மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பட்டுத்தெரித்த நீர் திவலைகள்
நெஞ்சினிலே நினைவலைகள்
மழை என் பாட்டியை போல
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!
எனக்கும் பாட்டிக்குமான நாட்கள்
சூர்ப்பனகைக்கும் மகிஷிக்குமானது
என்ன இப்படி என்கிறீர்களா?

அம்மா ஆசிரியப்பணியிலும்
 அப்பா அரசாங்கப்
பணியிலுமாக
வீட்டிலும் பணியின் நிழல் தொடர,
எனக்கோ பாட்டிதான் எல்லாமும்!
தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்தால்
வெடிபோடுவது வெளியில் அல்ல
பாட்டியின் கோட்டை அடுப்பில்தான்
புகை அமர்த்த ஊதினால்
பொட்டுவெடி பறையடிக்கும்
சர வெடியின் அதிரடியில்
சல்லடை சல்லடையாகிவிடும்
விளைவாக பாட்டியின் கச்சேரி
அப்புறம் என்னுடைய எதிர் பாட்டு
இத்தனைக்கும் பிறகு
தோல்வி வெற்றியை கணக்கிடாத
எதிரணி தலைவர்கள்போல கைகுலுக்கி
அறுசுவை(?) விருந்தாடுவோம்
பாவம்! நானும் இல்லைஎன்றால்
பிறகு யார்தான் பட்சணங்களை சாப்பிடுவது.

பாட்டிக்கும் அம்மாவிற்குமான போரில்
நான் அவளுக்கு எதிர் முகாமில்
புதிய ஆள்போல் முகம் திருப்புவேன்
தேர்தல் வாக்குறுதிகள் போல
இலவச அறிவிப்பு தருவதோடு நில்லாமல்
உண்மையிலேயே தின்பண்டங்கள் தந்து
மறுபடியும் ஆட்சியை பிடித்து...
எனக்காகவே அம்மாவிடம்
சமாதான படலமும் ஆரம்பிக்கும்


பாட்டியின் இனிய பக்கமும் உண்டு
பேறு காலத்தின் தேவைகளுக்கு
எல்லோரும் தேடுவதும் அவளைத்தான்
இரவு பகல் எந்த நேரமும்
தாயையும் பிள்ளையையும்
தாதிபோல பக்குவம் பார்த்து சீராட்ட
தள்ளாமையை தள்ளி வைப்பாள்.
எனக்கும் அவள்தான் துணை.
எப்படியிருந்தாலும் அவள் என் பாட்டி!


என்னுடய பேரன்கள் எப்படியென்றால்.....?
இன்றைய முதியோர் இல்ல உலகத்தில்
சின்ன குழந்தைகளான பாட்டிகளும்
பெரியவர்களாகிவிட்ட பேரன்களும்
சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!

0 comments: