்.
 
           இதே போல வேறு ஒரு விசயத்திற்காக மாணவியின் தாயை அழைத்தபோது அவர் சொன்னதும் இதே கருத்துதான். " இவளுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை. எதிர்த்து வேறு பேசுகிறாள். அவள் அப்பாவும் இதை ஆதரிக்கிறார். மன உளைச்சல் தாங்காமல் பக்கத்தில் இருக்கும் மடத்தில் பஜனைக்குப் போய் விடுவேன்." அந்த மடத்தில் அவர் active member ஆகிவிட்டாராம். இவர்கள் பெற்ற பிள்ளைகள் சொல்வது என்னவென்றால் -ன்மீகத்தை ஆயுதமாக   பயன்படுத்துகிறார்களாம்.  அவர்களை அவமானப்படுத்துவதாகவும் தோன்றுகிறதாம். அதனால் அவரவர் விருப்பப்படி இருக்கிறார்களாம் . இது போன்ற பிள்ளைகளிடம் சாம தான பேத தண்டம் எதையாவது முயற்சித்து சரி செய்ய வேண்டாமா?. அதுதான் கடமையும்கூட .
 
             இது போலவே மருகளிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மாமனார் "நான் பார்த்துக் கூட்டி வந்தவள். அவளிடம் என்ன சமாதானம் வேண்டியிருக்கு?" என்கிறார். இவரும் தியானம் செய்கிறார்தான். அதுபற்றி ஆலோசனையும் சொல்வார். ரொம்ப நல்ல மனிதர். நிறைவான ஆசிர்வாதங்கள் செய்வார் - வெளியாட்களுக்குத்தான். இன்னும் பல உதாரணங்கள் சொல்லலாம். இவர்கள் அத்தனை பேரும் assertive person என்பதும் உண்மை.

              உண்மையில் மேற்கூறிய பிரச்சினைகளை ஒரு phycologist - மன நல மருத்துவர் (psychiatrist ) அல்ல - சரி செய்து இருக்க முடியும். ஆனால், குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகளை சரி செய்வதிலிருந்து தம்மை திசை  திருப்பிக்   கொள்வது , கடமையிலிருந்து       விலகுவது,       விலக்கி       வைப்பது     தவறில்லையா ?    
  உண்மையான    ஆன்மீகம்  இதைச்  சொல்லித்தரவில்லையே. அதைவிடுத்து ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?. இவர்கள் போலிகளா? அல்லது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்களா? .

             இதன் பாதிப்புகளை இன்னும் கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம். ஒரு குழந்தையின் சிறிய உலகத்தில் நண்பர்கள் இல்லாவிட்டாலும் அப்பா, அம்மா என்ற இருவரின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உதாரணம் போல இருவரும் ஆளுக்கு ஒரு வடிகாலைத் தேடிக்கொண்டால் எதிர்பாராமல் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட ஆளில்லாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை உடனேயே எடுத்து விடுகின்றனர். அல்லது பிடிவாதக்காரர்களாகவும் முரட்டு குணமுடையோராகவும் மாறி விடுகின்றனர். சம்பந்தப்பட்ட பெரிவர்கள் நினைத்தால் தவிர்த்திருக்கலாமே. பெற்றோரின் ஓற்றுமைதானே பிள்ளைகளின் பலம். என் பதிவின் நோக்கமும் இதுதான்.

         இல்லம் என்பது நான்கு பேர் சேர்ந்து வாழும் இடமல்ல , ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட குடும்பம் வாழும் இடம். இதை ஒரு புதினத்தில் படித்துள்ளேன். உண்மைதானே? புரிந்து கொள்ளுதல் என்பது பேசினால்தான் முடியும். ஒவ்வொருவருடைய எல்லையையும் அதுதானே புரியவைக்கிறது. இதை யாராவது சுட்டிக் காட்ட வேண்டாமா? நான் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
                                                                                                                              தொடரும்....     
                            யாது வரினும்... யாது போயினும் part-3                                        
                                                                                                                                                    


நம் மனம் சம நிலையில் இருக்க வேண்டும்.
      நிம்மதியை வெளியே தேடாதீர்கள் உங்களுக்குள்ளே தேடுங்கள்.
              எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே

  நம்மை சுற்றி இருப்பவர்களை நம் பக்கம் இழுக்கப்பார்த்து, முயற்சி செய்து தோற்றுப்போய் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது மேலே குறிப்பிட்ட வாக்கியங்கள் கவர்ந்து இழுக்கும். யோகா, தியானம், பஜனை என்று முயன்று ஒரு வழியாக மனதினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவோம். அதன் பிறகுதான் நான் குறிப்பிடும் விசயம் நடக்கிறது. 

     சிலர் யோகா, தியானம் போன்றவை பயிற்சி செய்ய ஆரம்பித்த உடனேயே பூமியைவிட்டு அடுத்த மட்டத்திற்கு சென்று விட்டது போல, நல்லது கெட்டது எது நடந்தாலும் ஒரு தெய்வீகப் புன்னகை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். "ஜப்பானில் சுனாமியாமே " என்றால் "எல்லாம் அவன் செயல்" என்பார்கள். "தங்கம் விலை ஏறிவிட்டதாமே" என்றால் -பூலோகத்தில் வாழும் அற்ப மானிடப்புழுவே- என்பதுபோல் பார்க்கின்றனர். சிலர் "எனக்கு வாய்த்தது அவ்வளவுதான் " என்று விச்ராந்தியாய் உள்ளது போல பேசுவார்கள். நம் செயல்கள் அவர்களுக்கு பிடித்திருக்கிறதா? அவர்களுக்கும் நமக்குமான உறவு இணக்கமானதா என்று கூட தெரியாமல் கண்ணை கட்டில் காட்டில் விட்டதுபோல உணர்வோம். யோகா போன்றவை செய்வதால் நாம் உணர்வு பூர்வமாக நம்மை கட்டுப்படுத்திக் கொள்கிறோம் என்பது உண்மையே. ஆனால், மற்றவர்களிடமிருந்து விலகுகிறோமா? என்பது எனக்குள் எழும் கேள்வி. இப்படி நடந்து கொள்வதுகூட ஒரு மாயையோ என்று தோன்றுகிறது.

     பரீட்சைக்கு வரும்போது நன்றாக படித்து விட்டு வந்தவன் , சுமாராகப் படித்தவனை ஒரு பார்வை பார்ப்பானே அது போல பார்வை மாற்றம் ஏற்படுகிறது. அவர்களை சுற்றி இருப்பவர்கள் சுவற்றில் முட்டிக் கொள்வதைப்போல உணர்வதுதான் உண்மை. உண்மையில் நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுடன் எத்தனையோ வழிகளில் தொடர்பில் இருக்கிறோம் - என்னால் உன்னுடன் இணக்கமாக இருக்கமுடியவில்லை, எனக்கு உன்னுடைய இந்த விருப்பம் ஒத்து வராது, ஏன் இப்படி நடந்து கொள்கிறாய், என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை " என்ற வார்த்தைகள் வருத்தப்படவோ கோபப்படவோ வைத்தாலும், "இது தான் என்னுடைய எல்லை" என்று கண்ணுக்குத்தெரியாத ஆனால் உணர்ந்து கொள்ளக்கூடிய வரைமுறையை சுட்டிக்காட்டுகின்றனவே. இந்த எல்லையை சரிவர உணர்த்தாமல் இருப்பது தவறல்லவா? . 
        உதாரணமாக சிலரிடம் நாம் கேலி பேச முடியும், சிலர் மற்றவர் கேலி பேசினால் பொறுத்துக் கொள்வார்கள், நாம் பேசினால் வேதனையடைவார்கள் இல்லையா?. இதைத்தான் பழகுமுறை எல்லை என்கிறேன். இதை நம்முடன் தொடர்பிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டியது நம் வேலையல்லவா? இதை சரியாக செய்து விட்டால் தவறான புரிந்து கொள்ளுதல்களும் அதன் விளைவாக நடக்கும் மனதிற்கு ஒவ்வாத காரியங்கள் - முக்கியமாக தற்கொலை முயற்சி போன்றவை - நடை பெறாது அல்லவா? நம்மை சம நிலைபடுத்திக் கொள்வது முக்கியம், அதைவிட முக்கியம் அடுத்தவருடன் நம் நிலையை சமன் செய்வது. எல்லை மீறிய வெளிப்பாடுகள் தரும் அத்தனை கெடுதல்களையும் எல்லையை சுருக்கிக் கொள்வதும் செய்யும். சிரித்து, சண்டையிட்டு, கோபப்பட்டு , மகிழ்ந்து என உணர்வு பூர்வமாக எல்லோருடனும் சேர்ந்து வாழ்ந்து பார்ப்போமே? எப்படி ?. 

