மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

மரங்களில்லாத வெற்று வீதியில்  
       வெளிச்சம் வீரியம் பெற்று எழுந்து
கொட்டிக்கிடந்த குப்பையை
         மட்கும் மட்காது என பிரித்து
அடையாளம் காட்டி பயமுறுத்த
        வாழ்க்கை பூச்சாண்டி முழித்தது
மன்னிக்கவும்! இந்த கவிதை
         புவி வெப்பமடைதல் பற்றியதல்ல!
 

மனதின் பரிணாம மாற்றம் பற்றியது
              குரங்காய் இருந்து மனிதன் ஆகிட
மனம் மட்டும் குரங்காய் ஆடியது
            மழை போல சில சமயம் பேசி கெடுத்தது
பல சந்தர்ப்பங்களில் பேசாமல் கெடுத்தது
           வானொலி குறுகிய அலை ஒலிபரப்பு போல
தவறுகளின் நியாயம் பேசி ஊக்குவித்து
            எந்த வேளையிலும் நேர்பட விடவில்லை
சமீபத்தில் காணாமல் போன வரிசையில்
             மனசாட்சி பற்றிய சேதி ஏதும் சிக்கவில்லை
பல வேளைகளில் பேச்சின்றி போனதில்
            மூச்சையும் விட்டதாக அச்சம் எழுகிறது
 

ஆற்றங்கரை நாகரிகத்தின் விருட்சமாய்
             மானுடத்தின் அத்தனை திசைகளும்
அன்பின் வேர்கள் பரவி நிலையுற
            உறவின் தொடர்பில் உலகம் உய்வுருமென
சற்றே கண்ணயர்ந்து விட்டான் இறைவன்
             வேர்கள் திருடப்பட்டு பட்ட மரமானது
திருடியவனும் தொலைத்தவனும் சேர...
           ஒன்றுமில்லை என சிரித்துத் தொலைத்தனர்
திருடியதில் லாபமில்லையாம் தொலைத்ததை
            காப்பாற்றும் கடமையும் இல்லையாம்.

தெய்வமும் மனிதனும் தனித்தனி செல்ல
         கோவில் மணியோசை மட்டும் அழுகிறது
மானுடம் மறையப் போவதை எண்ணி.

          .

2 comments:

அருமை.வாழ்த்துக்கள்

நன்றி மதுரை சரவணன்.