முதியோர் இல்லம் பற்றி பலவித கருத்துக்கள். தொண்டு நிறுவனங்கள் முதல் பொது நிறுவனங்கள் வரை முதியோர் இல்லங்களை நடத்துகின்றன. இத்தகைய சேவைகள் இலவசமாகவும் கட்டண சேவையாகவும் வழங்கப்படுகின்றன. வெளியூரிலோ வெளிநாட்டிலோ வேலை பார்ப்போரின் தனித்து இருக்கும் பெற்றோருக்கு முதியோர் இல்லம்தான் புகலிடம். மாதகட்டணத்தை செலுத்திவிட்டால் போதும் மிக நன்றாக கவனிப்பதாக நண்பர் சொன்னார். யாருமில்லாமல் தவித்துக்கொண்டிராமலும் , திரை கடல் தாண்டி திரவியம் தேடும் இளையவர்களின் மன நிம்மதிக்காகவும் இதனை ஆமோதிக்கலாம். உள்ளூரிலேயே பகல் நேரத்தில் யாருமில்லாத தனிமையில் நோய்வாய்ப்பட்ட பெரியவர்களை நன்றாக பராமரிப்பதற்காக முதியோர் இல்லம் தேவைதான். அதனால்தான் பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு நல சட்டம் 2007ன்படி அரசு முதியோர் இல்லங்களை உருவாக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இல்லாதோருக்கு.....
அது பூக்கள் இல்லாத தோட்டம்
- தேனீக்களின் இன்னிசை இல்லை
ஒளியே காணாத இருண்ட கண்டம்
- இரவு பகல் இரண்டும் தெரியாது
உவர்ப்பு உணரும் சதுப்பு நிலம்
- உயிரினங்களின் உற்சாக ஒலி எங்கே?
உயிர் மூச்சு பருகும் ப்ரணவ பிரஜைகள்
- கடைசி காற்றின் வருகைக்காக காத்திருப்பு!
உலகத்தின் முடிவான நாளுக்கான தேடல்
- முகாரியில் தொடங்கும் பூபாளம்...?
நேற்று அம்மு பாட்டியென்றால்
இன்று முதலிடத்தில் காசி தாத்தா
கடவுள் முன் பஜனை , வேண்டுதல்
இங்கு சுகம் வேண்டப்படுவதில்லை
முன் சென்றவரின் நாட்களின் தாக்கத்தில்
"இறைவா, யாருக்கும் பாரமில்லாமல்...."
இது மட்டுமே வரமாக கோரப்படும்.
வழியற்றோருக்கான முதுமக்கள் தாழி
பசிக்கு அன்னையை அழைக்கும் மழலை
பள்ளி சென்று திரும்பிய உற்சாக பிஞ்சுகள்
பரதமோ எதுவோ கற்று வென்ற பரிசுகள்
காதலின் கண்ணாமூச்சி விளையாட்டு
வாய் பேச்சு , கை கலப்பு எதற்காகவாவது
அவசரமாக அளிக்கப்பட்ட நாட்டமை பதவி
பெரிசு... கிழவி... என்றழைக்கப்பட்டாலும்
சமயத்தில் கிட்டும் இதமான அனுசரணைகள்
எந்த நேரத்திலும் போர் அறிவிக்கப்படும்
ஆயிரமாவது உலக யுத்தம் ஆரம்பிக்கலாம்
இத்தனை அதிகளத்திற்கும் நடுவே
பரமபிதாவிடம் கேட்க ஆயிரம் வரங்கள்
பரமபிதாவிடம் கேட்க ஆயிரம் வரங்கள்
ஒன்றுகூட தனக்கானதாக இல்லை.
இறுதி நாட்களுக்கான அறிவிப்பின்றி
இனிய கனவாக மரணம் பரிசு.....!
இறுதி நாட்களுக்கான அறிவிப்பின்றி
இனிய கனவாக மரணம் பரிசு.....!