மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


ரோஜாக்களின் அணிவகுப்பில்
     மல்லிகையின் தூய்மையில்
செவ்வந்தியின் வண்ணத்தில்
     சற்று ஓரம் தள்ளப்பட்ட
ஒரு சாதாரண சிறிய பூ
    கண்ணை கவரும் அழகில்லை
வெள்ளை, மஞ்சள், பழுப்பு
     எதுவுமே சொல்ல முடியாத
துவைக்க வேண்டிய வண்ணம்
      தரையெங்கும் சிதறிகிடந்தது
அதன் வாசத்தை சுவாசித்து
      நெஞ்சுக்கூடு விரிந்தது
ஒன்றிரண்டை எடுத்து
     பையில் போட்டு வருடமானது
வண்ணம் மாறி, ஈரம் இழந்து
      எப்போது வேண்டுமானாலும்
துகள்களாக மாறி......
     திசை தெரியாமல் பறந்து
உலகின் பார்வையில்
      காணாமல் போகலாம்.
அதன் வாசம் மட்டும்
         இருந்த இடத்தில்
இன்னும் மணக்குது.
 
எப்போதோ மறைந்த தாயின் நினைவு போல
 
      நேற்றைய பதிவில் உடல் ரீதியான பிரச்சினையை சரி செய்யும் விதம் பார்த்தோம், இனி மனப்பதட்டத்தை குறைக்கும் நடைமுறைகள், வீட்டின் முன்னேற்றம், குழந்தைகளின் எதிர்காலத்திட்டம் ஆகியவற்றை உங்கள் மனைவியுடன் ஆலோசியுங்கள். தேவையில்லாத கவலைகள் பறந்து விடும். உங்களுக்கும் புதிய யோசனைகள் கிட்டலாம். பெண்களுக்கே உரிய நாட்களில் , முழு ஓய்வை தாருங்கள்.

   வீட்டில் இருக்கும் பெண் என்றால் புதிய வகை கலை பயிற்சிகளை அறிமுகப்படுத்துங்கள் ஓவியம் வரைதல், தையல் வேலை, இசைக் கருவிகள் இசைக்க கற்றுக்கொள்வது. இவை அவர்களுக்குள் புதிய உற்சாகத்தை உருவாக்கும். புத்துணர்வை வெளிப்படுத்துவார்கள். அலுவலகம் செல்பவர் என்றால் விடுமுறை நாட்கள் உற்சாகமளிக்ககூடியதாக திட்டமிடுங்கள். No Samayal Day, fruit night போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம்.

   எந்த பிரச்சினையையும் தீர்க்கக்கூடிய முகமாக ஆரம்பிக்கலாம். சிலர் சாதாரண விசயத்தைகூட திகிலூட்டும் பரபரப்புடன் ஆரம்பிப்பார்கள். அது போன்ற உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள் அல்லது தடுத்து வையுங்கள்.

    சாதாரணமாக நாம் பெண்கள் இருப்பதாக உணர்வது , அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாது போகும்போதுதான். அப்போதுதான் அவர்களுக்கான கவனிப்புகள் கிடைக்கும். அதனாலேயே சில சமயம் உடல் நலமில்லாமல் இருப்பதை விரும்புவார்கள். எதற்கு இவ்வாறு நடக்க விட வேண்டும், இது நம் தவறும் அல்லவா?. இந்த நிலை வராமல் தடுப்பதும் நம் கையில்தான் உள்ளது. இத்தனை கவனிப்பும் ஆண்களுக்கும் ஆண்ட்ரோஜன் குறைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் -  நாற்பதுகளில்தான்.  ஆனால், ஏதும் சொல்லாமலே இனிய புன்னகையுடன் இதற்கான கவனிப்புகள் ஆரம்பம் ஆகும்.


  விழுவதும் அழுவதும் வாழ்க்கை என்றால் தூக்கி விடுவதும் கண்ணீரை துடைத்து விடுவதும்தான் காதல். இது கணவன்-மனைவியிடையே கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆத்மார்த்தம் என்பதை வாழ்ந்த நாட்கள்தான் சொல்லும்.


மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண... Part 2 

          இந்த சமயத்தில் மனைவிக்கு உதவுவதில் முக்கிய பொறுப்பு கணவரிடம்தான் உள்ளது. ஏனென்றால், குடும்பத்தின் உள்ள மற்றவர்கள் இந்த விசயத்தை சரிவர புரிந்து கொள்ள முடியாது. பெரியவர்கள் - ஏற்கனவே தங்கள் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளில் ஆழ்ந்திருப்பர். சிறியவர்களுக்கு வெளிப்படையான வியாதிகளான காய்ச்சல், தலைவலி போன்ற வழமையானவற்றைதான் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், இந்த பிரச்சினையில் ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதுபோல தெரியும், அப்போது சுறுசுறுப்பாகவும் திடீரென சோர்வடைத்தும் விடுவதால் புரிந்து கொள்ளுதல் சிரமம். எனவே 75 சதவீதம் இதனை கணவர்தான் சரிசெய்ய வேண்டும். மற்றவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுத்தரவும் அவர்களால்தான் முடியும். எப்படி?

      முதலில் உண்மையான கவனிப்பை மனைவிக்குத் தரவேண்டும். இத்தனை நாள் கடந்து வந்த பாதையின் கடினத்தை தாண்டி "என்னை ஜெயிக்க வைத்தது என் மனைவிதான்" என்ற புரிதல் வேண்டும். இதனை மனதில் பதிய வைத்தால்தான் நடவடிக்கையிலும் இதமாக வெளிப்படும். அந்த சமயத்தில் பொதுவாக கணவருக்கும் நாற்பதுகளில் இருப்பர். ஆனால் உடல் நலம் நன்றாகவே இருக்கும். உடல் ரீதியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெண்ணைவிட ஆணுக்கு இது போன்ற பிரச்சினைகள் காலம் தாழ்த்தியே தலை துக்கும்.

       கவனிக்க வேண்டும் என்றால், இனிமையாக பேசுவது அல்ல. இந்த நிலையில் தேவையான உதவியை செய்யாமல், வார்த்தைகள் மட்டும் பலனளிக்காது. "இப்படியேதான் இத்தனை நாளும் ஏமாத்திக் கொண்டிருந்தீர்களா?" என்று திட்டுதான் விழும். ஏனெனில் சீரணக்கோளாறு சத்து குறைபாடு ஆகியவற்றால் , எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் . இது போன்ற வசவுகள் கொஞ்சம் குழந்தைகளுக்கும் கிட்டும். நீங்கள் நிலைமை புரியாமல் பதில் பேசினால் வீடு ரணகளம் ஆகிவிடும். சத்து குறைவினை சரி செய்தால் இவை சரியாகிவிடும்.

      அதற்கு சத்து பானங்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் இந்த வயது பெண்களுக்கான சிறப்பு பானங்களை பிரபல தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை நல்ல பலனைத் தருவதை கவனித்துள்ளேன். சூப் வகைகள் சமயம் கிட்டும்போதெல்லாம் அருந்த வையுங்கள் , முடியவில்லை எனில் இதற்கும் ரெடிமேட் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். . இரத்த சுத்திக்கு பப்பாளி, கொய்யா, திராட்சை போன்ற பழங்கள் அடிக்கடி சாப்பிட வைக்கவும். கலோரி பற்றிய கவலையெனில் பேபி கார்ன், முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட வைக்கலாம். இந்த அவசர யுகத்தில் இவற்றை , தனக்காக செய்து கொள்ளமாட்டார்கள் எனில், உங்களுடைய தேவைகளாககூட இவற்றை சேர்க்க வைக்கலாம். அசைவ எனில் சுவரொட்டி போன்றவற்றை சேர்க்கலாம். எந்த வேளையும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

மருத்துவரிடம் செல்லும்போது கவனிக்க வேண்டியது , ஹார்மோன் மருந்தை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். அது பிற்பாடு பிரச்சினையை ஏற்படுத்தும். அல்சர் போன்றவற்றிற்கு சரியான மருந்தை நேரப்படி எடுத்துக் கொள்ள செய்யுங்கள். இரவில் முட்டை, மைதாமாவு, ரவை போன்றவற்றால் செய்த உணவுகளை தவிர்க்கவும். பால் இரண்டு கோப்பையாவது தினமும் குடிக்க வேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவற்றால் உடல் நிலை வெகுவாக தேறிவிடும். உங்களுடைய நடவடிக்கைகளில் குழந்தைகளும் சூழ்நிலையை புரிந்து கொள்வர்.

                                                                                         -இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்
         
 
 மணவிழா உண்மையான வெள்ளிவிழா காண .. part 1

சாலை ஓரத்து கையேந்தல்கள்
      நடுங்கும் விரல்களுடன் நீண்டிட...
முகத்தில் வரியோடிய சுருக்கங்களுடன்,
      இன்றைய பாட்டிற்கான தேவையில்....
வறுமை கழுமரத்தில் தொங்கியது
      இத்தனை நாள் வாழ்க்கை கேள்வியாய்..
புதிதாக கற்ற கைத்தொழில்...?
      ஒரே பார்வையில் புரிந்தது
பழகியது கை மட்டும்தான் போலும்
     குன்றலுடன் நின்ற உடலோ பதறியது
யாரோ "தர்ம பிரபு"வின் தயாளத்தில்
     வயிற்றின் அக்னி அயர்ந்திட....  
மனதின் சூன்யத்தின் ஊடுபாகாய்
     ஒளி இழந்த கண்களின் வரிகள்
நாளையாவது நாடகம் முடியுமா?

