முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் புதிதாக வரும் உறவுகளிடம் எப்படி சுமூகமான புரிந்து கொள்ளலை ஆரம்பிப்பது எனக் காணலாம். இந்த வகையில் முக்கியமாக இடம் பிடிப்பது வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள் என்கின்ற உறவுதான். ஒரு பெண் ஒரு வீட்டிற்குள் புதிதாக வரும்போது நிறைய உறவுகள் ஏற்படும். மாமனார்,மாமியார், கணவன், நாத்தனார், கொழுந்தன் போன்றவை. ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் இருக்கும். சிலருக்கு உணவின் ருசி என்பதில்லை, தனிப்பட்ட துண்டு, சோப் வைத்துக்கொள்ளுதல், சூடாக தேநீர் அருத்துவது, சிலர் தட்டு போன்றவைகூட தனியே வைத்திருப்பார்கள். முந்தைய தலைமுறையில் திருமணமாகி வரும் பெண்கள் வீட்டில் ஒய்வு கிடைக்கும் நேரத்தில் இவற்றையெல்லாம் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை முக்கியமான எட்டு மணி நேரத்தை அலுவலக வேலை அபகரித்துக் கொள்வதால். எனவே முதலிலேயே இவற்றை சொல்லி விடுங்கள், சில சமயம் என்ன நடக்கும் என்றால் புதுப்பெண் என்பதால் கொஞ்ச நாள் அனுசரித்து செல்லுவார்கள். பிறகு ஒரு பொல்லாத நாளில் குறையாக இது பறை சாற்றப்படும். சில வீடுகளில் தேதி வாரியாக இது போல நடந்த நிகழ்ச்சிகளை பட்டியலிடுவார்கள். இது குற்றம் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இது போல நடந்து கொள்ளாமல் ஆரம்பத்திலேயே இதமாக தெரிவித்து விடலாம். "அதெல்லாம் செஞ்சாச்சு . இருந்தாலும் சரி பட்டு வரவில்லை" என்பதெல்லாம் குறைந்த சதவிகிதத்தில்தான் இருக்கும்.
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். ஒருவேளை சிறு உரசல் ஏற்பட்டாலும், உடனே கொதித்துப் போய் அளவில்லாமல் வார்த்தைகளை பேசினால் சீர் செய்ய முடியாததாகிவிடும். இது போன்ற பிரச்சினைகள் சமாதானத்திற்காக வரும்போது ஒன்று தெளிவாக புரியும். இரு தரப்பினருமே " நான் அப்படிப் பேசவில்லை" அல்லது "நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை" என்பார்கள். இதிலிருந்து ஒன்று புரியும், மனிதன் ஒரு சமூக விலங்கு. எந்த நிலையிலும் நியாயவாதியாகவே சமூகத்தின் கண்ணில்பட நினைக்கிறான். அதற்கான நடவடிக்கையே இது போன்ற சமாளிப்புகளும், சமாதானங்கள்- ஒரு ரகசியம் சொல்கிறேன் -நாமும் குடும்பம் என்ற அமைப்பை விரும்புகின்றவர்கள்தான் - ஆரம்பித்த சண்டையை லாகவமாக முடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற சமாளிப்புகளை கேட்கும் போது அதனை சோதனைக்குழாயில் வைத்து ஆராயாமல் "அப்படியா? உன்னை புரிந்து கொண்டேன்" என்று சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்டு விடவேண்டும். இல்லையெனில் வாக்குவாதத்தின் போது நாம் பேசியவற்றை - கண்டிப்பாக சொல்கிறேன் உங்கள் வார்த்தைகளும் கடுமையாக இருந்திருக்கும் - திரும்பவும் நம் விருப்பமில்லாமல் கேட்கவேண்டியிருக்கும் .
ஏன் அமைதியாக ஒரு பிரச்சினையை அணுக முடியாதா? முடியும். அதற்கு நீங்கள் உறுதியான, தெளிவான மனதுடன் இருக்க வேண்டும். இவைதான் நம்முடைய body language எனப்படும் உடற் சைகைகளை கட்டுப்படுத்தும். குரலின் தொனி மிக முக்கியம். அழுத்தமாக ஆனால் குரல் உயர்த்தாமல் பேச வேண்டும். இந்த தொனிதான் எதிரில் இருப்பவர்களின் மனதையும் சேர்த்து கட்டுப்படுத்தும். நாம் சொல்வது மிக முக்கியம் எனப் புரியும். தவறான உடல்மொழி பேசுவதை தவறாக அவர்கள் மூளைக்கு தெரிவிக்கும். ஒரு கோபத்தில் இருக்கும் போது இதையெல்லாம் செய்ய முடியுமா? இதற்குதான் யோகா, தியானம் பொன்றவை பயன்படும். நம்மை நாம் தெளிவாக புரிந்து கொண்டு மற்றவரையும் சரியாக புரிந்து கொள்ள மனக்கட்டுபாடு தேவை. அதை பெற இவை மிகவும் உதவியாக இருக்கின்றன.
......தொடர்ச்சி
யாது வரினும்... யாது போயினும்.Part-5