இந்தப் பதிவுத் தொடர் எழுத மனோ மேடம் அழைத்து சில நாட்களாகிவிட்ட நிலையில் இப்போதுதான் எனக்கு கணிப்பொறியினை தொடும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தொடர்கிறேன். மேலும் பதிவுலக நட்பு வட்டாரத்தில் என்னை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் தவிர்க்க விரும்பவில்லை, என்னுடைய பணியின் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதை சிறு மன்னிப்புடன் விளக்கி இந்த தொடரை தொடர்கிறேன்.
முன்னுரை அல்லது முகவுரை ஒரு படைப்பினை எடை போடும் எழுத்துக்களாக இல்லாமல், படைப்பினோடு ஒன்றிய படைப்பாளியின் மனச்சித்திரங்களை விளக்கக் கூடியதாக இருப்பதுதான் எனக்கு விருப்பமானது. முன்னுரை என்பது அம்மா குழந்தையை தூக்கிக் கொண்டு நிலாச்சோறு ஊட்டுவது போலவோ , இல்லை அப்பா கை பிடித்து நடத்திச் செல்லும் ஒரு மாலை நேர நடையாக இருப்பதும் சிறப்பு. தமிழ் மொழியில் எழுதப்பட்டதோ வேற்று மொழியில் எழுதப்பட்டதோ எந்த படைப்பையும் சினேகித்துத் தொடர இந்த முன்னுரைகள் உதவுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் தேர்வு செய்ததால், குறிஞ்சிமலர் தவிர மற்ற நூல்கள் அந்த அளவிற்கு வாசகரை சென்று அடைந்திருக்காதவையாக இருக்கும். இவை என்னை ஒரே விசயத்தை எப்படி பல்வேறுபட்ட அணுகுமுறைகளுடன் சிந்திக்க முடியும் என்று கற்றுக்கொடுத்தவை.
1. குறிஞ்சி மலர்: காதாசிரியர் நா.பார்த்தசாரதி - எழுத்து கூட்டி வாசித்ததற்கும் மேல் வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை விதைத்த இந்த நூலிற்கு முதல் வணக்கம்.
ஒரு தமிழ்ப்பெண் எப்படியிருக்க வேண்டும் .... கோபுரம் போல் உயர்ந்து, வானம் போல் பரந்து, மதிகடல் போல் ஆழ்ந்த சிறப்புடையது தமிழ் பெண் குலம்.தமிழ் பெண் குலத்தின் வளை ஒலிக்கும் கைகளில்தான் வீரமும், ஈரமும், வெற்றியும், வாழ்வும் பிறந்து வளர்ந்திருக்கின்றன. அக்கைகளின் வளையோடு தமிழும் வளர்ந்தது. தமிழொடு தமிழ் பண்பும் வாழ்ந்தது. தமிழ்ப் பண்போடு தமிழ் குடியும் வளர்ந்தது.
இன்றும் நம்மை விட்டு விலகிவிடாமல் காத்துவரும் பண்பையும் , ஒழுக்கத்தையும் தமது குருதியோடு குருதியாகக் கலந்து நிற்கும் அறத்தையும் இப்படி நித்தியமாய் நிரந்தரமாய் நிர்மலமாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்படி அளித்தவள் எந்த தமிழ் பெண்ணோ அவளுடைய பொன்னார்ந்த செந்தாமரைத் திருவடிகளை வணங்கிவிட்டு இந்தக் கதையினை எழுதத்தொடர்கிறேன். இங்கே இந்த வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது மெய் சிலிர்த்து கண்களில் நீரரும்புகிறது. கோயிலுக்குள் நுழைவதுபோல் மனமும், உடலும் புலன்களும் தூய்மையை உணருகின்றன.
தாயின் வார்த்தைகளைப்போல பதின் வயதில் எனக்குள்ளே பதிய வைக்கப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்கு படித்தாலும் பெருமைகொள்ள வைக்கின்றன. இது போன்ற எழுத்துக்கள் இப்போது இல்லாததும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு காரணமோ என்பதும் ஒரு கேள்வியாகிறது.
2. The Algebra of infinite justice - ARUNDHATI ROY புக்கர் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர். இந்த நூலிற்கு முகவுரை எழுதியவர் ஜான் பெர்ஜர். சர்ச்சைக்குரிய எழுத்துக்களை துணிச்சலுடன் எழுதும் இந்த எழுத்தாளர் இந்த நூலில் பயங்கரவாதம் பற்றியும், அதன் மறுமுகம் பற்றியும் அதனை மக்களிடம் சரிவர கொண்டு சேர்க்காத எழுத்தாளர்களின் தார்மீகபொறுப்பு பற்றியும் எழுதியிருக்கிறார். அணு ஆயுதம், பொக்ரேன் சோதனை, சர்தார் சரோவர் அணை பிரச்சினை, தீவிரவாதம் பற்றியும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார். இந்த கட்டுரை தொகுப்பில் சில வரிகளை ஜான் பெர்ஜெரின் வார்த்தைகளை எழுதுகிறேன்.
ஒன்றுமறியாத அப்பாவிகளை கொலை செய்யும் ஒரு பயங்கரவாத செயல் - மதத்தின் பெயரால் செய்யப்பட்டாலும், தீவிரவாத இயக்கம் செய்தாலும், மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையாக இருந்தாலும், போர் என்ற பெயரில் செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் அதனை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது .
பயங்கரவாதம் ஒருவருடைய இறப்பின் கடைசி நிமிடங்களை வாழும்போதே எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது என்பதை விவரிக்கும் வரிகளை இவ்வாறு குறிப்பிடுகிறார். உயிரோடு இருக்கும் ஒருவருடைய நினைவும் கனவும் உயிர் வாழ்தல் பற்றியே இருக்கவேண்டும். இறப்பினை பற்றிய கனவுகள் இறந்தபின் வேண்டுமானால் வரட்டும்.
இதற்கு என்னதான் விடிவு -- To love and To be loved....
3. மொழி வரலாறு - மு.வரதராசன் . அவரது இலக்கிய படைப்புகள் தமிழ் மொழியை தின்மையுற பெருமை பேசுகின்றன. தமிழின் பெருமையினை மறந்துவிட்ட இக்காலத்தில் இது போன்ற நூல்கள் புத்தக அலமாரியின் அடித்தட்டில்தான் உள்ளன. அவருடைய முன்னுரையில்,
மொழி வரலாறு, மொழியியல் என்னும் இரு துறைகளும் சென்ற நூற்றாண்டில் வளர்ந்தனவாகும். அன்று முதல் நேற்றுவரையில் இவ்விரு துறையிலும் கருத்துபூசலும் குழப்பங்களும் மறைந்து கருத்துவேறுபாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றை குறித்து கவலைப்படாமல் உண்மை உணரும் வேட்கையுடன் அறிய முயல்வோர்க்கு, இவ்விரு துறைகளும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
இந்த நூலில் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் அதன் ஒலிவடிவம் அது உருவான விதம் என்று ஆரம்பித்து கொஞ்சம் அடிப்படை இலக்கணம் மரூஉ போன்ற மறந்துபோன விசயங்களை தீவிரமாக எடுத்துச்சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுதல் போலன்று உலகளாவிய மொழிகளுடன் ஒப்பீடு செய்து தமிழை பெருமைபடுத்துகிறார்.
4. Awakening the Mind , Lightening the Heart - His Holiness The Dalailama. இது ஆன்மீகத் தேடலுக்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற நூலாகும். அவரது முன்னுரையில்
நம்முடைய மனம் தெளிவுபெற வேண்டுமெனில் தியானம் மட்டுமே அதனை பெற்றுத்தரும். தியானம் மட்டுமே மனமாற்றங்களை உருவாக்கி சிக்கல் என்ரு நினைப்பவற்றை சாதகமாக மாற்றித்தரும் திறமையை தரும் என்கிறார்.
இவர் இந்த நூலில் புத்தமத சம்பிரதாயங்களைவிட தியானம் பற்றியே பேசுகிறார். அதையும் சிறப்பாக சொல்கிறார். ஒரு துறவியின் எழுத்தாக இதனை படிக்கும்போது வாழ்க்கையின் தெளிவு பெறாத ஆன்மீக விசயங்களுக்கு விளக்கம் கிட்டுகிறது. இந்த நூலை மனவள கட்டுரைகளின் தொகுப்பாகவே பார்க்கமுடிகிறது.
இரண்டாவதும் நான்காவதும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் இந்த பதிவினை படிக்கும் சிலருக்கு இந்த நூல்களை அறிமுகப்படுத்த எண்ணியே சேர்த்துள்ளேன். பொறுத்தருள்க.
இந்த பதிவுத்தொடரை எழுத அழைக்கப்படுபவர்கள் ( கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருக்கிறேன். ஏற்கனவே எழுதியிருப்பவரை அழைத்திருந்தால் மன்னிக்கவும்.)
1. கீதமஞ்சரி கீதா - இவருடைய எழுத்துக்கள் பரந்த வாசிப்பு தன்மையை பறைசாற்றுவதால் அழைக்கிறேன்.
2. சில மணித்துளிகள் - பிரணவன் - ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டேயிருக்கும் தீவிர இலக்கிய சமர்த்து.
3. மதுரை சரவணன் - ஆசிரியர் என்பதால் தீவிர வாசிப்பு இருக்கும் என்பதால் சிறப்பான பதிவை எதிர்பார்த்து அழைக்கிறேன்.
4.கூட்டாஞ்சோறு- சிசு - பதிவுலக நண்பர். சிறப்பான பதிவுகள் தருபவர்.
- Sagampari