எங்கும் யோசிக்க வைப்பதில்லை!
கால்கள் வலிக்காத வரையில்....
ஒரு முட்டுச்சந்தின் முனையில்
முடிவற்ற நிலைக்கு வரும்வரை..
இருள் பாதையை மறைக்கும்வரை,
சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதில்லை!
அடிக்கடி ஒளிந்து மறைந்தோடி
தொலைந்து மீளும் வெள்ளி நிலவு!
எதையோ தேடித்தேடி நித்தம்
தோற்று மறையும் மேற்குச்சூரியன்!
இரவின் மின்மினி விண்மீன்கள்!
அடிவானத்து வெளிச்ச சிதறல்கள்!
வரைந்த தூரிகை காயும் முன்
கலைந்திடும் நீலவெளி வானவில்!
பிள்ளை பிராய கதை சொல்லும்
மழைக்காலத்து மண்வாசனை!
நெருங்கி திரிந்து இணைந்து ஓடி
சிற்பியாகும் கவின் மேகங்கள்!
எதுவும் கவிதையாவதில்லை.....
ஆனால்....
ஏதோவொரு திடீர் தேக்கத்தில்...
தடைபட்ட நிற்கும் பயணத்தில்...
மீண்டும் வரும் நினைவுகள்,
மயிலிறகில் மை தீட்டித் தீட்டி
கடந்து போன கவிதைகளை
வரிவரியாக சொல்லிக்காட்டும்!
அத்தனையும் அழகாய் நிகழ்த்தும்
மகா சக்தியின் இருப்பை காட்டும்!
தேங்கி மதியிழந்திருந்த மனம்
சிறகு முளைத்த பறவையாய்
ஆகாயத்து பால் வெளியில்
பறந்து திரிந்து அமிர்தம் பருகி
புதிய சூரியோதயத்தை தேடும்.