மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இனிய இல்லறத்திற்கான கணவன்-மனைவியின் பங்களிப்புகள்

முந்தைய ஒரு பதிவிலேயே கணவன் - மனைவி என்பது ஒரு பதவிதான் என்பதை நான் குறிப்பிட்டிருந்தேன். அது உறவாக மாற சில காலம் பிடிக்கும். இல்லறம் நல்லறமாக அமைய ஆரம்பத்தில் இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும். குறிப்பிட்ட காலம் வரை அது பரிசோதனைக்குரிய காலகட்டத்தில்தான் இருப்பதாக கருத வேண்டும். காதலித்து திருமணம் செய்திருந்தால்கூட இதனை பின்பற்ற வேண்டும். ஏனெனில் சில விசங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கும்.

1. நம்முடைய திருமண வாழ்க்கைக்கு சமூக அங்கீகாரம் தேவைப்படும். வெறும் திருமணம் என்கிற சடங்கினைச் செய்துவிட்டால் மட்டும் சபை மரியாதை கிடைத்துவிடாது. அதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்று சமுதாயம் என்கிற அமைப்பில் இருந்து கொண்டு சொல்ல முடியாது , சில சமயம் மனித மனம் குரங்காய் ஆடும்போது சமூக நியதிகள் பாதை தவறவிடாமல் பார்த்துக் கொள்ளும். மனதிற்கு இன்னுமொரு கடிவாளம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்களுடைய தேவைக்காக- தேடுதலிற்காக காதல் செய்யலாம், யாருடைய தயவும் இல்லாமலேயே அது நடைபெறும். ஆனால் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் இணைவது. கணவன்-மனைவி இருவரும், இருவருடைய குடும்பங்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். குடும்ப வரைபடத்தில் - மருமகனாக , மருமகளாக.- அவர்கள் இடம் பெற்றிட இதனைச் செய்ய வேண்டும்

2. நாளை நம்முடைய சந்ததியும் இந்த சமுதாயத்தில்தான் வாழப்போகிறது. அவர்களுக்குத் தேவையான இடத்தை நாம்தான் உருவாக்கப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது சரிவர அமையாமல் போனால் இளையவர்களுக்கு தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியாது.

3. மனிதன் ஒரு சமூக விலங்கு. வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் சமூகத்தை சார்ந்துதான் இருப்பான் - துறவியாய் இருந்தாலும்கூட.. அதனை உறுதியாக்கிக் கொள்ளவே குடும்பம் என்ற அமைப்பு உருவானது. அதன் அடிப்படை கணவன்- மனைவிதான்.

சரி, கணவன்-மனைவி என்பது ஒரு தாற்காலிக பதவிதான். அதனை நிரந்தரமாக்க என்ன செய்ய வேண்டும் ? அந்த பதவிக்குரிய கடமைகள் - ஆம்... கடமைகள்தான், பொறுப்புகள் ஆகியவற்றை பிடிவாதமாக நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏன் பிடிவாதம் என்கிறேன் என்றால், திருமணம் ஆன புதிதில் சில சலுகைகள் கிடைகலாம், இயல்பான மரியாதை தரப்படலாம். அது உங்களுக்கு தரப்பட்டதாக எண்ணாமல், அந்த பதவிக்குத் தரப்பட்டதாக எண்ணவேண்டும். இதனால் நமக்குள் இருக்கும் நியாயபுத்தி எந்நேரமும் நமக்கு சரியான வழியை காட்டும். மருமகன்/ள், அண்ணி, நாத்தனார், மைத்துனன் போன்ற அத்தனை அடைமொழியையும் வெற்றிகொண்டாக வேண்டும் - அவற்றிற்குரிய சரியான மதிப்பினை நாம் அடைய வேண்டும். இதே போன்றுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருகொருவர் பிடித்த மாதிரி நடந்து கொள்ளவேண்டும்.

நடிப்பது போலாகிவிடாதா என்று கேட்கலாம். இல்லை - நமக்கு நாமே கற்றுத்தருகிறோம் என்று பொருள். வெற்றிகரமான தம்பதியரிடையே " என் மனைவிக்குப் பிடிக்கும்.... என் கணவருக்கு பிடிக்கும்.... என்ற தனிப்பட்ட பேச்சுகள் இருக்காது. ராமனாய் வேடத்தில் நடித்த ராவணனுக்கும் ராமனின் பண்புகள் தற்காலிகமாக வந்ததாக இதிகாசத்தில் சொல்லுவார்கள். அதுபோல மற்றவர் விருப்பத்தை தன் விருப்பமாக கருதினால் தனிப்பட்ட விருப்பம் எதுவென்பதே தெரியாமல் போய்விடும். இது பற்றி விரிவாக சில உதாரணத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

           ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்,
                      அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்
           சோதி மணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
                       சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
          மாதவனும் ஏந்தினான்: வானோர்க்கே நும்
                     மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
         காதல் செய்யும் மனைவியே சக்தி, கண்டீர்
                       கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும!
                                                                     
மகாகவி பாரதியார்

0 comments: