மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

தடையில்லாத  ஒரு பயணம்
  எங்கும் யோசிக்க வைப்பதில்லை!
கால்கள் வலிக்காத வரையில்....
  ஒரு முட்டுச்சந்தின் முனையில்
முடிவற்ற நிலைக்கு  வரும்வரை..
   இருள் பாதையை மறைக்கும்வரை,
சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதில்லை!


அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி

   தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
   தோற்று மறையும் மேற்குச்சூரியன்!
இரவின் மின்மினி விண்மீன்கள்!
   அடிவானத்து வெளிச்ச சிதறல்கள்!
வரைந்த தூரிகை காயும் முன்
    கலைந்திடும் நீலவெளி வானவில்!
பிள்ளை பிராய கதை சொல்லும்
     மழைக்காலத்து மண்வாசனை!
நெருங்கி திரிந்து இணைந்து ஓடி
      சிற்பியாகும் கவின் மேகங்கள்!
எதுவும் கவிதையாவதில்லை.....

ஆனால்....
ஏதோவொரு திடீர் தேக்கத்தில்...
   தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
   மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
   வரிவரியாக சொல்லிக்காட்டும்!
அத்தனையும் அழகாய் நிகழ்த்தும்
   மகா சக்தியின் இருப்பை காட்டும்!
தேங்கி மதியிழந்திருந்த மனம் 
    சிறகு முளைத்த பறவையாய்
ஆகாயத்து பால் வெளியில்
    பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.   
    இந்தப் பதிவுத் தொடர் எழுத மனோ மேடம் அழைத்து சில நாட்களாகிவிட்ட நிலையில் இப்போதுதான் எனக்கு கணிப்பொறியினை தொடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தொடர்கிறேன். மேலும் பதிவுலக நட்பு வட்டாரத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் தவிர்க்க விரும்பவில்லை, என்னுடைய பணியின் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதை சிறு மன்னிப்புடன் விளக்கி இந்த தொடரை தொடர்கிறேன்.


    முன்னுரை  அல்லது முகவுரை ஒரு படைப்பினை எடை போடும் எழுத்துக்களாக இல்லாமல், படைப்பினோடு ஒன்றிய படைப்பாளியின் மனச்சித்திரங்களை விளக்கக் கூடியதாக இருப்பதுதான் எனக்கு விருப்பமானது. முன்னுரை என்பது அம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு நிலாச்சோறு ஊட்டுவது போலவோ , இல்லை அப்பா கை பிடித்து நடத்திச் செல்லும் ஒரு மாலை நேர நடையாக இருப்பதும் சிறப்பு. தமிழ் மொழியில் எழுதப்பட்டதோ வேற்று மொழியில் எழுதப்பட்டதோ எந்த படைப்பையும் சினேகித்துத் தொடர இந்த முன்னுரைகள் உதவுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தேர்வு செய்ததால், குறிஞ்சிமலர் தவிர மற்ற நூல்கள் அந்த அளவிற்கு வாசகரை சென்று அடைந்திருக்காதவையாக இருக்கும். இவை என்னை ஒரே விசயத்தை எப்படி பல்வேறுபட்ட அணுகுமுறைகளுடன் சிந்திக்க முடியும் என்று கற்றுக்கொடுத்தவை.


1. குறிஞ்சி மலர்:  காதாசிரியர் நா.பார்த்தசாரதி - எழுத்து கூட்டி வாசித்ததற்கும் மேல் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை விதைத்த இந்த நூலிற்கு முதல் வணக்கம். 

   ஒரு தமிழ்ப்பெண் எப்படியிருக்க வேண்டும் .... கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ் பெண் குலம்.தமிழ் பெண் குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில்தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக்கைகளின் வளையோடு தமிழும் வளர்ந்தது. தமிழொடு தமிழ் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு தமிழ் குடியும் வளர்ந்தது.


  இன்றும் நம்மை விட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும் , ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்த தமிழ் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைத் திருவடிகளை வணங்கிவிட்டு இந்தக் கதையினை எழுதத்தொடர்கிறேன். இங்கே இந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது மெய் சிலிர்த்து கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன.


     தாயின் வார்த்தைகளைப்போல பதின் வயதில் எனக்குள்ளே பதிய வைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்கு படித்தாலும் பெருமைகொள்ள வைக்கின்றன. இது போன்ற எழுத்துக்கள் இப்போது இல்லாததும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமோ என்பதும் ஒரு கேள்வியாகிறது.


2. The Algebra of infinite justice - ARUNDHATI ROY  புக்கர் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்.  இந்த நூலிற்கு முகவுரை எழுதியவர் ஜான் பெர்ஜர்.  சர்ச்சைக்குரிய எழுத்துக்களை துணிச்சலுடன் எழுதும் இந்த எழுத்தாளர் இந்த நூலில் பயங்கரவாதம் பற்றியும், அதன் மறுமுகம் பற்றியும் அதனை மக்களிடம் சரிவர கொண்டு சேர்க்காத எழுத்தாளர்களின் தார்மீகபொறுப்பு பற்றியும் எழுதியிருக்கிறார். அணு ஆயுதம், பொக்ரேன் சோதனை, சர்தார் சரோவர் அணை பிரச்சினை, தீவிரவாதம் பற்றியும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார். இந்த கட்டுரை தொகுப்பில் சில வரிகளை ஜான் பெர்ஜெரின் வார்த்தைகளை எழுதுகிறேன்.


ஒன்றுமறியாத அப்பாவிகளை கொலை செய்யும் ஒரு பயங்கரவாத செயல் - மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், தீவிரவாத இயக்கம் செய்தாலும், மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாக இருந்தாலும், போர் என்ற பெயரில் செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் அதனை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது .


பயங்கரவாதம் ஒருவருடைய இறப்பின் கடைசி நிமிடங்களை வாழும்போதே எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை விவரிக்கும் வரிகளை இவ்வாறு குறிப்பிடுகிறார். உயிரோடு இருக்கும் ஒருவருடைய நினைவும் கனவும் உயிர் வாழ்தல் பற்றியே இருக்கவேண்டும். இறப்பினை பற்றிய கனவுகள் இறந்தபின் வேண்டுமானால் வரட்டும்.
இதற்கு என்னதான் விடிவு -- To love and To be loved....


3. மொழி வரலாறு - மு.வரதராசன் . அவரது இலக்கிய படைப்புகள் தமிழ் மொழியை தின்மையுற பெருமை பேசுகின்றன. தமிழின் பெருமையினை மறந்துவிட்ட இக்காலத்தில் இது போன்ற நூல்கள் புத்தக அலமாரியின் அடித்தட்டில்தான் உள்ளன. அவருடைய முன்னுரையில்,


மொழி வரலாறு,   மொழியியல் என்னும் இரு துறைகளும் சென்ற நூற்றாண்டில் வளர்ந்தனவாகும். அன்று முதல் நேற்றுவரையில் இவ்விரு துறையிலும் கருத்துபூசலும் குழப்பங்களும் மறைந்து கருத்துவேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றை குறித்து கவலைப்படாமல் உண்மை உணரும் வேட்கையுடன் அறிய முயல்வோர்க்கு, இவ்விரு துறைகளும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

இந்த நூலில் தமிழ்  மொழியின் எழுத்து வடிவம் அதன் ஒலிவடிவம் அது உருவான விதம் என்று ஆரம்பித்து கொஞ்சம் அடிப்படை இலக்கணம் மரூஉ போன்ற மறந்துபோன விசயங்களை தீவிரமாக எடுத்துச்சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுதல் போலன்று உலகளாவிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து தமிழை பெருமைபடுத்துகிறார். 


4. Awakening the Mind , Lightening the Heart - His Holiness The Dalailama. இது ஆன்மீகத் தேடலுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற நூலாகும். அவரது முன்னுரையில்


நம்முடைய மனம் தெளிவுபெற வேண்டுமெனில் தியானம் மட்டுமே அதனை பெற்றுத்தரும். தியானம் மட்டுமே மனமாற்றங்களை உருவாக்கி சிக்கல் என்ரு நினைப்பவற்றை சாதகமாக மாற்றித்தரும் திறமையை தரும் என்கிறார்.


இவர் இந்த நூலில் புத்தமத சம்பிரதாயங்களைவிட தியானம் பற்றியே பேசுகிறார். அதையும் சிறப்பாக சொல்கிறார். ஒரு துறவியின் எழுத்தாக இதனை டிக்கும்போது வாழ்க்கையின் தெளிவு பெறாத ஆன்மீக விசயங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த நூலை மனவள கட்டுரைகளின் தொகுப்பாகவே பார்க்கமுடிகிறது.


இரண்டாவதும் நான்காவதும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் இந்த பதிவினை படிக்கும் சிலருக்கு இந்த நூல்களை அறிமுகப்படுத்த எண்ணியே சேர்த்துள்ளேன். பொறுத்தருள்க.


இந்த பதிவுத்தொடரை எழுத அழைக்கப்படுபவர்கள் ( கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருக்கிறேன். ஏற்கனவே எழுதியிருப்பவரை அழைத்திருந்தால் மன்னிக்கவும்.)
1. கீதமஞ்சரி கீதா - இவருடைய எழுத்துக்கள் பரந்த வாசிப்பு தன்மையை பறைசாற்றுவதால் அழைக்கிறேன்.
2. சில மணித்துளிகள் - பிரணவன் - ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டேயிருக்கும் தீவிர இலக்கிய சமர்த்து.
3. மதுரை சரவணன் -  ஆசிரியர் என்பதால் தீவிர வாசிப்பு இருக்கும் என்பதால் சிறப்பான பதிவை எதிர்பார்த்து அழைக்கிறேன்.

4.கூட்டாஞ்சோறு- சிசு - பதிவுலக நண்பர். சிறப்பான பதிவுகள் தருபவர்.
                                                                                                     -  Sagampari


ஆரம்பம் ஏதுமறியா வெள்ளை!
தாயிடம் முகம் புதைந்து தாலாட்டு, 
விரல்களை நீட்டி உலக ஸ்பரிசம்!
வெளிக்காற்று பட்ட நொடியில்...
சிவப்பு... நீலம்... பச்சை... மஞ்சள்...
குணங்களின்  வண்ண சாரல் மழை!
தூறல் பட்டு அடையாளம் ஆனேன்...

மகளாய் மனைவியாய் அன்னையாய்
ஒவ்வொன்றும் ஓவியமாக மாறியது.
ஆனாலும் ஒன்று, இந்த நிறமாற்றம்
வழுக்கிக் சென்ற நாட்களின் லயிப்பில்
என்னுள்  விமர்சிக்கப்பட்டதில்லை
எப்போதாவது  அடிமனம் தேடும்
எனக்கென்று நிறம் இல்லையா?

எனை நனைத்து நிறம் கரைத்து
இயல்பினை காட்டும் மழைக்காக
நீண்ட நெடிய ரகசிய காத்திருப்பு! 
ஒரு கடைசி நேரத்து தூறலில்
என்னிடமிருந்து நான் விலகி தனித்து
பிரித்தறியா காற்றில் கலந்த நொடி
தெள்ளியமாய் புரிந்து போனது...
நிறமில்லாத இயற்கைதான் 'நான்' 

என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றிகள்! மூன்றாம் கோணம் இணைய இதழிற்கும், என்னுடைய கவிதைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களும் மிக்க நன்றி! பரிசு பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு விண்மீன் குஞ்சு!
விஞ்ஞானம் சொல்கிறது.
பரந்த வெளியில் மிதந்த
ஒரு நெருப்புக் கோளம்,
வெடித்து சிதறிய நொடி
அண்டம் பிறந்தது அங்கு.
எனில் நெருப்பில் வந்தனரா
என் விண்மீன் மூதாதையர் ?
தீயில் பிறந்து தீயுடன் வளர்ந்து
நான் நெருப்பின் மகளாய்,
வேகாமல் வெந்து தணிகிறேன்
நித்தம் சுழற்றும் ஊழித்தீ
இன்னும் சுவாலை வீசி 
வளர்சிதை மாற்றம் கொள்ளும்.
ஆற்றல் பொருளாகும்  எனில்
பொருள் ஆற்றலாகும் !
புரிகிறதா...?
அந்த சூட்சுமம் தேடுகிறேன்
என்றாவது ஒரு நாள்....
அடிவயிற்றுக் கொள்ளியில்
பொருள் ஆற்றலாகும் ....
மீண்டும் பரந்தவெளி நாடும்.
ஆகாயத்தில் எரிந்து கொண்டே
அன்றும் சொல்லுவேன்
நான் ஒரு விண்மீன் குஞ்சு!


இத்தைனை வருடத்தின் பின்
     சான்றிதழில் இனம் தேடினேன்
முப்பாட்டன் கொள்ளுபாட்டன்
     வரலாறை தெரிந்து கொள்ள
தொலை தூரத்து சொந்தத்தை
     புதுப்பித்து   கொண்டு வருகிறேன்
ஊரில் குலசாமிக்கு திருவிழா
      உண்டியல் பணம் அனுப்பாமல்
குடும்பத்துடன் விரைகிறேன்
       உறவினர்களிடம் நெருக்கம்
பிள்ளைகளிடம் இறுக்கம்
        ஓரடி தள்ளி நிற்க முயற்சி
வீட்டினை நாட்டின் எல்லையாக்கி
     கட்டுக்குள் கொண்டு வரும்
காவலனின் கெடுபிடி முகம்
      குடும்ப வரைபடத்தில் ஒரு
அடையாளமாக முயற்சிக்கிறேன்


வினையூக்கி எதுவென்று
      இன்னமும் தெரியவில்லை
பக்கத்து வீட்டு பையனின்
       திடீர் காதல் விவகாரமோ...
சென்ற வாரம் சிறப்பாக நடந்த
    பெரியப்பா பேரன் திருமணமோ...
எனக்குள் விதைக்கப்பட்டிருந்த
   பரம்பரையின் பெருமை  விதை
விருட்சமாகி வளர்ந்துவிட்டதோ...
    இனத்தாரோடு சேர்தல் என்ற
வயதாகிவிட்ட கொள்கையோ...
அல்லது.....
குலம் காக்கும் யுத்தத்தில்
    மறுக்கப்பட்டு திசை மாறிய
என் இளவயது காதல் நினைவின்
    காலம் கடந்த தாக்கமா....?


அன்புள்ள அப்பாவிற்கு,
          நான் எழுதிக் கொண்டது. பிரியமுடன் என்றுதான் எழுத வேண்டும் , அந்த வார்த்தை மேல் நம்பிக்கை எனக்கே இல்லை. உண்மையில் பிரியமிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டேன். ஏன் நமக்குள் ஒத்துப் போகவில்லை? இங்கே பனியில் இரவில் தனித்திருக்கும் வேளையில் திரும்ப திரும்ப இதே கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

    என் சிறிய வயது கனவு, தேவதைக் கதைகளைவிட வீரக்கதைகளால் நிறைந்தது. நம் வீட்டிற்கு இரு சக்கர வண்டி முதன்முதலாக வந்த போது, உங்களுக்கு முன் அமர்ந்து  முடி பறக்க பயணித்த போது,  தேசிங்கு ராஜாவின் குதிரையை நினைத்துக் கொள்வேன்.  தலைக்கு மேல் தூக்கச் சொல்லி உலகக்தினை கீழ் நோக்கிய அலட்சிய பார்வை பார்த்திருக்கிறேன். அலுவலகம் முடிந்து நீங்கள் வரும்போது எனக்கென ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது இரவானாலும் காத்திருந்து எதிர் கொள்வேன். உறங்கிவிட்டாலும் உங்கள் குரல் கேட்டவுடன் விழித்துக் கொள்வேன். நீங்கள் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு பொருளை- பெரும்பாலும் கார் அல்லது குட்டி விமானமாக இருக்கும் -  என்னிடம் தந்துவிட்டு " காலைல எழுந்துக்கணும்ல சீக்கிரம் படு" என்று வாய் சொன்னாலும் கைகள் என்னை வருடிக் கொண்டே இருக்கும். அம்மாபோல கதைகள் சொல்லாமல் , பளிச்சென்று நீங்கள் பேசும் வார்த்தைகள் வேதவாக்காய் தோன்றியிருக்கிறன. நம் இருவருக்கும் இடையில் யாருக்கும் அனுமதியில்லாத அந்த உறவு எங்கே மாறிப் போனது?

        மாறி வரும் உலகத்தின் புதிதாக பின்னப்பட்ட  புதிய சிந்தனைகளின் சிலந்தி வலைக்குள் நான் சிக்கிக் கொண்டு ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுவதாக நினைத்து உங்கள் கைகளை உதறிவிட்டு விலகினேன். நான் வளர்வதாகவும் நீங்கள் வளராமல் நின்று விட்டதாகவும் தோன்றியது. என்னுடைய முடிவுகளை உங்களிடம் கலந்துரையாடக் கூட தோன்றவில்லை. நிறைய விசயங்கள் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை , என்னுடைய பார்வை உங்களுக்கு இல்லையென்றும் நான் நினைத்தேன். அது ஒரு ஓட்டம். பொருளாதாரக் குதிரையை போர் குதிரையாக பாவித்து துரத்தி பிடித்து எப்பாடு பட்டாவது பிடித்து கொட்டிலில் அடைப்பதுதான் முக்கிய கொள்கை என்று தோன்றியது. ஓடி ஓடி படித்தேன், ஓடி ஓடி வேலை தேடினேன். உண்மையிலேயே என் ஓட்டம் பல நூறு மைல்கள் கடந்தது.

     இதனால் நீங்கள் வருத்தப்பட்டதுபோல அப்போது எனக்குத் தோன்றவில்லை. நான் அருகில் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம் மட்டுமே என்று நினைத்தேன். என்னவோ, முதலில் இருந்த பிரிவின் வலி சற்று நாட்கள் கழித்து மறைந்துவிட்டது. பிறகு அம்மாவிடம் பேசிய அளவு நான் உங்களிடம் பேசியதில்லை. எதையுமே அம்மாவின் வழியாகவே உங்களிடம் தொடர்பு கொண்டேன். இப்போது வாழ் நாளின் பாதி கழிந்தபின் நான் நிற்கும் இடம் சற்று உயரமானதுதான். வெயிலை உணராமல், மழையில் நனையாமல், யாருக்கும் தலை குனிந்து பதில் சொல்லாமல், பவ்வியமாக பேச வேண்டிய தேவை -உங்களைப் போல-  இல்லாமல் சௌகரியமான இடம். கண் விழித்த நொடியில் இருந்து உறங்கும்வரை வழுக்கிக் கொண்டே செல்லும் நொடிகள் எனக்கு சொந்தமானவை. சாதிச்சாச்சு...?

    சிறிய வயதில்  உங்களுடன் பூஜை அறையில் மந்திரம் சொல்லி  "எல்லாரையும் நல்லா வச்சிக்க"  வேண்டிக்  கொண்டது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருப்பது என்பது இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால்தானா? சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ?. 
      என் மகன் என்னை எதிர்த்து '"நோ டாடி யூ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்"  என்று சொல்லும் இரவுகளில்,  செம்மண் சாலையில் உங்களுடன் கைகோர்த்து சிறுவனாக நான் நடக்கும் கனவு வந்து உறக்கம் கலைக்கிறது. வீடு மாற்றி வெளியூர் செல்லும்போது முக்கியமான ஏதோ ஒன்றை மறந்துவிட்டு செல்வது போன்ற உணர்வு வருமே, அது இப்போது வருகிறது. உங்களை நான் தொலைத்து விட்டேனோ? நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான்.

     உங்களை தொலைத்து நான் தேடியதை தொலைத்து என் மகன் திரும்பவும் உங்களை தேட வைக்கின்றான். என்னுடைய விருப்பம் ஒன்றுதான், உங்கள் நினைவு எனக்கு வரும் அந்த வேளையிலேயே  உங்கள் முன் என்னை நிறுத்தக்கூடிய ஒரு மந்திரம் வேண்டும். சற்று தாமதித்தித்தாலும் ஏதோவொரு தயக்கம், கழிவிரக்கம், உங்களை நேரில் சந்திக்கும் வேளையில் எப்படி நடந்து கொள்வது என்ற ஒப்பனைகள் - நம்முடைய பழைய சில சந்திப்புகள் அப்படித்தான் நாடகத்தனமாக முடிந்தன- இவை பிரவாகமாக எழுந்து என்னை தடுத்து விடுகின்றன. நான் தொலைத்த என் அப்பா காலங்களின் இருண்ட குகைக்குள் கரைந்து மறைந்து அவரைப் போன்ற ஒரு தோற்றம் மட்டுமே எனக்குக் கிட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒன்று புரிகிறது அப்பா, ஒரு நாள் குட்டி வயதில் கால் பந்து விளையாடுகிறேன் என்று ஓடி கீழே விழுந்து அடிபட்டு போது உலகம் தெரியவில்லை உங்களை மட்டுமே தேடியது அது போல்  - தேற்றும் வழியறியாத சிறுவனாக உங்களை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய 'நான்'ஐ கழற்றி வைக்கும்  அப்படி ஒரு அடிக்காகவும் வலிக்காகவும் காத்திருக்கிறேன்.

    என்றாவது ஒரு நாள் உங்கள் அருகில் அமர்ந்து இதனை வாசித்து உங்களுடைய 'குட்டி ராஸ்கலாக' மாறுவேன். அதுவரை இந்த கடிதத்தை நான் மட்டுமே படிக்க முடியும்.

                                            இருளும் ஒளியுமான உலகத்தின் ஒரு மூலையிலிருந்து
                                                            உங்களுடைய குட்டி ராஸ்கல்

அதிகாலை நேர சோம்பல்
   களைத்துப் போன சமையல்...
யந்திரத்தனமான புன்னகைகள்,
    மந்தமான நினைவு சூழ் மதியம்
அலுவலக் களைப்போடு மாலை
   உறக்கம் மீறிய அயர்ச்சி ஆயாசம்
இரவில் தன்னோடு பேசி விழிப்பு
   மனதின் ரகசிய மூச்சுவாங்கல்
இத்தனையும் நினைவுபடுத்தும்
   தாய் வீட்டின் மீதான காதலை

கண்டித்தாலும் கவலைப்படாத
   காலை வேளை உன்னத உறக்கம்
பல் தேய்க்க எட்டி விரட்டும்
   அருமருந்தான கொதிக்கும் தேநீர்
குளியல் யோசனை மறக்கடிக்கும்
   குண்டுகுண்டாய் தும்பை இட்லி
மறந்துபோன கீரைகடையல்
   மலைக்கவைக்காத சாப்பாடு
அம்மாவின் மடி புதைந்து
   உறக்கத்துடன் கூடிய மதியம்
குழந்தை மனதுடன் வாசம் வீசும்
    மாலையில் சூடும் மல்லிகைச்சரம்
எனக்கான என் தேடல் மறைந்த
    மறுபிறவி புத்துணர்வுடன் துயில்

ஒரு ஓட்டத்திற்கு தயாராகும்
   விளையாட்டு வீராங்கனையாக
உள்ளேயும் வெளியேயும் ஆற்றி
   புதிதாய் பிறக்கும் மாயம் செய்யும்
அற்புதமான என் அம்மா வீடு.
 

ஆனால் ........
அம்மாவுடைய வீடு அதுவல்ல.  


     மன்னிப்பு என்பது ஒரு செயல் திட்டம்தான். ஆங்கிலத்தில் RRR என்பார்கள். அவை Regret, Responsiblity, Remedy ஆகும்.  நாம் செய்தவற்றிற்கு வருந்த வேண்டும், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பு என்பதால் அதனை நாம்தான் சரி செய்ய வேண்டும் என்பதும் நம் பொறுப்புதான், அதற்குரிய சீர் செய்யும் செயலையும் நாம்தான் செய்ய வேண்டும். நிறைய சமயங்களில் நோக்கம் மாறிப்போய் முன்னைவிட அதிக பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடும்.

    உதாரணமாக, மகனுடைய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். அவனுடைய படிப்பு நிலவரத்தை சரியாக கவனிக்கவில்லை என்று மனைவியிடம் சண்டை. மகனின் நிலவரமே தெரியாத தவறு நம்மிடம் இருக்கும். எழுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கக்கூடிய பையன் தொன்னூறு சதவிகிதம் வாங்கவில்லை என்று  சண்டை பிடித்த தவறு நம்முடையது. அதற்காக மனைவியிடம் வாக்குவாதம் செய்த தவறினை ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த விசயத்தில் அவருக்கு இரண்டு வருத்தம் இருக்கும். ஒன்று மகனின் எதிர்காலம் பற்றிய திட்டம், இரண்டு எப்போதும்போல முந்திக்கொண்டு பழியை திருப்பிவிடும் கணவனின் செயல். முதல் வருத்தத்தை சரி செய்ய முயற்சிப்போமே தவிர இரண்டாவதிற்கு முக்கியத்துவம் தரமாட்டோம். மனைவி புரிந்து கொள்ளாத கணவனா? இதற்கு முன்புகூட இதுபோல நடந்திருக்கும். எனவே மனைவியிடம் மன்னிப்புகூட கேட்கத்தோன்றாது. சரி, வேண்டாம், ஆனால் தவறாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாமா?  அப்போதைய வலி நாம் சகஜமாக பேசுவதால் சரியாகிவிட்டது என்று எண்ண முடியாதே? சிலர் முதல் நடவடிக்கையாகவே "அவுட்டிங் போகலாமா?" என்று கேட்பார்கள். ஒரு உணவு விடுதிக்கு செல்வதும், திரைப்படம் பார்ப்பது மேலாக பூசலை மறைக்கும் முயற்சிதான்.  முந்தைய தலைமுறைப் பெண்கள்தான் இவற்றை சமாதான உடன்படிக்கையாக புரிந்து கொண்டு கோபத்தை விடுத்து சகஜமாகிறார்கள்.  எனவே அதை செய்யாவிடினும் பரவாயில்லை, நேர்மையாக தவறினை ஒப்புக் கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறு நடக்காது என்று உறுதி கூற வேண்டும்.  அந்த சமயத்தில் அவர்கள் விளக்கம் கூற முற்பட்டால் பொறுமையாக கேட்க வேண்டும். உங்கள் பக்க எதிர்பார்ப்புக்களை சொல்ல வேண்டும். அவர்களின் பொறுப்புணர்வில் நம்பிக்கை வைத்து இருந்தால் எடுத்துக் கூற வேண்டும். இருவரும் சேர்ந்து மகனின் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்யலாம். ஒரு வேளை இதற்கு ஒரு சரியான யோசனை அவர்களிடம் இருக்கும், அதை தெரிந்து கொள்வதும் நல்லதுதானே.. நம்முடைய மன்னிப்பின் பயணத்தையும் அது தடம் மாறிப்போகும் விதத்தையும் இப்போது வரிசையாக பார்க்கலாம்.

1.. தவறுக்கு வருந்துவது - ஒரு முன் கோபத்தில் இவ்வாறு நடந்து விட்டது  நீ நன்றாக படித்தவள் என்பதால் இதனை கவனித்துக் கொள்வாய் என்று நினைத்தேன் - இப்படியெல்லாம் விளக்கம் தரலாம்.

தடம் மாறுவது: இனி உன்னிடம் இது பற்றி விளக்கம் கேட்கமாட்டேன். நானே பார்த்துக் கொள்கிறேன் - அவர்களை தள்ளி வைக்கும் செயல். சற்று அவமானமாகவும் இருக்கும். மனதில் ஒரு வடுவை பதிக்கும். மகனிடம் இனி இது பற்றி பேசக்கூட தயக்கம் பிறக்கும்.

2. பொறுப்பேற்றுக் கொள்வது - இந்த விசயத்தில் நானும் கவனிக்காமல் விட்டேன். அது என் தவறுதான் ஒப்புக் கொள்ளலாம்.

தடம் மாறுவது: தானாகவே தன் பங்களிப்பை தருவதாக இருக்க வேண்டும். "என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறபடி செய்தால் போதும்." என்று சொல்லக்கூடாது. இதிலும் பிரச்சினை தீராது. " நாம் முடிவெடுக்கலாம்" என்பதுதான் சரி.

3. சீர் செய்வது: இது பற்றி மனைவியின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றேனே ஏனெனில் இது விசயமாக வாக்குவாதம் எழாமல் இருக்க இது அவசியம். மகனின் உண்மையான தகுதி மனைவிக்கு தெரிந்திருக்கும். உயர்தர பள்ளியில் சேர்ப்பதாலோ, சிறப்பு வகுப்புகள் கொடுப்பதாலோ சீராகி விடாது. அவனுடைய விருப்பம் Validate (திறணாய்வு?) செய்யப்பட வேண்டும். நிலமையை சீர் தூக்கிப் பார்த்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சில சமயம் கடைசியில் " எப்பாடுபட்டாவது அவன் பொறியியல் படித்தே ஆக வேண்டும்" என்று முடிவுரை எழுதப்படும். கண்டிப்பாக சொல்கிறேன் இதுபோன்ற ஒருதலைபட்சமான முடிவுரைகள் மீண்டும் சிக்கலை கிளப்பும். அடுத்த முறை நாம் கேட்கப்போகும் மன்னிப்பின் மீது நமக்கே மரியாதை இருக்காது.

   தன் அச்சை விட்டு விலகிய செயற்கைக்கோளை ஏவுகணை செலுத்தி சரியான ஆர்பிட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதுபோல் என்று இதனைதான் குறிப்பிட்டேன். சரியான வேகத்தில் சரியான திசையில் தேவையான கட்டுப்பாட்டில் ஏவுகணை செல்லுவதுபோல், நாம் கேட்கப்போகும் மன்னிப்பும் சரியான இலக்கை அடைய வேண்டும். இவ்வளவு கவனம் எடுத்தால்தான் மீண்டும் தவறு ஏற்படாது, உண்மையில் நம் உள்மனமும் இது போன்ற தருணம் திரும்ப ஏற்படும்போது நம்மை எச்சரிக்கை செய்யும்.

    நான் சொல்லுவது என்னவென்றால் மன்னிப்பு கேட்டல் என்பது  தண்டனையை அனுபவிப்பதைவிட சிரமமானது. உணர்ந்து மனசாட்சிபடி மன்னிப்பை வேண்டுபவர் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள். ஏனெனில்  தன்னை பற்றி தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மரியாதைக்குரிய பிம்பம் மீண்டும் கலைவதை பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இத்தனை லட்சணங்களும் பொருந்திய மன்னிப்பு ஒரு அதிசயமான மருந்தாக, உறவுகளை இணைக்கும் பாலமாக வியக்கத்தக்க விதத்தில் செயல்படும். இன்னும்கூட இறுக்கமான பிணைப்புகளை உங்களுக்கு பெற்றுத் தரும். பழுதுபட்ட உறவுகளை சரி செய்து புதுப்பித்து தரும் இதனை நாலாவது R - Regenerateஆக சொல்லலாமா? . மன்னிப்பு கேட்டல் மனிதத்துவம் என்றால் மன்னித்தல்  தெய்வீகமாகும்.

     
       மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரணமாக சொல்லப்படும் "மன்னித்துக் கொள்" என்கிற வார்த்தை மட்டும் இதனை முழுமையாக்கி விடாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு செயல். கடந்த காலம் நிகழ்காலத்தை பாதிக்கும் அது எதிர்காலத்தை பாதிக்காமல் சரியான வழியில் கொண்டு செல்லும் ஒரு செயல். சில விசயங்கள் மட்டுமே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனைபேரையும் அமைதியடைய மகிழ்ச்சியடைய செய்யும். அதில் மன்னிப்பும் ஒன்று.

     ஆதிகாலத்தில் மனித நாகரிகம் ஏற்படாத போது இந்த வார்த்தையும் இல்லை. அப்போது மிருகங்கள் போல வாழ்ந்த மனிதர்களுக்கு மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் மன்னிப்பை தரும் பக்குவமும் ஏற்படவில்லை. நாகரிகத்தின் அடையாளமாக தோன்றிய ஒரு செயல். முதலில் மன்னிப்பு கேட்டது இயற்கையிடமும் கடவுளிடமும்தான். அவர்களால் எதுவும் தீமை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கேட்கப்பட்டது. பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்கும் குறுக்கு வழியாக இது பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களால் ஒரு போதும் பயன்படுத்தப்பட்டதில்லை. மதங்கள்  தோன்றிய பின் பாவத்தின் சுமையுடன் இருக்கும் ஆழ்மனதினை அமைதிபடுத்தி ஆன்மாவை நல்வழியில் திருப்பும் ஒரு புனித செயலாக அங்கீகரிக்கப்பட்டது. பொதுவாக மதங்கள் மறைமுகமாக செய்வது ஒன்றுதான் நம்முடைய ஆழ்மனத்தின் வலிமையை அதிகப்படுத்தி மேம்பட்ட வாழ்க்கையை அடையத் தேவையான உந்து சக்தியை தருவதுதான். குற்ற உணர்வுடன் இருக்கும் மனம் அதிலிருந்து மீண்டு சரியான பாதைக்குச் செல்வதன் மூலம் மனித வாழ்க்கை உன்னதமான எல்லையை அடைகிறது. அடிமைகளின் முதுகெழும்பில் பதியவைக்கப்பட்ட மன்னிப்பு என்ற செயல் மனித நாகரிகத்தின் அடையாளமாக உயர்வான செயலாக  முகமாற்றம் பெற்றது. சங்கத்தமிழில் இதனை பொறுதி என்பார்கள். பொறுத்துக்கொள் என்று அர்த்தமாகிறது.


    அறிவியல்படி ஒரு பொருள் வானில் நிலை நிறுத்தப்பட, அவை தனக்குரிய சுழல் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வேறு ஒரு பொருளையும் அச்சின் மையமாக நீள்வட்டப்பாதயில் சுற்றி வரும். இதனால் மைய நோக்கு விசை , மைய விலக்கு விசை ஆகியவை எதிரெதிர் திசையில் செயல்பட்டு ஒன்றுக்கொன்று ஆதாரமாக அண்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும். நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோளும் இத்தகையதுதான். அதனை, சரியான அச்சில் நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. மன்னிப்பின் விதிமுறைகளும் இவற்றை பின்பற்றவேண்டும்.

    ஒருவரை ஒருவர் சார்ந்து அமைவதுதான் நாம் வாழும் வாழ்க்கை. சில சமயம்  நம்முடைய ஒரு செயல் மற்றவரை பாதிக்கப்படலாம். எப்படி செயற்கை கோள் தன் அச்சிலிருந்து விலகும் அபாயம் ஏற்படுகிறதோ அதேபோல நம்முடைய கடுமையான செயல் அவர்களை ஒரு நிலையில் நிற்கவிடாமல் அலைகழிக்கிறது. அடுத்த நிமிட ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அதிசயமான வாழ்க்கையில் இத்தகைய மனபிறழ்வுகள் தன்னுடைய வாழ் நாளை நீட்டிப்பது குடும்பத்தின் அடிப்படையையே ஆட்டம் காணவைத்து விடாதா? 

      நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத் தண்ணீராக வாழ்வதற்கு. மேலும் இன்றைய சவால்கள் நிறைந்த உலகம் நம்மை சாட்டையில் சுற்றிய பம்பரமாக ஆட்டி வைக்கும் போது, ஆணியின் கீறல்கள் நம்மை சார்ந்து இருப்பவரை காயப்படுத்துவது சகஜமாகிவிட்டது. முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது மன்னிப்பு கேட்பது நம்மை தரம் குறைக்கும் செயலாகாது. குடும்பத்தின் உறுப்பினராக நம்முடைய கடமையும்கூட. நாம் செய்த தவறினை நியாயப்படுத்த விளைவது அடிவேரில் சுடு நீரை ஊற்றும் செயலாகும். அப்போதைக்கு ஒன்றும் தெரியாது, தொடர்ந்து வரும் நாட்களில் மெல்ல செடியின் நிலைமை புரிந்துவிடும். . சிக்கலுக்கும் நமக்கும்தான் சவாலே தவிர நமக்கும் மற்றவர்களுக்கும் இல்லை. ஒரு மகாராஜாவின் மனோபாவத்துடன் மன்னிப்பு கேட்பது "நானே கேட்டுட்டேன். உடனே சரியாகி விட வேண்டாமா? இன்னும் முகத்தை தூக்கிக் கொண்டு திரிந்தால் எனக்கு என்ன நஷ்டம்?",  இது தவறு. அதனால் நோயை தீர்த்து நிலையை சரி செய்யும் ஒரு மருத்துவரின் மனோபாவம் நமக்கு வேண்டும்.  இனி மன்னிப்பு கேட்கும் படலம் நாளைய இறுதிப் பதிவில் (கண்டிப்பாக).

    இன்றைய கெடுபிடியான காலக்கட்டத்தில் சிந்தனைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையே மூழ்கிப்போகாமல் எதிர் நீச்சல் அல்லது முங்கு நீச்சல் போட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடத்துகிறோம். மூச்சுத் திணரும் வேளைகளில் ஒரு தேடுதல் நமக்கு ஏற்படும். அது சில  பொறுமையான மணித்துளிகள் தரும் அமைதியான சூழ்நிலையில் ஒரு மோனத்தவம் புரிய வேண்டும் என்று ஆவலாக இருக்கும். மலையிலேயோ, மாடியிலேயோ, கடலில், குளத்தங்கரையிலோ-  எங்காவது இதற்கான இடம் கிட்டிவிடும். மௌனம் நம்மை ஆட்கொள்ளும்போது, மனம் பேச ஆரம்பிக்கும். நம்முடைய சிக்கல்கள் எல்லாம் வரிசையாக பட்டியலிடப்படும். பொருளாதாரம், உறவுமுறை பிரச்சினைகள், உடல் நிலைக் கோளாறு என இருக்கும் பட்டியலில், யோசித்து சிலவற்றிற்கு விடையோ வழியோ கண்டுபிடிக்க முடியும். ஒரு தெளிவு பிறந்து அந்த வழிக்காட்டலின்படி நடக்க முனைவோம். மனக்கலக்கம் தீர்ந்திருக்கும். ஆனால் சில சமயம்,  இது போன்ற வழிமுறைகள் பயன்படாமல் இருக்கும். சிந்தனைக்கு தடையாக மேலும் சில விசயங்கள் நினைவில் முந்திக் கொண்டு வந்து நின்று  , விடை தேட முயற்சிக்கும் சிந்திக்கும்  திறனை கலைத்துவிடும். இப்போது இதை சரி செய்து என்ன செய்யப்போகிறோம் என்று விட்டேத்தியாக மனம் பேசும். ஏனென்று விளக்கமாக பார்க்கும் முன் , சில உதாரணம் பார்க்கலாமா? பொறுமையாக பிரச்சினையை கையாளாமல் சட்டென்று உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.


    இப்போது  புரிகிறதா? பிரச்சினை வேறு, அது ஏற்படுத்தும் தாக்கம் வேறு. இத்துடன் கூடுதல் பாதிப்பாக நாம் உடனடியாக ஏற்படுத்திய தவறான செயல்களின் பாதிப்புகள்.  உங்கள் மகனின் எதிர்காலத்தை சிந்திக்கும் முன், வீட்டினருடன் நீங்கள் இட்ட சண்டை வந்து கவனத்தைக் கலைக்கும். அங்கே கவனம் மாறிவிட்டால், அவர்கள் பேசிய பதிலும் நினைவிற்கு வரும். மகனின் பிரச்சினை தற்காலிகமாக மறந்துவிடும். இதேதான் மற்ற உதாரணங்களிலும் நடக்கும். இன்னும் சற்று பொறுமையாக யோசித்தால், இயலாமையாலும், குழப்பத்தாலும், கழிவிரக்கத்தாலும் வந்த கோபத்தை சட்டென்று  சம்பந்தமில்லாமல் திசை திருப்பிய தவறு நம் பக்கம் இருக்கும். அதனை சீர் செய்வதுதான் முதல்கட்ட நடவடிக்கையாக தோன்றும். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய யதார்த்தம் புலப்படும். இதனை சீர் செய்ய என்ன செய்யலாம்? மன்னிப்புதான்! பிரச்சினைக்கு சம்பந்தமேயில்லாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.

    மன்னிப்பு என்று சொல்லும்போதே - "அடடா, அதெல்லாம் காதிலேயே வாங்கமாட்டார்கள். எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கோபம் குறையாது, தானாகவே சரியானால்தான் உண்டு" என்பது நம் பதிலாகவும், "ஆமாம், திரும்பவும் இப்படித்தான் நடக்கும். இதே வழக்கமாகிவிட்டது. இதில் மன்னிப்பு கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன? " என்ற நம்பிக்கையில்லாத பதில் எதிர்முனையிலும் கிட்டுவது நல்லதன்று. தானாகவே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை - மண்ணிற்கு அடியில் விளைவதற்காக காத்திருக்கும் வேர் போன்றது. மேலோட்டமாக வெட்டிவிட்டாலும் மீண்டும் தளிர்விடும் விஷச்செடி!

   கோபம், சண்டைபிடிக்கும் குணம், எதிர்த்து ஒருவர்கூட பேசக்கூடாது என்கிற ஆதி மனித எண்ணம் - இவை உடல் மூலக்கூற்றிலிருந்து இன்னமும் வெளியேற்றப்படவில்லை. எவ்வளவுதான் நாகரிகம் பயின்றாலும்  விஷக்கொடுக்களாய்  சட்டென்று வெளிப்பட்டு சுற்றியிருப்போரை பாதித்துவிடுகிறது. பிறகு மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதை நிருபிக்கும் வண்ணம் இது நம்மையும் பாதிக்கும். குறைந்த பட்சம் அன்றைய உணவை துறப்பதிலிருந்து நெருங்கிய உறவினர்கூட மனம் வெறுத்து ஒதுங்கும் நிலைக்கு ஆளாகிவிடும். உள்ளும் புறமுமாக செயல்பட்டு இதையெல்லாம் சரி செய்யும் மாமருந்து மன்னிப்பு! கேட்பது தருவதும் வரைமுறைக்கு கட்டுபட்டவைதான். நாம் அனிச்சையாக அன்றாடம் பயன்படுத்தும் "சாரி"க்கள்,  காற்றில் பறக்கும் பட்டம்போல் நம் கையை விட்டு பறந்து மன்னிப்பின் அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறன.. மேலும் இது பற்றி அடுத்தப் பகுதியில் தெரிந்து கொள்வோமா?


மாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-2

இந்தச் சண்டைகள் மட்டும்
    சங்ககாலத்தில் இருந்திருக்கலாம்
அரிசி புடைக்கும் ஓசையில்
   இனிய தமிழ் சொற்களில்
புலவர்களை வைத்து
    அறம் பாடியிருக்கலாம்
எதிரியின் பலத்தை ஔவை போல்
   வஞ்சப்புகழ்ச்சியாக வைதிருக்கலாம்
போர்களத்தில்  நிறுத்தி யானையை
   வைத்து இடற வைத்திருக்கலாம்
அல்லது வீரவாள் கொண்டு
    தலை சீவி பகை முடிக்கலாம்.

 
இது எதுவுமே இல்லாமல்
    வெறுப்பின் விளிம்புகளைத்
      தொடக்கூட முடியாமல்...
அடுத்த நிமிடம் ஏதாவது ஒரு
    தெரு முனையில் சந்திப்போமோ..
மறுபடியும் முகத்தில் எப்படி
    விழிப்பது என்ற தயக்கத்தில்.
சற்று நேர யோசனையில்
    மன்னித்து விட்டு விடலாமா...
இன்னும் கொஞ்சம் மீறும்வரை
    எல்லைகளை கவனமாக பார்த்து,
சண்டையா? சமாதானமா? என்று
    முடிவறியாத காத்திருப்பு......

முற்று பெறாத சண்டைகள்
     சிவப்பு ஒற்றைக்கண் அரக்கனாக,
அடிமனதில் அணையாமல்
    எரியக் காத்திருக்கும் கங்குகளாய்
கொழுந்துவிட்டு எரியவைக்கும்
    சுட்டெரிக்கும் கோடைக்காகவோ...
குளிர் நீர் தெளித்து தணிந்துவிடும்
    வாடைகாலத்து மழைக்காகவோ...
அல்லது மிச்சமும் எரிந்து
    சாம்பலாகி தானாக மறைந்துவிடும்
மந்திர நொடிகளுக்காகவோ
    எப்போதும் காத்துக் கிடக்கின்றன. 

வெளியில் கைகுலுக்கி கதைவிடும்
   
முற்று பெறாத சண்டைகள்.


குறிப்பு: இது போன்ற சண்டைகள் இக்காலத்தில் வீடு, வீதி, ஊர், மாநிலம், நாடு, உலகம் எங்கேயும் சகஜமாகிவிட்டதால் யாரையும் தனிப்பட குறிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.