      ஆபுத்திரன் கை பிச்சை பாத்திரம்
ஆதிரையின் பிச்சையை தேடியது.

       என்னதான் இனிய இல்லறம் நடத்தினாலும் , சில கட்டத்தில் அது ஆரம்பமும் முடிவும் தெரியாத இடியாப்ப சிக்கலாய் தெரியும். எதனால் இந்த சூழ்நிலை என்று தெரியாமல் குழப்பம் மேலிட சூரிய குடும்பத்திலிருந்து தனியே கழட்டிவிடப்பட்ட கிரகம் போல் அலைவோம். வீடு என்றாலே என்ன இன்னைக்கு காத்திருக்கிறதோ என்ற பயம் ஏற்படும். சொல்லப் போனால் முதல் சுருதி பேதம் ஏற்படுவது இப்போதுதான். இதனை சரி செய்ய முடியுமா?

         உங்கள் மனைவி முப்பதின் பின் பாதியில் இருக்கும்போது இது ஆரம்பித்துவிடும். உடல் நலம் சரியில்லாது , உண்மையில் தளர்ந்துபோய் தெரிவார். சிரிப்பை மறந்த முகம். மருத்துவரிடம் செல்ல அழைத்தால் வர மறுப்பார். தொடர்ந்து வீட்டின் நிலைமை அசாதரணமாக மாறிவிடும். ஏன் இப்படி?

முதலில் அதற்கான காரணங்கள்.

1. முப்பதின் பிற்பாதியில் ஈஸ்ட்ரோஜன் - ஹார்மோன் - குறைவதால் ஏற்படும், குறிப்பிட்டுச் சொல்லமுடியாத உடல் உபாதைகள் ஆரம்பித்து விடும். கால்சியம் குறைபாடு, ஹீமோகுளொபின் குறைபாடு, அனீமியா, சீரண கோளாறு, சத்தின்மை ஆகியன ஏற்படும். எரிச்சலடைவது , படபடப்பு, சட்டென சோர்வடைவது , சில சமயம் நெஞ்சு வலி ஆகியன ஏற்படும்.

2. இத்தனை நாள் குடும்பத்தின் தேவையை மட்டும் நினைத்து செய்த தன்னை மறந்த செயல்பாடுகள் இப்போது குறைந்து விடும். உண்மையில் மனதளவில் மற்றவர்களின் ஆதரவைத் தேடும் நேரம்.

3. குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் இருப்பார்கள். அந்த கவலை வேறு இருக்கும்.

4. பொதுவாக பெண்கள் மிக அதிகமாக யோசிப்பார்கள், வரக்கூடிய பிரச்சினை பற்றியும் அதை தீர்ப்பது பற்றியும் மனதிற்குள் ஆலோசனை செய்து கொண்டே இருப்பார்கள். இது கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தும்.;

5. கணவர் தன் மீது வைத்திருக்கும் அன்பின் மேல் கொஞ்சம் போல சந்தேகமும் வரும்.

இது அத்தனையும் பொதுவாக வரக்கூடிய விசயங்கள். இது புரியாமல் சில ஆண்கள் , மனைவிக்கு நம்மேல் அன்பு குறைந்து விட்டதாக கருதி குமைந்து போவதும். சிலர் தேவையில்லாது புது வசந்தங்களை தேடிப்போவதும் உண்டு. இதனை எப்படி சரி செய்யலாம்?


                                                                                                                               தொடரும்....
   

கடினமான காலை நேரம்
சற்றும் காற்று வராத
வெயில் நேரத்துப் பயணம்!
அழுக்காய் கசங்கியதாய்
சுமைகளுடன் கும்பல்!
சுமந்துகொண்டு நகரும்
குப்பையாய் இரயில்!
இடம்பிடிக்க போட்ட சண்டை
அரை மணியாகியும் தீரவில்லை!
எல்லோரும் சிரிப்பை மறந்து
அவரவர் முள் இருக்கையில்.
சன்னலின் வெளியே பார்வை
இலக்கற்ற பறவையாய்.....


இரயில் பாதையின் உறவாய்
இரண்டடி மண் சாலை
விரைவான பயணத்தில்
இரண்டு சக்கர வாகனம்
உலகை மறந்த இருவர்
துப்பட்டா பறக்க முடி பறக்க
புறவழியாதலால் முக்காடிடாத
பின்னிருக்கை பெண் சிரிக்க
(ஆண் சிரித்தது தெரியவில்லை)
............. .............. ...........?
பயணிகள் முகத்திலும்
கொடைக்கானல் குளிர்ச்சி
......... ............ .........!
காதலும் காதலர்களும்
உண்மையோ? பொய்யோ?
ஆனால் ......
நிகழ்கால நெருப்பு சுவடு
பனிப் பிரதேசத்து சூரியன் ஆனது
ஆக, காதலின் தன்மை குளிர்விப்பது.

மற்றவர்களையும்தான்! 
   
வெயிலில் கால்கள் சுடும்போதும்         
        முகம் வருடும் குளிர் காற்று
வெளிச்சத்தில் நிற்கும்போதும்
          தரையில் தொடரும் என் நிழல்
கண்மூடி உறங்கும் போதும்
         பனி போர்வையாய் நிலவின் பரிவு
வெறுமையில் அண்ணாந்தால்
         விழிகளில் ஆயிரம் விண்மீன்கள்
இலக்கின்றி நடக்கும் போதும்
           என்னைத் தொடரும் காலடித் தடங்கள்.

எனக்குத் தெரியும்  -
    -  கடற்கரை தனிமையில்
    -  என்றும் நான் தனித்ததில்லை!

                                 
         கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவினை பற்றி. இன்னும் கொஞ்சம் ஆலோசிக்கலாம் மனதளவில் பெண்கள் இன்றைய சவால்களை சந்திக்கத் தயாராகி விட்டாலும், முந்தைய காலகட்ட பெண்களுடன் ஒப்பிடும்போது உடலளவில் தெம்பு குறைந்துள்ளது. கலோரிகள் கணக்கிட்டு எடை குறைந்த சத்தில்லாத உணவு , தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் ஆயத்தங்களில் பலவித பதட்டமான சூழ்நிலைகள் , இது போன்ற காரணங்களால் இளம் பெண்கள் நியூட்ரீஷ்னல் அனிமீஷியாவின் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கினர். உடல் பருமன் அடைவது, ஹார்மோன் கோளாறுகள், ஹீமோகுளோபின் பற்றாகுறை போன்றவை ஏற்படுகிறது. இதனால் பிள்ளைபேற்றிற்கு பிறகு மிகவும் தளர்ந்து விடுகின்றனர். மனதளவில் கணவனின் ஆதரவை எதிர்பார்க்கும் நேரம். ஆண்கள் தங்களின் வழக்கத்தை மாற்றிக் கொண்டு தேவையான உதவிகளை செய்வது பிறந்த குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்துவது, எதிர்கால
ம் பற்றி திட்டமிடுவது போன்றவற்றை செய்தால், அவர்களுடைய பங்களிப்பும் ஆமோதிக்கப்படும். இருவருமாக சேர்ந்து திட்டமிடும்போது கடக்கவேண்டிய பாதையை பற்றி தெளிவாக சிந்திக்க முடியும். தங்களை முன்னிறுத்தி செய்யப்பட்ட திட்டங்கள் குழந்தைக்காக மாறும் பொழுது குடும்பம் என்பதின் தேவை தெரியும். மேலும் சுயநலம் குறைந்து அடுத்தவருக்காக சிந்திப்பதும் விட்டுக்கொடுப்பதும் அறிமுகமாகும். விட்டுக் கொடுப்பதின் இனிமையான பின் விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியும்.

    இப்படியாக இருவரின் தேவை அல்லது தேடுதலின் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப் படும் உறவானது, குடும்பம் எனப்படும் நிரந்தர அமைப்பாகிறது. சுற்றி இருக்கும் நண்பர், உறவினர்கூட " எப்படியிருக்கிறாய்?" என்று ஒருமையில் கேட்கப்படும் கேள்விகள்கூட "எல்லோரும் நலமா? குழந்தை எப்படியுள்ளது?" என்று கேட்க ஆரம்பிப்பர். இது வழக்கமான விசாரணை மட்டுமல்ல உங்களுடைய பொறுப்புகளை நினைவுறுத்தும் கேள்விகளாக அமைகின்றன. இது போன்று மனதிற்கு தரப்படும் உள்ளிடுதல்கள்தான் நம்மை பொறுப்பானவர்களாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தொலைநோக்கு பார்வையுடன் அமைந்த முடிவுகளை தெளிவாக எடுக்க வைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவுகள் , தாலி கட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைவிட குறைவான நிமிடத்தில் முடிவெடுக்கப்படுகின்றன. அதனை செயல்படுத்த ஆகும் நேரம்தான் அதிகம். கண்கள் குளிர்ச்சியான மலையுச்சியில் இருந்தாலும் கால்கள் நடப்பதென்னவோ கரடுமுரடான பாதையில்தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மணவாழ்க்கை வெற்றியின் ரகசியம் இக்கட்டில் பொறுமை, இன்பத்தில் நிதானம்தான். சிலர் நினைப்பதுபோல நம்முடைய ஒப்புதல் இன்றி யாரும் அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்துவிடமுடியாது. நெருப்பு வளையத்தை கடக்க பயந்து நெருப்பிற்குள்ளேயே அமர்வது தவறு.


