மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

காற்றினிலே கலந்த மூச்சுக் காற்று பிரிந்து
     கருவரை பிண்டத்தில் சேர உயிர் உருவானது
அதற்கு முன் பாடுபட்ட கதையினை
      சொல்ல நாவு துணியவில்லை எனக்கு
கணக்கை இங்கிருந்தே ஆரம்பிக்கிறேன்
       என் தாய்க்கு உணவு செல்லவில்லை
கண்களில் உறக்கம் கொள்ளவில்லை
       வாயில் பட்டது வயிற்றிற்கு இல்லை
தப்பி உள்ளே சென்றது வயிற்றுக்கும்
      தொண்டைக்கும் இடையில் உருண்டது
மசக்கை ஏற்கப்பட்டது தாயுள்ளத்தால்
      இரண்டே மாதத்தில் தளர்வு நடை
 

அடி வயிற்று பாரம் கால்களில்
      உள்ளே நான் உருண்டு புரண்டபோது
அவளுக்கு வலித்தாலும் மனது இனித்ததாம்
      உடல் வலி காரணமாக உறக்கமில்லை
உலகத்தின் அத்தனை பெயர்களையும்
     உறக்கமில்லா இரவுகளில் உச்சரித்தாயிற்று
கசப்பை உண்டு பிள்ளைக்கு மருந்து
     கையூன்றி எழவில்லை கால் நீட்டி அமர்ந்ததில்லை
பாதி தூக்கத்திலும் புரண்டு படுத்ததில்லை
      பார்த்து பார்த்து சாப்பிட்ட பின்னும்
பயத்தில் அடி வயிறை தடவிப்பார்த்தது
       உதிரம் குடித்து உயிர் மூச்சை வாங்கி
உடல் பிளந்து உயிர் பிறந்தது - நான்தான்
      பின்னும் எத்தனையோ தொடர்ந்தது
 

உதிரத்தை பாலாக மாற்றி வளர்த்தாள்
      ஆகும் ஆகாது பார்த்து பத்தியம்
அடிக்கடி உறக்கம் கலைத்து அழுகை
       எந்நேரமும் பசியாற்றுதல் உடைமாற்றுதல்
தலை நிமிர்த்தி, தவழ்ந்து, எழுந்து,
        நடந்து, பேசி, ஓடியாடி முடிப்பதற்குள்
ஓராயிரம் பிரார்த்தனை விரதங்கள் பூசைகள்
        பல்லு முளைக்க கொழுக்கட்டையென்றால்\
பட்டம் முடிக்க பாதயாத்திரை வேண்டுதல்
        இத்தனை அவதிகளையும் முடித்தபின்
பிண்டம் உயிரானதுபோல்  உயிர் பிண்டமானது
        இன்னும் அவளை நிம்மதியாக
கண் மூடி உறங்க விடாமல் அழைத்தேன்
       காலில் பட்ட அடிக்காக "அம்மா" என்று.

2 comments:

உற்றவளை என்னதான்
நேசித்தாலும். . .
நான் கண்மூடும் வேலையில்
வான்வெளியில் இருந்து
மலைத்துளிகளின் ஆசிர்வாதத்தால். . .
என் இறுதி ஊர்வலத்திலும்
உன் பங்களிப்பை
நான் என்னவென்று சொல்வேன். . .
அம்மா. . .!!!!!!!
உங்கள் கவிதையும், அதன் சாரமும் அருமை!!!!!1

நன்றி முத்துராஜா! அம்மா என்றாலே எத்தனை அழகான கவிதை வருகிறது.