யாது வரினும்... யாது போயினும் part-2 

                                                                                                            இனி அடுத்த பதிவில்.... 

தியானம் செய்தால்
குப்பையான நினைவுகள்
வழித்தெறியப்படுமாம்
எனவேதான் .....
கண் மூடி தியானம்!

அந்த நொடியிலேயே
அவனின் உருவம்.....
தொடர்ந்து வந்த நினைவில்
- அவனுக்கும் எனக்குமான
விரிசல்(?) ஆரம்பித்தது
கேள்விக்குறி ஏன் என்றால்
அது சரி செய்ய முடியாத
பூகம்பப் பிளவானது
இனி ஒட்டாது என்றாகியது
சிறு குழந்தையாய்   கையில் ஏந்தி
தோளில் சுமந்து .....
அவனுக்காய் நடந்து ....
அவனுக்காய் படித்து .....
இதயத்தில் சுமந்து ......
துரோகி! என்னை புரிந்து
கொள்ள வில்லையே !முதலில் அவன் பேசியவை
குப்பையாக தோன்றியது
நினைவின் வாலாக
நான் பேசியதும் வந்தது
அது தந்த செய்தியின் சாரம்
இரண்டாவது நிமிடத்திலேயே
எனக்கு புரிந்து போனது
வாலிப வயதில் இருந்தாலும்
என் மகனது குழந்தை பேச்சு
" என்னை புரிந்து கொள்" என்றது
மக்கிப் போகக்கூடிய குப்பை.
என் வார்த்தைகள் .....
என்றும் சபிக்கப்பட்டதாய்...
மக்காத குப்பையாய் எனக்குள்ளே...
தியானம் நிம்மதியை மட்டுமல்ல
நீதிபதியாய் நியாயமும் செய்யும்.

கிராமத்துக் கோயிலும்
அய்யனார் சாமியும்
தரிசனம் தருவது
வருசம் முழுக்க

திருவிழாவில் மட்டும்
சாமிக்கு கவனிப்பு
மற்ற நாட்களில்
சூட தீபாராதனைதான்
சாமியும் இருக்கும்
சாமானியனின் தனிமையில்

 தேர்தல் முடிந்தவுடன்
நம்மை மறந்துவிடுவார்கள்
திருவிழா முடிந்தவுடன்
நாம் மறந்துவிடுவோம்
நமக்குத்தான் என்னவொரு
நியாய புத்தி ......?


 
வேசம் போட்டாச்சு
ஆட்டம் ஆரம்பிச்சாச்சு
மண் தரையில் உருண்டாலும்
மன்னன் உடை தரிச்சாச்சு
அட்டை வாளும் கிடைச்சாச்சு
மனுசக் கால் குதிரை காலானது
கொள்ளு செலவுகூட இல்லை
ஆளும் தோரணையும் வந்தாச்சு
எல்லாம் சரி...
மேடைக்கு போனபின்தான் 

புரிந்ததுஅதிகாரம் செய்யத்தான்
இங்கே ஆளுங்க இல்லை

 

வரிசையாய் பொம்மைகள்
     சில மனித வடிவில்
சில மிருக வடிவில்
     எது மாதிரியும்
இல்லாததும் உண்டு
     கடையிலிருந்து
வீட்டிற்கு வந்தன
     சில வீதிக்கும் சென்றன


சேரிடம் வந்ததும்
       வந்த வழி மறந்தன
தன் பாதையில்
       தானாக நடந்தன
- அப்படி நினைத்தன
       ஆடின பாடின ஓடின
விழுந்தன எழுந்தன
      அடுத்ததற்கு எதையும்
கற்றுத் தரவுமில்லை
      கற்றுக் கொள்ளவுமில்லை
தலை சிறந்த பொம்மையாக
     தன்னை நினைத்தன


என்றோ ஒரு நாள்
      வீட்டிற்கு வந்ததும்
வீதிக்கு வந்ததும்
     ஒரிடத்தில் சந்தித்தன
உடைந்தும் அழுக்காகவும்
    சிரிப்பை மறந்து போயும்
ஆனாலும்.....
     அடையாளம் கண்டன
என்னதான் செய்தோம்
      என்று கேட்டுக்கொண்டன
காட்சிகள் ஒளிப்படமாய்
     வெற்று வெளியில் ஓடின
தோற்று துவண்ட
      காட்சியில் சிரித்தும்
வெற்றி எக்காளமிட்ட
     காட்சியில் அழுதும் என
உணர்வின் பிரதிபலிப்பு
     மாறித்தான் போயிற்று


ஏனெனில்.....
தோற்றபோது தேற்றிய
     சத்திய ஜோதியானது
எக்காளமிட்டபோது   

    அணைந்து விட்டதும்
 அவைகள் தனித்து
     விடப்பட்டதும் தெரிந்தது.
அடுத்த தோல்விக்கு
     காரணமும் புரிந்தது


மீண்டும் விற்பனைக்கு
     புதிதாக மாறி காத்திருந்தன
இந்த முறை அத்தனைக்கும்
     அர்த்தம் புரிந்து விட்டிருந்தது


தொடர்ச்சி......
முதலில் வேலைக்குச் செல்லும் நகரத்துப் பெண்களின் நிலை:
பெண்கள் படித்து வேலைக்குச் சென்று வீட்டை மட்டுமல்ல நாட்டையும் உயர்த்துகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். வேலைக்கு செல்வதற்கான காரணங்கள்:
1. குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த. இன்றைக்கு ஒருவரின் வருமானத்தில் குடும்பத்தின் அடிப்படை செலவுகளை சமாளிக்க முடிந்தாலும் , குழந்தைகளின் கல்வி ,திருமணம் போன்ற பெரிய தேவைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.
2. தொழிற்கல்வி படித்துவிட்டு வீட்டில் இருப்பது நாட்டிற்கும் சேர்த்தே கேடு என்பதால்
3. சில குடும்பங்களில் பெண்களின் வருமானம் வீட்டிற்கு மிக அவசியம் என்பதால்
4. பொருளாதார பிரச்சினை இல்லையென்றாலும் , "வீட்டில் இருந்தால் எனக்கு மனக்குழப்பம் அதிகமாகி விடுகிறது" என்று தன்னை நிகழ்காலத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேலை தேவைபடுகிறது.
1,2, மற்றும் நான்காம் பிரிவினர் திறமையாய் இருந்தால் போதும், வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த மூன்றாம் பிரிவினர் என்ன திறமையாய் இருந்தாலும் மரியாதை கிட்டுவதில்லை. அவள் வருமானத்தை நம்பி அவள் குடும்பம் இருப்பதால், அதிகப்படி வேலை, குறைந்த ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர் நோக்க வேண்டி இருக்கும். ஆனாலும் உயர்பதவியில் இல்லாத பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில துறைகளை தவிர்த்து பெண்களின் வேலை அவர்களுக்கு சுமையாகவே உள்ளன.

ஆசிரியப்பணி, மருத்துவத்தொழில் போன்ற பிரசித்தி பெற்ற தொழில்களின் பிரச்சினைகளை மட்டும்தான் குடும்பத்தாரால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவற்றின் தாக்கத்தையும் அவை தரும் மன அழுத்தத்தையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் குடும்பத்தில் வேறு பிரச்சினகள் உருவாகும். ஒரு கடுமையான நாளின் வேலைப் பணியை முடித்து வீடு திரும்பும் பெண்ணிற்கு உறவுகளின் புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. நிம்மதியான உறக்கம்கூட மறுக்கப்படுகிறது. அப்போது ஆதங்கமாக உணர்ந்தாலும் தொடர்ந்து வரும் நாட்களின் ஓட்டத்தில் மறந்துவிடும். நிற்க வைத்து இது பற்றி கேள்விகேட்டால்கூட பதில் சொல்லும் மன நிலை அவர்களிடம் இருக்காது. அவர்களுக்கு மரியாதையையும் மன நிம்மதியையும் பெற்றுத்தருவது யார் பொறுப்பு? உண்மையில் அவர்கள்தான் இன்று வாழ்த்தவேண்டும்.


கிராமத்துப் பெண்களின் நிலை வேறு. குடும்ப வரவு செலவுகளை கையில் வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக குடும்பத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டவர்களை விட்டுவிடலாம். பெரும்பாலான உரிமைகள் மறுக்கப்படுவது இளம் பெண்களுக்குத்தான். படிப்பு போன்றவற்றில் கட்டுப்பாடு விதிப்பது ஒரு பக்கம் என்றால் இன்னமும் கிராமத்தில் காதல் பிரச்சினையில் "கௌரவக்கொலைகள்" நடைபெறுகின்றன. வீட்டின் மரியாதை பெண்ணின் கையில் உள்ளது என்றால் முதல் மரியாதை பெண்ணுக்குத்தானே கிட்டவேண்டும், அப்படி இல்லை. மரியாதை குறைதல் இல்லையென்றாலும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடம் இல்லை. இதை தருபவர்களுக்குத்தான் வாழ்த்தும் உரிமையும்.


       இன்றைக்கு பெண்கள் தினம். செய் தொழில் அனைத்திலும் ஆண், பெண் வேற்றுமை இல்லாமல் எல்லா தொழிலும் எமக்கிசைவுதான் என்று பெண்களின் பங்களிப்பை பெற்று வரும் இன்றைய உலகம். இதை பற்றிய நினவு வரும்போதெல்லாம் முதலில் நிற்பது மீசைக்கார பாரதி. பெண்ணை உயிருள்ள உணர்வுள்ள ஜீவனாக மதித்தவர். பாரதியின் பல கவிதைகளும் பெண் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றன. பெண்மையை போற்றுதல் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. பழந்தமிழகத்தில் இருந்து எங்கோ மறைந்து போன ஒன்றை மீட்டெடுத்தன பாரதியின் கவிதைகள். ஆதியில் என்ன நடந்தது?

       
உலகின் மகா சக்தி பெண் என்ற உண்மை இருந்தது. ஒன்றை ஆக்குதல் அழித்தல் அவளால்தான் முடியும் என்பதையும் ஒப்புக்கொண்டனர். அதனால்தான் உலகை உய்விக்கும் மழைக்கு மாரி என்றும் கொடுமைகளை களையும் சக்திக்கு காளி என்றும் பெயரிட்டனர். சங்க காலத்தில் பெண் புலவர்கள் இருந்ததும் அவர்களின் வரவிற்காகவும் வாழ்த்திற்காகவும் மன்னர்கள்கூட காத்திருந்ததும் புற நானுற்றுப் பாடல்களில் தெரிய வருகிறது - ஔவையார், காக்கைப்பாடினியார் போன்றோர். அரசியல், கல்வி கலை போன்றவற்றில் புகழும் சான்றோர் சபையில் சம இடமும் பெற்று விளங்கிய பெண்கள் பின்னர் ஏன் அடுப்படிக்குத் தள்ளப்பட்டனர்.

     பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் - இங்கு சமூக மாற்றங்களையும் கொண்டு வந்தன. பெண் என்பவள் ஒரு போகப் பொருள் என்று பார்வை கொண்ட கிழக்கு மற்றும் மேற்காசியாவிலிருந்து வந்த அந்நியரின் வரவு தமிழர்களின் பார்வையையும் மாற்றின ( பழங்கால சீனாவில் ஒரு கணவன் தன் மனைவியை கொன்றால், மேஜை நாற்காலி போன்ற பொருட்களை உடைத்ததற்கு சமம். ஒரு தண்டனையும் கிடையாது). சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டு நம் பெண்களும் கூட்டு கிளியாக இசைந்தனர். ஆனால் இவை எதுவுமே பெண்ணின் அறிவு நுட்பத்தையோ, வீரதீரத்தையோ சிறிதும் குறைத்ததில்லை. ஒரு கட்டத்தில் அத்தனையும் மறந்துபோய் , மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்ற கொள்கைப்படி - அடிமைகள் என்ற வார்த்தையே இல்லாத தமிழ் பண்பாட்டில்- பெண் அடிமைகளை உருவாக்கினர். பெண்ணை போகப்பொருளாய் ஆக்கினர். அடுத்தவன் அபகரிப்பான் என்ற பயத்தில் மனைவியையே அடிமையாக்கிக் கொண்டனர். அங்கேயும் சில ஆண்மகன்கள் தமிழ் பண்பை உணர்ந்து பெண்மையை மதித்தனர். இந்த விசயம் எல்லாம் வெளிவரவிடாமல் , பல்வேறு காரணம் சொல்லியும், அச்சுறுத்தல் செய்தும் அடிமையை தக்க வைத்தனர். பெரும்பாலான சடங்குகளோ சம்பிரதாயங்களோ இல்லாத நம் மண்ணில் இவை புதிதாக நுழைக்கப்பட்டன.


      அதன் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் சமூகப் பிரவேசம் மீண்டும் தொடங்கியது. வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்களை தமிழ் மண் கண்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நடத்திய விதமும் ஒரு காரணமாக அமைந்தது. பாரதி, பாரதிதாசன் .... போன்றோரின் எழுத்துக்கள் பெண்ணை வணங்கியது மீண்டும் உயிர் கொடுத்தது. நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் .... பெண்ணிற்கு அணியாய் அமைந்தன. புதிதாக எத்தனை அணிந்தாலும் தன்னிலை பிறழாத தன்மானம் மட்டும் எப்போதும் பெண்களின் விருப்பமாக இருந்தது.

     சரி இப்போது.....? கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுகளாக பலர் முயற்சி செய்து தமிழ் மண்ணில் மீண்டும் நிலை நாட்டிய பெண்ணின் மரியாதை இப்போது உண்மையில் உள்ளதா? கேள்விக்குறிதான். சமுதாயத்தின் மேல் தட்டு எப்போதும் பரிசோதனைக்கு உரியதும் அல்ல சாதாரண வாழ்வியலுக்கு உகந்ததும் அல்ல. அதற்கு கீழ் உள்ள பெண்களின் நிலையைதான் கேள்வியாக்குகிறேன்.
                                                                                                                              - தொடர்ச்சி நாளை.

பூமியின் எல்லை தேடி
குளிர்ச்சியை உணர்ந்த
                   முதல் சுவாசம்
மாலை சந்திரனின்
வெளிச்சமாய் தாய் முகம்
                  முதல் பசி தீர்த்தது
காலை பகலவனின்
பரிவாய் தந்தையின்
                  முதல் ஸ்பரிசம்

மழையாய் ஓடையாய்
            அருவியாய் நதியாய்
என்னை நனைக்கும் பின்
             உலர்த்தும் உறவுகள்
ஆலமரத்து கிளைகளின்
            அன்றில் பறவைகள்!


சமயத்தில் இடி இடிக்கும்
          சூறாவளி சுழன்றடிக்கும்
அனலாக வெயிலடிக்கும்
           கடல் கரைதாண்டி
 தரை தொடலாம்....
சில வேளை நான்
காணமலும் போகலாம்!

ஆனால்
என்னை மீட்டெடுக்கும்
எனக்கான என் உலகம்!


குட்டிக் குட்டியாய்
     மஞ்சள் பூக்கள்....
குழந்தையைபோல்
எட்டி பார்க்கின்றன
அது மலர்ந்து
நேரம் ஆகிவிட்டதால்
இன்னும் சற்று
பொறுத்தால்
வாடிவிடும் என்று
பூசனைக்கு
சேர்த்துக் கொள்ளவோ
தலையில்
சூடிக் கொள்ளவோ
அலங்கார பூச்சாடியில்
வைக்கப்பதற்கோ
யாரையும் தேடவில்லை
"இப்படி ஒரு கோடு
அப்படி ஒரு கோடு
இங்க ஒரு கோடு"
என மழலையில்
ஆங்கில முதல் எழுத்தை
ஓவியமாக
வரையும் ஓவியத்தை
 பரவசமாய் பார்க்கின்றன

மலையேற்றம்
குளிரையும் தாண்டிய
வெப்ப வீச்சில்
பாதங்களின் பரிதவிப்பு
பாதையின் கடினம்
பாறைகள் விதித்த
எல்லையை தாண்ட
மரமே பாலமாய்

ஆனால்....
மரத்திற்கென்ன
காதல் தோல்வியா ?
பாறை பாறையாகவே
பாராமல் இருந்ததால்
பார்த்து பார்த்து
மனம் வெறுத்து
இலை துறந்து
உயிர் விடுத்து
தொடுதலில் வெற்றியா?

இங்கும் பலருக்கு
பல கதைகள் கிட்டுகிறதே
உண்மையில்
இது தாஜ்மகால்தான்