மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

           மூத்தோரை மட்டுமே என்னுடைய பதிவுகள் ஆதரிப்பதாக புகார் எழும்பியுள்ளது. என்னுடைய பதிவினை படிப்பவர்களில் அநேகமானவர் இளைய வயதுடையோர். அவர் தன் நண்பர்களுக்கு இது போன்ற பிரச்சினைக்கு ஆலோசனை கூற வேண்டியிருக்கும். தோளில் கை போட்டுக்கொண்டு மெதுவாக அவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பு உள்ளது. வயது, உடல் நிலை மற்றும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் நெறிகள் இவற்றின் காரணமாக முதியோரின் நிலை எடுத்துச்சொல்ல வேண்டியதால் ஆதரிக்கவேண்டியதுதான். நேற்றைய பதிவு முதியோரிடத்து பற்று வைத்திருக்கும் இளையவர்களுக்கானது. இனி இரண்டாம் பாகத்தின் தலைப்பில் வரும் "அவர்கள்" - இளையவர்களை குறிக்கும். நண்பனுக்காக தூது சென்று ஒரு கோப்பை தேநீர் பருகிக்கொண்டே அடக்கமாக பெரியவர்களிடம் பேசவேண்டிய செய்திகள்.

                     அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - இரண்டாம் பாகம்
 
          இருபது வருடத்திற்கு முந்தைய பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். அன்றைய இளையவர்கள் பெரிதாக கனவு கண்டதில்லை. பொருளாதார வசதியை வைத்து குடும்பம் அமைந்ததில்லை. உதாரணமாக இருபதுகளின் முன் பாதியிலேயே திருமணம் நடந்துவிடும் - அவன் மளிகை கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தாலும். அவர்களுக்கான புதிய வாழ்க்கை அமையும் வரை வீட்டிற்கு வரும் மருமகளை கவனித்துக்கொள்வது பெரியோரின் கடமை. புகுந்த வீட்டின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள முடிந்தது - எதிர்த்து பேசாமல். மேலும் அப்போது படிப்பிற்காக பெரிய அளவில் செலவுகளும் இல்லை.  

        இன்றைய சூழ்நிலையில் " முதலில் நல்ல வேலை பிறகு சிறப்பாக திருமணம்" என்பதே கொள்கையாகிவிட்டது. திருமண நாளன்றே தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் - இதில் பெற்றோரால் மறுக்கப்பட்ட காதல் திருமணம் வேறு சகஜமாகிவிட்டது. இன்றைக்கு ஐம்பதுகளில் இருக்கும் "அன்றைய இளையோர்" புரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பொருளாதார அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர், அதிக சம்பளம் தரப்படும் வேலைகள் அவர்களின் வாழ்நாட்களின் சந்தோச தருணங்களையும் இனமான உணர்வுகளையும் விலையாக பெற்றுக்கொள்கின்றன. சுட்டெறிக்கும் நெருப்பில் நித்தம் அவர்கள் வெந்தும் வேகாமலும் வெளிவருவதை புரிந்து கொள்ளுங்கள. வேலையை தூக்கிப்போட்டுவிட்டு வரமுடியாத பணச்சிறைக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் - குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவை காரணமாக.  

        அன்னையின் மடி, தந்தையின் ஆதரவு இவற்றை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவை சுயபரிதாபத்தை வரவழைக்கும். அன்பின் வலியறியாது (மனம்) வலித்துக்கிடப்பவர்கள். இன்றைக்கு வெந்த புண்களுக்கு மருந்திடும் நிலையில் இருப்பவர்களுக்கு நாளைய கொதிக்கும் எண்ணெய் கொப்பரை, சாணமலை போன்றவற்றில் நம்பிக்கை இருக்காது. வெற்று சிரிப்பில் வெளியுலகத்தின் பார்வைக்கு வைக்கப்படும் கண்காட்சி புகைப்படங்கள். 

          ஆகவே நான் சொல்வது என்னவென்றால், கைகளில் தூக்கி தோளில் போட்டுதான் அன்பு பாரட்டவேண்டும் என்றில்லை. உடலில் தெம்பு இல்லாவிடினும் வார்த்தைகள், பார்வைகள் மூலம் மயிலிறகாய் வருடிக்கொடுக்கலாம். விட்டுக்கொடுத்தல்களினால் தேவையில்லாத நெருடல்கள் மறைந்து தேவைப்படும் போது மயிலிறகு வருடல்கள் நமக்கும் கிட்டும். 


                          பயமில்லை பரிவொன்றில்லை- எவர்
                                பக்கமுன் நின்றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
                         நயமிகத் தெரிந்தவன் காண்-தனி
                                 நடு நின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
                                                               - கண்ணன் என் தந்தையில் பாரதியார்


1 comments:

//ஆகவே நான் சொல்வது என்னவென்றால், கைகளில் தூக்கி தோளில் போட்டுதான் அன்பு பாரட்டவேண்டும் என்றில்லை. உடலில் தெம்பு இல்லாவிடினும் வார்த்தைகள், பார்வைகள் மூலம் மயிலிறகாய் வருடிக்கொடுக்கலாம். விட்டுக்கொடுத்தல்களினால் தேவையில்லாத நெருடல்கள் மறைந்து தேவைப்படும் போது மயிலிறகு வருடல்கள் நமக்கும் கிட்டும்.//

மிகவும் அழகாக சொல்லியுள்ள இந்த வரிகளே, மயிலிறகால் வருடுவது போலத்தான் உள்ளது, மேடம். பாராட்டுக்கள். நன்றிகள்.