மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

   இந்த தலைப்பில் வந்த பதிவுகள் ஓரளவிற்கு பொதுவான வழிமுறைகளை தெரிவித்தன. இனி தெரிந்து கொள்ளவேண்டிய விட்டுப்போன விவரங்களை பார்ப்போம். முதலில் பெண் பிள்ளைகள் பற்றி,

1. பதின் வயதுகளில் மாறிப்போவது பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். பெண் பிள்ளைகள் பதின் வயதில் சூழ்நிலையை ரசித்தாலும் தடம் மாறும் வாய்ப்பு குறைவு. ஒரு வேளை எதிர் போக்கான மாற்றங்கள் தென்பட்டால் மீண்டும் நிலைக்கு கொண்டு வருவது கடினம். வாழ்க்கைக்குரிய கொள்கைகள் அப்போதுதான் வகுக்கப்படும். அப்போது இருக்கும் இயல்பானது வாழ்நாள் முழுவதும் மாறாது. அன்பு , பாசம் என்றாலும் சரி பிடிவாதம் முன் கோபம் என்றாலும் சரி பதினைந்தில் இருக்கும் மன இயல்புதான் நீடித்து நிற்கும். தங்களை பற்றிய மற்றவர்களுடைய கருத்துகள் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அந்த "மற்றவர்கள்" எனப்படும் பட்டியலில் நாமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

2. ஆண் குழந்தைகள் விசயத்தை போல் சிரமப்பட வேண்டியதில்லை. எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள், பிரியமான வார்த்தைகள், உயர்வாக பேசுதல்கள் போன்றவை அவர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும். ஏதாவது தோல்வியை சந்தித்து விட்டால் கவனம் தேவை. மிகவும் உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பர். ஒரு முடிவு எடுக்கும் முன் மிகவும் யோசிப்பார்கள், அந்த சமயத்தில் தரப்படும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கிட்டும். ஆனால் முடிவெடுத்தபின் மாற மாட்டார்கள்.

3. பட்டுத் திருந்துவதென்பதே கிடையாது. அவதி பட்டாலும் அதை அனுபவிக்கத் தயாராய் இருப்பார்கள். எப்போதும் யாராவது ஒருவருக்காகவாவது உண்மையாக இருக்க நினைப்பார்கள். இதற்கான கொள்கைகளும் அவர்களே வகுத்துக்கொள்வதுதான்.

4. ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் நம்மை புரிந்து கொள்வார்கள்- வாழ்க்கையின் பிற்பாதியிலாவது. இவர்கள் அப்படியல்ல இளம் வயதில் கொண்ட கருத்துகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் சூழ்நிலைக் கட்டுப்பட்டு இருப்பதால் எதிர்மறை எண்ணங்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

5. அன்னையின் கட்டுபாட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் வழி தவறுவதில்லை. ஆனால் ஒவ்வொரு நிலையிலும் அன்னையின் ஆலோசனையை எதிர் நோக்குவார்கள் , திருமணத்திற்கு பின்கூட.. ஆண்கள் தனித்தன்மையை விட்டுத்தரமாட்டார்கள். அதேபோல பெண்கள் குடும்பத்தை விட்டுத் தரமாட்டார்கள் என்பது இன்றளவும் உண்மை - எந்த குடும்பத்திற்காக என்பது அவரவர் முடிவு, இதில் சமூக கோட்பாடுகள் எல்லாம் பின்பற்றப்படுவதில்லை.

6. நாம் பெண் பிள்ளைகளை பெற்றிருந்தால், அவர்களுக்கு வாழ்க்கை முழுவதற்குமான திட்டங்கள், தேவையான விவரங்கள், பயிற்சிகள் போன்றவற்றை பதினைந்து வயதிலேயே ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் நல்ல வாழ்க்கை அமைந்து, நம் வளர்ப்பை பற்றி பெருமையும் கொள்ளமுடியும்.


7. பெண்களின் பங்களிப்புதான் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும். அது குடும்பமானாலும் சரி சமுதாயப் பொறுப்புகளானாலும் சரி. அந்த பிள்ளைகளை உருவாக்கிய பெருமை சிறப்பான பெற்றோர்களுக்கு கிட்டும்.

          இன்னும் சில செய்திகளுடன் இந்தத் தொடரின் கடைசி பதிவுடன் உங்களை  சந்திக்கிறேன்.



             
  உச்சி தனை முகந்தால்- கருவம் 
                      ஓங்கி வளருதடி
                மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
                      மேனி சிலிர்க்குதடி
                 என்னை கலி தீர்த்தே - உலகில்
                        ஏற்றம் புரிய வந்தாய்

                                       - மகாகவி பாரதியார்

    குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 7

 

0 comments: