உதாரணமாக, மகனுடைய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். அவனுடைய படிப்பு நிலவரத்தை சரியாக கவனிக்கவில்லை என்று மனைவியிடம் சண்டை. மகனின் நிலவரமே தெரியாத தவறு நம்மிடம் இருக்கும். எழுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கக்கூடிய பையன் தொன்னூறு சதவிகிதம் வாங்கவில்லை என்று சண்டை பிடித்த தவறு நம்முடையது. அதற்காக மனைவியிடம் வாக்குவாதம் செய்த தவறினை ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த விசயத்தில் அவருக்கு இரண்டு வருத்தம் இருக்கும். ஒன்று மகனின் எதிர்காலம் பற்றிய திட்டம், இரண்டு எப்போதும்போல முந்திக்கொண்டு பழியை திருப்பிவிடும் கணவனின் செயல். முதல் வருத்தத்தை சரி செய்ய முயற்சிப்போமே தவிர இரண்டாவதிற்கு முக்கியத்துவம் தரமாட்டோம். மனைவி புரிந்து கொள்ளாத கணவனா? இதற்கு முன்புகூட இதுபோல நடந்திருக்கும். எனவே மனைவியிடம் மன்னிப்புகூட கேட்கத்தோன்றாது. சரி, வேண்டாம், ஆனால் தவறாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாமா? அப்போதைய வலி நாம் சகஜமாக பேசுவதால் சரியாகிவிட்டது என்று எண்ண முடியாதே? சிலர் முதல் நடவடிக்கையாகவே "அவுட்டிங் போகலாமா?" என்று கேட்பார்கள். ஒரு உணவு விடுதிக்கு செல்வதும், திரைப்படம் பார்ப்பது மேலாக பூசலை மறைக்கும் முயற்சிதான். முந்தைய தலைமுறைப் பெண்கள்தான் இவற்றை சமாதான உடன்படிக்கையாக புரிந்து கொண்டு கோபத்தை விடுத்து சகஜமாகிறார்கள். எனவே அதை செய்யாவிடினும் பரவாயில்லை, நேர்மையாக தவறினை ஒப்புக் கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறு நடக்காது என்று உறுதி கூற வேண்டும். அந்த சமயத்தில் அவர்கள் விளக்கம் கூற முற்பட்டால் பொறுமையாக கேட்க வேண்டும். உங்கள் பக்க எதிர்பார்ப்புக்களை சொல்ல வேண்டும். அவர்களின் பொறுப்புணர்வில் நம்பிக்கை வைத்து இருந்தால் எடுத்துக் கூற வேண்டும். இருவரும் சேர்ந்து மகனின் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்யலாம். ஒரு வேளை இதற்கு ஒரு சரியான யோசனை அவர்களிடம் இருக்கும், அதை தெரிந்து கொள்வதும் நல்லதுதானே.. நம்முடைய மன்னிப்பின் பயணத்தையும் அது தடம் மாறிப்போகும் விதத்தையும் இப்போது வரிசையாக பார்க்கலாம்.
1.. தவறுக்கு வருந்துவது - ஒரு முன் கோபத்தில் இவ்வாறு நடந்து விட்டது நீ நன்றாக படித்தவள் என்பதால் இதனை கவனித்துக் கொள்வாய் என்று நினைத்தேன் - இப்படியெல்லாம் விளக்கம் தரலாம்.
தடம் மாறுவது: இனி உன்னிடம் இது பற்றி விளக்கம் கேட்கமாட்டேன். நானே பார்த்துக் கொள்கிறேன் - அவர்களை தள்ளி வைக்கும் செயல். சற்று அவமானமாகவும் இருக்கும். மனதில் ஒரு வடுவை பதிக்கும். மகனிடம் இனி இது பற்றி பேசக்கூட தயக்கம் பிறக்கும்.
2. பொறுப்பேற்றுக் கொள்வது - இந்த விசயத்தில் நானும் கவனிக்காமல் விட்டேன். அது என் தவறுதான் ஒப்புக் கொள்ளலாம்.
தடம் மாறுவது: தானாகவே தன் பங்களிப்பை தருவதாக இருக்க வேண்டும். "என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறபடி செய்தால் போதும்." என்று சொல்லக்கூடாது. இதிலும் பிரச்சினை தீராது. " நாம் முடிவெடுக்கலாம்" என்பதுதான் சரி.
3. சீர் செய்வது: இது பற்றி மனைவியின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றேனே ஏனெனில் இது விசயமாக வாக்குவாதம் எழாமல் இருக்க இது அவசியம். மகனின் உண்மையான தகுதி மனைவிக்கு தெரிந்திருக்கும். உயர்தர பள்ளியில் சேர்ப்பதாலோ, சிறப்பு வகுப்புகள் கொடுப்பதாலோ சீராகி விடாது. அவனுடைய விருப்பம் Validate (திறணாய்வு?) செய்யப்பட வேண்டும். நிலமையை சீர் தூக்கிப் பார்த்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சில சமயம் கடைசியில் " எப்பாடுபட்டாவது அவன் பொறியியல் படித்தே ஆக வேண்டும்" என்று முடிவுரை எழுதப்படும். கண்டிப்பாக சொல்கிறேன் இதுபோன்ற ஒருதலைபட்சமான முடிவுரைகள் மீண்டும் சிக்கலை கிளப்பும். அடுத்த முறை நாம் கேட்கப்போகும் மன்னிப்பின் மீது நமக்கே மரியாதை இருக்காது.
தன் அச்சை விட்டு விலகிய செயற்கைக்கோளை ஏவுகணை செலுத்தி சரியான ஆர்பிட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதுபோல் என்று இதனைதான் குறிப்பிட்டேன். சரியான வேகத்தில் சரியான திசையில் தேவையான கட்டுப்பாட்டில் ஏவுகணை செல்லுவதுபோல், நாம் கேட்கப்போகும் மன்னிப்பும் சரியான இலக்கை அடைய வேண்டும். இவ்வளவு கவனம் எடுத்தால்தான் மீண்டும் தவறு ஏற்படாது, உண்மையில் நம் உள்மனமும் இது போன்ற தருணம் திரும்ப ஏற்படும்போது நம்மை எச்சரிக்கை செய்யும்.
நான் சொல்லுவது என்னவென்றால் மன்னிப்பு கேட்டல் என்பது தண்டனையை அனுபவிப்பதைவிட சிரமமானது. உணர்ந்து மனசாட்சிபடி மன்னிப்பை வேண்டுபவர் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள். ஏனெனில் தன்னை பற்றி தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மரியாதைக்குரிய பிம்பம் மீண்டும் கலைவதை பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இத்தனை லட்சணங்களும் பொருந்திய மன்னிப்பு ஒரு அதிசயமான மருந்தாக, உறவுகளை இணைக்கும் பாலமாக வியக்கத்தக்க விதத்தில் செயல்படும். இன்னும்கூட இறுக்கமான பிணைப்புகளை உங்களுக்கு பெற்றுத் தரும். பழுதுபட்ட உறவுகளை சரி செய்து புதுப்பித்து தரும் இதனை நாலாவது R - Regenerateஆக சொல்லலாமா? . மன்னிப்பு கேட்டல் மனிதத்துவம் என்றால் மன்னித்தல் தெய்வீகமாகும்.