சங்ககாலத்தில் இருந்திருக்கலாம்
அரிசி புடைக்கும் ஓசையில்
இனிய தமிழ் சொற்களில்
புலவர்களை வைத்து
அறம் பாடியிருக்கலாம்
எதிரியின் பலத்தை ஔவை போல்
வஞ்சப்புகழ்ச்சியாக வைதிருக்கலாம்
போர்களத்தில் நிறுத்தி யானையை
வைத்து இடற வைத்திருக்கலாம்
அல்லது வீரவாள் கொண்டு
தலை சீவி பகை முடிக்கலாம்.
இது எதுவுமே இல்லாமல்
வெறுப்பின் விளிம்புகளைத்
தொடக்கூட முடியாமல்...
அடுத்த நிமிடம் ஏதாவது ஒரு
தெரு முனையில் சந்திப்போமோ..
மறுபடியும் முகத்தில் எப்படி
விழிப்பது என்ற தயக்கத்தில்.
சற்று நேர யோசனையில்
மன்னித்து விட்டு விடலாமா...
இன்னும் கொஞ்சம் மீறும்வரை
எல்லைகளை கவனமாக பார்த்து,
சண்டையா? சமாதானமா? என்று
முடிவறியாத காத்திருப்பு......
முற்று பெறாத சண்டைகள்
சிவப்பு ஒற்றைக்கண் அரக்கனாக,
அடிமனதில் அணையாமல்
எரியக் காத்திருக்கும் கங்குகளாய்
கொழுந்துவிட்டு எரியவைக்கும்
சுட்டெரிக்கும் கோடைக்காகவோ...
குளிர் நீர் தெளித்து தணிந்துவிடும்
வாடைகாலத்து மழைக்காகவோ...
அல்லது மிச்சமும் எரிந்து
சாம்பலாகி தானாக மறைந்துவிடும்
மந்திர நொடிகளுக்காகவோ
எப்போதும் காத்துக் கிடக்கின்றன.
வெளியில் கைகுலுக்கி கதைவிடும்
முற்று பெறாத சண்டைகள்.
குறிப்பு: இது போன்ற சண்டைகள் இக்காலத்தில் வீடு, வீதி, ஊர், மாநிலம், நாடு, உலகம் எங்கேயும் சகஜமாகிவிட்டதால் யாரையும் தனிப்பட குறிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.