        நாம் சார்ந்து இருக்கும் சமுதாயத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். பெண்ணடிமைத்தனம் என்று சொல்லப் படுகின்ற கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். விதிக்கப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையை ஆராய்ந்தால், அது கட்டுப்பாடு அல்ல பாதுகாப்பு என்பதை உணரமுடியும். ஆண் சார்ந்த சமுதாயமாக கருதாமல் பெண்ணை மதிக்கிற சமுதாயமாக நாம் கருதவேண்டும்.
பெண்களுக்காக

         வெறும் பிள்ளைபெறும் இயந்திரம் அல்ல பெண்கள் என்று கடினமாக நினைக்காமல் பிள்ளை பெறுவதனால் சில சலுகைகள், கட்டுப்பாடு என்கிற போர்வையில் கிட்டின. இப்போதைய உலகத்தில் குழந்தை பேறு முடித்த பெண்களுக்கு போதுமான ஓய்வு கிடப்பதில்லை. மேலும் சுமைகூடிவிட்டது. காதல் என்ற பெயரில் அன்பு மழையில் நனைந்து திருமணம் முடித்து குழந்தை பிறந்ததும் சிறிய ஓய்விற்குப்பின் திரும்பவும் தங்கள் பணியை தொடரும்போது வாழ்க்கை வறட்சியாகி போய்விடுகிறது. உடம்பிற்கும் ஏதாவது வந்து படுத்தி எடுப்பதில் முற்போக்குவாதியாக தோன்றிய கணவன் மீது கவனம் குறையத்தான் செய்கிறது. எப்படி பிள்ளைப்பேறு பெண்களிற்கு மறுபிறப்போ அது போல பிள்ளை பேற்றை தொடரும் காலங்கள் கணவனுக்கு சோதனையான நேரம்தான் இதில் தேர்வு பெற்றுவிட்டால், பிறகு வாழ்க்கை வெற்றி முகம்தான்.

  மிகச்சரியாக இந்த காலக்கட்டத்தை கடப்பவர்கள் , மனைவியின் அன்பிற்குரியவர்களாக நிரந்தர நியமனம் செய்யப்படுவார்கள். என்ன செய்ய வேண்டும் என்பது அடுத்த பதிவில் ......

இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்
 
      கணவன் - மனைவி என்பது ஒரு பதவிதான் என்பதை நான் குறிப்பிட்டிருந்தேன். தேவைபட்டால் பதவி நீக்கம் செய்துவிடலாம் - தற்போதைய கலாச்சாரம் இதனை இயல்பான விசயமாக கருதுகிறது. மறுமணம் செய்து கொள்வதும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. முந்தைய காலங்களில் கணவன் தன் மனைவியை "தள்ளிவைக்க" சரியான காரணம் தர வேண்டும். அப்படியில்லையெனில் அவனை அவனுடைய சமுதாயத்தில் ஒதுக்கி விடுவார்கள். சில சமயம் பிரிந்து வாழ்வது என்பது அவரவர் முடிவாக இருக்கும் சட்டப்படி அவர்கள் கணவன் மனைவியாகவே இருப்பர். இப்படியாக விவாகரத்து என்பது குறைந்த அளவிலேயே நடைபெற்றது.  

     ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் சமுதாயத்தை சார்ந்து இருப்பதைவிட சட்டத்தின் உதவியையே நாடுகிறார்கள்- தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று. . இந்த சட்டரீதியான தலையீடுகள்தான் விவாகரத்தின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. கணவன் மனைவிக்கிடையேயான பிணக்குகள் ஊதிவிடப் பட்டு பெரிய பிரச்சினையாக்கப் படுகின்றன. சட்டென ஒரு நாள் எடுக்கப்படுகின்ற முடிவாக இது இருக்கிறது. பிரிந்த பின் என்ன செய்யலாம் என்பதற்கான ஒத்திகைகளும் உடனடியாக ஆரம்பிக்கப் பட்டு விடுகின்றன. ஒரு உண்மையை மறுக்க முடியாது. மாற்றம் என்பது இருவருக்கிடையே மட்டுமே நிகழ்கிறது. சுற்றி இருக்கும் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறாத பழைய கலாச்சாரத்தின் வழியேதான் ஊடுருவிப் பாய்கிறது. பழையன கழிதல் புதியன புகுதல் என்பது உறவு முறைக்கு ஒத்து வராது. முக்கியமாக சம்பந்தபட்ட இருவருடைய குழந்தைகளின் மனமாற்றத்தையும் கவனிக்க வேண்டும்.

    என்னுடைய ஆசிரியப் பணியில் பிரச்சினைக்குரிய பல மாணவர்களின் பெற்றோர்கள் இவ்வாறு பிரிந்து வாழ்பவர்களாக பார்த்திருக்கிறேன். அவர்களிடம் தனிப்பட கலந்தாலோசிக்கும் போது கண்களில் நீர் செரிய தாழ்ந்த குரலில் பெற்றோர் பிரிந்து இருப்பதை கூறுவார்கள். அடுத்து அவர்கள் கூறியதுதான் கவனிக்கத்தக்கது. " அம்மா கொஞ்சம் விட்டு கொடுக்கலாம் மேடம். அவருக்கு எப்படியென்றாலும் எனக்கு அப்பா வேண்டும். எனக்கு அம்மாவிடம் பிரியம் இருக்கிறது. ஆனால் என்னுடைய பல பிரச்சினைகளை இருவரும் சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்" என்பார்கள். விவாகரத்து என்பது பெற்றோருக்கு தீர்வாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு தண்டனையாகிவிடுகிறது. வழிமாறிப் போகிற பிள்ளைகளை சரி செய்ய உண்மையான அன்பு மட்டுமே போதாது . சொல்பவர்களின் தகுதியும் ஒழுக்கமும் விமர்சிக்கப்படுகிறது. ஒழுக்கமாக பிள்ளைகளை வளர்த்து மேலும் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளி என்பது வெறும் பாடங்களை கற்றுத்தரும் இடமல்ல , எதிர்கால உலகத்தினை வெற்றி பெற பயிற்சி தரும் மாதிரி உலகமாக செயல்படுகிறது. அங்கு நிறைய பாடங்களில் பெற்றோரை முன் வைத்துதான் விளக்கமே அளிக்கப்படுகிறது. கழிவிரக்கத்தில் தங்களை தாழ்த்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த பதிவினை நான் எழுத ஆரம்பித்த காரணமே இதுதான். நேற்றைய பிள்ளைகளாகிய நாம் சரியான பாதையில் வந்து நம்முடைய திறமையால் நாமும் முன்னேறி நாட்டையும் உயர்த்தியுள்ளோம். இதற்கு பின் கணக்கிலடங்கா பலரின் தியாகமும் மறைந்துள்ளது. முக்கியமாக பெண்களின் பங்களிப்பை நாம் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு அவை மறுக்கப்பட்டுள்ளன. அவர்களின் எதிர்காலத்தை நம்முடைய சுயநலத்திற்கு இட்ட பலியாக கருதலாமா? எதிர்காலத்தில் நம் நாட்டிற்கு நல்ல பிரஜைகள் கிடைப்பது குறைகிறது என்பதை மறுக்க முடியுமா?  

இன்னும் விரிவாக அடுத்த பதிவில்.....

இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்

      அமுதா எதிர்பார்க்கவேயில்லை இப்படி ஒரு புகழாரம் கிட்டுமென்று. எதற்காக அதை செய்தாள் என்றால், அவளுடைய கணவன் தியாகுவிற்கு அலுவலகப் பணி வெளியூர் சென்றிருந்தான் . தொலைதூரம் என்பதால் சிறு விசேசத்திற்காக பயணித்து வர முடியாது. அதனை இளைய சகோதரியிடமும் தெரிவித்திருந்தான். அவன் சார்பாக அமுதாதான் சீர் செய்ய வேண்டியிருந்தது. அந்த தலையாய பொறுப்பை அவளிடம் தந்திருந்தான். அவளுக்குத் தெரியும் உறவுகளுக்கு அவன் தரும் மரியாதை. அது சற்றும் குறையக்கூடாது என்று எண்ணி கணவனின் பார்வையாகவே அவள் சீர் பொருட்களை வாங்கினாள். அழகான விலை உயர்ந்த பட்டுச் சேலையும் அதில் இடம் பெற்றது. அதன் விலை தியாகுவின் விருப்பம் அல்ல, அவளாகவே செய்தது.

       மாமன் சீராக வைத்த தட்டு வளைகாப்பு விழாவில் பாராட்டை பெற்றது. அவளுடைய நாத்தனார்கூட இவ்வளவு சிறப்பாக இதனை எதிர்பார்க்கவில்லை. காதல் திருமணம் செய்திருந்த அண்ணன் மனைவியிடம் அவள் அதிகமாக எதிர்பார்க்கவில்லை போலும். ஆனாலும் அவளுடைய மாமியார் இதனை மெச்சுதலாக சொன்னபோது " ஆகா" என்றிருந்தது. அண்ணியிடம் மறுநாளே வந்து புகழ்ந்து தள்ளிவிட்டாள், அவளுடைய புகுந்த வீட்டினர் முன் அவளை உயர்த்திவிட்டாளாம்.

     இந்த கதையை நாம் சற்று விளக்கமாக பார்த்தால், சில லாபங்கள் ஏற்பட்டுள்ளதை உணரலாம்.
1. அமுதாவிற்கு புகுந்த வீட்டினரின் நம்பிக்கை கிட்டியது, தியாகுவை பிரித்துச் செல்ல வந்தவள் அல்ல என்று உணர்ந்தனர்.
2. தியாகுவின் தங்கைக்கும் புகுந்த வீட்டில் மரியாதை கூடியது. அவளுக்கு எது ஒன்று என்றாலும் அண்ணன் , அண்ணி இருவரும் வருவார்கள் என்று புரிந்தது.
3. தியாகுவிற்கும் இனிய காதலி மனைவியாக மாறிக் கொண்டு வருவதை கண்டு மகிழ்ச்சிதான்.
4. அமுதாவின் வாக்கு வங்கியில் மதிப்பு மிக்க ஓட்டுகள் கூடின. இது அவளுடைய பிறந்த வீட்டில் அவளுக்குரிய மரியாதையை கூட்டிவிடும்

இத்தனைக்கும் காரணம் எவையென்றால்
1. தியாகு தன் வீட்டு விழா என்பதால் மனைவியை புறக்கணிக்காமல், அவளை நம்பி பொறுப்பை தந்தது. அதைவிட முக்கியமாக தன் குடும்பத்தாரிடம் அவன் வைத்திருந்த பிரியத்தை மனைவிக்கு புரிய வைத்திருந்ததுதான்
2. அமுதா கணவனிடம் பிரியம் வைத்திருந்த காரணத்தால் அவன் மனதறிந்து நடந்து கொண்டவிதம் பாராட்டுக்குரியது.
 3. தியாகுவின் சகோதரி, அமுதாவை வேற்றுப் பெண்ணாக எண்ணாமல் முழு மனதுடன் பாராட்டியது இருவருக்குள்ளாக நட்பை உருவாக்கியது.
ஒரு இனிய குடும்பம் உருவாகிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டிருப்பீர்களே.
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


அப்பாவிற்கும் அவனுக்குமான
உரசல் ஆரம்பித்த நொடி
சபிக்கப் பட்ட வேளையோ
முதல் இடைவெளியில்
சின்னதாய் எழுந்த வலி
எங்கே என்று சொல்ல.....?
விழுந்த பொழுதெல்லாம்.....
தூக்கி வாரியணைத்த கரங்கள்
ஆறுதலாக பேசியது நினைவில்லை
ஆனாலும் அன்றைய நிம்மதி
நெடுநாள் மறக்கவில்லை!

தாயின் வயிற்று குரங்கு குட்டி
தவறி விழுந்தால் தனிதானாம்
"நான் என்ன குரங்கு குட்டியா?"
மடியில் அமர்த்தி கதை சொல்லி
அம்மாவிடம் சலுகை வாங்கி
துண்டு விழுந்த நிதிநிலையிலும்
இரண்டு சக்கர வாகனம் வந்தது
அளவாய் பிடித்து செலவு செய்து
அழகாய் ஒரு இனிய வீடு
இன்னும் அழகாய் அவன் பெயரில்
அது மேலும் அழகானது செல்லமாய்
நொடிக்கொருமுறை அவனை அழைத்ததில்
இதெல்லாம் குரங்கிடம் உண்டா?

எல்லை தாண்டி வந்த
அந்நிய நாட்டுப் பார்வை எதற்கு?
விளக்கமாக பேசியிருக்கலாமே.....
காரணங்கள் கூறி இருக்காலாமே......
காதல் என்ன பொல்லாததா?
அவன் வயதிற்கு அல்லாததாகட்டும்
இப்பாது முக்கியமாய் தோன்றவில்லை
ஆனால் , வீணாய் போயிற்று ......
தண்ணீருக்குள் மூழ்கியது போல்
கடைசி மூச்சிற்காக தவித்து....
சற்று நேரம் முகம் பார்த்தபோது
- இல்லை! இல்லை! இவர் வேறு
மனதில் எழுந்தன வார்த்தைகள்
என்னவோ இதயத்தில் கழன்றது


சட்டென பிராணவாயு கிட்டியது
"இந்த அப்பாக்களே இப்படித்தான்?"
இனி... இது பற்றி
ரொம்பவும் கவலையில்லை
அண்ணாந்து வெறிக்கவும் இல்லை
அவரை அடுத்த முறை பார்க்கும்போது
கண்களை சந்திக்கப் போவதுமில்லை
ஏனெனில் .....
அவன் வளர்ந்து விட்டான்...!இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்

முந்தைய ஒரு பதிவிலேயே கணவன் - மனைவி என்பது ஒரு பதவிதான் என்பதை நான் குறிப்பிட்டிருந்தேன். அது உறவாக மாற சில காலம் பிடிக்கும். இல்லறம் நல்லறமாக அமைய ஆரம்பத்தில் இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும். குறிப்பிட்ட காலம் வரை அது பரிசோதனைக்குரிய காலகட்டத்தில்தான் இருப்பதாக கருத வேண்டும். காதலித்து திருமணம் செய்திருந்தால்கூட இதனை பின்பற்ற வேண்டும். ஏனெனில் சில விசங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கும்.

1. நம்முடைய திருமண வாழ்க்கைக்கு சமூக அங்கீகாரம் தேவைப்படும். வெறும் திருமணம் என்கிற சடங்கினைச் செய்துவிட்டால் மட்டும் சபை மரியாதை கிடைத்துவிடாது. அதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்று சமுதாயம் என்கிற அமைப்பில் இருந்து கொண்டு சொல்ல முடியாது , சில சமயம் மனித மனம் குரங்காய் ஆடும்போது சமூக நியதிகள் பாதை தவறவிடாமல் பார்த்துக் கொள்ளும். மனதிற்கு இன்னுமொரு கடிவாளம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்களுடைய தேவைக்காக- தேடுதலிற்காக காதல் செய்யலாம், யாருடைய தயவும் இல்லாமலேயே அது நடைபெறும். ஆனால் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் இணைவது. கணவன்-மனைவி இருவரும், இருவருடைய குடும்பங்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். குடும்ப வரைபடத்தில் - மருமகனாக , மருமகளாக.- அவர்கள் இடம் பெற்றிட இதனைச் செய்ய வேண்டும்

2. நாளை நம்முடைய சந்ததியும் இந்த சமுதாயத்தில்தான் வாழப்போகிறது. அவர்களுக்குத் தேவையான இடத்தை நாம்தான் உருவாக்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது சரிவர அமையாமல் போனால் இளையவர்களுக்கு தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியாது.

3. மனிதன் ஒரு சமூக விலங்கு. வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் சமூகத்தை சார்ந்துதான் இருப்பான் - துறவியாய் இருந்தாலும்கூட.. அதனை உறுதியாக்கிக் கொள்ளவே குடும்பம் என்ற அமைப்பு உருவானது. அதன் அடிப்படை கணவன்- மனைவிதான்.

சரி, கணவன்-மனைவி என்பது ஒரு தாற்காலிக பதவிதான். அதனை நிரந்தரமாக்க என்ன செய்ய வேண்டும் ? அந்த பதவிக்குரிய கடமைகள் - ஆம்... கடமைகள்தான், பொறுப்புகள் ஆகியவற்றை பிடிவாதமாக நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏன் பிடிவாதம் என்கிறேன் என்றால், திருமணம் ஆன புதிதில் சில சலுகைகள் கிடைகலாம், இயல்பான மரியாதை தரப்படலாம். அது உங்களுக்கு தரப்பட்டதாக எண்ணாமல், அந்த பதவிக்குத் தரப்பட்டதாக எண்ணவேண்டும். இதனால் நமக்குள் இருக்கும் நியாயபுத்தி எந்நேரமும் நமக்கு சரியான வழியை காட்டும். மருமகன்/ள், அண்ணி, நாத்தனார், மைத்துனன் போன்ற அத்தனை அடைமொழியையும் வெற்றிகொண்டாக வேண்டும் - அவற்றிற்குரிய சரியான மதிப்பினை நாம் அடைய வேண்டும். இதே போன்றுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருகொருவர் பிடித்த மாதிரி நடந்து கொள்ளவேண்டும்.

நடிப்பது போலாகிவிடாதா என்று கேட்கலாம். இல்லை - நமக்கு நாமே கற்றுத்தருகிறோம் என்று பொருள். வெற்றிகரமான தம்பதியரிடையே " என் மனைவிக்குப் பிடிக்கும்.... என் கணவருக்கு பிடிக்கும்.... என்ற தனிப்பட்ட பேச்சுகள் இருக்காது. ராமனாய் வேடத்தில் நடித்த ராவணனுக்கும் ராமனின் பண்புகள் தற்காலிகமாக வந்ததாக இதிகாசத்தில் சொல்லுவார்கள். அதுபோல மற்றவர் விருப்பத்தை தன் விருப்பமாக கருதினால் தனிப்பட்ட விருப்பம் எதுவென்பதே தெரியாமல் போய்விடும். இது பற்றி விரிவாக சில உதாரணத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

           ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்,
                      அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்
           சோதி மணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
                       சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
          மாதவனும் ஏந்தினான்: வானோர்க்கே நும்
                     மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
         காதல் செய்யும் மனைவியே சக்தி, கண்டீர்
                       கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும!
                                                                     
மகாகவி பாரதியார்


      நமது காலப் பயணத்தில் சற்று பின் நோக்கி பயணித்தால்.... இல்லை இல்லை ரொம்பவும் செல்ல வேண்டாம். அப்போதெல்லாம் மனித இனமே இல்லை. டைனோசர்கள், அவைகளின் சக பெரிய உயிரினங்களுக்கான பூமி மட்டுமே இருந்தது. அவை அழிந்த பின்புதான் முதல் குடியான நியாண்டர்தால் மனிதன் தோன்றினான். இயல்பில் பயந்த சுபாவத்தினன். வேட்டையாடி பிழைப்பு நடத்தினான். பெரிய மிருகங்களுடன் மோத வேண்டியது இருந்தது. உயிர் தப்பிக்கும் நோக்கம் மட்டுமே பலம். சரியாக பயன்படுத்தியவன் வெற்றி பெற்றான். பெருங்கூட்டத்திற்கு தலைவனானான். அவனின் தயவு இருந்தால் நமக்கும் பாதுகாப்பு கிட்டும் என்று எண்ணியவர்கள் அவனை சுற்றி பல பரிமாணங்களில் இடம் பெற்றனர். சிலரின் கால்வருடித்தனம் அவனின் அருகே ஒரு இடத்தை பெற்றுத்தந்தது கூடவே அவனுடைய திமிரையும் எல்லையில்லாமல் அதிகரித்தது. மனிதனையே வேட்டையாடினான். இதே போல பலம் உள்ள பலர் மிருகமாய் மாற மனித இனத்தை வாழ்க்கை பயம் சூழ்ந்தது - இம்முறை மிருகங்களால் மட்டுமல்ல மனிதர்களாலும்தான். உடல் பலமில்லாத சாதாரணர்களுக்கு வாழ்க்கை வசப்படவில்லை. பிற்காலத் தேடலில் இருந்த மூளையுள்ள சிலர் வாழும் முறையை மதிப்பு மிக்கதாக்கி அந்த நுட்பங்களின் மூலம் தங்களை முக்கியமான இடத்தில் நிறுத்திக் கொண்டனர். உணவு, உடை உறையுள் போன்றவற்றிற்குத் தேவையான முக்கிய தொழில்களை செய்தனர். சில செயல்கள் அதன் விளைவுகள் என அறிவியலை பதிவுசெய்தனர். வாழ்க்கையின் தேடல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள எண்களை கண்டுபிடித்தனர். போராட்டத்திற்கும் நியாயம் கற்பிக்கும் வகையில் உறவுகள், குடும்பம் என உருவாக்கினர். இரத்த தொடர்பு, தொப்புள் கொடி தொடர்பு என காரணம் கண்டுபிடித்து உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு வடிவம் தந்து பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டனர். அத்தனையும் சேர்த்து சாத்திரம் பல செய்தனர்.,

        கற்காலத்திலிருந்து மனித இனம் இந்த வகையில் பயணித்துக் கொண்டிருந்த போது அவ்வப்போது ஏவாள் கை ஆப்பிள் பல கைகள் மாறி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தது .கண் விழித்த போது இருந்த வீடு கண் உறங்க வரும்போது காணாமல் போனது. காலை வரையிருந்த பெண் தானே வேறிடம் மாறிப்போயிருப்பாள் அல்லது பிறன் வல்லமையால் மாற்றப்பட்டிருப்பாள். ரத்தம், தொப்புள் கொடி உரிமை என்றெல்லாம் நியாயம் பேசி கைகொள்ள முடியாத அந்நியப் பெண்ணிற்கு எப்படி உரிமை சாசனம் எழுத முடியும். பலவான் சண்டையிட்டு தன் உரிமையை நிலைநாட்டினான். சாதாரணன்......? அங்கே தோன்றியதுதான் இன்று உலகம் முழுவதும் மலர்களை ஆயுதமாக பயன்படுத்தி செய்து கொண்டிருக்கும் ரத்தமில்லாத யுத்தமான காதல் என்கிற - வெங்காயம்..? கத்திக்காய்..? அல்லது ஏதோ ஒன்று. ஆக, பெண்ணை அடிமைபடுத்தி தன் வசம் வைத்திருக்க சாதாரணன்களால் உருவாக்கப்பட்ட இந்த வித்தையானது பல சமயங்களில் ஆண்களையும் அழித்தது. ஏன் சில சிறப்பு மிக்க தேசங்களையும் அழித்து வரலாற்றுக் களங்கமானது. கட்டுகடங்காமல் போன இந்த காட்டாற்றுக்கு அணை கட்டவே திருமணம் என்கிற பந்தம் உருவானது- இதில் ஒரு நிம்மதி என்னவென்றால் காதலிற்கு தேவையான சாகசங்கள், வார்த்தை அலங்காரங்கள், வாக்குறுதிகள் போன்றவற்றை நித்தமும் தேடவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக சில சட்டதிட்டங்கள் கற்பு, கட்டுப்பாடு, வாழ்க்கை பாதுகாப்பு போன்ற வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் சந்தையில் சொத்தை வெ...., க..... கூட விலை போயின.

         ஆகா, பெண்ணடிமை பற்றிய தொடரா என்று நினைக்கவேண்டாம். இது இல்லறத்தின் அடிப்படையான திருமண உறவின் வெற்றி தோல்வி பற்றிய தொடராகும். எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் நல்ல சமுதாயதிற்கு அடிப்படை இந்த திருமணம் என்ற பந்தம் என்பதில் ஐயம் இல்லை. காலம் காலமாக கணவன்- மனைவி என்கிற இந்த உறவினை உயிர் பிரியும் வரை இன்பப்பட்டோ துன்பப்பட்டோ பாதுகாத்து.... பல தியாகங்கள் செய்து.... தன்னலம் கருதாது அதற்குரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் , தந்து கொண்டிருக்கிறவர்கள் ( ஆண், பெண் இருவரும்தான்) சார்பாக எழுதப்போகிறேன் . கடைசி வாக்கியத்தில் நான் சற்றும் கேலி பேசவில்லை என்பது பின் குறிப்பு. நாளை சந்திப்போம்....

காற்றில் பறந்தன. ..
பட்டாம்பூச்சியின் சிறகுகள்
உடலை இழந்த
பழைய கதைகளை சொல்லி
இரண்டும் வெவ்வேறு
ஒன்று மழை நாளிலும்
மற்றொன்று வெயிலிலும்
மரித்து போயினவாம்!
பூ இன்றி தேனின்றி
விந்தையாக இல்லை?
வசந்த காலத்தில் மட்டுமே
பறந்து பார்த்து பழகியது
பருவம் தப்பி வருமா?
எப்படி இறந்ததாம்?

கிணற்றுத் தவளையின்
அனுபவ பேச்சைக் கேட்டு
மழைக் காலத்தில்
மஞ்சள் பட்டாம் பூச்சி
மழையில் வண்ணமிழந்த
நனைந்த சிறகினை கொண்டு
பறக்க முடியாது என்றும்
கறுப்பும் சிவப்பும் கொண்டது
வெயிலின் வாட்டத்தில்
பூக்குமா காய்க்குமா
என்ற கவலையிலும்


சுற்றி பூத்திருந்த பூக்களையும்
தளும்பிய நின்ற தேனையும்
பாராமல் அருந்தாமல்
கூட்டுக்குள் இருந்த நினைப்பில்
கண்களை மூடியிருக்க
சுற்றி மொய்த்த எறும்புகள்
சிறகுகளை விட்டு வைக்க
அவை மட்டும் கதை சொல்லின
இன்றைய நிஜத்தில்தான்
வாழும் வித்தை வசப்படுவது
அடுத்தவர் உலகம்
கேட்கவும் பார்க்கவும்தான்


நம்மை சுற்றியிருக்கும் உலகம்தான் நம்மை உயர்த்துகிறது. நாம் சரியாக புரிந்து கொண்டால் பூமியே சொர்க்கம்தான்.

 இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.       

     வாழ்க்கையின் அர்த்தமே உறவுகளை பேணுதல்தான். சமுதாயம் என்கிற ஒன்று உருவானதே இதற்காகத்தான். மனித உறவுகள் புனிதமானவை, வெற்றிகரமான வாழ்க்கை என்பது சுற்றம் சூழ வாழுதல்தான். புரிந்து கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல குடும்ப வெற்றியின் ரகசியம். குடும்ப வரைபடத்தில் நம்முடைய இடத்தை உணர்வதும் , மற்றவர்களுடைய இடத்திற்குரிய மதிப்பை தருதலும்தான்.

     எனக்கும் இந்த விசயத்தில் பாரதியின் பார்வைதான். உறவுகள் ஒவ்வொன்றையும் கடவுளின் அவதாரமாகத்தான் நினைத்தார். அதனால்தான் கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் குழந்தை, கண்ணன் என் தோழன் ...... என ஒவ்வொரு உறவிலும் கடவுளைக் கண்டார். கண்ணன் என் மனைவி என்றோ கணவன் என்றோ ஏன் எழுதவில்லை என்று கேட்பீர்கள். உறவுகளின் மதிப்பு மனதிலிருந்து வருவது. ஆனால் கணவன் - மனைவி எனபது ஒரு பதவியாக மட்டுமே மதிக்கப் படுகிறது. தேவையில்லை எனில் பதவியை நீதி மன்றத்தை நாடி பறித்து விட முடியும். அதனால்தான் கண்ணன் என் காதலன் என்றும் கண்ணம்மா என் காதலி என்றும் தலைப்பிட்டார். உண்மையில் கணவன்-மனைவி என்பவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். இதே போலத்தான் சகோதரனின் இடத்தை தோழனுக்கு தந்தார் - இது என்னுடய தாழ்மையான கருத்து.

      நல்
இல்லம் நல்ல சமுதாயம். வெளி உலகத்தில் எப்படியிருந்தாலும் எனக்காக ஒரு அழகான குடும்பம் , இனிய நாட்களை தர காத்திருக்கிறது என்ற எண்ணமே காற்றில் ஏறி விண்ணையும் சாடும் வலிமையை தருமல்லவா. இந்த தொடரின் முன் வந்த ஆறு பதிவுகளும் சில விதி விலக்குகளை தவிர்த்து அனைவருக்கும் பொருத்தமானவைதான். இதனை சரிவர - இடம், பொருள், ஏவல் அறிந்து என்பார்களே அதுபோல் - பயன்படுத்திக் கொண்டு இனிய இல்லறம் காணுங்கள்.

             எவ்வுயிர் தன்னிலும் ஈசன் உள்ளானென
            எப்பொழுதுங் கதைப்பாய்- நன்னெஞ்சே
                                                        -மகாகவி பாரதியார்


இதுவரை இந்த தொடரில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி

 


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6  

   இந்த தலைப்பில் வந்த பதிவுகள் ஓரளவிற்கு பொதுவான வழிமுறைகளை தெரிவித்தன. இனி தெரிந்து கொள்ளவேண்டிய விட்டுப்போன விவரங்களை பார்ப்போம். முதலில் பெண் பிள்ளைகள் பற்றி,

1. பதின் வயதுகளில் மாறிப்போவது பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் பதின் வயதில் சூழ்நிலையை ரசித்தாலும் தடம் மாறும் வாய்ப்பு குறைவு. ஒரு வேளை எதிர் போக்கான மாற்றங்கள் தென்பட்டால் மீண்டும் நிலைக்கு கொண்டு வருவது கடினம். வாழ்க்கைக்குரிய கொள்கைகள் அப்போதுதான் வகுக்கப்படும். அப்போது இருக்கும் இயல்பானது வாழ்நாள் முழுவதும் மாறாது. அன்பு , பாசம் என்றாலும் சரி பிடிவாதம் முன் கோபம் என்றாலும் சரி பதினைந்தில் இருக்கும் மன இயல்புதான் நீடித்து நிற்கும். தங்களை பற்றிய மற்றவர்களுடைய கருத்துகள் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த "மற்றவர்கள்" எனப்படும் பட்டியலில் நாமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

2. ஆண் குழந்தைகள் விசயத்தை போல் சிரமப்பட வேண்டியதில்லை. எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள், பிரியமான வார்த்தைகள், உயர்வாக பேசுதல்கள் போன்றவை அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும். ஏதாவது தோல்வியை சந்தித்து விட்டால் கவனம் தேவை. மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பர். ஒரு முடிவு எடுக்கும் முன் மிகவும் யோசிப்பார்கள், அந்த சமயத்தில் தரப்படும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கிட்டும். ஆனால் முடிவெடுத்தபின் மாற மாட்டார்கள்.

3. பட்டுத் திருந்துவதென்பதே கிடையாது. அவதி பட்டாலும் அதை அனுபவிக்கத் தயாராய் இருப்பார்கள். எப்போதும் யாராவது ஒருவருக்காகவாவது உண்மையாக இருக்க நினைப்பார்கள். இதற்கான கொள்கைகளும் அவர்களே வகுத்துக்கொள்வதுதான்.

4. ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் நம்மை புரிந்து கொள்வார்கள்- வாழ்க்கையின் பிற்பாதியிலாவது. இவர்கள் அப்படியல்ல இளம் வயதில் கொண்ட கருத்துகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் சூழ்நிலைக் கட்டுப்பட்டு இருப்பதால் எதிர்மறை எண்ணங்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

5. அன்னையின் கட்டுபாட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் வழி தவறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு நிலையிலும் அன்னையின் ஆலோசனையை எதிர் நோக்குவார்கள் , திருமணத்திற்கு பின்கூட.. ஆண்கள் தனித்தன்மையை விட்டுத்தரமாட்டார்கள். அதேபோல பெண்கள் குடும்பத்தை விட்டுத் தரமாட்டார்கள் என்பது இன்றளவும் உண்மை - எந்த குடும்பத்திற்காக என்பது அவரவர் முடிவு, இதில் சமூக கோட்பாடுகள் எல்லாம் பின்பற்றப்படுவதில்லை.

6. நாம் பெண் பிள்ளைகளை பெற்றிருந்தால், அவர்களுக்கு வாழ்க்கை முழுவதற்குமான திட்டங்கள், தேவையான விவரங்கள், பயிற்சிகள் போன்றவற்றை பதினைந்து வயதிலேயே ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் நல்ல வாழ்க்கை அமைந்து, நம் வளர்ப்பை பற்றி பெருமையும் கொள்ளமுடியும்.


7. பெண்களின் பங்களிப்புதான் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும். அது குடும்பமானாலும் சரி சமுதாயப் பொறுப்புகளானாலும் சரி. அந்த பிள்ளைகளை உருவாக்கிய பெருமை சிறப்பான பெற்றோர்களுக்கு கிட்டும்.

          இன்னும் சில செய்திகளுடன் இந்தத் தொடரின் கடைசி பதிவுடன் உங்களை  சந்திக்கிறேன்.             
  உச்சி தனை முகந்தால்- கருவம் 
                      ஓங்கி வளருதடி
                மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
                      மேனி சிலிர்க்குதடி
                 என்னை கலி தீர்த்தே - உலகில்
                        ஏற்றம் புரிய வந்தாய்

                                       - மகாகவி பாரதியார்

    குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 7

 


இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        
    
    இதுவரை நம் பிள்ளைகள் வளர வளர நம்மை விட்டு பிரியக்கூடிய சந்தர்ப்பங்களை வரிசையாக பார்த்து வருகிறோம். பொதுவாக பதின் பிராயங்கள்தான் நம்மை கலக்கமடைய செய்யும் வயது. பத்து வயது வரை நம்மைதான் முன் உதாரணமாக கொண்டு வளர்கிறார்கள். நம்முடைய குண நலங்கள் பெரிதும் அவர்களிடம் இருக்கும். பதின்னொன்று ஆரம்பிக்கும்போது பள்ளியில் அவர்கள் பழகும் முறை மாறுகிறது. பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். நம்மை எடை போடக்கூட செய்வார்கள். பெரிதாக ஒன்றும் பிரச்சினை எழாது. பதினான்கு வயதில் படிப்பில் பிரிவினை தலைதூக்கும். பத்தாவது பரிட்சை முடிவுகள்தான் நாம் எதிர் நோக்கவேண்டிய கடுமையான காலம். அவன் தேர்வு பெற்றாலும் பெறாவிட்டாலும், மதிப்பெண் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் நமக்கு சோதனைதான். விருப்பப்பட்ட பாடம், விருப்பப்பட்ட பள்ளி என முட்டி மோதி இடம் பிடித்து அமர வைக்கவேண்டும். பெரும்பாலான குழந்தைகள் புதிய பள்ளிகளுக்கு செல்வார்கள். இந்த இரண்டு வருடங்கள் மட்டும் நாம் மிக கவனமாக - இந்த பதிவின் பாகம் 2,3,4 உள்ளவற்றை செய்யவேண்டும். பதின் வயது முடிந்து விட்டால் , இது வரை சரியான பாதையில் வந்த பிள்ளைகள் உண்மையிலேயே நம்பிக்கை நட்சத்திரங்கள்தான்.

     காதல் பற்றிய தெளிவான அறிமுகம் இல்லாத - puppy loveவிலிருந்து சரியான வழிகாட்டுதலின் பேரில் வெளிவரமுடியும். பதின் வயதுகளில் ஏற்படும் இது போன்ற சலசலப்புகள் காலப்போக்கில் மாறக்கூடியவை. வாழ்க்கை பற்றிய சிந்தனை வரும்போது இவை மாறிவிடும். ஒருவேளை உங்கள் பிள்ளை இது போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் வெறுத்து விடாமல் வெறுப்பு வராமல் கையாள வேண்டும். 2ஆம் பதிவில் சொன்னது போல வேறு ஒருவர் மூலம் அறிவுரை சொல்லலாம். உடனடியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சற்று பொறுமையாக கையாண்டால் அல்லாதது அழிந்து விடும். சற்று தீவிரமாவது போல இருந்தால், மேல் படிப்பை காரணம் சொல்லி இடம் மாற்றி விடுங்கள். உங்கள் பிள்ளையின் நீண்ட நாளைய நண்பர்களின் உதவியை நாடலாம். உங்கள் பிள்ளையின் காதல் பற்றி யார் என்ன என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். சில சமயம் அந்த பக்கம் ஊக்குவிக்கப்பட்டு தவறான முடிவுகள் மேற்கொள்ளப் படலாம். முக்கியமாக பதினெட்டு வயது முடியும் போது கவனம் தேவை. இளநிலை படிப்பு முடியும் போது அவர்கள் சரியான பாதைக்கு வந்து விடுவார்கள்.

      இதன் பிறகு வரும் காதல்தான் பிரச்சினைக்குரியது. பிடித்தால் விடாது. நாமும் நம் பிள்ளைகள் நல்ல வேலையில் அமர்ந்து விடுவதால் மறுத்து பேச மனமின்றி தலையை ஆட்டிவிடுவோம். இல்லை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொன்னாலும் சிக்கல்தான். இந்த விசயத்தில் முடிவு அவர்கள் கையில்தான். இதனை நான்கு விதமாக ஆராயலாம்.

1. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இருந்தால் நல்லது. திருமணத்தை நடத்தி வைத்து உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சினை என்றால் இருவருமே உங்களிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு இருக்கவேண்டும்.

2. நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் - அவர்களுடய தேர்வு சரியானதாக இல்லை என்றால் நீங்களும் சேர்ந்துதான் அவஸ்தைபட வேண்டும். நன்கு படித்து சிறப்பான வேலையில் அமரும் பிள்ளைகள் குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்வதில்லை. தங்களுக்கே உரிய கர்வத்துடன் இருவரும் நடந்து கொண்டால் , பிரிவதை தவிர்க்க முடியாது. காதல் திருமணம் விலை மிக அதிகம் கேட்கும், தாங்கள் அடைந்ததின் தரத்தை ஆராய்ச்சி செய்யும். உங்களுடைய வழிக்காட்டுதல் ஒரு வேளை இதனை சரிசெய்யலாம்.

3. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியென்றால், உங்களை மீறியமுடிவுகள் எடுக்கப்படலாம். பிற்பாடு பிரச்சினை வந்தால் நாம் தலையிடவும் முடியாது,ஒருவேளை அந்த பக்கத்தில் ஒப்புக்கொண்டு விட்டால், மருமகன்/ள் உடன் உங்கள் பிள்ளைகளையும் மறந்து விடவேண்டியதுதான். அது சரியில்லாத குடும்பமாக இருந்து விட்டால் உங்கள் பிள்ளையின் வாழ்க்கை மாறிவிடும்.

4. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் உங்கள் பிள்ளையின் தேர்வு நல்ல தேர்வாக இருந்து நல்ல இல்லறமாக இருந்தால் மன்னிக்க வேண்டியிருக்கும். உங்களுடைய முதுமையின் தேவையில் உதவி கேட்கக்கூட தோணாது.

 ஒரு இளைஞன் தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது பற்றி " அர்த்தமுள்ள இந்து மதத்தில் " கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியுள்ளார். இது போன்ற நல்ல நூல்களை கை வசம் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகளிடமும் இது பற்றி உரையாடலாம். தெளிவான கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டால், இத்தனை நாள் செய்ததுபோல் விட்டுக் கொடுத்தல்களை நாம் கையாண்டு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும். இதனையும் சிறப்பாக செய்துமுடித்தால் நமக்கு அவர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நான் உறுதியாக சொல்கிறேன் , முப்பதுகளில் உங்கள் பிள்ளைகள் உங்களை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.


    விட்டுப்போன சில வித்தியாசமான ஆனால் பெரும் சதவிகிதத்தில் இல்லாதவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

      குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 6 


இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        


         நம் பிள்ளைகளிடமிருந்து நாம் விலகும் சந்தர்ப்பங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். பொதுவாக அவர்கள் உங்களை விட்டு விலகுவதாக நீங்கள் நினைக்கும் சந்தர்ப்பங்கள்தான் அவை. சிறிய வயதில் உங்கள் விரலை பற்றிக்கொண்டு நடந்தவர்களுடன், இனி கை கோர்த்து செல்ல வேண்டியது நம் பொறுப்பு. இப்போது சற்று வளர்ந்துவிட்ட நம் பிள்ளைகளுக்கு நம் கைகளை உதறும் எண்ணம் வராமல் மென்மையாக வழி நடத்திச் செல்ல வேண்டும். 

   முதலில் படிப்பு. பள்ளிப் படிப்பிலேயே அவர்களின் எதிர்காலத்தை நோக்கி நகர்த்துங்கள். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தை நம் விருப்பமாக செய்யக் கூடாது - உதாரணமாக, கணக்கே பிடிக்காத பையனை பொறியியல் படிக்க அனுப்புவது போன்றவை. விளக்கமாக சொல்லப்போனால், தன் படிப்பினை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் அது நம் விருப்பமாகவும் இருக்க வேண்டும் . எப்படியென்றால் , பள்ளி    வகுப்பிலேயே கணக்கை  விரும்பும்படி சிறப்பு பயிற்சியினை தரலாம் (அதற்குரிய ஆசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டும்,      சிலர்    ஆசிரியரை     குளிர்விக்கும்     விதமாக  அவரிடமே    பயிற்சிக்கு அனுப்புவார்கள். "பாஸ்  போட்டுருவாங்கப்பா"    என்று)   நேரம்        கிடைக்கும்போது  பொறியியல் படிப்பின் மகத்துவத்தை சொல்ல வேண்டும் - அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படியும் அவன் விரும்பவில்லை என்றால் விருப்பப்பட்ட படிப்பு அவர்களுக்கு கிடைக்க அனுமதிக்க வேண்டும். முக்கியமான விசயம் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் பிரிவு எதுவாக இருந்தாலும் .


          இன்றைய சூழ்நிலையில் எல்லா படிப்புமே சமுதாயத்திற்குத் தேவையானவைதான்.   இத்தனை  விட்டுக்    கொடுத்தல்களும்     இளநிலை   படிப்பிற்கு  மட்டும்தான் .  அதன் பிறகு என்ன படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரலாம் என்று கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய சூழ்நிலையில் முதுநிலை படிப்புகள்தான் வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்றன. நல்ல கல்லூரிகளில் இதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.  ஒரு விவசாயக் கல்லூரியில் அதிக அளவில் சிவில் சர்வீஸ் எழுத வைக்கின்றனர். நிறைய மாணவர்கள் அதில் தேர்வு பெற்று அரசு வேலையில் இருக்கின்றனர். இது போன்ற வழிகாட்டுதல்கள்தான் அவர்களுக்கு தேவை.அதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். உங்கள் கட்டாயத்தினால் அவர்கள் படித்தால், நல்ல நிலையை அமைத்துக் கொடுக்கலாம். ஆனால் வேறு சில விசயங்களில் நாம் விட்டுத்தர வேண்டியிருக்கும். " நான்தான் படிக்கிறேன்ல. இந்த விசயத்தில் தலையிடாதீர்கள்" என்று பேரம் பேசுவார்கள். நாம் விலக்கி வைக்கப்படுவது மட்டுமல்ல அவர்கள் தலைகீழாக மாறிப்போவதும் இந்த இடத்தில்தான். மற்றவர்கள் முன் பெருமையாக பேசுவதற்காக இது போன்ற பேரங்களை நடத்தக்கூடாது. இந்த பெருமையெல்லாம் தற்காலிகமானது.

     அதைவிட "உன்னுடைய விருப்பம் போல் படி. நான் உன் துணைக்கு இருந்து உன்னை உன் பாதையிலேயே சிறப்பான நிலைக்கு கொண்டுவருவேன்." என்ற உங்கள் ஆதரவு அவர்களை வழி தவற வைக்காது. எந்த பிரச்சினை என்றாலும் அவர்கள் நம்மிடம் ஆலோசனை செய்வார்கள். வாழ்க்கையின் அடுத்தபடிக்கு செல்லும் போதும் என் குடும்பம் என் பெற்றோர் என்கிற எண்ணம் இருக்கும். நான் சொல்வது காதல், கல்யாணம் என்று தடம் மாறிப்போவதைதான். இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

         இது போன்ற  பதிவுகள் செய்யும்போது படிப்பவர்களுக்கு  ஏதாவது  கருத்து இருக்கலாம்.  விளக்கம் தேவைபடலாம். அவற்றை கேள்வியாக கருத்துரைமூலம் பதிவு செய்தால் , இந்த தொடரின் கடைசி பதிவில் விளக்கம் தரமுடியும் (frequently asked questions). அப்போதுதான் இந்த பதிவின் நோக்கம் முழுமை பெறும்.

                       இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
                                   இனிதில்லை யென்றுமவன் எண்ணுவத்தில்லை 
                        அன்பு மிக உடையான் - தெளிந்
                                 தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே .......
                                                           - கண்ணன் என் தந்தையில் மகாகவி பாரதியார்

 குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 5

இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.        

                  அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் நட்பு  வட்டாரத்தின்  மீதுதான்   உங்கள் பிள்ளையின் சினேகிதர்களை நன்கு புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தவறான நட்பு எனில் அவர்களை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பட்டவர்த்தனமாக கூறவேண்டாம் . விடுமுறை நாட்களில் தேநீர் அருந்தும் போது அமைதியான உரையாடலில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கேயோ எப்போதோ நடந்த செய்தியாகக் கூட இதனை தெரிவிக்கலாம் - நண்பனை உதாரணம் காட்டக்கூடாது. நல்ல நண்பனாக இருந்தாலும்கூட அவர்களை பற்றி உதாரணம் காட்டி உயர்வாக பேசாதீர்கள். சில சமயம் நல்ல நண்பர்களிடமிருந்து அவர்கள் விலக முற்படுவார்கள்.

      நண்பர்களை தேர்வு செய்யும் முறை பற்றி ஒவ்வொரு வயதிலும் சொல்லிக்கொடுங்கள். புதிய பள்ளி , இடமாற்றம் ஏற்படும்போது உண்டாகும் புதிய நட்புகளை கவனியுங்கள் . சிறிய வயதில்கூட நண்பர்களை சரியாக தேர்வு செய்யும் குழந்தைகள் பெரியவனானதும் சரிவர செய்வதில்லை. அதற்கு அவர்களிடமிருந்து நாம் விலகிப்போவதுதான் காரணம்.

         பள்ளிப்பருவ வயதில் அவர்களிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள் போன்றவை நம்மை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிடுகிறது. இங்கேதான் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் முறை மாறிவிடுகிறது. இது போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது தர வேண்டிய விளக்கங்களை உங்களுடைய நலன் விருப்பும் உறவினர் - சகோதரர் , மைத்துனன் போன்றவர் மூலம் தெரிவிக்க செய்யலாம். சொல்லவேண்டிய விசயமும் சரிவர போய் சேர்ந்து விடும். " ஏன் நானே சொல்லக்கூடாதா?" என்று நீங்கள் கேட்கலாம் . வேறு வழியில்லை எனில் இதனை செய்யலாம். ஆனால் உங்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி மிகவும் குறைந்து விடும். அதுவும்கூட விரும்பத்தக்கது அல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் உங்கள் விருப்பம் என்ன என்று தெரியாமலே போய்விடும். பிறகு அனுமதி கேட்காமல் அத்தனையும் அறிவிப்பாக மாறிவிடும். 

            உதாரணமாக, உங்கள் பிள்ளையின் விருப்பம் வேறுபடும் நிலையில் உங்கள் சார்பாக பேசுபவர் , பிரச்சினையை சரி கட்டுவது போல பேசலாம் "அப்பாவிற்கு இது பிடிக்காது. இருந்தாலும் உனக்காக உன் மகிழ்ச்சிக்காக இதற்கு சம்மதிப்பார். நீ அதற்கேற்ற பிள்ளையாக இரு" எனலாம். நாமே நேரிடையாக இதனை சந்திக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு உளறிக் கொட்டி விடுவோம். "பிள்ளைகளின் மகிழ்ச்சியைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை" போன்றவை உங்களை எளிதாக சமாளித்து விடலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடும். பின்னர், அவர்கள் உங்களிடம் பழகும் முறை எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகிவிட வாய்ப்புகள் உண்டு.

  பெண் பிள்ளைகளுக்கு தாயார் சொல்லித்தரலாம். இதில் தந்தை குறுக்கே புகுந்து மதிப்பு பெற முயற்சிக்க கூடாது. அது பெண்கள் சம்பந்தப் பட்ட உரையாடலாக அது அமையட்டுமே. உங்களுக்கும் உங்கள் துணைக்குமான உறவு மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை குறைத்துப் பேசக்கூடாது. பெற்றவர்கள் வாழும் முறைதான் குடும்ப உறவின் மற்றொரு பரிமானத்தை காட்டும்.

 இந்த விசயம் சரியாக நடந்துள்ளது என்று எப்படி தெரிந்து கொள்வது. உங்கள் பிள்ளை அவன் நண்பர்களிடம் நடந்து கொள்ளும் முறையை கவனித்தால் புரிந்து விடும். அவனுடைய நல்ல நண்பர் கூட்டத்தில் தலைமை பண்புடன் நடந்து கொண்டால் கடிவாளம் உங்கள் கையில்தான் உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் நண்பர்களுக்கும் கௌரவ ஆலோசகர் நீங்கள்தான்.

அடுத்த பதிவில் இன்னும் சில சந்தர்ப்பங்களை பற்றி விரிவாக காணலாம்.
 
                   உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
                              ஓங்கியடித்திடுவான் நெஞ்சில்
                  கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
                             காறியுமிழ்ந்திடுவான் ......
                                              - கண்ணன் என் தோழனில் மகாகவி பாரதியார்


குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 4

           
இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.


               சிறிய வயதில் ஒருவனுக்கு சூப்பர்மேன் போல தெரியும் தந்தை, அவன் வளர்ந்த பின் நண்பனாக முடியாதா என்ன? முதலில் தேவைப்படுவது நம்மை பற்றி நம் பிள்ளைகள் கொண்டிருக்கும் கருத்து கேள்விக்குறியாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகின் மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்தான். அதன் குறை நிறைகளை பிள்ளைகளிடம் பேசலாம். அவர்களையும் பேசவிட வேண்டும் என்பது மிக முக்கியம். இல்லை என்றால் நாம் பேச ஆரம்பிக்கும் முன்பே காதுகளை திறந்து வைத்து இதயத்தை மூடி விடுவார்கள்.

             ஒரு போதும் அதிகாரம் செய்யாதீர்கள். குரலை உயர்த்தி பேசுவது என்பது நம் காலத்திலேயே ரசிக்கப்பட்டதில்லையே!. எப்போதும் ஒரே குரலில் அவர்களிடம் பேசாதீர்கள். வீட்டிற்குள் நுழைந்த உடன் இழுத்து வைத்து பேச வேண்டாம். சில சமயம் பிரச்சினையில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளுங்கள் . பிறகு அவர்களிடம் பேசும்போது விளக்கம் தந்துவிடுங்கள். இதனால் எந்த பிரச்சினைக்கும் நம்மிடம் தீர்வு இருக்கும் என்று நம்புவார்கள். இனி நாம் செய்யவேண்டியதெல்லாம்,

               ஒரு போதும் உங்களுடைய உறவினர்களை பற்றி  அவர்களிடம் தாழ்த்தி பேச வேண்டாம். முக்கியமாக உங்கள் வீட்டுப் பெரியவர்கள், உங்கள் சகோதரர்கள் பற்றி அவர்கள் முன் குறை பேச வேண்டாம். இது இரண்டு விதமாக பாதிக்கும். ஒன்று நீங்கள் குறை கூறியவரை நேரில் சந்திக்கும்போது பாசமழையை நீங்கள் பொழிந்தால், எப்படி நடிப்பது என்பதை உங்களிடமே கற்றுக்கொள்வார்கள். இரண்டாவதாக தங்களுடய சகோதர்கள், பெற்றோர்களுடன் (உங்களிடம்தான்) இதே கொள்கையை பிற்பாடு கடைபிடிப்பார்கள். உறவுகளிடம் நாம் பழகும் முறைதான் உங்கள் குடும்பப் பெருமையை அவர்களுக்கு உணர்த்தும். இதில் பொருளாதார வேறுபாடுகளும் இடம் பெறாததால் பணம் பிற்காலத்தில் முக்கிய இடத்தை பிடிக்காது. "எனக்கு நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்?", " நான் சம்பாதிக்கிறேன் உங்களுக்கு அடங்கி நடக்கத் தேவையில்லை" என்பது போன்ற வார்த்தைகள் வருவதில்லை. மேலும் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை சரிவர எடுக்க இது உதவும். உறவினர்கள் முன் நல்ல பெயர் எடுப்பதன் அவசியமும் அவர்களுக்கு  புரியும்.  
                                  
 
"சரி, ஆனால், என்னுடைய உறவினர்கள் சிலர் நெறிப்படி வாழ்பவர்கள் இல்லை, அவ்வளவு பிரியமானவர்களும் இல்லை எனக்கே எத்தனையோ கெடுதல்கள் செய்துள்ளனர், என் பிள்ளைகள் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?" என்கிறீர்களா. கண்டிப்பாக உங்கள் கருத்து சரிதான். நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் நம்முடைய தரம் இறங்காமல், அவர்களின் தன்மையை உணர்த்த வேண்டும். இது போன்றவர்களை மரியாதை குறையாமல் தூரத்தில் நிறுத்தும் வித்தையை உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் செயல்கள் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டும். எதற்கு இத்தனை சிரமம் எடுக்க வேண்டும்?. புகை வண்டி பெட்டிகளாக நம் பின் வரும் குழந்தைகள் ஒவ்வொருவரும் பிற்காலத்தில் எஞ்சின் போல தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமல்லவா? எஞ்சினை தூக்கி தண்டவாளத்தில் நிறுத்திவிட்டால் சின்ன சின்ன சிக்னல்மட்டும் தந்தால் போதும். அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 


             இன்னும்    அவர்கள்  நம்மைவிட்டு விலகும் சந்தர்ப்பங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

                                      நேமித்த நெறிப்படியே - இந்த                                    
                          போமித் தரைகளிலெல்லாம் - மனம்
                                     போல விருந்தாளுபவர் எங்களினத்தார்
                            நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
                                                                                - மகாகவி பாரதியார்

குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 3